Published:Updated:

பிள்ளைகளை பறிகொடுத்த கூலித்தொழிலாளிகள்! - வாழ்க்கையை மாற்றுமா தமிழக அரசு? #MyVikatan

Representational image
Representational image

ஒரு பக்கம் மருத்துவ செலவினால் ஏற்பட்ட கடனை அடைக்க முடியாமல் மறுபக்கம் சரியான வேலையில் பொருந்த முடியாமல் படாதபாடு படுகிறார்கள் தற்கொலை செய்துகொண்டவர்களின் சகோதர சகோதரிகள். ...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

“பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே…” நான் கடவுள் படத்தில் இடம்பெற்றிருக்கும் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் பாடலில் இடம்பெற்றிருக்கும் வரி இது. இப்பாடல் வரிக்கேற்ப இந்த அவசர உலகில் நாளுக்கு நாள் மன உளைச்சல் அதிகமாகி தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்கொலைகளை தடுக்கும் வண்ணம் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் உலக தற்கொலை தடுப்பு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 10ம் தேதி கடைபிடிக்கபடுகிறது.

Representational image
Representational image

2021 கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 12.7% சதவீதம் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அதில் NCRB (National Crime Records Bureau) கணக்கெடுப்பின்படி தற்கொலையில் மகாராஸ்ட்ரா முதலிடம், தமிழகம் இரண்டாம் இடம், மேற்கு வங்கம் மூன்றாம் இடம் வகிக்கிறது.

இரண்டாம் இடத்தில் உள்ள நம் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் தினக்கூலிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று கணக்கெடுப்பு சொல்கிறது. அதே போல மாணவ மாணவிகள் தேர்வில் தோல்வி காரணமாக அதிக அளவில் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்றும் கணக்கெடுப்பு சொல்கிறது.

மாணவ மாணவிகள் தற்கொலையிலும் இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறது.
2016ம் ஆண்டு 981 மாணவர்கள், 2017ம் ஆண்டு 810 மாணவர்கள், 2018ம் ஆண்டு 953 மாணவர்கள் என்று இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 2744 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2019ம் ஆண்டு எத்தனை மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று எந்த பத்திரிக்கையும் தகவல் சொல்லவில்லை.

2016 - 2020 வரை தற்கொலை செய்துகொண்ட மாணவ மாணவிகளின் எண்ணிக்கை தோராயமாக 3500 ஆக இருக்கலாம். இப்படி தேர்வில் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு எதாவதொரு வகையில் உதவ வேண்டும். காரணம் இப்படி தற்கொலை செய்துகொண்டவர்கள் அனைவருமே நடுத்தரவர்க்கத்துக்கும் கீழான எளிய வர்க்கத்தை சேர்ந்தவர்கள்.

Representational image
Representational image

அந்த மாணவ மாணவிகளின் பெற்றோர்கள், குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்கள் அனைவரும் பெரும்பாலும் கூலித் தொழில் செய்பவர்களாக தான் இருக்கிறார்கள். அப்படிபட்ட கூலித் தொழிலாளிகளின் உடல்சார்ந்த பிரச்சினைகளும் அதனால் ஏற்படும் மருத்துவ செலவுகள் பற்றியும் சொல்லிமாளாது. அடிக்கடி ஏற்படும் மருத்துவ செலவு, வருமானத்தை விட அதிகமாகி அவர்களை கடன்காரர்கள் ஆக்கி வைத்திருக்கிறது.
இப்படி உடல்சார்ந்த பிரச்னைகளில் ஏற்கனவே தவித்து வரும் கூலிதொழிலாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் மகன்/மகள்களின் தற்கொலை காரணமாக தீராத மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுகிறார்கள்.

அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ செலவு முன்பைவிட அதிகமாவதால் மேலும் கடன்காரர்கள் ஆகிறார்கள். அவர்களின் குடும்பத்தில் உள்ள... தற்கொலை செய்துகொண்டவரின் சகோதர சகோதரிகள் படிப்பில் கவனம் செலுத்த முடியாதவராக மாறுகிறார்கள். தங்களுடைய அம்மா அப்பாவுக்கு தாம்தான் ஆறுதல் என்று மனதை ஒருநிலைப்படுத்த முயன்றாலும் அவர்களின் மன உளைச்சல் தீர்வதில்லை.

ஒரு பக்கம் மருத்துவ செலவினால் ஏற்பட்ட கடனை அடைக்க முடியாமல் மறுபக்கம் சரியான வேலையில் பொருந்த முடியாமல் படாதபாடு படுகிறார்கள் தற்கொலை செய்துகொண்டவர்களின் சகோதர சகோதரிகள்.

இவர்களுக்கு உதவுவதன் மூலம் அரசு தற்கொலைகளை ஊக்குவிக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவுவதன் மூலம் அரசாங்கம் எல்லா குடும்பத்துக்கும் ஆறுதலாக இருக்கும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல்பாடாக இருக்கும்.

இனி வரும் காலங்களில் கலெக்டர் முதல் விஏஓ வரை யாரோ ஒரு அரசு அதிகாரி தேர்வு ரிசல்ட் வரும் நாளில் தோல்வியடைந்த மாணவர்களின் வீடு தேடிச் சென்று அல்லது அலுவலகத்துக்கு வர வைத்து ஆறுதல் மொழிகள் வழங்க வேண்டும்.

Representational image
Representational image

"நீட்" தேர்வின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. அதேபோல கடந்த 2016 - 2020 ஆண்டுகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வி காரணமாக தற்கொலை செய்துகொண்ட 3500 மாணவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு பள்ளிக்கல்வி (இதே பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியத்தால் மாணவர்கள் இறந்ததால் அதே துறையில்) துறையில் காலியிடங்களாக உள்ள இளநிலை உதவியாளர்/ஆய்வக உதவியாளர் வேலை வழங்க வேண்டும்.

தேர்வில் தோல்வியடையும் மாணவர்களை பாதுகாக்கும் வகையில் அரசாங்கமே இலவச டுடோட்டரியல் நடத்த வேண்டும். இனிவரும் காலங்களில் "தேர்வில் தோல்வி காரணமாக தற்கொலை" என்ற செய்தி நாளிதழ்களில் வரவே கூடாது. மாணவ மாணவிகளின் தற்கொலையில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கும் தமிழகம் தற்கொலைகள் இல்லாத மாநிலமாக உருவாக வேண்டும். தற்கொலை செய்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் கூலித்தொழிலாளிகளின் மகன்கள்... என்பது குறிப்பிடத்தக்கது. பிள்ளைகளை தொலைத்த அவர்கள் கடும் மன உளைச்சலுடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் குடும்பத்தை அரசு காப்பாற்ற வேண்டும்.


- மா. யுவராஜ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு