Published:Updated:

`சாலைகள் மட்டுமே அவர்களின் சாட்சியங்கள்!' - வாசகியின் நெகிழ்ச்சிப் பகிர்வு #MyVikatan

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

உலகத்தை வென்ற மனித இனம் ஏன் இன்னும் தன் நடைப்பயணங்களை நிறுத்தமின்றி இன்றும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது?

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஆதிமனிதன் என்றைக்கு உலக அச்சின் மையப்புள்ளி ஆனானோ அன்று முதல் இன்று வரை அவனின் வரலாறு என்பது நில்லா நடைப்பயணங்களால் நிறைந்தது. முதன்முதல் ஆப்பிரிக்காவில் தோன்றிய சேப்பியன்ஸ் என்ற மனிதப் பேரினம் தன் இடைநில்லா நடைப்பயணங்களாலயே உலகப் பரப்பு அனைத்தையும் ஆண்டது. உணவின் தேடலுக்கான பயணத்தில் கண்டங்கள், நாடுகள், புதிய மனித இனங்கள், பழக்கங்கள், கலாசாரம், பண்பாடு என எல்லாமும் கண்டெடுக்கப்பட்டன.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

70,000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அறிவுப் புரட்சியால் தன்நிறைவான மனிதன், அதன்பிறகு வேளாண் புரட்சியும், தொழிற்புரட்சியும் அடைந்து, மனித வாழ்வியலின் உச்சம் தொட்டான்.

தொழில், வளம், இயற்கை, அறிவு, வீரம், போர், ஆயுதம், உணவு, கல்வி என அவன் இன்று ஆள்கின்ற பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. பேரண்ட பெருவெடிப்பில் உருவான இச்சிறு பூமியானது, அவனின் சிறிய மூளைக்கு கட்டுப்பட்டே சுழல்கிறது என்றே சொல்லலாம். எனில் உலகத்தை வென்ற மனித இனம் ஏன் இன்னும் தன் நடைப்பயணங்களை நிறுத்தம் இன்றி இன்றும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது? ஒவ்வொரு தேசமும் தன் வரலாற்றில் சில நடைப்பயணங்களை அடையாளமிட்டுச் சொல்கிறது.

உலகத்தை இன்று ஸ்தம்பிக்கச் செய்த கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் முன்பு நிகழ்ந்த, நெடும் பயணத்தை Long March என்று குறிப்பிடுகின்றனர், அதன் வரலாற்று ஆசிரியர்கள். அதை வழிநடத்திய மாசேதுங் சுமார் 10,000 கி.மீ தொலைவைக் நடந்தே கடந்தார். அதன்பயனாக சீனாவின் முடியாட்சி முடிவுக்கு வந்து கம்யூனிசம் மலர்ந்தது. அண்டை நாடான இந்தியாவின் வரலாற்றிலும் அநேக நடைப் பயணங்கள் உண்டு.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
Vikatan team

காந்தியின் தண்டி யாத்திரை சிறிய தொலைவு எனினும் வரலாற்றில் அதன் வீச்சு பெரியதே. காந்திக்குப் பிறகு வினோபா நிகழ்த்திய பூமிதான இயக்க நடைப்பயணங்கள். ஜனதா கட்சித் தலைவர் சந்திரசேகரின் பெரிய நடைப்பயணங்கள், தமிழகத்தில் பெரியார், அண்ணா, கருணாநிதி, வைகோ, குமரிஅனந்தன், ஸ்டாலின் எனப் பட்டியல் நீண்டே செல்கிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை தடம் பதித்த நடைப்பயணங்களைவிட, உயிர்ப்புக்கான நடைப்பயணங்களை இன்று நடத்திக்கொண்டு இருக்கிறார்கள், நம் தேசத்தின் புலம்பெயர் இந்தியர்கள். சொந்த தேசத்தில், பிழைப்புக்காய் இடம் பெயர்ந்தவர்களின் ஜீவாதார உரிமைகளைக் கண்டுகொள்ள யாருமில்லை.

கொரோனா நெருக்கடிகளில் உலகமே உள்ளிருந்த நாள்களில், எவ்வித தலைமையும் இன்றி தனி மனிதர்களாய் அவர்களை நகர்த்திய சாலைகள் மட்டுமே இன்று அவர்களின் சாட்சியங்கள். பயணங்களின் எல்லைகள் என்றும் வரையறுக்கப்பட்டவையே. ஆனால், இவர்களின் பயணங்களோ எல்லைகளைத் தேடி அல்ல என்பது மட்டும் அனைவரும் அறிந்ததே.

-மருத்துவர். சித்ரா சுப்பையா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு