Published:Updated:

`அரை வாளி தண்ணியில எப்படிப்பா குளிக்குறீங்க?' -காலம் உணர்த்திய பாடம் #MyVikatan

Representational Image
Representational Image ( Vikatan Team )

இந்த பத்து உயிர்களுக்கும் தேவையான நீரை தினமும் நாங்கள் சேகரித்து வைக்க வேண்டும். காலை ஐந்து மணிக்கு எழுந்து தண்ணீர் எடுக்கச் செல்ல வேண்டும்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

``நீரின்றி அமையாது உலகு..." நான் இதை இப்படி யோசித்துப் பார்க்கிறேன், உலக வரைபடத்தில் நீங்கள் பார்த்தீர்களெனில் அந்த அழகான 7 கண்டங்களின் அமைப்பு நிலம், நீர் என்ற இரு விஷயங்களினாலேயே பிரிக்கப்பட்டிருக்கும். இவ்வுலகில் நீர் இல்லையென்றால் உலக வரைபடம் என்ற ஒன்று தேவைப்பட்டிருக்காது. ஒரு வெண்மையான நீள்வட்டமாக இந்த உலகம் வரையப்பட்டிருக்கும்.

அடுத்ததாக உயிர்களின் பரிணாம வளர்ச்சி (இதுவரை வரையறுக்கப்பட்ட பல கோட்பாடுகளிலிருந்து (Defined revolutionary theory) நீரிலிருந்து தோன்றியதாக நாம் அறிகிறோம் மற்றும் அனைத்து உயிர்களுக்கும் நீர் என்பது உயிர் வாழ்வதற்கு இன்றியமையாததாக இருக்கிறது.

Representational Image
Representational Image

குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒருமுறை இந்த பூமி ஒரு கடுமையான வறட்சியை (Severe Drought) சந்திக்கும் என்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். உலகத்தின் மற்ற பகுதிகளில் எப்படியோ தெரியாது. எங்களுடைய கிராமம் அத்தகைய வறட்சியைச் சந்தித்திருக்கிறது.

நான் பிறந்த வருடம் அவ்வாறான ஒரு பஞ்சம் வந்ததாகவும் அதன்பிறகு ஒரு பன்னிரண்டு வருடங்கள் கழித்து நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது அதுபோன்ற வறட்சி எங்கள் ஊரில் ஏற்பட்டது. அந்த சமயம் எங்கள் ஊரின் நீர் தேவையை சமாளிப்பதற்கு எங்கள் ஊரின் ஏரி நடுவில் முதல் ஆழ்துளைக் கிணறு (Bore Well) அமைக்கப்பட்டது. அந்த ஒரு அடி பம்பு எங்கள் கிராமத்தின் மொத்த நீர் தேவையையும் நிறைவு செய்தது என்றால் மிகையாகாது.

எங்கள் வீட்டின் பின்புறம் எங்கள் வீட்டின் உபயோகத்திற்காக ஒரு உறை கிணறு அமைத்திருந்தோம். அது சுமார் 40 அடி ஆழம் இருக்கும். பெரும்பாலும் அந்தக் கிணறு எங்கள் வீட்டின் நீர் தேவையை நிறைவு செய்ய போதுமானதாக இருந்தது. நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது ஒரேநாள் இரவில் பெய்த கனமழையால் அந்தக் கிணறு நிரம்பியிருக்கிறது. அப்போது பெய்த மழையில் கிட்டத்தட்ட ஒரு மாதம் சிறு நீரோடை போல் நீர் ஊற்றெடுத்து எங்கள் வீட்டின் ஓரம் ஓடிக்கொண்டிருந்தது. மேலே நான் கூறிய பஞ்சம் ஏற்பட்டபோது அந்தக் கிணறும் வறண்டுவிட்டது.

Representational Image
Representational Image
Vikatan Team

அப்போது எங்கள் வீட்டில் நாங்கள் ஆறு பேர். எங்கள் வீட்டில் இரண்டு பசு மாடுகளும் இரண்டு காளை மாடுகளும் இருந்தன. இந்தப் பத்து உயிர்களுக்கும் தேவையான நீரை தினமும் நாங்கள் சேகரித்து வைக்க வேண்டும். காலை ஐந்து மணிக்கு எழுந்து தண்ணீர் எடுக்கச் செல்ல வேண்டும்.

அத்திப்பட்டி, அந்த `ரஜினி' போட்டோ, `செவந்தி' சரிதா... கே.பாலசந்தரின் `தண்ணீர் தண்ணீர்’ சீக்ரெட்ஸ்!

எங்கள் வீட்டில் அப்போது விவசாயம் மற்றும் வீட்டின் தேவைக்கென ஒரு கட்டை மாட்டு வண்டி இருந்தது. இரு மாடுகள் கட்டி இழுக்கும் வண்ணம் இருக்கும். அந்த வண்டியை நாங்கள் நெல் அரைக்கச் செல்லும்போது, எங்களுடைய புஞ்சை நிலத்திலிருந்து மாடுகளுக்கு உண்பதற்குத் தேவையான கம்பு, சோள தட்டைகளையும் மற்றும் கடலை கொடிகளையும் ஏற்றி வருவதற்கும் விளை நிலத்துக்குத் தேவையான உழவு கருவிகளை கொண்டு செல்லவும் பயன்படுத்துவோம்.

Representational Image
Representational Image
Vikatan Team

அந்த வண்டியில் சுத்தப்படுத்திய ஒரு மண்ணெண்ணெய் பேரலை கட்டி தண்ணீர் எடுக்கச் செல்வோம். அந்த பேரலின் மேற்புறம் இரு துளைகள் இருக்கும். அந்தப் பேரலை படுக்கை வசமாக மாட்டு வண்டியின் மேலே இருபுறம் இரு கட்டைகளை வைத்து நகராமல் கயிற்றால் கட்டிவிடுவோம். அப்போது பெரிய துளை மேற்புறமும் சிறிய துளை அடிப்புறமும் இருக்கும். மேற்புற துளை வழியாக நீரை ஊற்றி அடைத்துவிட்டு கீழ்ப்புற துளை வழியாக நீரை வீட்டுக்கு வந்து பிடித்துக்கொள்வோம்.

அந்த பேரல் சுமார் 22 குடம் நீர் பிடிக்கும். ஒரு குடம் என்பது 13 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டது. அப்படியென்றால் சுமார் 280 லிட்டர் தண்ணீர் பிடிக்கும். ஏரியிலுள்ள அந்த அடிபம்புக்கு எங்கள் வீட்டிலிருந்து சுமார் 1 மைல் தொலைவு இருக்கும். காலை ஐந்து அல்லது ஐந்தரை மணிக்கு வண்டியை கட்டினால் ஆறு அல்லது ஆறேகால் மணிக்கு போர்வெல்லுக்கு சென்றடைவோம்.

Representational Image
Representational Image
Vikatan Team

காலை நேரத்தில் கூட்டம் சற்றே குறைவாக இருக்கும். எங்கள் முறை வந்தவுடன். வண்டியை பம்புக்கு அருகில் நிறுத்திவிட்டு இருவர் அடிபம்பின் கைப்பிடியைப் பிடித்து அடிக்க தண்ணீர் குடத்தில் நிரம்பும். ஒருவர் குடம் நிரம்பியவுடன் மேலே தூக்கி கொடுக்க வண்டி மேலிருந்து ஒரு புனல் வைத்து நீரை அந்த டிரம்மில் நிரப்புவோம். முழுவதும் நிரம்பிய பிறகு குடிப்பதற்காக இரு குடம் மற்றும் ஓர் அண்டாவில் நீர் நிரப்பி சைக்கிளில் வைத்து இருவர் தள்ளிக்கொண்டு வருவார்கள். பெரும்பாலும் நான் மாட்டு வண்டியை ஒட்டிக்கொண்டு வருவேன்.

அந்த 280 லிட்டர் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி எங்களுடைய அனைவரின் ஒருநாளைய தண்ணீரின் தேவைகளை நிறைவு செய்வோம்.

எங்கள் அப்பா அடிக்கடி,

``தண்ணீரைப் பார்த்து செலவு செய். இல்லையென்றால் தண்ணீரை செலவழிக்கும் அளவுக்கு பணம் செலவாகும்..." என்று சொல்வார்.

அதனுடைய அர்த்தம் எனக்கு அப்போது புரியவில்லை. எப்படி தண்ணீரை அதிகமாக உபயோகப்படுத்தினால் பணம் செலவாகும். இந்த உலகத்தில் இலவசமாக கிடைக்கும் நீரை செலவழித்தால் பணம் எப்படி செலவாகும் என்ற கேள்வி எனக்குள் இருந்துகொண்டே இருக்கும்.

Representational Image
Representational Image
Vikatan Team

ஆனால், பிற்காலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கையில் வாட்டர் மீட்டர் (Water Meter) வைத்து உபயோகப்படுத்தும் நீரைக் கணக்கிட்டு பணம் செலுத்தும்போதுதான் இந்த விஷயம் எனக்கு புரிந்தது.

என்னுடைய அப்பா அரை வாளி தண்ணீரில் குளிக்கும்போது எப்படி அரை வாளி தண்ணீரில் குளிக்க முடியும் என்று எரிச்சல் அடைந்த நான், இன்று அதே அரை வாளி தண்ணீரில் குளிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

குடிக்கும் நீரை காசு கொடுத்து வாங்க நேரிடும் என்று என் பால்ய வயதில் நான் கனவிலும் நினைத்ததில்லை.

நீரின் முக்கியத்துவம் அன்றும் இன்றும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.

நமக்குத்தான் இன்னும் அது புரியவில்லை.

ஒரு நாள் புரியும்.

அந்த நாள் வந்துவிட்டதென நினைக்கிறேன்.

-ஆனந்தகுமார் முத்துசாமி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு