Published:Updated:

`அப்பாடா ஒண்ணுகூட ஒடையல!’ - மானாமதுரை மண் சட்டியும் அமெரிக்க மீன் குழம்பும் #MyVikatan

Representational Image
Representational Image

என் மனைவி நேரடியாக எனது இரு பொிய செக்-இன் லக்கேஜ் பக்கம் ஆஜரானார்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பச்சக்கலர் தாவணிக்கு பச்சக்கலர் செருப்பு போடணும், வெள்ளக்கலர் தாவணிக்கு வெள்ளக்கலர் செருப்பு போடணும், செகப்புக்கலர் தாவணிக்கு செகப்புக்கலர் செருப்பு போடணும்.... செகப்புக்கலர் எங்கிட்ட இல்ல...... அதான் கேட்டேன்.....

இந்த டயலாக் எண்பதுகளின் இறுதிவாக்கில் எல்லா டீக்கடைகளிலும், ஒலிபெருக்கிகளிலும், இலங்கை வானொலியிலும் இப்படி எங்கு பார்த்தாலும் கேட்டிருப்போம். அண்ணன் டி.ஆர் அவர்களின் 'என் தங்கை கல்யாணி' யில் தங்கை கல்யாணி அண்ணனிடம் செருப்பு வாங்கித்தரச் சொல்லும் மறக்க முடியாத வசனம். இந்தக் கால கட்டங்களில் விடலைப்பருவமாக இருந்த சகோதரிகளுக்கு அண்ணன்கள் இருந்திருந்தால் அவர்கள் கொடுத்து வைத்தவர்கள். "காரணம், ஒருத்தர்மேல ஒருத்தரு, அம்புட்டு பாசத்தை அள்ளிக் கொட்டுவாய்ங்க". அத்தனை க்ரெடிட்டும் அண்ணன் டி.ஆர் அவர்களுக்கே போய்ச்சேரும். சரி..... விசயத்துக்கு வருகிறேன்.

Representational Image
Representational Image

"சாம்பாருக்கு ஒண்ணு, ரசத்துக்கு ஒண்ணு, வத்தக்கொழம்புக்கு, நண்டுக்கொழம்புக்கு ஒண்ணு..... ஆனா மீன் கொழம்புக்கு மட்டும் இன்னும் ஒண்ணே ஒண்ணு இருந்தா..... ஆகாகா..... அப்படியிருக்கும்...."

என்னப்பா அது....

"ம்ம்..... வேறென்ன? நம்ம ஊரு மண்சட்டிதான்...." என் மனைவியின் நெடு நாளைய ஆசை.

அமொிக்காவிற்குச் சென்று இரு தசாப்தங்கள் நெருங்கும் வேளையிலும், திரைப்படங்கள் சார்ந்த எனது அதிகப்படியான பிரயாணங்களால் குடும்பத்தோடு நான் இருப்பது வெகு சில மாதங்களே. இதில், அடிக்கடி தாயகம் சென்று, திரும்பி அமெரிக்கா வரும் என் வரவை என் குழந்தைகள் உட்பட யார் எதிர்பார்க்கிறார்களோ இல்லையோ, என் மனைவிபோல் ஆவலோடு எதிர்பார்ப்பவர்கள் எனக்குத் தொிந்து என் அம்மாகூட இல்லை. வந்ததும் ஓடி வந்து கட்டியணைத்துக்கொள்ளும் குழந்தைகள் ஒரு புறம்.... மற்றொரு புறம்....

இருங்க.... அவசரப்படாதீங்க ! என் மனைவி.... இதானே நீங்க நெனச்சது? அதான் இல்ல.

என் மனைவி நேரடியாக எனது இரு பொிய செக்-இன் லக்கேஜ் பக்கம் ஆஜரானார். பெட்டியை ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்தார். எல்லாம்(!) பத்திரமாக வந்து சோ்ந்து விட்டதா? என்று சரி பார்த்தார்.. இதில் ஏர்போர்ட் ஸ்னிஃபர் எல்லாம் இரண்டாம் பட்சம். ஓ.... அப்படி என்னதாங்க பாத்தாங்க....

மீன் குழம்பு
மீன் குழம்பு

இருங்க... இருங்க... மறுபடியும் அவசரப்படுறீங்க!

அவங்களுக்கு வாங்கி வந்த புது டிசைன்ஸ் புடவைகளா? நகைகளா? நம்மூர் ஸ்வீட்ஸ்களா? குழந்தைகளுக்கு வாங்கி வந்த புது உடைகளா? ஊறுகாய்கள் சகிதமா? சோ்க்க வேண்டிய நம்மூர் அடுப்படி அரவை, செலவுப் பொருள்களைச் சோ்த்து, காயவைத்து, பக்குவமாய் அரைத்தனுப்பிய... மாமியார் வீட்டு மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, இட்லிப்பொடிகளா? இல்லை..... அம்மா கொடுத்தனுப்பிய மோர் மிளகாய், வத்தல் வடக வகையறாக்களா? அல்லது என் மனைவி என்னை வாங்கி வரப் பணித்த, மைக்கேல் மதன காமராசன் - கமல் தோளில் கிடக்கும் 'திரிபு' ஊர்வசி கொடுத்தனுப்பிய எட்டு முழ மளிகை சாமான் லிஸ்டில் உள்ள மேற்படி ஐட்டங்களா? இல்லை... இல்லவே இல்லை. அவங்க இதயெல்லாம் பெருசா எதிர்பாக்குற கேரக்டரே இல்ல... அவங்க வேற லெவல். ஆனா, இதையெல்லாம் நான் கொண்டு வருவேன். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

சென்னையிலிருந்து சுமார் இருபத்தி நான்கு மணி நேரத்திற்கும் மேலாக என்னோடு, என்னைவிட ஸ்பெஷலாகப் பாதுகாக்கப்பட்டு, வந்திறங்கிய அந்த மானாமதுரை மண் சட்டிகளை உடையாமல் பத்திரமாகக் கொண்டு வந்திருக்கிறேனா? என்பதுதான். அவற்றுக்கு எதுவும் ஆகவில்லை என்ற கன்ஃபர்மேஷனுக்குப் பிறகு, அவங்க முகத்தில் தொியுமே ஒரு தேஜஸ், தகவமைப்பு, மின்காந்த ஒளி, ஆகாகா....

``அட.. அத கல்யாணத்தன்னிக்கிகூட நான் பாத்ததில்ல".

இறால் குழம்பு
இறால் குழம்பு

அந்த ரீயாக்ஷ்னுக்கப்பறந்தான், ஒண்ணுகூட ஒடையல'யேடா... ங்கப்பா'னு எனக்கே உயிர் வரும். இதற்காகவே 'மஞ்சட்டி ஹோல்சேல் யாவாரம்' தொடங்கிரலாமோ' என்று கூட, சில நேரத்தில் தோன்றும்.

சரி! எப்படியோ ஒரு வழியாக, கஷ்டப்பட்டுக் கொண்டு வந்து சேர்த்தாச்சு. நம்ம கஸ்டமெல்லாம் தொிஞ்சுதான் கஸ்டம்ஸ்' என்று பேர் வைத்தார்கள் போல. அடுத்த நாள் மீன் கொழம்புக்குத் தயாராவோம் பாருங்க! அடேங்கப்பா! அந்த பிராஸஸ் இருக்கே..... வீடே கல்யாணக் களை கட்டும். தெருவெல்லாம் திருவிழாக் கோலமாகத் தோன்றும். அமொிக்காவாச்சே.. ஆளுக்கொரு பக்கம் அலைந்து வேண்டியதெல்லாம் வாங்கிவிட்டோம். ஒண்ணே ஒண்ணு மிஸ்ஸிங்.... எல்லாம் வாங்கிறலாம். மீன் கொழம்புல போடுவதற்கு இந்த மாங்காய்க்கி தேடி அலையிற கொடுமை இருக்கே! அத நெனச்சா, இந்த மண் சட்டிய செஞ்ச மானாமதுரைக் காரெய்ங்கெ மேல வரும் பாருங்க..... ஒரு கோவம்.

சத்தியமாச் சொல்லுங்க! "அமொிக்காவுல இருந்துகிட்டு, அப்படியென்ன மண் சட்டி'ல மீன் கொழம்பு கேக்குது?'என்று உங்களுக்குத் தோணுதா இல்லயா? தோணுதுல்ல! ஒங்களுக்கே தோணுதுன்னா, பின்னே எனக்கு தோணாம இருக்குமா? தோணும்.... என்னத்த செய்ய?

ஒரு வழியாக, மாங்காயக் கண்டுபிடித்து, கொண்டு வந்து கொடுத்ததும் குழம்பே கொதித்துவிட்டதாகக் குதிக்கிற மனைவி ஒரு பக்கம். கொலம்பஸ் ரேஞ்சுக்கும் கொஞ்சம் கூடவே கெத்து விடும் நாம் ஒரு பக்கம்.

காரக் குழம்பு
காரக் குழம்பு

நினைத்தபடி சுடச்சுட சோறு ரெடி. மாங்காய் போட்டு மண்சட்டியில் வைத்த மீன் கொழம்பு ரெடி. கூடவே வறுத்தெடுத்த இறால் வகையறாக்கள் ரெடி. அமொிக்க ஸ்பெஷல் தேசி ஹோல் தயிரில் மிக்ஸ் பண்ண வெங்காய பச்செடி ரெடி. கொத்துக்கொத்தாக கொத்தமல்லி குதிச்சுத் தற்கொலை செய்து கொண்ட மண்சட்டி ரசம் ரெடி.... தயிர் ரெடி, வறுத்தெடுத்த மோர் மொளகா ரெடி, ஆவக்கா, வடு மாங்கா, நெல்லிக்காயோடு சேர்த்து ஒரு அஞ்சு வகை ஊறுகாய் ரெடி. இப்படி எல்லாம் ரெடி. ஒரு புடி புடிக்கும்போது...... ஆஹா... ஆஹா.... அது வேற லெவல் !!

அப்படித்தானே நினைக்கிறீர்கள்! அதுதான் இல்லை..

ஆமாங்க! எல்லாமே இருக்கு. எதுவுமே குறையவில்லை.... குறை இல்லை அந்த நம்ம ஊரு மண் சட்டியில் வைக்கிற, நம்ம ஊரு மீன் கொழம்பு டேஸ்ட் மிஸ்ஸிங்....

அதற்குக் காரணம், நம் மண்ணில் வளர்ந்த அந்த மீனா, அது கொதிக்கிற தண்ணியா? இல்லை ஒக்காந்து ஒண்ணா சாப்புடுற அந்த மண்ணா.....?

- நவின் சீதாராமன், அமொிக்கா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு