Published:Updated:

`என்ன செய்யச் சொல்கிறது இனிவரும் காலங்கள்?' - வாசகி பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

மொத்த குடும்பத்துக்குமாய் சமைத்தே ஓய்ந்த அம்மாவின் தனிமை மட்டும் களவாடப்பட்டது, தொடர்ந்து அவளுக்கு வேலை வைத்த நம் உணவு தேடல்களில்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இரு மாதங்களாய் அடைகாத்துக் கிடக்கின்றோம். உலகத்தின் இயக்கம் நம் கண்களின் முன்னே, உறைந்த ஓவியமாய் காட்சி அளிக்கிறது. வேலைப்பளு, நேரமின்மை என்று நிதானம் இல்லாமல் பயணித்த நம் பயணங்களின் சாலைகள், இன்று தகர சட்டங்களால் தன்னை அடைத்தபடி, நிற்கிறது.

ஊரடங்கின் அன்றைய நாள்கள் விடுமுறை தின கொண்டாட்ட மனநிலைக்குள் நம்மை அழைத்துச் சென்றது. பொறுமையாய் எழுந்த காலை நேரம், இதுவரை பார்த்திராத வீட்டின் முகம் என ஆரம்ப ஊரடங்கின் காலங்கள் எல்லாம் நன்றாகத்தான் போனது, சில நாள்களின் முன்பு வரை.. எங்கோ ஓர் மூலையில் சலிப்பின் தனித்து இருப்பதின் வலிகள் கிளர்ந்து எழத் தொடங்கி இருக்கிறது எல்லோர் மனதிலும்.

Representational Image
Representational Image

நம் வீட்டு முதியவர்களுக்கு, இரண்டு மாதங்களுக்கு முன்பு பார்த்த தன் வயதொத்த நண்பர்களின் முகம் பார்க்க ஏங்குகிறது, வாடிய முகத்தோடும் வாடா கீரையோடும் வரும் கனகா அக்காவின் வாஞ்சையான சிரிப்போடு, அவள் வீட்டுக் கதை கேட்க காத்துக் கிடக்கிறது தெருவின் நரைத்த பல காதுகள்.

முகம் சிரித்தபடி, ருசிக்கும் தனது மொத்த குடும்பத்துக்கும்மாய் சமைத்தே ஓய்ந்த அம்மாவின் தனிமை மட்டும் களவாடப்பட்டது, தொடர்ந்து அவளுக்கு வேலை வைத்த நம் உணவு தேடல்களில்.

திட்டுகளை வாங்கிக்கொண்டே, புத்தக மூட்டையை சுமந்தபடி, ஓடி ஏறும் பள்ளி வேன்களின் சீட்டுகள், இப்பொழுதுதெல்லாம் அடிக்கடி நினைவுக்கு வருகிறதாம். குழந்தைகளின் வீதியில் நடந்த கதையாடல் இது.

நகராத நாள்களோடு இளமை பீறிட, எதிர்பாலினம் காணாத இளவயது மனங்கள் எல்லாம் சோம்பி தவிக்கின்றது இணையத்தில் முழ்கியபடி.

இத்தனை நாள் புத்தகத்தோடும், சிறு சிறு வேலைகளோடும் நகர்த்திக் கொண்டிருந்த நம் தனிமை நாள்கள், எதிலும் கிடைக்காத திருப்தியினால், முதன்முதலாய் வலிக்கத் தொடங்குகிறது.

பொழுதுகள் அனைத்தும் இறுக்கமாய் இருப்பதான உணர்வொன்று எழுகிறது நம்மின் ஒவ்வொரு நகர்விலும்.

Representational Image
Representational Image

லாக்டௌன்.. வீட்டிலும் வீதியிலும், மனதிலும், அடித்து நொறுக்கப்பட்ட, திணிக்கப்பட்ட தனிமையோடு மூச்சுத்திணறி நிற்கிறது.. என்று இது முடியும் என்ற ஏக்கத்தோடு.

சரி இரண்டு மாதத்தை நாம் கடந்துவிட்டோம். இனி நாம் எப்படி இருப்போம்? மீண்டும் மீண்டும் கை கழுவியபடியா? அல்லது தோள் மீது கையணைத்தபடியா? இனி நம் நண்பர்களின் சிரிப்பொலிகள் மூன்றடுக்கு முகத்தடுப்பின் பின்னே ஒலி குறைந்து ஒலிக்கப்படலாம்.

அம்மாவின் ஊட்டும் கரங்கள், உண்ணும் குழந்தைக்காய் ஒவ்வொரு முறையும் கறை கழுவப்படலாம். இடைவெளி குறைந்த இறுக்க முத்தங்கள், அவசரமற்று நிதானமாக்க முற்படலாம்.

கோயில்களின் கருவறைக்கும் கிருமிநாசினிகளே இனி தீர்த்தமாக்கப்படலாம். பேருந்தின் வியர்வை நாற்றங்களும் இட சண்டைப் பிரச்னைகளும் இனி இல்லாமல் போகலாம். நம் எதிர்கால நம்பிக்கைகள் நிறமிழந்து நிகழ்காலத்தின் மீது வசீகரம் அதிகமாக்கப்படலாம்.

Representational Image
Representational Image

எதுவும் இங்கே நிச்சயம் இல்லை, என்பதை உணர்ந்த மனித மனங்கள் முதன்முதலாய் தன்னைச் சுற்றிய சக மனிதனுக்காய் பிரார்த்திக்க எண்ணியது இப்போதுதான். இன்று தழைத்து நிற்கின்றன தனி மனித மாண்புகள், ஒவ்வொரு தனி மனதிலும்கூட. நுண்கிருமி கொன்று புதைத்தது மனிதனை மட்டுமல்ல. சமூக அக்கறையற்ற நம் அசிங்கங்களையும்தான். நாம் காத்திருக்கிறோம். லாக்டௌனின் முடிவு நாள்களுக்காய். இத்தனை நாள் தடுக்கப்பட்ட மனித பேராற்றல் வெளிப்பட காத்துக் கிடக்கின்றது.

இதுவரை இயற்கை நிகழ்த்திய பல கொடூரத் தாக்குதல்களில் நிலைபெற்ற மனித உயிர்கள், முதன்முதலில் கை நனைத்துக் கரம் கூப்பி, வாய் மூடி தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க காத்து நிற்கிறது மனமெல்லாம் மனிதத்தை தாங்கியபடி.!

-மருத்துவர். சித்ரா சுப்பையா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு