Published:Updated:

தாத்தாவும் என்னை உயிர்ப்பிக்கும் கடிதங்களும்! - வாசகர் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

3 மாதத்திற்கு ஒரு கடிதம் எழுதும் வழக்கத்தை இன்றும் கடைப்பிடித்து வருகிறார், வங்கியில் பணிபுரிந்து பணி நிறைவுபெற்ற என்னுடைய தாத்தா.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

திவ்யமாக மதிய உணவை முடித்த ஒரு விடுமுறை நாளில், சற்று கண் அசந்து ஒரு கோழித் தூக்கம் தூங்க படுக்கை அறையை நோக்கி போய்க்கொண்டிருந்த என்னை, ஏதோ சிந்தனை வந்தவளாய் இடைமறித்த என் மனைவி,

"இந்தாங்க, இது நேத்து வந்தது... சொல்ல மறந்துட்டேன்"

என்று எங்கள் வீட்டு முகவரி எழுதப்பட்ட ஒரு காக்கி அலுவலக உரையை என்னிடம் நீட்டினாள்.

அதைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்குப் புரிந்தது. இது 78 வயதான ராமகிருஷ்ணன் தாத்தாவிடம் இருந்து வந்த கடிதம் என்று. 3 மாதத்திற்கு ஒரு கடிதம் எழுதும் வழக்கத்தை இன்றும் கடைப்பிடித்து வருகிறார், வங்கியில் பணிபுரிந்து பணி நிறைவு பெற்ற என்னுடைய தாத்தா.

"என்ன தாத்தா, உன் கிட்டதான் போன் இருக்கில்ல. அதான் நம்ம வாரம் ஒரு டைம் போனில் பேசறோம் இல்ல."

Representational Image
Representational Image

"அப்புறம் ஏன் இப்படி லெட்டர் எழுதுற? என்று கல்லூரியில் படிக்கும் என் தம்பி அவரிடம் சலித்துக்கொள்வான்.

"லெட்டர் எல்லாம் படிக்க நேரம் இல்லை தாத்தா " என்பான்.

அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் அவர்கள் வீட்டைவிட்டு படிப்பதற்கும் பின் வேலைக்கும் சென்ற காலத்தில் இருந்து கடிதம் எழுதிக்கொண்டுவந்தவர், நாங்கள் ஒரு வயதுக்கு வந்த பிறகு எங்களுக்கும் கடிதம் எழுதும் பழக்கத்தை தொடர்ச்சியாக வைத்துள்ளார்.

"என்ன தாத்தா, இந்த மாதிரி எல்லாருக்கும் ஒரு கடுதாசி போடுவதனால் என்ன ஆகிடப் போகுது... அதை யாருமே படிக்கப் போறதில்லை."

"அப்படி இல்லப்பா, நீ நினைக்கிற மாதிரி கடிதங்கள் வெறும் சாதாரண வெற்றுக் காகிதங்கள் கிடையாது. நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கான சாட்சியங்கள்தான் கடிதங்கள்" என்பார்.

அவரிடம் இருந்து வரும் எல்லா கடிதங்களையும், வந்த அன்றே படித்துவிடுவேன். ஒரு காக்கி கவரின் உள்ளே 10 முதல் 12 பேப்பர் வரை எழுதி, அதை ஸ்டாப்லர் வைத்து பின் அடித்து, மடித்து அனுப்பி வைப்பார்.

அந்தக் கடிதத்திற்கும், அதற்குமுன் அவர் எழுதிய கடிதத்திற்கும் இடைப்பட்ட நாள்களில், அவர் வாழ்க்கையில் சந்தித்த சிக்கல்கள், துக்கங்கள், சந்தோஷங்கள் வாழ்க்கை குறித்தான அவருக்கே உரித்தான தத்துவங்கள், அடுத்தடுத்த மாதங்களில் அவர் என்ன செய்யப்போகிறார் என்ற விவரணைகள். நாங்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்று அவர் கற்பனை செய்கிறார் என்று பல விஷயங்களை அதில் எழுதி இருப்பார்.

இதை அவருடைய வாழ்வின் 20 வயதிலிருந்து வாடிக்கையாக வைத்துள்ளார். கடந்த பத்துப் பதினைந்து வருடங்களில், பெருகிவிட்ட தொலைத்தொடர்பு சாதனங்களின் புழக்கத்திலும் கூட அவர் இந்தப் பழக்கத்தைக் கைவிடுவதாக இல்லை.

Representational Image
Representational Image

ஆனால், அவருடைய ஒவ்வொரு கடிதத்தையும் வாசித்து முடித்தபின், ஏதோ ஒருவகையான ஆக்கமும் ஊக்கமும் வாழ்க்கைக்குத் தேவையான பிடிப்பும் அவை கொடுக்கும். அதனாலேயே அவர் கடிதங்களை வந்தவுடன் அன்றே நான் வாசித்துவிடுவேன்.

இந்தப் பழக்கம் நம் தலைமுறைக்கும், நம் அடுத்த தலைமுறைக்கும் சுத்தமாக இருக்கப்போவதில்லை. அதற்கான காலமும் சூழலும் தேவையும் இந்த உலகமய தொழில்நுட்ப காலத்தில் இருக்கப்போவதில்லை.

என் வாழ்வில், எனக்கு வந்த மிக முக்கியமான பல கடிதங்களை என்னுடைய அலமாரியில் இன்றும் பத்திரமாக வைத்துள்ளேன். பள்ளிக் காலத்தில் வீட்டை விட்டுப் பிரிந்து, பள்ளி விடுதியில் இருந்த சமயத்தில், அப்பாவிடமிருந்து பல கடிதங்கள் வரும்.

ஒழுக்க விழுமியங்கள் பேசும் அத்தகைய கடிதங்கள், வாழ்வில் நானும் என் குடும்பமும் எந்த இடத்தில் இப்பொழுது நின்று கொண்டிருக்கிறோம், எதை நோக்கியதாக எங்களின் திட்டமிடல் இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய விவரணையாக இருக்கும்.

வெறும் ஒரு நாள் மட்டும் படித்துவிட்டு தூக்கிப் போடும் காகிதக் குப்பைகள் அல்ல, அத்தகைய கடிதங்கள். மீண்டும் மீண்டும் படிக்க வேண்டியவை. வாக்கியங்களுக்கு நடுவிலும் வார்த்தைகளுக்கு ஊடாகவும் பொருள் கொள்ளப்படவேண்டியவை.

Representational Image
Representational Image

என் ஊர் நண்பன் எனக்காக எழுதிய கடிதம், அம்மாவிடம் இருந்து வரும் அன்புக் கடிதம், தாய் மாமாவிடமிருந்து வரும் ஆலோசனைக் கடிதம், நாங்கள் காதலிக்கத் தொடங்கிய புதிதில் என் மனைவியிடம் இருந்து வந்த காதல் கடிதங்கள் என்று ஒரு சிறிய கடிதத் தொகுப்பை சேகரித்து வைத்துள்ளேன்.

வாழ்வில் இன்று நாம் வந்து அடைந்திருக்கும் நிலை, அன்று நாம் இருந்த நிலை என நம் வாழ்வின் பரிணாம வளர்ச்சியை நமக்கு மீண்டும் பிரகடனப்படுத்தும் சாட்சியங்களே கடிதங்கள்.

கடிதங்களை இனி யாரும் யாருக்கும் எழுதப்போவதில்லை. உணர்ச்சிகளைக் கொட்டுவதில்கூட வார்த்தைகளை உபயோகப் படுத்தாமல் ஓடும் காலம் இது. வார்த்தைகள் தனக்கான அந்தஸ்துகளை இழந்துகொண்டிருக்கும் அவசர உலகம் இது. இமோஜிகள் ஆளும் உலகம் இது.

இன்றைய அவசர உலகில்கூட உங்களுக்கென்று குறைந்தபட்சம் நேரம் ஒதுக்கி, உங்களுடைய அன்புக்குரியவர்களுக்கு வருடத்திற்கு ஒரு கடிதம்தான் எழுதிப் பாருங்களேன். கடிதங்கள் நாம் வாழ்ந்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடிச் சில்லுகள்.

- மணிசங்கரன். பா.ந.

நெல்லிக்குப்பம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு