Published:Updated:

ஒரு ஃபைவ் மினிட்ஸ் ஜீ!' - சலூன் கடை களேபரங்கள் #Myvikatan

Representational Image
Representational Image ( Pixabay )

ஆண்களின் பொறுமையை சோதித்துப்பார்க்கும் இடங்களில் சலூன் கடைகள் முக்கியமானது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நெற்றிச் சுருக்கங்களை கொஞ்சம் மயிர் வந்து மறைத்தால் போதும், வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு பொறுக்காது. அந்நியன் விக்ரமாக நம்மைப் பார்க்க ஆரம்பித்துவிடுவர்.

'ஒரே வெயிலா இருக்கே, சரி நாளைக்குப் போலாம். ஒரே மழையா இருக்கே, சரி நாளைக்குப் போலாம். ஐயோ பக்கத்து வீட்டு பூனை செத்துப்போச்சே, சரி நாளைக்குப் போகலாம்'.

இப்படியே ஒரு வார காலம் ஓடிவிடும்.

Representational Image
Representational Image

நமக்கும் ஒரு 'மூட்' வந்து, 'சரி இன்னைக்கு கண்டிப்பா போறோம்' என்று முடிவெடுத்து, அழுக்கு சட்டை ஒன்றை மாட்டிக்கொண்டு கிளம்பும்போது, 'டேய்... வெள்ளிக்கிழமை முடி வெட்டக்கூடாது. உள்ளே போ...' என பாட்ஷா ரஜினி ரேஞ்சுக்கு வசனம் பேசி கட்டையைப் போடுவார் அம்மா.

அழுக்குச் சட்டையைப் பத்திரப்படுத்தி, அடுத்த நாள் காலை ஆறு மணிக்கே சலூன் கடைக்கு ஆஜர் ஆகிவிடுவோம்.

சனி மற்றும் ஞாயிறுகளில் கண்டிப்பாக தலை வைத்துப் பார்க்கக் கூடாத இடங்களுள் ஒன்று சலூன் கடை. குருவிக்கூடு தலையை சரி செய்ய சிறுசு முதல் பெருசு வரை எல்லாம் அங்குதான் அன்று கூடியிருக்கும்.

ஆறு மணிக்கே போனாலும் நமக்கு முன்பு அங்கு ஆறு பேர் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பார்கள்.

அங்கு நடக்கும் களேபரங்களைக் காண வேடிக்கையாக இருக்கும்.

'என் செல்லம்ல... ஒழுங்கா காமிச்சா அப்பா உனக்கு சாக்லேட் வாங்கித் தருவேன் சரியா...' என கெஞ்சிக்கொண்டிருப்பவரைப் பார்த்தால் பாவமாக இருக்கும்.

நடக்க முடியாத அப்பாவை காரில் ஏற்றிக்கொண்டு வரும் இன்னொருவர், 'அப்பாவுக்கு ஃபுல் ஷேவ் பண்ணிடுங்க...முடிஞ்சா முடியே திரும்ப மொளைக்காத மாதிரி மொட்ட அடிச்சு விட்டுடுங்க...' என்று சலிப்புடன் சொல்லிவிட்டு, அங்கிருக்கும் நாளிதழ் ஒன்றைப் புரட்ட ஆரம்பித்துவிடுவார். குறிப்பு - அது பழைய நாளிதழ் எனத் தெரிந்தும்.

சற்று நேரத்திற்கு முன்புதான் ஷேவிங் செய்துவிட்டுப் போன நடுத்தர வயது ஆசாமி ஒருவர், திரும்ப ஓடிவருவார். அசட்டு சிரிப்புடன், 'தம்பி...இங்க பாரு. இந்த முடிய நீ கவனிக்கல' என்று தலையைத் திருப்பி தாடையைக் காண்பிக்க, முடி வெட்டுபவரும் குத்துமதிப்பாக எதையோ ஒன்றை பார்த்துவிட்டு, 'அட ஆமா சார் ' என்பார்.

Representational Image
Representational Image

பின்பு, கூரான கத்தியை வைத்து அந்த இடத்தை ஒரு இழு இழுக்க, சிவப்பு நிறத்தில் மெல்லிய ஒரு கோடு ஒன்று அங்கு விழுந்திருக்கும். வலியை வெளியே காட்டாமல்,' நான் வரேன் தம்பி...ரொம்ப சிறப்பு!' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிடுவார்.

நமக்கு அங்கு இருக்கும் ஒரே ஆறுதல், அந்த சன் மியூசிக் சேனல் தான். அதிலும் 'சரவணா ஸ்டோர்ஸ்' விளம்பரம் போட்டு நம்மை கடுப்பேற்றுவார்கள்.

பலமுறை பார்த்து சலித்துப்போன அதே பாடல், அங்கு ஏனோ புதிதாகத் தெரியும். பாடலினுள் ஐக்கியமாகி காலையிலேயே கற்பனைகளில் மூழ்கிப்போவோம். சற்று நேரத்தில் உண்மையில் நாம் முடி வெட்ட தான் வந்தோமா என்ற எண்ணம் மேலோங்கும். (பொதுவாக விளம்பர இடைவேளையில்தான்).

அப்போது, முடி வெட்டுபவர் காதில் கேட்கும்படி 'உச்ச்ச்.....' என்போம். உடனே அவர், 'ஒரு ஃபைவ் மினிட்ஸ் ஜீ' என்பார்.

பல ஃபை மினிட்ஸ் கடந்த பிறகு ஒரு வழியாக, 'அடுத்தது நாம தான்' என எழும்போது, முறுக்கு மீசையுடன் ஒருவர் நம்மைத் தடுத்து, 'தம்பி உனக்கு முன்னாடியே நான் வந்து துண்டு போட்டுட்டேன் பாரு' என்பார்.

இனியும் பொறுக்கமுடியாமல், 'ஜீ...நான் இன்னொரு நாள் வந்து வெட்டிக்கறேன்' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பும்போது, 'ஜீ...கொஞ்சம் நில்லுங்க. அவருக்கு ஒரு நிமிஷம் முன்னையே நீங்க வந்துட்டீங்க. ஸோ இந்த டர்ன் நீங்க தான்' என்று நம்மை தடுப்பார் முடிவெட்டுபவர். அந்த நொடியில், தர்மத்தை மீட்டெடுத்த நீதியரசராகவே அவர் நமக்கு காட்சியளிப்பார்.

Representational Image
Representational Image

'கட்டிங்கா, ஷேவிங்கா?'

'ரெண்டும் தான்'.

'மிஷினா, கத்தரிக்கோலா?'

'ஏதோ ஒன்னு'.

'ஃபுல் கட்டிங்கா, ஆஃப் கட்டிங்கா?'

'சரக்கா அடிக்க போறோம்?'

வரிசையாகக் கேள்விகளை அடுக்கிவிட்டு, பின்னர் ஒருவழியாக நம்மிடம் வரும்போது, முடி வெட்டுபவரின் செல்போன் ஒலிக்கும். 'சார் ஒன் மினிட் சார். பேசிட்டு வரேன்' என்பார்.

நம் மைண்டு வாய்ஸ் - 'வேணாம்னு சொன்னா மட்டும் நீங்க கேக்கவா போறீங்க?'

அது ஏனோ சலூன் கடை கண்ணாடிகளில் மட்டுமே தான் நம் முகம் அழகாகத் தெரியும். நம் அழகை நாமே கண்ணாடியில் ரசித்துக்கொண்டிருக்கும் வேளையில் உதட்டோர சிரிப்புடன், 'கேள் ஃப்ரெண்டு ஜீ... அதான் அவாய்ட் பண்ண முடியல.' என்றபடியே வருவார் முடி வெட்டுபவர்.

முதற்கட்டமாக தலையின் இரண்டு பக்கங்களிலும் மிஷின் கட்டிங் போடப்படும். பிறகு, முடியின் அளவுக்கேற்ப கத்தரிக்கோல் செலக்ட் செய்யப்படும்.

கத்திரிக்கோலை சரியாக காதின் அருகே கொண்டுவரும் நேரம், ஆடாமல் அசையாமல் நாம் உட்காந்திருப்போம். அவரும் பதிலுக்கு ஆடாமல் அசையாமல் நின்றுகொண்டிருப்பார்.

என்னவென்று ஓரக்கண்ணால் நாம் பார்த்தால், 'கே டீவி' யில் 'சூரியவம்சம்' படம் ஓடிக்கொண்டிருக்கும்.

நாமோ காதின் அருகே இருக்கும் கத்தரிக்கோலுக்காக பயந்திருக்க, அவரோ வீட்டைவிட்டு துரத்தப்பட்ட சரத்குமார் தேவயானி-க்காக பரிதாபம் கொள்வார்.

அடுத்து, ஷேவிங் செய்யப்படும் நேரம் இதைவிட கொடுமையாக இருக்கும்.

கத்தியை சரியாக அவர் நம் கழுத்தில் வைக்கும்போது, 'இவருக்கும் நமக்கும் முன் பகை ஏதும் இல்லையே...' என்ற சந்தேகம் உருவாகும்.

Representational Image
Representational Image

எல்லாம் முடிந்த பிறகு, முகத்திலும் கழுத்திலும் ஒட்டிக்கொண்டிருக்கும் முடிகளை அப்புறப்படுத்திக்கொண்டே, 'சார் இது நாங்களே வீட்ல தயாரிக்கிற ஷாம்பு. ஒரு சிட்டிங்க் ஜஸ்ட் 499 தான். ட்ரை பண்றீங்களா?' என்பார் அவர்.

அப்போது ஒரு முடி சரியாக நம் மூக்கினுள் ஏற, பிறகென்ன?

ஒரே தும்மலில் ஒட்டு மொத்த சலூன் கடையும் சுத்தமாகிவிடும். கீழே கொட்டிக்கிடந்த முடிகள் ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும்.

'வரேன் ஜீ' என்று சொல்லிவிட்டு பணத்தைத் தரும்போது, திரும்பி நீ வரவே வராதடா என்பதைப் போல முறைப்பார் அவர்.

வெளியே வந்து வண்டி கண்ணாடியைப் பார்க்கும்போதுதான் தெரியும், அந்நியனாக உள்ளே சென்ற நாம் 'சேது' பட விக்ரமாக மாறியிருப்பது.

நொந்துபோய் வீடு வந்து சேரும்போது, ஃபைனல் டச்சாக அப்பா வந்து நம்மிடம் சொல்வாரு பாருங்க,

'ஏன்டா முடி வெட்டுன மாதிரியே தெரியலயே..!'

-மருத்துவர். சரத்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு