Published:Updated:

எந்நேரமும் இணையத்திலேயே இருந்தால் என்ன நடக்கும்? - வாசகர் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

பெரும்பாலான பதிவுகளுக்கு பார்க்கப்படாமல் அல்லது படிக்கப்படாமலே லைக்குகளும் கமென்டுகளும் அளிக்கப்படுகின்றன...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மூக்கணாங்கயிறுகள் மாற்றப்படுவது மாடுகளுக்கு ஒருபோதும் மகிழ்ச்சியைச் தந்துவிடாது என்பார் ஹோசிமின்.

இன்றைய சூழலில் மனிதர்களில் பெரும்பாலானோர் இணைய அடிமைகளாக இருக்கிறோம். ஒருவர் மனிதர்களுக்கு அடிமையாக இருந்தாலும் அல்லது தொழில்நுட்பத்துக்கு அடிமையாக இருந்தாலும் அது அடிமைத்தனம்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இணையத்தால் மிச்சப்படுத்தப்பட்ட நேரத்தை இணையத்திலேயே செலவிடுகிறோம். மனிதர்களுக்கு எந்த அளவு இணையத்தால் பயன் ஏற்படுகிறதோ அதே அளவு தீமையும் இருக்கிறது. ஆனால், இணையதளம் இல்லாத வாழ்வு என்பதை இன்று நம்மால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது.

மனிதன் கண்டுபிடித்த தொழில்நுட்பம் மனிதனையே அடிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறது. இதற்குக் காரணம் மனிதன் மட்டுமே. ஒரு தொழில்நுட்பம் நமக்கு அடிமையாக இருக்கிறதா அல்லது அடிமைப்படுத்துகிறதா என்பதைப் பொறுத்து இன்றைய மனித வாழ்வின் வெற்றி, தோல்வியைப் பெரும்பாலும் தீர்மானித்துவிட முடிகிறது.

Representational Image
Representational Image

லைக்குகள்:

நாம் செய்யும் செயல்களுக்கு நாலுபேர் என்ன சொல்வார்கள் என்ற நமது முற்கால மனவோட்டம்தான் இன்று சமூக வலைதளங்களில் லைக், ஷேர், கமென்ட் மற்றும் ஃபாலோக்கள் என அவதாரம் எடுத்துள்ளது. தான் இடக்கூடிய பதிவுகளுக்கு கணிசமான லைக்குகள் கிடைப்பது ஒவ்வொரு மனிதனின் ஆதார விருப்பமாக இருக்கிறது.

பண்டமாற்று முறை போலவே பிறரின் பதிவுகளுக்கும் நாம் பதில்வினை ஆற்றுகிறோம். இதில் உண்மையிலேயே ஓர் ஆச்சர்யமூட்டும் விஷயம்,

பெரும்பாலான பதிவுகளுக்கு பார்க்கப்படாமல் அல்லது படிக்கப்படாமலே லைக்குகளும் கமென்டுகளும் அளிக்கப்படுகின்றன என்பதுதான்.

சமூக வலைதளங்களில் பிறர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதே ஒருவரைக் குறித்த அவரது சுயமதிப்பீடாகவும் இன்று மாறியிருப்பது வேதனையான ஒன்று.

தான் ஒரு பிரபலமான சோசியல் மீடியா செலிபிரிட்டியாக மாற வேண்டும் என்பது சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய பலரின் உள்ளார்ந்த விருப்பமாக இருக்கிறது. சரி அவ்வாறு மாறி என்ன செய்வது? என்ற கேள்விக்கு மட்டும் யாரிடமும் பதில் இருப்பதில்லை.

தனது பதிவினை நிறைய பேர் விரும்பும்போது எதையோ சாதித்த உணர்வும், விருப்பங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கையில் தோல்வி மனப்பான்மையும் பலருக்கும் மேலிடுகின்றன. ஒருவருடைய பதிவுகளுக்குக் கிடைக்கக்கூடிய லைக்குகள் மற்றும் கமென்டுகள் அவருடைய அன்றைய தினத்தின் மனநிலையை முழுமையாக மாற்றக்கூடிய நிலையில் இருப்பது கவலையூட்டும் அபாயகரமான உளவியல் உண்மை.

சுய சிந்தனை:

சமூக வலைதளங்கள் மனிதனுடைய சுய சிந்தனையை பெரும்பாலும் மழுங்கடித்துவிட்டன என்று கூறினால், அது மிகையில்லை. ஏதேனும் ஒரு பிரச்னை குறித்து வலைதளங்களில் வரக்கூடிய தகவல்களை மனிதர்களில் பலர் அப்படியே நம்பி விடுகின்றனர். வாட்ஸ் அப்பில் வரும் கருத்துகளை மனப்பாடம் செய்து தன் கருத்து போலவே பேசுவோரும் உலகில் உண்டு. சமூக வலைதளங்களில் யாரேனும் ஏதேனும் ஒரு கருத்து கூறினால் அதற்கு மாற்றுக் கருத்தும் இருக்கும் என்பதைக்கூட பலர் சிந்திப்பது இல்லை.

மனித சுதந்திரத்தின் அடிப்படையான ஒன்று பிரைவசி எனப்படும் தனி உரிமை.

இன்று உலகத்தில் வாழக்கூடிய ஒவ்வொரு மனிதனுக்கும் தனியுரிமை உள்ளது.

Representational Image
Representational Image

ஆனால், அந்த தனியுரிமையைப் பெரும்பாலான இணையவாசிகள் சுயமாகச் சிந்தித்து, முழுமையாகப் பயன்படுத்துகிறார்களா என்றால் இல்லை என்பதே கசப்பான பதிலாக இருக்கும்.

எந்நேரமும் இணையத்திலேயே இருப்பது தனக்கே தனக்கென்று இருக்கக்கூடிய பிரைவசி சுயத்தை மனிதர்கள் முறையாகப் பயன்படுத்த பெரும் இடைஞ்சலாகவே இருக்கிறது. ஒரு நிறுவனம் தன்னுடைய கைகளில் தெளிவான தனியுரிமைக் கொள்கைகளை வைத்திருக்கும். ஆனால், இணையவாசிகளுக்கு பெரும்பாலும் எந்தத் தனியுரிமைக் கொள்கைகளும் இல்லை என்பது உண்மை.

பிறர் தனது கருத்துகளை விமர்சனம் செய்யும்போது அதை ஏற்கும் பக்குவத்தை நாம் வளர்த்துக்கொள்வது சிறந்தது. விமர்சனங்களைத் தாங்கும் மனப்பான்மை குறைந்து வருவது கவலைக்குரிய ஒன்று.

தான் கூறக்கூடிய கருத்து புதுமையாகவும், மற்றவர்கள் பாராட்ட கூடிய வகையிலும் இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய மனிதன், அது தன்னுடைய சொந்தக் கருத்தாக இருக்க வேண்டும் என்பதில் அந்த அளவுக்கு ஆர்வம் காட்டுவதில்லை.

ஒருசில நேர்வுகளைத் தவிர காப்பி-பேஸ்ட் என்பது நிச்சயமாக வீணான ஒன்று என்பதை மனிதர்கள் உணர வேண்டும்.

ஒருவர் சமூக வலைதளங்களில் இடக்கூடிய பதிவுகளை சுயமாகச் சிந்தித்துப் பதிவிடுவதே சிந்தனை ஆற்றல் வளரத் தூண்டுகோலாய் அமையும்.

சுயமாகப் பதிவுகள் இடுவது கடினமான ஒன்றுதான். ஆனால், அதனால் நாளடைவில் நமது சிந்தனை ஆற்றல் பெருகுவதுடன், நம்மைப் பற்றிய உயர் எண்ணம் பிறருக்கு உண்டாகும்.

இணையதளங்கள் மூலமாக நாம் ஒன்றை அறிந்துகொள்வது தகவல் மட்டுமே.

புத்தகங்கள் மற்றும் அனுபவங்கள் வாயிலாக நாம் பெறுவதே அறிவு.

சுய சிந்தனையின் விளைவாக மனிதனுக்குக் கிடைப்பதே தெளிவு என்ற புரிதல் அனைவருக்கும் அவசியம். தேவை போலவே சுயசிந்தனையும் கண்டுபிடிப்புகளின் தாய்தான்.

தேடுதல்:

மனிதனை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் அடிப்படை குணங்களில் ஒன்று தேடல். 10 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஏதேனும் ஒரு தகவல் தேவைப்பட்டால் மக்கள் நூலகங்களில் தேடுவர். சிந்தனை வயப்படுவர். தானறிந்த அனுபவசாலிகளிடம் சந்தேகம் கேட்பார்கள். ஆனால், இப்போது எந்த விஷயத்தில் சந்தேகம் என்றாலும் இணையத் தேடல் மட்டுமே அடிப்படையான தீர்வாக இருக்கிறது. இதனால் உடனடியாகத் தகவல் கிடைப்பது உண்மைதான். ஆனாலும் இணையத் தேடல் என்பது ஒரு விஷயம் குறித்த அறிதலாக இல்லாமல், வெறும் தெரிதலாக மட்டுமே நின்றுவிடுவது இதில் ஆபத்தான ஒன்றாகும். எனவே, எப்போதுமே இணையத்திலேயே தேடிக்கொண்டு இருக்காமல் அவ்வப்போது இதயத்திலும் தேடுவது அவசியமான ஒன்று.

Representational Image
Representational Image

ஏதேனும் சந்தேகம் ஏற்படும்போது மனிதன் தன் மூளையிலும் தேட முடியும் என்பதை சௌகரியமாக மறந்துவிடுகிறான். மேலும், டிஜிட்டல் வடிவில் வந்துவிட்டாலே அதில் கூறக்கூடிய அனைத்து செய்திகளும் உண்மை என நம்பியும் விடுகிறான்.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, ஜெர்மனியின் நாஜி படைவீரர்கள் மீது கொலைக் குற்றத்துக்கான விசாரணை நடந்தது.

"நீங்கள் மக்களைக் கொன்றது குற்றம்தானே!" என்று அவர்களிடம் கேட்டபோது, "எங்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை. முடிவைச் செயல்படுத்தும் அதிகாரம் மட்டுமே இருந்தது. எனவே, எங்கள் தலைவர் கூறினார். நாங்கள் செய்தோம்" என்று தங்கள் தவறை நியாயப்படுத்தினார்களாம். அப்போது மனசாட்சிக்கு விரோதமான செயல்களைச் செய்வதும் குற்றமாகும் என்று தற்காலிக சட்டம் ஜெர்மனியில் இயற்றப்பட்டதாகக் கூறுவர்.

நம்மில் பலர் இன்று மனசாட்சியை மூடி வைத்துவிட்டு அனைத்தையும் வெளியிலேயே, இணையத்திலேயே தேடிக் கொண்டு இருக்கிறோம். தொடர்ந்து வெளியிலேயே தேடிக் கொண்டிருந்தால் உள்ளுக்குள் எப்போது தேடுவது என்பது மிகப்பெரிய கேள்வி.

மனிதனின் மனம், அனைத்தையும்விட சக்தி வாய்ந்தது. அப்படி இருக்கையில் அந்த மனதிடம் நாம் கேள்விகளைக் கேட்பதைக் குறைத்துக்கொண்டிருப்பது ஆச்சர்யமான ஒன்றுதான்.

உண்மை உலகம்:

டிஜிட்டல் சிட்டிசன்களான பல மனிதர்களுக்கு உண்மையான ஓர் உலகம் இருக்கிறது என்பதே பெரும்பாலான நேரங்களில் மறந்து போய்விடுகிறது.

விழித்திருக்கும் நேரமெல்லாம் செல்போனை உள்ளங்கையில் வைத்து தாங்கிக்கொண்டே இருந்தால், தன் குழந்தைகளை எப்போது தாங்குவது, தன் குடும்பத்தை எப்படித் தாங்குவது,

மனிதர்களின் அன்பை எப்போது உள்வாங்குவது.

குடும்பத்தினருடன் மனிதன் செலவிடக்கூடிய நேரம் தொடர்ந்து குறைந்துகொண்டும்,தொழில்நுட்பத்துடன் செலவிடக்கூடிய நேரம் அதிகரித்துக்கொண்டும் போவது ஆபத்தான ஒன்று.

Representational Image
Representational Image

டிஜிட்டல் உலகத்தின் ஈர்ப்பு மனிதனைத் தொடர்ந்து அதிலேயே இருக்க வைக்கிறது. உண்மையான மனிதர்கள் வாழக்கூடிய உலகம் என்று ஒன்று உள்ளது என்பது பெரும்பாலான நேரங்களில் மனிதனுக்கு நினைவுக்கு வருவதில்லை.

பொதுநலம் என்பது குறைந்து சுயநலம் பெருகிக்கொண்டே போகிறது. நமக்குரிய உரிமைகள் என்ன என்பதே பல நேரங்களில் மறந்து போகுமளவு இணையத்தின் மயக்கம் நம்மை ஆட்கொண்டுள்ளது.

உலகத்தை உள்ளங்கையில் சுருக்கிவிட்டோம். ஆனால், உள்ளங்கை அளவே உள்ள இதயம் பிறருக்காக விரிவாக வேண்டுமல்லவா. அன்பு, கருணை, இரக்கம், பாசம், நேசம் போன்ற உயரிய குணங்கள் எல்லாம் ஒருகாலத்தில் மனிதர்களிடம் இருந்தன என்று எதிர்காலத்தில் நம் குழந்தைகளிடம் பழங்கதைகள் கூறக்கூடிய நிலை வந்துவிடுமோ என்று அச்சமாக உள்ளது.

தொழில்நுட்பம் நமது பணிகளையும் வாழ்வையும் எளிமைப்படுத்தி இருப்பதும், மேம்படுத்தி இருப்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆனால், தொழில்நுட்பம் மட்டுமே வாழ்க்கையாக இருக்க முடியாது. அதைத் தாண்டி உண்மையான, உணர்வுகள் நிறைந்த அழகான வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அதற்காக நமது வாழ்வின் மதிப்புமிக்க நேரத்தை நாம் ஒதுக்க வேண்டும்!

தொழில்நுட்ப அறிவே மனிதனுக்கு வேண்டாமா என்றால் கண்டிப்பாக வேண்டும், உணவாக அல்ல ஊறுகாயாக. அப்போதுதான் வாழ்வு சுவையானதாய் அமையும். ஆனால், நம்மில் பலர் ஊறுகாயை உணவாக உண்டுகொண்டிருப்பது நிதர்சனமான உண்மை.

அதீத உப்பும் உறைப்பும் உடலை பாதிக்கும்.

அவ்வாறே அதீத இணையதளப் பயன்பாடு உடலையும் மனதையும் பாதிப்பதுடன் பலரது வாழ்வையும் சிதைத்துக்கொண்டு இருக்கிறது.

செல்போனே கதியாகக் கிடக்காமல், தேவைப்படும்போது தேவைப்படும் தொழில்நுட்பங்களை மட்டும் பயன்படுத்திவிட்டு உடனே வெளியே வந்துவிட மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

செல்போனைப் பொறுத்தவரை 'குறைவான நேரத்தில் நிறைவான பணி' என்பதைத் தாரக மந்திரமாகக் கொள்ள வேண்டும். புத்திசாலிகள் இதைத்தான் செய்வார்கள்.

"அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க"

என்ற திருக்குறள் வரிகளின்படி, நெருப்பில் குளிர் காய்பவர் நெருப்பிடம் முழுவதும் நெருங்கி விடாமலும், நெருப்பை விட்டு முழுவதுமாக விலகி விடாமலும் சரியான இடைவெளியில் குளிர் காய்வர். அதுபோல நாமும் தொழில்நுட்பத்தைவிட்டு முழுவதும் விலகி விடாமலும், அதீத பயன்பாட்டால் தொழில்நுட்பத்தின் உள்ளே சென்று கருகிவிடாமலும் சரியான இடைவெளியைக் கடைப்பிடிப்போம்!

செல்போனால் மிச்சப்படுத்தப்பட்ட நேரத்தை செல்போனிலேயே செலவிட வேண்டாமே.

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு