Published:Updated:

மேரி கொல்வின் போன்றுதான் விஜயகுமாரும்..! - புகைப்படங்களில் படிந்திருக்கும் துயரக் கதை #MyVikatan

மேரி கொல்வின், விஜயகுமார்
மேரி கொல்வின், விஜயகுமார்

போர் தொடர்பான தகவல்களை சேகரிப்பது போன்றே மிகவும் ஆபத்தானதாக இருந்தது, இருப்பது கொரோனா காலத்தில் செய்தி சேகரிப்பது...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

"போரில் ஒருவர் துப்பாக்கியால் சுடப்படுவதை செய்தியாக்க, போர்க்களத்திற்கு போக வேண்டும். அங்கே நடப்பதை பார்த்து செய்தியாக்க வேண்டும் - மேரி கொல்வின்" போரில் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை வெளிக்கொண்டு வந்த தலைசிறந்த பத்திரிக்கையாளர்களில் ஒருவர் திருமதி மேரி கொல்வின். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். இங்கிலாந்தின் The Sunday Times பத்திரிக்கையில் நிருபராக 1985 இல் சேர்ந்தது முதல் பல போர்க்களங்களை செய்தியாக்கினார்.

ரஷ்யா-செசன்யா போரில் பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகளை பற்றி செய்தி சேகரிக்க களத்திற்குச் சென்றார். விஷயம் தெரிந்த ரஷ்யப்படை பல துல்லியத் தாக்குதல்களை நடத்தியது. அதில் தப்பினாலும், செசன்யாவில் சிக்கிக்கொண்டார். அங்கே இருந்து வெளியேற அவருக்கு இருந்த ஒரே வழி, 12000 அடி பனி மலையில் ஏறி ஜார்ஜியாவிற்கு வருவது தான். ஐஸ் கட்டியில் சில அடிகள் நடப்பதே மிக கடினம். ஆனால், 12000 அடி ஐஸ்கட்டி மலையில் ஏறி ஆபத்திலிருந்து வெளியேறினார்.

மேரி கொல்வின்
மேரி கொல்வின்

அவருடன் வெளியே வந்தது போரில் பாதிக்கப்பட்ட மக்களின் துயரம். கிழக்கு தைமூரில் செய்தி சேகரித்த பொழுது, 1500 பெண்கள் குழந்தைகளை இந்தோனேசிய ராணுவம் தாக்கும் சூழல் நிலவியது. அவருடன் சென்ற 22 பத்திரிக்கையாளர்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். ஆனால், மேரி அங்கேயே இருந்தார். பெண்கள் குழந்தைகள் இருக்கும் ஆபத்தான சூழல் பற்றி நான்கு நாட்கள் இடைவிடாமல் செய்தி அனுப்பினார். அதன் பலனாக அனைவரும் மீட்கப்பட்டனர். இன மொழி பாகுபாடுகளற்ற, மனிதம் ஒன்றை மட்டும் போற்றிய மேரி ஈழப் போரை பற்றி செய்தி சேகரிக்க வந்தார். வன்னிக் காடுகளில் நடந்தே சென்று போர் நிலவரங்களை பற்றி தகவல் திரட்டி கட்டுரையாக்கினார்.

இந்திய பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப்பிற்கு பிறகு, ஈழம் பற்றி ஒரு முழுமையான ஆவணத்தை தந்தது மேரி கொல்வின். அவர், ஈழப்பகுதியில் இருந்து, இலங்கைக்குள் நுழைந்த பொழுது சிங்கள ராணுவம் தாக்கியதில், இடது கண்ணை இழந்தார். அது முதல், இடது கண்ணில் ஒரு கண் திரை அணிந்திருந்தார். இறுதியாக, சிரியாவிற்கு செய்தி சேகரிக்கச் சென்றார். அரசாங்க அனுமதியில்லாததால், மேரியும் புகைப்பட கலைஞரும் இரு சக்கர வாகனத்தில் சென்றனர்.

அங்கு குழந்தைகளும் பெண்களும் படும்துயரை செய்தியாக்கி அனுப்பினார். அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து குண்டு மழை பொழிந்தது சிரிய அரசு. அதில் காவியமானார் மேரி கொல்வின். அன்றைக்கு அடங்கியது மேரி கொல்வின் குரலல்ல, குரலற்ற கோடானு கோடி பெண்கள் குழந்தைகளின் குரல். War Reporting இன் உச்சம் மேரி கொல்வின். போர் தொடர்பான தகவல்களை சேகரிப்பது போன்றே மிகவும் ஆபத்தானதாக இருந்தது, இருப்பது கொரோனா காலத்தில் செய்தி சேகரிப்பது. அப்படி செய்தி சேகரிக்கச் சென்ற சில பத்திரிக்கையாளர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதும் நடந்திருக்கிறது. இன்றைக்கும் பிணை கேட்டு நீதிமன்றத்தின் நீண்ட நெடிய படிக்கட்டுகளில் ஏறி வரும் பத்திரிக்கையாளர்கள் இருக்கிறார்கள். கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவர்களுக்கு இணையாக ஓய்வின்றி உழைத்து வருபவர்களில் முக்கியமானவர்கள் பத்திரிகையாளர்கள். ஏறக்குறைய இருநூறுக்கும் மேற்பட்ட இந்திய பத்திரிக்கையாளர்கள் கொரோனாவால் இறந்திருக்கிறார்கள்.

விஜயகுமார்
விஜயகுமார்

விகடனின் ஆகச்சிறந்த புகைப்பட கலைஞர் விஜயகுமார் இறந்திருக்கிறார். “ஒரு விகடன் புகைப்படக் கலைஞனாக என் 'வியூ பைண்டர்' ஏராளமான துயரங்களையே காட்சிப்படுத்தியிருக்கிறது. மகிழ்ச்சியையும் கொண்டாட்டங்களையும்விட துயரங்களே அதிகமாக என் புகைப்படங்களில் படிந்திருக்கின்றன. எந்த வெளிச்சமும் படாத, குரலற்ற மனிதர்களுடைய எளிய வாழ்க்கைக்குள் இருக்கிற வலியின் கணத்தை பதிவு செய்வதே ஒரு புகைப்படக் கலைஞனாக என்னை முழுமைப்படுத்துகிறது." - இது விஜயகுமார் அவரை பற்றிய அறிமுகமாக சொன்ன தகவல். மேரி கொல்வின் போலவே குரலற்ற மனிதர்களின் துயரை புகைப்படமாக விவரித்த விஜயகுமாரின் குடும்பத்திற்கு இரண்டு ஆண்டு காலம் விஜயகுமாரின் சம்பளத்தை வழங்குவதாக அறிவித்த விகடன் குழுமத்திற்கு நன்றி.

விஜயகுமாரின் புகைப்பட கலெக்‌ஷன் : https://www.vikatan.com/author/444-vijayakumar-m

-சி.எஸ்.ஐ.ஆர் ஆராய்ச்சியாளர் முனைவர் கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு