Published:Updated:

தமிழகத்தின் ஊர்ப் பெயர்களும் தமிழர்களின் ஊர்ப் பாசமும்! - சுவாரஸ்ய பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Vikatan Team )

`ஊர் திரும்பும் எண்ணமே ஒருவனை வெளிநாட்டில் வாழவைத்துக் கொண்டிருக்கிறது' என்பார் எஸ்.ரா. உண்மையில், ஊர் என்பது ஒவ்வொருவரின் ரத்தத்திலும் ஊறியுள்ளது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

"சொந்த ஊர் என்பது

சொந்த வீடு இருப்பதற்கான ஊர்!"

ஒவ்வொரு மனிதரும் பிழைப்புக்காக வேறு ஊரில் வாழ்ந்தாலும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சொந்த ஊர் குறித்துப் பேசிவிடுவார்கள்.

இன்னும் பலர், ஊர்ப் பாசத்தை பெயரில் இன்ஷியலாய் தந்தை பெயர் முன் முதலெழுத்தை இட்டுக்கொள்ளும் வழக்கம் அன்று தீவிரமாய் இருந்தது.

"என் பிறந்த நகரத்தைப் பார்க்க வேண்டுமென்றால் உலக வரைபடத்தை பற்பல மடங்கு பெரிதாக்க வேண்டும்''

என்பார், கல்பற்றா நாராயணண். அதுபோல், நாமும் எந்த வரைபடத்தைப் பார்த்தாலும் முதலில் தேடுவது நம் சொந்த ஊரைத்தான், எத்தனை சிறிதாய் இருந்தாலும். எந்த விவாதத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

Representational Image
Representational Image
Vikatan Team

தற்போது, தமிழகம் முழுவதும் 1018 ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்புப்படி மாற்றியுள்ளது அரசு. முன்பு இருந்த ஆங்கிலேயர்கள், தமக்குப் புரியும் வகையில் ஊர்ப் பெயர் இருக்கும்படி மாற்றினர். அது அவ்வாறே நிலைத்துவிட்டது. உதாரணத்திற்கு, ஒத்தைக்கல் மந்து உதகமண்டலமாகவும், செஞ்சிக்கோட்டை Gingee fort என்றும், தூத்துக்குடி Tuticorin எனவும், திருவல்லிக்கேணி triplicane, பன்னீர்மடை என்பது பன்னிமடை எனவும் புழக்கத்தில் உள்ளது. இவை தவிர, தமிழகத்தில் நில அமைப்புகளை வைத்தே பெயரிடும் வழக்கம் முன்பு இருந்தது.

#தமிழகத்தின் ஊர்கள்

தமிழகத்தின் பல ஊர்களின் பெயர்களைக் கேட்டே அவர்கள் எந்தப் பகுதியென யூகித்துவிடலாம். பாளையக்காரர்கள் ஆண்டதில் கொங்கு மண்டலத்தில் பெரும்பாலும் பாளையம் என முடியும். ஏரிகளைச் சுற்றிய பகுதிகள் வாக்கம் எனவும், கடற்கரையை சுற்றியிருந்த நகரங்கள் பாக்கம் எனவும், கடற்கரையில் உண்டாகும் நகரங்கள் பட்டினம் மற்றும் கரை, துறை, குப்பம் எனவும் முடியும்.

மேய்த்தல் நிலங்கள் அதிகம் இருந்ததால், பட்டி என முடியும் ஊர்கள் தென் மாவட்டங்களில் இருக்கின்றன. ஆநிரைகளை காக்கத் தங்கிய இடங்கள் பாடி எனவும், குடி என முடியும் பெயர்கள் அக்காலத்தில் குடியிருப்பை உணர்த்தும் பெயர்களாகவும் இருந்தன. ஒவ்வொரு ஊரின் பெயரும் காரணப் பெயர்களாய் அமைந்தது தமிழகத்தின் சிறப்பு.

Representational Image
Representational Image
Vikatan Team

#சுவாரஸ்யமான ஊர்கள்

* ஏழை விவசாயி, அன்றாடம் தான் விளைவித்த நெல்லை சிவனுக்குப் படைப்பார். ஒருநாள், கடும் மழையினால் நெல்லைப் படைக்க முடியுமா என ஐயம் நிலவியது. எனினும் தன் பக்தியின் மீதுள்ள நம்பிக்கையால் நெல்லைப் படைத்தார். நெல் இருந்த இடத்தைத் தவிர மற்ற இடங்களில் மழை பெய்தது. நெல்லுக்கு வேலியாக இருந்ததால் நெல்வேலி ஆகி, மரியாதை அடைமொழியுடன் திருநெல்வேலி ஆக மாறியதாகக் கூறுவார்கள்.

*மதுரையை ஆண்டவர்களில் ஸ்ரீ வல்லபன் என்பவர் தென்பகுதி மக்களுக்கு வளம் சேர்க்கும் வகையில் பல பணிகளைச் செய்ததோடு, ஒரு ஏரியையும் வெட்டிவைத்தார். அவரை நினைவுகூறும் வகையில், அவ்வூரை ஸ்ரீவல்லபப்பேரி எனபெயர் சூட்டி பின்னாளில் சீவலப்பேரி என்றாயிற்று.

*ஆற்று நீர் ஒரு கால்வாயில் பிரித்து வளைத்து விடப்பட்டு (ஏறக்குறைய U வடிவில்) மீண்டும் ஆற்றில் சேர்க்கப்படும் நுட்பமே வாய்த்தலை ஆகும். வளையும் இடத்தில் ஒரு வாய் ஏற்படுத்தி பாசனக்கால் உருவாக்கப்பட்டது. உதாரணத்திற்கு திருச்சி அருகிலுள்ள பெட்டவாய்த்தலையைச் சொல்லலாம்.

*திருவாரூரில் நாங்கள் படித்துக்கொண்டிருந்தபோது, அங்கு ஒரு கிராமத்தின் பெயர் அடியக்க மங்கலம் என இருந்தது. அந்த ஊரில் ஆங்கிலேயர் வந்தபோது பெண்கள் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தனர்.

ஆங்கிலேயர் இது என்ன ஊர் என கேட்டதற்கு, `அடி யக்கா மங்கலம்... என்ன சொல்றாங்க?' என்று கேட்டிருக்கிறார் ஒரு பெண். உடனே ஆங்கிலேயர்களும் அவ்வூரை ``அடியக்க மங்கலம்’’ என்று வழங்கியதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

Representational Image
Representational Image
Vikatan Team

*சென்னையில் மிகப்பெரிய கட்டுமான நிபுணராக விளங்கிய நம்பெருமாள் செட்டியார் வாழ்ந்த பகுதி `செட்டியார் பேட்டை' என அழைக்கப்பட்டது. பின்னாளில் அது `சேத்துப்பட்டு' என மாறியது. இதுபோல், சென்னையில் பல பெயர்கள் இருப்பதை அறியலாம்.

*நாடு விடுதலை அடைந்தவுடன் புதிய மாநிலத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என டெல்லியில் காத்திருந்தனர். உத்தரப்பிரதேசத்திலிருந்து தந்தி வந்தது. அதில், `இந்துஸ்தான்' என இருந்தது.

பின் `ஆரியவிரத்' , அதற்குப்பின் `ராமராஜ்யம்' என அனுப்பினர். இறுதியில் நேரு தலையிட்டு, உத்தரப்பிரதேசம் என இறுதி செய்தார்.

#ஊரும் பேரும்

ரா.பி.சேதுப்பிள்ளையின் ``ஊரும் பேரும்’’ புத்தகம், தமிழகத்தின் ஊர்களை ஆய்வு நோக்கில் உள்ள வரலாற்றை விவரிக்கிறது. அதில் சில ஊர்கள் குறித்து,

*புத்தூர்

புதிதாய் தோன்றும் ஊரின் பெயர் `புத்தூர்’ என அழைப்பது வழக்கம். இன்றைய லே-அவுட் போல.

கொங்கு நாட்டில் பழைய பேரூருக்கு அருகில் கோவன் எனும் தலைவன் பெயரால் எழுந்த ஊர் கோவன் புத்தூர். நாளடைவில் `கோயம்புத்தூர்’ ஆனது.

*புரம் என்பது சிறந்த ஊர்களைக் குறிப்பதாகும் என்கிறார் ரா.பி.

அரசர்களின் பெயர்களில் பல்லவபுரம், சோழபுரம் என இருப்பதை அறியலாம். புரம் என்பது புரி எனவும் வழங்குவர். தர்மபுரி, ரத்தினபுரி எனப் பல ஊர்கள் தமிழகத்தில் இருக்கின்றன.

*சேரி என்பது பல குடிகள் சேர்ந்து வாழும் ஊர். சோழமண்டல கடற்கரையில் தோன்றிய ஊர் புதுச்சேரி. இதனை ஆங்கிலேயர்கள் பாண்டிச்சேரி என மாற்றிவிட்டனர்.

Representational Image
Representational Image
Vikatan Team

*பேட்டை என்பது தொழில்களால் சிறப்புற்ற நகரத்தைக் கூறுவர். இன்றும் தொழிற்கூடங்கள் இருப்பதை சிப்கோ, அம்பத்தூர் தொழிற்பேட்டைகள் என இருக்கின்றன. சேலத்தில் செவ்வாய் தோறும் சந்தை கூடுவதால் செவ்வாய்ப்பேட்டை எனப் பெயர் வந்திருக்கலாம் என்கிறார்.

ஒவ்வொரு ஊரிலும் நடைபெறும் தொழில்களைப் பொறுத்து பேட்டையின் பெயர் மாறுகிறது.

கர்நாடக மன்னன் முகமது அலியின் மற்றொரு பெயர், வாலாஜா. இப்பெயர், ஆற்காட்டிலுள்ள வாலாஜா பேட்டைக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல், செஞ்சிக்கோட்டையின் மன்னன் தேசிங்குராஜன், முகமதிய மன்னன் சாதுல்லாகானோடு போராடி மாண்டான். அவனோடு அவன் மனைவி உடன் கட்டை ஏறியதை பெருமைப்படுத்தும் விதத்தில், அவன் மனைவியின் பெயரில் `ராணிப்பேட்டை' எனப் பெயர் சூட்டினர்.

பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் போல பழைய ஊர்களுக்கு அருகில் புதிதாய் தோன்றுபவை பழைய என்பவற்றுக்கு மாற்றாக புதிய எனும் அடைமொழி மூலம் வழங்கப்படுகிறது. புதுப்பேட்டை, புதுக்கோட்டை எனப் புது எனும் முன் பெயர் வழி அறியலாம்.

இவை தவிர, தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்கள், பல்லவர்கள், விஜயநகர அரசர்கள், கடையேழு வள்ளல்கள், குறுநில மன்னர்கள், முகமதியர்கள் பெயரிலும் ஊர்கள் இருக்கிறது. ஆறு, குளம், துறை, காடு ஆகிய விகுதிகளோடு முடியும் பெயர் உண்டு. மேலும், முற்காலத்தில் சமணர்கள் இருந்த இடங்கள் பள்ளி என்றும், தேவாரப் பாடல்களில் பாடல் பெற்ற தளங்களை ஊர்ப்பெயர் கொண்டு காணமுடிகிறது.

#வரலாற்றில் தமிழகம்

பள்ளியில் படிக்கும்போது கர்நாடகப் போர்கள் பற்றிப் படித்திருப்போம். நேர்காணலில் எனது நண்பரிடம் கர்நாடகப் போர் எங்கு நடைபெற்றது எனக் கேட்டவுடன், உடனே கர்நாடகா என்றார். மறுபேச்சின்றி நிராகரித்துவிட்டனர்.

பெயரைப் பார்த்தவுடன் நம் மூளையும் இதைத்தான் சொல்லத்தோன்றும். ஆனால், மூன்று போர்களும் நடைபெற்றது தமிழகத்தில். மொகலாயர் வீழ்ச்சிக்குப் பின் தக்காணத்தின் ஒரு பகுதியாக கர்நாடகத்தை விடுதலை பெற்றதாய் அறிவித்தார் நிசாத் உல் முல்க். கர்நாடகப் பகுதிகளாக தமிழகமும் இருந்தது. அதாவது காவிரி பாயும் மண்டலங்களாக இருந்ததால் கர்நாடகப் போர் எனப் பெயரிட்டே சென்னை அடையாறில் நடந்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற மற்ற இரு போர்களும் தமிழகத்தில்தான் நடைபெற்றன.

Representational Image
Representational Image

#ஊர்ப்பாசம்

புகழ்பெற்ற கலைஞர்கள் பலர் பெயரின் முன் ஊர்ப் பெயரை இடும் பழக்கம் இருந்தது. உடுமலை நாராயணகவி, ஈ.வே.ரா போன்ற பல ஆளுமைகளின் முதலெழுத்து உள்ளது அவர்களின் ஊரே. ஊர் என்பது மக்களின் உணர்வோடு கலந்தது. `ஊர் திரும்பும் எண்ணமே ஒருவனை வெளிநாட்டில் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது’ என்பார் எஸ்.ரா. உண்மையில், ஊர் என்பது ஒவ்வொருவரின் ரத்தத்திலும் ஊறியுள்ளது. பேயத்தேவரின் வாய்மொழியாய் வைரமுத்து எழுதியிருப்பார்...

"உசுரை விட்டு போறது மட்டும் சாவு இல்லை, ஊரை விட்டுப் போறதும் சாவுதான்" என்று!

தமிழர்களின் ஊர்ப் பாசம் அளவிட முடியாதது.

-மணிகண்ட பிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு