Published:Updated:

``ஓஹோ.. இதான் பவுடர் கலையாத நடையா.. !‘’- வாக்கிங் டாக்கிங் – பகுதி 3

Representational Image
Representational Image ( Helena Lopes from Pexels )

இந்த மாதிரியான வினோதமான செய்கைகளை நாம் அவ்வப்போது காணும் போது இளம்பருவம் ஞாபகங்கள் வந்து சலித்த உலகிலிருந்து குதூகலத்தை நோக்கி நம்மை நகர்த்துகின்றன...

(வாக்கிங்.... இளமைக்கும் முதுமைக்கும் இடையேயான பலம்!! புதுமைக்கும் பழமைக்கும் இடையேயான பாலம் புத்தாண்டு சபதங்களில் ஒன்றான வாக்கிங் பற்றிய ஜாலியான தொடர்... புதுமையும் உண்டு.. நாஸ்டால்ஜியாவும் உண்டு)

முதல் பாகம் : ``தமிழய்யா சொன்ன ஆங்கில வார்த்தைப் புதிர்..!'' - வாக்கிங் டாக்கிங் - 1 #MyVikatan

இரண்டாம் பாகம் : திருமதியின் எசப்பாட்டு! - வாக்கிங் டாக்கிங் 2 #MyVikatan

பவர் வாக்கிங்

இன்று நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் வாக்கிங் போகலாம் என்ற எண்ணம் தோன்றியது. மாலையில், தமிழய்யா இனியவனுக்கு அழைப்பு விடுத்தேன். உடனடியாக வந்து சேர்ந்தார். அவரிடம் சின்ன வித்தியாசம், அவர் முகத்தில் முதல் அலையின் போது ஒரு மாஸ்க், இரண்டாம் அலையில் இரண்டு மாஸ்க்,

நான் நடக்க ஆரம்பித்ததும், அவர் ஓட ஆரம்பித்தார். எனக்கு சிரிப்பு வந்தது.

என்ன இது இனியவன், ஓட்டமும் நடையுமா?

பவர் வாக்கிங் கேள்விப்பட்டதுண்டா சார்?

சொல்லுங்க...

கிரிக்கெட்டில் பவர்பளே இருப்பது போல, விறுவிறுப்பாக விறைப்பாகக் கைகளை வீசி ஒரு பத்து நிமிசம் நடப்பது தான் பவர் வாக்கிங், அது கைகால்களை வேகமாக வீசிக்கொண்டு நடப்பதாம்,

எனக்கு இது ஆச்சரியமாக இருந்தது.

எதிரில் சிலர் வாக்கிங் வந்து கொண்டு இருந்தனர். கிரிக்கெட் இடது கை பேட்ஸ்மேன், இடது கை பெளலர் இருப்பது போல வாக்கிங்கிலும் இடது பக்கமாகவே சுற்றுபவர்கள் இருக்கிறார்கள்.

Representational Image
Representational Image
Pexels

மீண்டும் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்.

நடைப்பயிற்சி தான் இருப்பதிலேயே மிகவும் பழமையான பயிற்சி இனியன்,

சார்…ஆனா, முதலில் ஆரம்பிப்பவர்களுக்கு புதுசு தானே?

எப்படி?

அங்கே பாருங்க, அதுவும் விசுக் விசுக்குன்னு கையை வேகமாக வீசி வாக்கிங் போறவர். புது சுகர் பேசண்டா தான் இருப்பார்.

சிரித்து விட்டேன்…

அதென்ன N95 மாஸ்க் இனியவன் ?

N – (Non Oil) எண்ணெய் பொருளைத் தடுக்காது, R – (Resistant to Oil for 8 hours) எட்டு மணி நேரம் மட்டுமே எண்ணெய் கசிவைத் தடுக்கும்), P – (Oil Proof) சுத்தமா ஆயுளை விடாது சார்..

ஆகமொத்த….மாஸ்க் போட்டா…. யாரும் ஆயுளை விட மாட்டோம் …ன்னு சொல்லுங்க,

ஆமாங்க சார்… தடுப்புச் சக்தியை வைச்சு N95, தவிர N99, N100 ம் இருக்கு,

நூறா?

பாக்கெட்டில் 95 ரூ இருந்தா 100 ரூபா இருக்குன்னு சொல்றோம், இல்லய்யா அந்த மாதிரி 99.97% தடுக்கும்…

முதல் அலையில் சானிடைசர், கை கிளவுஸ் என பக்கா பாதுகாப்பு உணர்வுடன் இருந்தவர். இப்போது இரண்டு மாஸ்க் மட்டுமே,

”என்ன பாதுகாப்பு குறையுதே இனியவன்?” எனக்கேட்டேன்.

இப்பவெல்லாம், கொரனாவோட வாழ பழகிட்டோம். அதுமட்டுமல்ல சார்… இரண்டாம் அலை நேரத்தில அதிகாரத்தை இழந்தது ஈபிஸும் தெர்மா மீட்டரும் தான்…

சிரிப்பு வந்தாலும் அதில் உண்மை இல்லாமல் இல்லை… இப்போது ஆக்சிமீட்டரை தான் நம்பாறாங்க…

சில பேரு அறிகுறி தெரிஞ்சதும் டெஸ்ட் எடுக்கிறதுல்ல…அதை கெளரவ பிரச்சனையா, பக்கத்து வீட்டுக்காரங்களுக்குத் தெரியக்கூடாதுன்னு நினைக்கிறது தான் பல பேர் உயிர் போக காரணமா இருக்கு… மூச்சுத்திணறல் வந்த பிறகு ஆஸ்பிடல் ஓடும்போது காப்பாத்தறது பெரும்பாடா போகுது…

ஆக்சிஜன் அளவு 94 கீழ் இருந்தா டாக்டரை பார்த்தே ஆகணும்…

ஆமாங்க… ஆனா…ஆக்சி மீட்டரையும், திருமண ஆல்பத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக்கூடாது

வாய் விட்டுச் சிரித்ததில் மாஸ்க் விட்டு போனது.

இருவரும் அருகம்புல் ஜுஸ் கடையை நெருங்கியிருந்தோம்…

அருகம்புல் ஜூஸ் கடையில் பேச்சுவாக்கில் தொப் தொப்பென்று தொப்பையின் மீது விழுந்த கரிசனங்களைக் கேட்க நேரிடும்.

கிரிக்கெட் மேட்ச் இறுதி ஓவர் இக்கட்டான நிலையில் நிறுத்தி வாட்டர் பாட்டிலை வாயில் கவ்விக் கொண்டே பேசுவது போல, அருகம்புல் ஜூஸ் கடையில் நின்றால் வாக்கிங் முடியப்போகும் தருணம் என்று அர்த்தம்.

கிரிக்கெட் வீரர்கள் மைதானத்திற்கு முகத்தில் தண்ணீரை ஊற்றிக் குளிர்விப்பார்கள், அவர்களைப்போலவே சிலர் வாக்கிங் முடியும்போது தண்ணீரை முகத்தில் அடித்துக்கொள்வார்கள். துடைத்தபின் நிற்கும் தண்ணீர் தான் வியர்த்துளிகளாக கெத்து காட்டும்,

வாக்கிங் முடிவு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். சிலர் உடற்பயிற்சி எடுப்பார்கள், சிலர் உட்கார்ந்து கொள்வார்கள், சில அருகம்புல் ஜுஸ் குடிப்பார்கள். இதெல்லாம் செய்தால் தான் உயர்தர வாக்கிங். சும்மா நடந்தால் நோயாளிகள் கணக்கில் சேர்த்துக்கொள்வார்கள்.

Representational image
Representational image
Pexels

எங்க தாத்தா எண்பது வயதை தாண்டியும் ஆரோக்கியமாக இருந்தார், அவர் பவுடர் கலையாத நடையினால் எந்த பிரயோஜனம் இல்லை என்பார்,

பவுடர் கலைந்து போய் இருந்ததால் என்னவோ, ஒரு இளைஞன் அங்கே நின்றிருந்த பைக்கின் கண்ணாடிக்கு முன் நின்று தன் முகத்தை கர்சீப்பால் துடைத்துக்கொண்டு, தலைகேசத்தை வாரி இறைத்து அழகினை மெருகேற்றிக்கொண்டிருந்தான்.

அவனின் செய்கை சற்றே வித்தியாசமாக இருக்கவே தமிழய்யாவிடம் சுட்டிக்காட்டினேன். சற்று தூரத்தில் ஒரு இளம்பெண் நளினமாக நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தாள். ஈர்ப்பு விசை வேலை செய்தது,

“OBJECTS IN THE MIRROR ARE CLOSER THAN THEY APPEAR” எனக் கண்ணாடியில் எழுதியிருக்கும்.

இது குவி ஆடியின் சிறப்பம்சம். ரியர்வியூ கண்ணாடியில் இந்த எச்சரிக்கை வாக்கியத்தைக் கண்டிப்பாக பொறிக்கவேண்டும் என்பது நம் நாட்டில் மட்டுமல்ல, அமெரிக்கா, கனடா, நேபாள் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் விதிமுறை.

அதனால் அந்த பெண் தொலைவில் இருப்பது கூட அருகில் இருப்பது போலத் தெரிந்திருக்கும்.

அந்த கண்ணாடி பின்னால் வருவதை முன்னால் காட்டுவதால் அதை நம்பிக்கையான ஜோசியர் என்றே கூறலாம். இந்த மாதிரி சமயத்தில் தன்னை யாரும் கவனிக்காத மாதிரி தனது செய்கைகளை மாற்றியமைக்க வேண்டும், அந்த கண்ணாடி வழியே தன் தலையை நோக்குவது போல அந்த யுவதி தலை தெரிகிறதா என நோக்கும் போது கண்ணாடி வழியாக அவனின் தலை தெரியலாம் அல்லது தெளிவாகத் தெரியாமல் போகலாம் அல்லது முற்றிலும் தெரியாமல் போகலாம், அது அந்த இளம்பெண்ணின் வேகத்தைப் பொறுத்தது.

இந்த மாதிரியான வினோதமான செய்கைகளை நாம் அவ்வப்போது காணும் போது இளம்பருவம் ஞாபகங்கள் வந்து சலித்த உலகிலிருந்து குதூகலத்தை நோக்கி நம்மை நகர்த்துகின்றன.

Representational Image
Representational Image
Pexels

அந்த மாதிரி பழைய காட்சிகள் விரியும் அந்த கணம் எனக்குப் புத்தர் சம்யுத்த நிகாயத்தில் சொல்வது நினைவுக்கு வந்தது.

``இது இருக்கிறது. ஏனென்றால் அது இருக்கிறது

இது இல்லை. ஏனென்றால் அது இல்லை

இது இல்லாமல் போகிறது ஏனென்றால் அது இல்லாமல் போகிறது’’

என்றேன், இனியன் நில்லாமல் போயிருந்தார். இளைஞன் இன்னும் எங்களைத் திருப்திப்படுத்த தலைவாரிக்கொண்டு இருந்தான்.

இனியவனை துரத்திப்பிடித்துக் கேட்டேன்,” பழங்காலத்தில் இப்படி தலைமுடி கோதிய கதை உண்டா?”

ஏன் இல்லை? இதோ என ஒரு பாடலை எடுத்து விட்டார்.

முறியார் பெருங்கிளை யறிதல் அஞ்சிக்

கறிவளர் அடுக்கத்திற்கு களவினிற் புணர்ந்த

செம்முக மந்தி செல்முறி கருங்காற்

பொன்னிணர் வேங்கைப் பூஞ்சினைச் செலீஇயர்

குண்டுநீர் நெடுஞ்சுனை நோக்கிக் கவிழ்ந்துதன்

புந்தலைப் பாறுமயிர் திருத்தும்

(நற். 152)

மிளகு செடிகள் வளர்ந்து பெருகும் மலைச்சாரலில் ஒரு பெண் குரங்கு ஓர் ஆண் குரங்கை வம்புக்கு இழுத்தது. பின் மோதல் களவொழுக்கத்தில் முடிந்தது. மேக்கப் கலைந்து விட்டதை வைத்து அந்த மறைவொழுக்கத்தைக் யாரும் கண்டுபிடிக்க கூடாது என அந்த பெண் குரங்கு நினைத்ததாம். அதை மறைக்க தான் அமர்ந்திருக்கும் கிளைக்குக் கீழே தெரியும் தெளிந்த சுனை நீரில் தனது தலைமயிரை சீவி சிங்காரித்தது என்பது தான் அதன் பொருள்.

-சி.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு