Published:Updated:

`5 பேருக்கு ஒரே தட்டில் விருந்து; நடுவில் மெல்லிய கோடு!' -மணக்கும் சஹன் சோறு நினைவுகள் #MyVikatan

Representational Image
Representational Image

அரபு, துருக்கி மற்றும் பாரசீக மொழிகளில் 'சஹன்' என்ற வார்த்தைக்கு தட்டு அல்லது தாம்பாளம் எனப் பொருள்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நுகர்வு கலாசாரமும் பிளாஸ்டிக் உபயோகமும் நம் வாழ்க்கை முறையைத் தலைகீழாகப் புரட்டிவிட்டன. நூற்றாண்டுகள் கடந்த உணவுப் பழக்கங்களிலும், பாரம்பர்ய வாழ்க்கை முறைகளிலும் ஒரு மாமாங்க காலத்திற்குள் எத்தனையோ மாற்றங்கள்! ஆன்லைன் அவசரத்தில் நாம் இழந்தவற்றை உணரக்கூட நேரமில்லை.

ஒரு பத்திருபது ஆண்டுகளில், ஜாதி மத பேதமின்றி நுகர்வு கலாசார அலை அடித்துச்சென்ற நம் கலாசார அடையாளங்களின் பட்டியல் நீளமானது. இந்தப் பட்டியலில், தமிழ் இஸ்லாமிய கலாசாரத்தில் புழக்கத்தில் இருக்கும் சஹன் சோற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.

Representational Image
Representational Image

ஸ்லாமிய வைபவங்களின்போது, பெரிய தாம்பாளத்தில் பரிமாறப்படும் விருந்தை 4 பேர் சுற்றி அமர்ந்து உண்ணும் வழக்கம் சஹன் சோறு. உண்பவர்களின் எண்ணிக்கை இரண்டிலிருந்து நான்கு வரை ஊருக்கு ஊர் வேறுபடும்.

அரபு, துருக்கி மற்றும் பாரசீக மொழிகளில் சஹன் என்ற வார்த்தைக்கு தட்டு அல்லது தாம்பாளம் எனப் பொருள்.

பாலைவனப் பயணங்களின்போது மணல் உணவில் விழாமலிருக்க, அரேபிய வியாபாரிகள் வட்டமாய் அமர்ந்து உணவருந்தினர் என்றும், அவ்வழக்கத்தை ஒட்டி நபிகள் நாயகம் தம் தோழர்களோடு அப்படி உணவருந்தியதாகவும் சஹன் சோற்றின் தோற்றம் பற்றிக் கூறப்படுகிறது.

தாளிச்சா, தனிக்கறி, குருமா, புளிப்பு பச்சடி மற்றும் இனிப்பு பச்சடி ஆகிய ஐந்து வகைக் கறிகளுடன் பறிமாறப்படும் நெய்ச்சோறு விருந்து, அஞ்சுக்கறி சஹன் சோறு. ஐந்து கறிகள் சாப்பாடு என்பது மருவி, அஞ்சுக்கறி சாப்பாடு என்றழைக்கப்படுகிறது. பிரியாணி, ஏகபோக உரிமை பெறாத காலத்தின் பெரும்பாலான இஸ்லாமிய நிகழ்வுகளில் அஞ்சுக்கறி சஹன் சோறுதான் பரிமாறப்பட்டது.

பருப்புடன் உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், மாங்காய், காரட் போன்ற காய்கறிகளுடன் ஆட்டின் விலா பகுதி எலும்புகளும் கொழுப்பும் சேர்த்து செய்யப்படும் குழம்பு, தாளிச்சா. தாளிச்சாவை அசைவ சாம்பார் என்று கொள்ளலாம். தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பிரியாணியுடனும் தாளிச்சா பரிமாறப்படுவதுண்டு.

ஆட்டுக்கறி குழம்புதான் தனிக்கறி என்றழைக்கப்படுகிறது. ஆட்டின் சதைப்பிடிப்பான தொடைப்பகுதியை இஞ்சி, பூண்டில் தாளித்து, அரைத்த முந்திரி, தேங்காய், கசகசா மற்றும் தயிர் கலந்து குருமா சமைக்கப்படுகிறது. இவற்றுடன் புளிப்பு மற்றும் இனிப்புக்காக மாங்காய் மற்றும் தக்காளி பச்சடிகள்.

`சீனித்தொவை' என மருகிய சீனி துவையலும் அஞ்சுக்கறி சோற்றுடன் பரிமாறப்படுவதுண்டு. நெய்யில் தாளித்த கிராம்பு, ஏலக்காய், லவங்கத்துடன் தண்ணீர் மற்றும் சீனி சேர்த்து கொதிக்கவைத்து இறக்கி, அதில் தயிர் கட்டிகளைக் கலக்காமல் மிதக்கவிட்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், சீனித்தொவை. இதனுடன் ஒரு ரஸ்த்தாளி வாழைப்பழமும் வைக்கப்படும்.

Representational Image
Representational Image
Haryo Setyadi / Unsplash

தாளிச்சாவுக்குப் பதிலாக, புளி சேர்த்து சமைத்த கத்திரிக்காயுடன் பருப்பு, குருமாவுக்குப் பதிலாக ஆட்டு ஈரலுடன் உருளைக்கிழங்கு சேர்த்து தயாரிக்கப்படும் `கரடா' என்றழைக்கப்படும் கறி வகை என, தமிழ்நாட்டின் வட்டாரங்களுக்கு ஏற்ப அஞ்சுக்கறி வகைகள் மாறும்.

சஹன் சாப்பாடு புழக்கத்தில் இருந்த காலத்தில், இஸ்லாமிய திருமணம், மாப்பிள்ளை அழைப்பு போன்ற நிகழ்ச்சிகளில் எத்தனை பேருக்கு சாப்பாடு என்பதற்குப் பதிலாக, எத்தனை சஹனுக்கு சாப்பாடு எனக் கேட்பதே வழக்கில் இருந்தது. உதாரணமாக, மாப்பிளை வீட்டார் 10 சஹனுக்கு சாப்பாடு வேண்டும் எனக் கேட்டால், 40 பேருக்கு சாப்பாடு எனப் பொருள்.

சஹன் சோற்றுக்கான தாம்பாளம், கறிக் கோப்பைகள், நீர்க்குவளைகள் ஆகிய பாத்திரங்கள் சஹன் செட் என்றழைக்கப்படும். பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமிய சங்கங்களிலிருந்து இவை வாடகைக்கு எடுக்கப்பட்டன. சொந்த உபயோகத்துக்காக நூற்றுக்கணக்கான சஹன் செட்டுகளை வைத்திருந்த செல்வந்தர்களும் உண்டு. பழைமையான பாரம்பர்யம் மிக்க சஹன் செட்டுகள், பூ வேலைப்பாடுகளுடன் கூடிய பீங்கானாலும் எனாமல் பூச்சுடன்கூடிய இரும்பினாலும் தயாரிக்கப்பட்டவை. இந்த வகைப் பாத்திரங்கள் பொருளீட்டுவதற்காக இதோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளுக்குச் சென்ற தமிழ் இஸ்லாமியர்களால் கொண்டுவரப்பட்டவை. கால ஓட்டத்தில் அலுமினியம் மற்றும் எவர்சில்வர் சஹன் செட்டுகள் இவற்றின் இடத்தைப் பிடித்துக்கொண்டன.

வாழை இலை விருந்தைப் போலவே சஹன் சாப்பாட்டிலும் பரிமாறுவதிலிருந்து சாப்பிடுவது வரை எழுதப்படாத பல விதிமுறைகள் உண்டு.

Representational Image
Representational Image

ஸ்லாமிய நிகழ்வுகளில் உணவு சமைக்கும் சமையல் கலைஞர், பண்டாரி என்று அழைக்கப்படுவார். உணவு சமைக்கப்படும் இடத்தை சட்டியடி எனக் குறிப்பிடுவார்கள். மேற்பார்வை மற்றும் நிர்வாகத்துக்காக குடும்பத்தின் முக்கியஸ்தர் ஒருவர் சட்டியடியில் இருப்பார். அதேபோல விருந்து கூடத்திலும் விருந்தாளிகள் அனைவரைப் பற்றியும் நன்கு அறிந்த மூத்தவர் ஒருவர் இருப்பார்.

சஹன் சாப்பாட்டைப் பரிமாறுவதற்கு, `களரி விளம்புதல்' எனப் பெயர்.

பெரும்பாலும், குடும்பத்தவர் மற்றும் நண்பர்கள்தான் களரி விளம்புவார்கள். சில இடங்களில் `சங்கத்துப் பிள்ளைகள்' என்று அழைக்கப்படும் அந்தந்த ஊரின் இஸ்லாமிய சங்கங்களிலிருந்து வரும் இளைஞர்களும் களரி விளம்புவார்கள்.

கோரைப் பாய்க்கு மேலே `சுப்புரா' எனப்படும் வெள்ளைத்துணி விரித்து சஹன் விருந்து உண்பார்கள். சாப்பிடும்போது கீழே சிந்தும் உணவுப் பதார்த்தங்களிலிருந்து பாயைக் காப்பதுதான் சுப்புராவின் பயன்பாடு. இந்த நீண்ட வெள்ளைத்துணியில், மிஞ்சிய எலும்புத்துண்டுகளும் போடப்படும். விருந்துக்குப் பிறகு `சுப்புரா', துவைத்து சுத்தம் செய்யப்பட்டு, பாயுடன் சுருட்டிவைக்கப்படும்.

தமிழ்நாட்டில் சில பகுதிகளின் இஸ்லாமிய பேச்சு வழக்கில் `சுப்புரா முள்' என்றொரு வசவு வார்த்தை புழங்கப்படுகிறது. சுப்புரா துணியில் வீசப்படும் இறைச்சி இல்லாத எலும்பைப் போல ஒன்றுக்கும் உதவாதவர் என்ற அர்த்தத்தில், உதவாக்கரை என்ற வார்த்தைக்கு ஈடான வசவு இது.

பல ஆண்டுகளுக்கு முன்னரே சுப்புரா துணியின் இடத்தைப் பழைய தினசரித் தாள்கள் பிடித்துக்கொண்டன.

ணவு தயாரான பிறகு, நெய்ச்சோறு சஹன்களிலும், ஐந்து வகைக் கறிகள் கோப்பைகளிலும் நிரப்பப்பட்டு வரிசைப்படுத்தப்படும். கறியும் சோறும் சம அளவில் இருப்பதை உறுதிப்படுத்துவதுடன், கூட்டிக் குறைத்து நிரப்புவதற்கான ஆலோசனைகளையும் வழங்கிக்கொண்டிருப்பார் மேற்பார்வை பொறுப்பிலிருப்பவர்.

Representational Image
Representational Image

ஒரு தாம்பாளம் சோறு, அதற்குத் தேவையான ஐந்து கறி செட் என மாற்றி மாற்றி அனுப்ப வேண்டும், முறை மாறினால் பரிமாறுபவர்களுக்கு சிக்கல் ஏற்படும். இதற்கிடையில், மறுசோறு மற்றும் மறுதாளிச்சாவையும் தடங்கலின்றி அனுப்பிக்கொண்டிருக்க வேண்டும்.

சஹன் சாப்பாடு, ஒரு வகையான அன்லிமிடெட் மீல்ஸ்! சோறும் தாளிச்சாவும் எவ்வளவு கேட்டாலும் கிடைக்கும். இதற்கு மறுசோறு என்று பெயர். மறுசோறு, மறுசோறு என மல்லுக்கட்டியபடி சோறு மற்றும் தாளிச்சா வாளிகளுடன் சிலர் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். சோறு காலியாகும் சஹன்களைக் கண்டுபிடித்து, அங்கெல்லாம் மறுசோற்றை அனுப்பிக்கொண்டிருப்பார் விருந்தை மேற்பார்வையிடும் பெரியவர்.

சாப்பிட அமர்ந்திருக்கும் நான்கு பேரில் மூத்தவர், கறிக் கோப்பைகளை வாங்கிக்கொள்வார். முதலில் தாளிச்சாவுடன் சோறு, பின்னர் தனிக்கறி, அடுத்து குருமா, இறுதியாக `சீனித்தொவை' சோறு அல்லது தக்காளி பச்சடி என்ற வரிசைப்படி உண்ண வேண்டும். அனைவரும் ஒன்றாக ஆரம்பித்து, ஒன்றாக எழ வேண்டும். இலை சாப்பாட்டைப் போலவே இடையில் எழவோ அல்லது அடுத்த ஐட்டத்துக்குத் தாவவோ முடியாது.

நான்கு அல்லது ஐந்து பேர் ஒரே தட்டில் உணவருந்தினாலும் ஒருவர் உண்பது மற்றவர் பக்கத்துக்குப் போகாதபடி, வயல் வரப்புகளின் பாத்தியைப் போல ஒரு மெல்லிய சோற்றுக்கோடு தாம்பாளத்தை நான்கு அல்லது ஐந்து பகுதியாகப் பிரிந்திருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள்.

இறைச்சியும் தாளிச்சாவின் காய்கறிகளும் தாம்பாளத்தின் நடுவில், அனைவரும் பகிர்ந்துகொள்ளும்படி மூத்தவரால் கொட்டப்படும்.

நான்கு பேருக்கு ஒரு செட் பாத்திரங்கள் என்ற முறையில், இன்றைய பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் விரயங்கள் இல்லாத சிக்கனம் என்பதையும் தாண்டி, சஹன் கலாசாரத்தினால் சமூக ஒற்றுமையும் நல்லிணக்கமும் பேணப்பட்டது. ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி, சமூகத்தின் பலதரப்பட்ட அடுக்குகளைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக உணவருந்தும் வாய்ப்பாக அமைந்தது. இஸ்லாமிய நிகழ்வுகளில் தனிப் பிளேட், இலை போன்ற வசதிகளும் செய்யப்பட்டிருந்தாலும், மாற்று மதத்தினரும் சஹனில் அமர்ந்து சாப்பிடுவதையே விரும்பினார்கள்.

Representational Image
Representational Image
Ke Vin / Unsplash

இதிலும் `பொய்யாட்டம்' ஆடும் கோஷ்டிகள் உண்டு. முகமறியாதவர்கள் அல்லது பிடிக்காதவர்களுடன் சாப்பிடுவதைத் தவிர்க்கும் பொருட்டு, முன்கூட்டியே பேசிவைத்துக்கொண்டு நான்கு பேர்களாக வருவார்கள். அல்லது விருந்து வீட்டுக்கு சற்று தள்ளி நின்று, பரிச்சயமானவர்கள் வரும்வரை காத்திருந்து, அவர்களுடன் சேர்ந்து வருவார்கள்.

ஒவ்வொரு ஊரிலும் இளவட்ட சஹன் சாம்பியன் குழுக்களும் உண்டு. தனிக்கறி மற்றும் குருமாவைத் தொடாமல், கண்களால் பார்த்துக்கொண்டே மறுசோறு தாளிச்சாவை மட்டும் பல ரவுண்டுகள் சாப்பிட்டுத் தீர்க்கும் இந்த இளவட்டங்களுடன் அமர அந்தக் குழுக்களைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறு யாரும் முன்வரமாட்டார்கள். வயிற்றின் கொள்ளளவு குறைவான யாராவது இவர்களுடன் மாட்டிக்கொண்டால் விலா புடைத்து வயிறு வெடிக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிடுவார்கள்.

இதுபோன்ற குழுக்கள் அடுத்தடுத்த சஹன்களில் அமர்ந்து சாப்பிட நேரும்போது, சுவாரஸ்யமான சாப்பாடு போட்டியாகவும் மாறிவிடும்! `களறி விளம்பும்' இளைஞர்கள் மறுசோற்றையும் தாளிச்சாவையும் மாற்றி மாற்றி சஹன்களில் கொட்டுவார்கள்.

"யாருப்பா ஜெயிச்சது ?!"

என வீட்டுப் பெரியவர்களும் விசாரிக்கும் அளவுக்கு ஜமா களை கட்டிவிடும்!

மபந்தி என்றாலும் மிகவும் நெருக்கமான சொந்தக்காரர்கள் மற்றும் நண்பர்களின் சஹன்களுக்கு கூடுதலாய் கறி கைமாறும். திருமண வைபவங்களின்போது மாப்பிள்ளை மற்றும் பெண்ணுக்கான சஹன்களில் ஐந்து கறியுடன் கோழி வறுவலும் அவித்த முட்டைகளும் இடம்பெறுவதுண்டு. சில குடும்பங்களில், சம்பந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மரியாதை நிமித்தமாக இரண்டிரண்டு கோப்பை கறிகள் பரிமாறுவார்கள்.

Representational Image
Representational Image

இந்த முறையின் மூலம் விருந்தினர்களை உபசரிக்கும் உயர்ந்த பண்பாடு போற்றப்பட்டது. உறவுகளும் நட்பும் கூடும் திருமணம் போன்ற சுப நிகழ்வுகளில் சொந்தங்களுக்கும் நண்பர்களுக்கும் அவர்களின் பங்களிப்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தும் வாய்ப்பாக சஹன் சாப்பாடும், `களரி விளம்பும்' நிகழ்வும் அமைந்திருந்தது.

விருந்தைப் பற்றி பேசினாலே, நான் சென்ற ஒரு திருமண விருந்தின் ஞாபகம் எழும். பிளேட் பிரியாணியும் பாக்கெட் குடிநீரும் பிரபலமாகத் தொடங்கியிருந்த காலத்தில், ஒரு நண்பர் வீட்டின் திருமணம்...

"போய்ச் சாப்பிடுங்க" என்பதோடு திருமண வீட்டார் சிக்கனமாக முடித்துக்கொள்ள, விருந்து மண்டபத்தின் நிர்வாகம் சில விடலை இளைஞர்களிடம் இருந்தது. உள்ளே நுழைந்ததுமே,

" இங்க இல்ல... அங்க போய் உக்காருங்க."

என்ற அன்பான அதட்டல்!

பிளேட்டில் விசிறி எறிந்தது போல போடப்பட்ட ஆவிபறக்கும் பிரியாணியின் மீது ஒரு வாட்டர் பாக்கெட் மற்றும் நிஜாம் பாக்கு.

உண்ணும் சோற்றின் மீதே தண்ணீர் பாக்கெட்டையும் பாக்கு பொட்டலத்தையும் போடும் பண்பாட்டை ஆரம்பித்துவைத்த புண்ணியவான் யாரோ?!

இதைவிட கொடுமை, பல்லால் கடித்திழுத்துத் திறந்த தண்ணீர் பாக்கெட் சரியாமல் பிடித்துக்கொண்டே சாப்பிடுவது. பச்சை மிளகாய் பல்லில் மாட்டிய அவசரத்தில் பாக்கெட்டை வாயில் கவிழ்த்தால் ஓட்டையிலிருந்து பீய்ச்சியடிக்கும் நீர் அது போக வேண்டிய தொண்டைத் தவிர, கண் காது மூக்கு எனச் சகலத்துக்கும் பரவி விக்கவைக்கும். தட்டில் சிந்தி கைக்குக் கிடைத்த பிரியாணி வாய்க்குள் போக முடியாத சூழலும் ஏற்படும்.

Representational Image
Representational Image

சமீபகாலமாகப் பரவாயில்லை. சிறிய தண்ணீர் பாட்டில்கள் வந்துவிட்டன. அவுன்ஸ் கணக்கு என்றாலும் சோற்றில் கை வைப்பதற்கு முன்னர் மறக்காமல் மூடியைத் திறந்து வைத்துவிட்டால் பிரச்சனை தீர்ந்தது. ஆனால், பாக்கெட் குடிநீர் பிரபலமாக இருந்த காலத்தை, விருந்துக்கு அழைத்துக் கொடுமைப்படுத்திய காலம் என நிச்சயமாகக் குறிப்பிடலாம்.

ரு கவளம்கூட விழுங்கியிருக்க மாட்டேன்...

" மறுசோறு … மறுசோறு...!'' என அவசரப்படுத்தியபடி ஒரு சிறுவன் !

எனக்கு மறுசோறு தேவைப்பட்டபோது அவன் விருந்து மண்டபத்தின் மறுகோடியில் நின்றான்! கையால் சைகை செய்தேன்...

" ஏன் நானா? நான்தான் அப்பவே கேட்டேன்ல... பொறுமையாதான் வர முடியும்!"

அந்த மூலையிலிருந்து பிஜிஎம் எஃபெக்ட்டுடன் வந்த அவனது குரலுக்கு மொத்த மண்டபமும் என்னை திரும்பிப் பார்த்தது. குனிந்த தலை நிமிராமல் எழுந்து, கைக்குட்டையில் கையைத் துடைத்துக்கொண்டு வெளியேறினேன்!

-காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு