Election bannerElection banner
Published:Updated:

`இது, புக்ஸ் ரிவ்யூ இல்லை; என் வாழ்க்கையை மாற்றிய பக்கங்கள்!' -வாசகர் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

இது, நூல் விமர்சனங்கள் அல்ல. இந்த ஐந்து புத்தகங்களையும் வாசித்தபோது எனக்கேற்பட்ட சில அனுபவங்களே.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

1. தேசாந்திரி - எஸ். ராமகிருஷ்ணன்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு என்னை சந்திக்க வந்த நண்பன் ஒருவன், என் கையில் ஒரு புத்தகத்தைத் திணித்துவிட்டுச் சென்றான்.

'தேசாந்திரி' என்று தலைப்பு இருந்தது.

ஆசிரியர் பற்றிய குறிப்பை பின்புறம் திருப்பிப் பார்த்தேன். வழுக்கைத் தலையுடன், முகம் முழுக்க சிரிப்புடன், கைகளைக் கட்டிக்கொண்டு, மரத்தில் சாய்ந்தவாறு ஒரு உருவம் நின்று கொண்டிருந்தது.

எஸ்.ராமகிருஷ்ணன்.

அதுவரையில் அவரைப் பற்றிய எந்த அறிமுகமும் எனக்கு இருந்ததில்லை. வெறுப்புடன் வாசிக்க ஆரம்பித்த எனக்குத் தெரியவில்லை, அடுத்த ஐந்து மணிநேரம் என் வாழ்வின் உன்னத தருணங்களில் ஒன்றாக இருக்கப்போகிறது என்று.

தேசாந்திரியாக எவ்வித நோக்கமும் இன்றி, இந்தியா முழுவதும் சுற்றித்திரியும் ஒருவன், தன் பயண அனுபவங்களை இதைவிட ஆழமாக வாசகனிடம் கடத்த முடியுமா?

ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும், புத்தகத்தைத் திருப்பி எஸ்.ரா-வை ஒருமுறை பார்த்துக்கொண்டேன். சில கட்டுரைகளைப் படித்துவிட்டு வெறுமனே வீட்டின் சுவரைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

அன்று ஆரம்பித்து இன்று வரை என் நேரத்தின் பெரும்பகுதியை தனதாக்கிக்கொண்டிருக்கிறார் எஸ்.ரா.

Representational Image
Representational Image

2. மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் - மதன்

மிகவும் ரசித்து ருசித்து வாசித்த புத்தகம் இது. ஐந்து பக்கங்கள் மட்டும் வாசித்துவிட்டு தொடர முடியாமல், அலமாரியின் அடுக்கில் இருக்கும் பல புத்தகங்கள் என்னிடம் உள்ளன. ஆனால், ஒரே அமர்வில் படித்துமுடித்த முதல் புத்தகம் இதுதான்.

கார்ட்டூனிஸ்ட் மதனாக மட்டுமே அதுவரை அவரைத் தெரிந்த எனக்கு, அவர் எழுதிய 'மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்' புத்தகம் மிகப்பெரிய ஆச்சர்யத்தை உண்டாக்கியது.

சீரியல் கில்லர்களிடமிருந்து ஆரம்பித்து மனித பரிணாம வளர்ச்சியைப் பற்றி பேசி, ஒரு ஆராய்ச்சி நூலைப் போல குறிப்பு வரைந்திருப்பார் மதன்.

3. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்.

புத்தகக் கடைகளுக்கு எப்போது சென்றாலும் சரி, இந்த ஒரு புத்தகம் என் கண்ணில்பட்டால் மனதில் ஒருவித நெகிழ்ச்சி உண்டாகும். ஒருமுறை தொட்டுப் பார்த்துக்கொள்வேன்.

ஹென்றி கதாபாத்திரத்தை இவர் எப்படி உருவாக்கினார் என்ற கேள்வி ஜெயகாந்தனை அடிக்கடி நினைக்கத் தூண்டும். அந்த அளவிற்கு என்னைப் பாதித்த ஒரு கதாபாத்திரம் ஹென்றி.

இப்படித்தான் வாழவேண்டும் என்ற ஜெயகாந்தனின் ஆசைதான் ஹென்றி கதாபாத்திரம் போல என உள்ளுக்குள் நினைத்துக் கொள்வேன்.

இந்நாவலை வாசித்து முடித்தபோது, ஜெயகாந்தனை முழுமையாகப் புரிந்துகொண்டதைப் போன்ற சில உணர்வுகள் மேலோங்கின. அந்த உணர்வுகளுக்கு ஒரு உருவம் கொடுத்து வைத்துள்ளேன். சிறிது காலம் அது சிதறிப்போகாமல் அப்படியே இருக்கட்டும்.

தமிழில் இதுவரை வெளிவந்த நாவல்களில் மிகவும் முக்கியமான ஒரு நாவல், 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'.

Representational Image
Representational Image

4. 'இந்தியப் பிரிவினை' - மருதன்

இந்தப் புத்தகத்தை நண்பன் பரிந்துரைக்க, வாங்கிப் படித்தேன். மிகவும் எளிய முறையில் புரியும்படியும், அதே சமயம் விறுவிறுப்பாகவும் எழுதும் இந்த எழுத்தாளர் யார் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. பின்பு அவர் எழுதிய மற்ற புத்தகங்களைத் தேடிப்பிடித்து வாங்கினேன்.

இரண்டாவதாக, அவரின் எழுத்தில் படித்த புத்தகம்தான் 'சே குவேரா - வேண்டும் விடுதலை'. ஏதோ ஒரு ஹாலிவுட் திரைப்படம் பார்ப்பதைப் போன்ற உணர்வை ஒவ்வொரு பக்கத்திலும் கடத்திச்சென்றது.

இரண்டிற்கும் உச்சமாக 'ஹிட்லரின் வதைமுகாம்கள்' புத்தகம் படித்துவிட்டு அவருக்கு ரசிகனாக மாறினேன்.

மருதனை நேரில் சந்தித்துப் பேசும் நல்வாய்ப்பு எனக்கு கிடைத்தது. முகநூலில் மாறி மாறி குறை சொல்லியும், கேலி செய்துகொண்டும், அரசியல் பேசும் மற்ற எழுத்தாளர்களுக்கு மத்தியில் தனக்கென ஒரு வழியில் பயணிக்கும் எழுத்தாளர் மருதன், இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம்.

5. இடக்கை - எஸ். ராமகிருஷ்ணன்.

ஒரு சரியான புத்தகம்,

ஒரு சரியான நாளில்,

ஒரு சரியான சூழலில்,

உன்னை தேர்ந்தெடுக்கும் என படித்திருக்கிறேன்.

ஒரு வருடமாக, என் புத்தக அலமாரியின் ஓரத்தில் உறங்கிக் கிடந்த புத்தகம் ஒன்று, சமீபத்தில்தான் என்னை தேர்ந்தெடுத்தது.

சரி, ஒரு இரண்டு பக்கங்களை வாசிப்போமே என கையில் எடுத்த நான், முழுவதும் படித்துமுடிக்கும் வரை கீழே வைக்கவில்லை.

ஔரங்கசீப்பின் மரணப்படுக்கையில் இருந்து ஆரம்பிக்கிறது புத்தகத்தின் முதன் அத்தியாயம். முகலாயர்களைப் பற்றிய இன்னொரு நாவல் போல என நினைத்து படிக்க ஆரம்பித்தால், முழுக்க முழுக்க எளிய மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி பேசுகிறது இந்நாவல்.

Representational Image
Representational Image

வானத்தில் மிளிரும் நட்சத்திரங்கள் போல பல நூறு கதாபாத்திரங்கள் இருந்தாலும்,

தூமகேது என்ற எளிய மனிதனின் கதாபாத்திரத்தை நிலவொளியைப் போல ஒளிரவைத்திருக்கிறார் எழுத்தாளர்.

நம் உடலில் இடக்கை வலக்கை என இரண்டு கைகள் இருந்தாலும், வலக்கைக்கு கிடைக்கும் முக்கியத்துவமும் கெளரவமும், ஏனோ இடக்கைக்கு கிடைப்பதில்லை.

இடக்கை என்றால் அவமானம்.

இடக்கை என்றால் அருவருப்பு

மனித உடலினுள்ளே இப்படிப்பட்ட பாகுபாடு இருக்கும்போது மனிதர்களிடையே இருக்காதா என்ன?

பணம் உள்ளவன் வலக்கை ஆகிறான்.

இல்லாதவன் இடக்கை ஆகிறான்.

இப்படி காலம் முழுக்க இடக்கையாகவே வாழ்ந்து முடித்த ஒருவனின் கதையைத்தான் இந்த 'இடக்கை ' நாவல் பேசுகிறது.

நாவலைப் படித்து முடித்த பின்னர் தூமகேதுவின் மனநிலை, நம்மையும் பற்றிக்கொள்கிறது. தெளிவான தேடலும் பழக்கமில்லாத இருளும் நம்மை சூழ்ந்துகொள்கிறது.

எஸ்.ரா-வின் சிறந்த படைப்பான இந்நாவல், என் புத்தக அலமாரியின் முதல் வரிசையை எப்போதும் பிடித்திருக்கும்.

-மருத்துவர். சரத்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு