Published:Updated:

கொங்கு தனி மாநில கோரிக்கை சாத்தியமாகுமா..? - எளிய விளக்கம்

கோவை

சிலர் சொல்வதுபோல , ஒருவேளை தமிழ்நாடு நிர்வாக வசதிக்காக பிரிக்கப்படுகிறது என்று எடுத்துக்கொண்டாலும்...

கொங்கு தனி மாநில கோரிக்கை சாத்தியமாகுமா..? - எளிய விளக்கம்

சிலர் சொல்வதுபோல , ஒருவேளை தமிழ்நாடு நிர்வாக வசதிக்காக பிரிக்கப்படுகிறது என்று எடுத்துக்கொண்டாலும்...

Published:Updated:
கோவை

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

தமிழ்நாட்டை சேர்ந்த எல்.முருகன் அமைச்சராகப் பதவியேற்றபோது `கொங்கு நாடு' என்று குறிப்பிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தினசரி பத்திரிகை ஒன்றும் `கொங்கு நாடு தனி யூனியன் பிரதேசமாகிறது’ என்று செய்தி வெளியிட்டது. இப்படி கொங்கு நாட்டைச் சுற்றி செய்திகள் வந்துகொண்டிருந்தாலும், இந்தச் செய்திக்கு தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் மற்றும் இன்ன பிற கட்சிகளிடமிருந்து பெரிய அளவில் எந்த எதிர்க் கருத்தும் வரவில்லை. மறுமுனையில், இது சமூக ஊடகங்களைத் தாண்டி மக்கள் மத்தியிலும் பெரிய பேசுபொருளானதாகவும் தெரியவில்லை.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து எடுத்துக்கொண்டால், வெகு அண்மைக்காலங்களில், இந்தியாவில் நான்கு புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முதலாவதாக, 2000-ல், பாரதிய ஜனதா கட்சி ஆட்சியிலிருந்தபோது, இந்தியாவில் மூன்று புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அவை முறையே உத்தரப்பிரதேசத்திலிருந்து உத்தராஞ்சலும் (இப்போது உத்தரகாண்ட்), பீகாரிலிருந்து ஜார்க்கண்டும், மத்தியப் பிரதேசத்திலிருந்து சத்தீஸ்கரும் பிரிக்கப்பட்டன. மேலும், இந்த மூன்று மாநிலங்களிலும் பெருவாரியான மக்கள் இந்தி பேசுபவர்களே... எனவே, இந்த மூன்று மாநிலங்களும் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டவை அல்ல, மாறாக சமூக மற்றும் அரசியல்ரீதியிலாக பிரிக்கப்பட்ட மாநிலங்கள் ஆகும். இறுதியாக, 2014-ல் ஆந்திரப்பிரேதேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, தெலங்கானா என்ற மாநிலம் உருவாக்கப்பட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சத்தீஸ்கர் தனிமாநில கோரிக்கை என்பது உத்தராஞ்சல் மற்றும் ஜார்க்கண்ட் தனிமாநில கோரிக்கைப் போராட்டங்கள்போல் வெகு தீவிரமாக இல்லை என்றாலும்கூட, கடந்த நூற்றாண்டு தொடக்கத்திலிருந்தே சத்தீஸ்கர் தனி மாநிலத்துக்கான கோரிக்கை எழத் தொடங்கி, 1990-களிலேயே இது சற்று வீரியமடைந்தது. இந்தக் கோரிக்கைக்காகத் தொடங்கப்பட்ட சத்தீஸ்கர் ராஜ்ய நிர்மன் மன்ச் என்ற அமைப்பு தொடங்கிய போராட்டங்களின் விளைவாக ஆகஸ்ட் 2000-ல் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் சத்தீஸ்கர் தனி மாநிலத்துக்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, 1, நவம்பர் 2000 அன்று இந்தியாவின் 26-வது மாநிலமாக சத்தீஸ்கர் உருவானது.

 மத்திய அரசு
மத்திய அரசு

9 நவம்பர், 2000-ல், உத்தரப்பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்ட மலைப் பகுதியான உத்தராஞ்சல் என்பது அந்தப் பகுதி மக்களின் மிக நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகே பெறப்பட்டது. உத்தராஞ்சல் தனிமாநில கோரிக்கை என்பது நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், 1994-ல், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்களால் நடத்தப்பட்ட தீவிரமான போராட்டம் இறுதியாக அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜேஷ் பைலட் பேச்சுவார்த்தைக்குப் பின் முடிக்கப்பட்டது. இதன் பின் 1996-ல் அப்போதைய பிரதமராக இருந்த தேவகவுடா, இந்தக் கோரிக்கைக்காக உத்தரப்பிரதேச அரசின் கருத்தைக் கேட்டார்.

இதன் தொடர்ச்சியாக, இறுதியாக ஆகஸ்ட் 2000-ல், வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு, உத்தராஞ்சல் தனி மாநிலத்துக்கான சட்டத்தை லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் நிறைவேற்றி, குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனின் ஒப்புதல் பெறப்பட்டது. அதன் பின், 9 நவம்பர், 2000-ல் இந்தியாவின் 27-வது மாநிலமாக உத்தராஞ்சல் உருவானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

15 நவம்பர், 2000-ல் ஜார்க்கண்ட் என்ற மாநிலம் பீகாரின் தெற்குப் பகுதிகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது. இது, புவியியல்ரீதியாக `சோட்டாநாக்பூர் பீடபூமி’ என்று அழைக்கப்படும் கனிமவளம் மிகுந்த பகுதியாகும்.

மேலும், இந்த இந்தத் தனி மாநில கோரிக்கையும் உத்தராஞ்சல் கோரிக்கைபோல பல ஆண்டுகளுக்கு முன்பே எழுப்பப்பட்ட ஒரு கோரிக்கையே ஆகும். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா என்ற அரசியல் அமைப்பும் மற்றும் அங்குள்ள பழங்குடியின மக்களின் மிக நீண்ட போராட்டத்துக்குப் பிறகே ஜார்க்கண்ட் என்ற மாநிலம் உருவானதாகும்.

இந்த மாநில கோரிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் ஆகஸ்ட் 2000-ல் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் ஜார்க்கண்ட் மாநிலத்ததுக்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு , 15 நவம்பர், 2000 அன்று இந்தியாவின் 28-வது மாநிலமாக ஜார்க்கண்ட் உருவானது.

Representational Image
Representational Image

தெலங்கானா தனி மாநில கோரிக்கையானது 1955-ல் முதன்முதலாகத் தொடங்கப்பட்டது. அதன் பிறகு 1969 இல் மாணவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் தீவிரமான போராட்டம் நடைபெற்றது. அதன் பிறகும் தொடர்ந்து தெலங்கானா தனி மாநிலப் போராட்டம் நடந்துவந்தாலும், 2001-ல் தற்போதைய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவால் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தொடங்கப்பட்ட பிறகு இந்தக் கோரிக்கை மேலும் வலிமையடைந்தது. இதன் தொடர்ச்சியாக 2009-ல் சந்திரசேகர ராவ் தெலங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி சாகும்வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இது மிக வேகமாக மக்கள் மத்தியில் பரவத் தொடங்கியது. மேலும், பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதம் என்று தெலங்கானா தனிமாநிலத்துக்கான போராட்டம் மிகத் தீவிரமடைந்தது. 2010-ல் தனி மாநில கோரிக்கைக்கு நிரந்தரட் தீர்வுகாண பி.என்.ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான ஒரு கமிட்டியும் அமைக்கப்பட்டது. இப்படியாக பலவிதமான மக்கள் போராட்டங்கள் மற்றும் தியாகங்களுக்குப் பிறகு தெலங்கானா தனி மாநிலத்துக்கான சட்டம், பிப்ரவரி 2014-ல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அப்போதைய காங்கிரஸ் அரசால் நிறைவேற்றப்பட்டு, இறுதியாக 2 ஜூன், 2014-ல் இந்தியாவின் 29-வது மாநிலமாக உருவாக்கப்பட்டது.

மேலே குறிப்பிட்ட உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், தெலங்கானா போன்ற ஒரு தனி மாநில கோரிக்கையோ அல்லது அது போன்ற கோரிக்கையை வலியுறுத்தி மிக நீண்ட போராட்டங்களோ தமிழ்நாட்டில் எங்கும் இருந்ததாகத் தெரியவில்லை. மேலும், மகாராஷ்டிராவிலிருந்து விதர்பா, குஜராத்திலிருந்து சௌராஷ்டிரா, மேற்கு வங்கத்திலிருந்து கூர்க்கா லேண்ட் என்று பல தனி மாநிலக் கோரிக்கைகள் இந்தியாவில் பல ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்து வருகையில், அப்படி எந்தக் கோரிக்கையும் இல்லாத தமிழ்நாட்டைப் பிரித்து `கொங்கு நாடு’ என்ற தனி யூனியன் பிரதேசம் உருவாக்க வேண்டும் என்பது எந்த அளவில் சாத்தியமாக இருக்க முடியும்?

கொங்கு மாவட்டங்கள்
கொங்கு மாவட்டங்கள்

மேலும், சிலர் சொல்வதுபோல , ஒருவேளை தமிழ்நாடு நிர்வாக வசதிக்காகப் பிரிக்கப்படுகிறது என்று எடுத்துக்கொண்டாலும், தமிழ்நாட்டைவிட பரப்பளவில் பெரிய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்றவற்றைவிட தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாகவே விளங்குகிறது. இந்தப் பெரிய மாநிலங்களெல்லாம் நிர்வாக வசதிக்காகப் பிரிக்கப்படாதபோது அவற்றைவிடச் சிறிய மற்றும் முன்னேறிய மாநிலமான தமிழ்நாட்டை மட்டும் இரண்டாக அல்லது மூன்றாகப் பிரிக்க சொல்வது எதனால்?

- க.சேதுராமன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism