Published:Updated:

"முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்தப் பரிசைத் தரவேண்டும்" ஒரே மரம் ஒரே உளியால் தமிழ் மாலை செய்த நாகராஜ்

நாகராஜ்

சிறுவயதிலிருந்தே வெளியூர்களுக்குச் சென்று தச்சுவேலைகள் செய்யத் தொடங்கிவிட்டேன். தச்சு வேலைகளில் தனித்துவத்தைக் காட்டவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. பெற்றோர் தூங்கிவிட்ட பிறகு யாருக்கும் தெரியாமல் பறவைகள், விலங்குகள், பூக்கள், இயற்கைக் காட்சிகளை மரக்கட்டைகளில் செய்துபார்ப்பேன்.

"முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்தப் பரிசைத் தரவேண்டும்" ஒரே மரம் ஒரே உளியால் தமிழ் மாலை செய்த நாகராஜ்

சிறுவயதிலிருந்தே வெளியூர்களுக்குச் சென்று தச்சுவேலைகள் செய்யத் தொடங்கிவிட்டேன். தச்சு வேலைகளில் தனித்துவத்தைக் காட்டவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. பெற்றோர் தூங்கிவிட்ட பிறகு யாருக்கும் தெரியாமல் பறவைகள், விலங்குகள், பூக்கள், இயற்கைக் காட்சிகளை மரக்கட்டைகளில் செய்துபார்ப்பேன்.

Published:Updated:
நாகராஜ்

கண்ணாடி, களிமண், பிளாஸ்டிக், பேப்பர், மரக்கட்டை ஆகியவற்றில் கைவினைப் பொருள்கள் செய்யும் நபர்களை நாம் அறிந்திருப்போம். அவை ஒன்றுடன் ஒன்று ஒட்டப்பட்டே ஒரு வடிவத்திற்குக் கொண்டுவரப்பட்டிருக்கும். ஒரு சிறிய ஜன்னல் செய்ய வேண்டும் என்றாலே பல மரத்துண்டுகள் இருந்தால்தான் செய்ய முடியும். ஆனால், ஒரு மரத்தைத் துண்டாக்காமல், உளியால் குடைந்து குடைந்து எந்தவொரு வடிவத்தையும் வடித்துக் காட்டுகிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த நாகராஜ் (53).

தமிழ் எழுத்துகள் கொண்ட மரமாலை
தமிழ் எழுத்துகள் கொண்ட மரமாலை

பள்ளிக்கே செல்லாத நாகராஜுக்கு தமிழ்மீது தீராக்காதல் உண்டு. சிறுவயதில் வேலை பார்த்துக்கொண்டு எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக்கொண்டுள்ளார். அத்தகைய தமிழுக்கு தம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு மாத உழைப்பைக் கொடுத்து, நான்கு அடி மரப்பலகையைத் துண்டாக்காமல் அ முதல் ஃ வரையிலான எழுத்துகளை ஒரு மாலையாகத் தொடுத்துள்ளார்.

நவீன யுகத்தில் மரத்தை இழைப்பதற்கும் நுணுக்கமான வேலைப்பாடுகளுக்கும் எத்தனையோ கருவிகள் வந்துவிட்டபோதிலும், உளியைக்கொண்டு, மரத்தைத் துண்டாக்காமல் வேண்டிய உருவதைக் கொண்டுவரும் கலை குறித்துத் தெரிந்துகொள்வதற்காக நாகராஜை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழ் மரமாலையுடன் நாகராஜ்
தமிழ் மரமாலையுடன் நாகராஜ்

”தேனி மாவட்டம் கூடலூர்தான் சொந்த ஊர். தாத்தா விவசாயி, அப்பா விவசாயம் தொடர்பான தச்சு வேலைகளில் ஆர்வம் கொண்டு, தானாகக் கற்றுக்கொண்டு அந்தத் தொழிலில் ஈடுபட்டார். அவரிடம் இருந்து சிறுவயது முதலே நானும் தச்சு வேலைகளில் ஈடுபடத் தொடங்கினேன். வில் வண்டி, மாட்டு வண்டி, ரேக்ளா வண்டி, கலப்பைகளைப் புதிதாகச் செய்து கொடுப்போம். அதில் பழுது இருந்தாலும் சரிசெய்து கொடுப்போம். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கூடலூர் பகுதியில் தச்சுத் தொழிலை நேர்த்தியாகச் செய்து கொடுக்கக் கூடிய தொழிலாளர்கள் நிறைய பேர் இருந்தனர். இதனால் சிறுவயதில் இருந்தே வெளியூர்களுக்குச் சென்று தச்சு வேலைகள் செய்யத் தொடங்கிவிட்டேன். இருப்பினும் தச்சு வேலைகளில் தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் எண்ணுள் இருந்துகொண்டே இருந்தது. பெற்றோர் தூங்கிவிட்ட பிறகு விளக்கேற்றி, யாருக்கும் தெரியாமல் பறவைகள், விலங்குகள், பூக்கள், இயற்கைக் காட்சிகளை மரக்கட்டைகளில் செய்து பார்ப்பேன். அந்த அனுபவத்தில்தான் நண்பர்களுடன் சேர்ந்து, பூஜை அறைகள், தேர் போன்றவற்றைச் செய்யும் வாய்ப்பைப் பெற்றேன். என்னுடைய தொழில் நேர்த்தியைப் பார்த்த பலரும் தனியாக வேலை வழங்கினர்.

அலங்கார நுழைவுவாயில்
அலங்கார நுழைவுவாயில்

விவசாயம் சார்ந்த தச்சுத் தொழிலுக்கு வேலையின்றிப் போனதால், திருமணம் முடிந்ததும் திண்டுக்கல் குடிபெயர்ந்தேன். திண்டுக்கல்லில் பழைய கட்டடங்களில் இருந்து எடுக்கப்படும் மரங்களை வைத்து மரவியாபாரம் செய்தேன். ஆகமவிதிகளின் படி செய்யப்படும் மரவேலைப்பாடுகளைக் கற்றுக்கொண்டு அதில் ஈடுபட்டேன். தனியாகப் பட்டறை நடத்தினேன். நுணுக்கமான வேலைப்பாடுகள் உட்பட அனைத்துத் தச்சு வேலைகளையும் எடுத்துப் பார்த்தேன். இருப்பினும் எனக்கு தச்சுத் தொழிலில் தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் தூங்கவிடவில்லை. இதனால் கடந்த பத்து ஆண்டுகளாகத் தச்சு வேலைகளை விட்டுவிட்டு மரவியாபாரத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறேன். இடையே கைவினைப்பொருள்கள் செய்யும் வேலைகளைச் செய்துகொண்டிருப்பேன். அப்போது இதைவிடக் கூடுதலாக எதையாவது செய்ய வேண்டுமே என்ற எண்ணத்தில், பூஜை அறைக்கான அலங்கார நுழைவுவாயில் செய்யத் திட்டமிட்டேன். இதற்காக பர்மாத் தேக்கு, குமிழ் ஆகிய மரவகைகளை வாங்கினேன். மொத்தம் நான்கு துண்டுகளாக வாங்கினேன். நான்கு அடி உயரத்திற்குச் சங்கிலி போன்றும், சங்கிலியில் தொங்கும் தாமரை போன்றும், ஒரே மரத்துண்டில் செய்து முடித்தேன். இதையடுத்து கடவுள் லட்சுமியை மையமாக வைத்து இருபுறமும் யானை இருப்பது போன்ற சிலைகள், அதன் கீழே அலங்காரச் சங்கிலிகள் ஒரு மரத்துண்டு, மேலே கோபுரம் போன்ற அமைப்பை ஒரே மரத்துண்டிலும் செய்து முடித்தேன். இதற்காக மொத்தம் ஒன்பது மாதங்களை எடுத்துக்கொண்டேன். இந்தக் காலங்களில் குளிப்பது, சாப்பிடுவதைக்கூட மறந்து முழுமையாக வேலையில் மட்டுமே கவனம் செலுத்தினேன்.

தமிழ் மரமாலை
தமிழ் மரமாலை

இதைச் செய்து முடிந்தவுடன், நான் படிக்கவில்லையே என்ற குறை இருந்தாலும், தமிழ் மீதும் தமிழ் எழுத்துகள் மீதும் காதல் இருப்பதால், அந்த எழுத்துகளை வடித்து மாலையாகத் தொடுக்க வேண்டும் என முடிவெடுத்தேன். அதற்கு முழுமையாக 20 நாள்களை ஒதுக்கி நான்கு அடி மரத்தை, துண்டாக்காமல் உளியால் குடைந்தெடுத்து மாலை செய்தேன். இந்த மாலையைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்க உள்ளேன்.

என்னதான் நவீனக் கருவிகள் வந்துவிட்டபோதிலும் இதுபோன்ற வேலைப்பாடுகளைக் கணினி இயந்திரங்களால்கூடச் செய்ய முடியாது. என்றுமே மனிதனின் கற்பனையாலும் ஆற்றலாலும்தான் சிறப்பான கலையைக் கொடுக்க முடியும் என்பதை எனது வேலைப்பாடுகள் நிரூபிக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். எனது வேலையைப் பார்த்து மாணவர்களுக்குக் கற்பிக்கக் கோரியுள்ளார்கள். கல்வி நிலையத்துக்குச் செல்லாத நான் இக்கலையைக் கற்பிக்கச் செல்லத் தயாராக இருக்கிறேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism