`உணவு தேடலும் பசியின் புரிதலும்..!' -வாசகியின் வேதனைப் பகிர்வு #MyVikatan

பசியின் கொடுமையா இல்லை... இதுவும் ஒருவகை நம்பிக்கைத் துரோகமா? விளங்கவில்லை.
பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
`` சரிவிகித உணவு எடுத்துக்கொண்டால் அநாவசியமான உணவுத் தேடல் இருக்காது. உடலும் ஆரோக்கியமாக இருக்கும்" - டி.வி-யில் ஒரு டயட்டீஷியன் இவ்வாறு சொல்லிக்கொண்டிருந்தார். நமது பாட்டிகள் சிறு வயதில் கூறிய எளிமையான மற்றும் வாழ்வியலோடு இணைந்த உணர்வுபூர்வமான உணவின் அறிவியலைக் கண்டுகொள்ளாத நாம்தான், ஒரு கட்டத்தில் அந்த டயட் இந்த டயட் என்று செலவுசெய்து தெரிந்துகொள்கிறோம். அதுவும் எது சரி என்று புரியாமலே. ஆனால், அந்த வார்த்தை என்னை சற்று சிந்திக்கவைத்தது.
`உணவுத் தேடல்' - ஆம். கீழடி முதல் சிந்து சமவெளி வரை பல நாகரிகங்கள் தோன்றுவதற்கு அடிப்படையே இந்த உணவுத் தேடல்தானே. மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளின் வாழ்வியலுக்கும் அடிப்படை இதுதான்.

"நாங்க இங்க நூறு வருஷமா விவசாயம் பாக்குறோம். ஆனா, இந்த யானைங்க கூட்டமா வந்து பயிர்கள நாசம் பண்ணிடுச்சு" என்பதான புலம்பல்கள் நாம் அவ்வப்போது கேள்விப்படுவதுதான். சில நூறு வருடங்களாக விவசாயம் செய்பவர்கள், ஆயிரம் வருடங்களாக வரும் யானைகளைக் குறை கூறுகிறார்கள். யானைகள் அங்கு கூட்டமாக வருவதற்கு ஆயிரம் அரசியல் வியாபாரம் காரணமாக இருந்தாலும், அவை வருவதென்னவோ உணவைத் தேடிதான்.
மக்கள் பெருக்கத்தால் ஊர்களின் எல்லைகள் விரிவடைவது தவிர்க்க முடியாத ஒன்றுதான். ஆனால், இவை விலங்குகளுக்கு புரிவதில்லை. என்ன செய்வது... பசி வந்தால் பத்தும் பறந்து போகும் அல்லவா. சமீபத்தில், அன்னாசிப் பழத்தில் வெடிமருந்து வைத்து கொல்லப்பட்ட யானைக்கு உலகமே கலங்கியது. அது கருவுற்று இருந்ததால் மட்டுமல்ல. அது கொல்லப்பட்ட விதம். யானை என்றில்லை... எந்த ஐந்தறிவு ஜீவனாக இருந்தாலும் நாம் வழங்கும் உணவை நம்பி உண்ணும்.

சந்தேகப்படத் தெரியாததால்தானே அவை ஐந்தறிவு ஜீவன். இந்த மரணம் ஒரு வகையில் நம்பிக்கைத் துரோகம். அதுதான் நம்மைக் கலங்கவைத்தது. ஆறறிவு படைத்த மனிதனே வெல்ல முடியாதது அல்லவா. எத்தனை சாம்ராஜ்ஜியங்கள் இந்தத் துரோகத்தால் வீழ்ந்திருக்கின்றன. சமீபகாலமாக நாம் அதிகம் பார்க்கும் செய்தி, புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றியது. இவர்கள் புலம்பெயர்ந்ததும் ஒரு வகையில் உணவுத் தேடல்தானே. தான் பிறந்து வளர்ந்த இடத்தைவிட்டு, ஊரை விட்டு, மாநிலம் விட்டு அவர்கள் வாழ்வியலுக்கு சற்றும் பொருந்தாத வேறு இடத்திற்கு செல்வது எதனால்?
தனிப்பட்ட முறையில் அவர்கள்மீது சின்னச் சின்ன விமர்சனங்கள் இருந்தன. அதற்கு நாம் கேள்விப்படும் முற்றிலும் ஆராயப்படாத செய்திகளே காரணம். என் அலுவலக உணவுத்துறையில் முழுவதும் வடமாநிலத்தவர்களே. அவர்களுடன் பழகியதில், அந்த எண்ணம் காலப்போக்கில் மாறியது. தன் இடத்தில் பிழைக்க வழியின்றி இங்கு வந்தவர்கள், நமக்கான அனைத்து அடிப்படை வேலைகளையும் செய்தார்கள். அப்படி நமக்காக உழைத்தவர்கள் இன்று இந்த ஊரடங்கு தொடங்கியவுடன், அதாவது நமக்கு அவர்களின் தேவை இல்லாதபோது , உணவில்லாமல் வாழ வழியில்லாமல் மீண்டும் அவர்கள் ஊருக்கே நடந்தேனும் போய்விட வேண்டும் என்று கிளம்பக் காரணம் என்ன? அவர்களுக்கு வாழ்வில் நம்பிக்கை தர நாம் தவறிவிட்டோமா?

உணவை வீணடித்தே பழக்கப்பட்ட நமக்கு, பசியின் புரிதல் இல்லையோ. ஒரு சிறு குழந்தை நடந்துபோகும்போது யாரோ கருணை உள்ளம் படைத்த ஒருவர் கொடுத்த உணவைப் பெற்றுக் கொண்டு சற்று முன் தள்ளி நடந்த இன்னொரு குழந்தைக்கு ஓடிச்சென்று கொடுத்த காட்சியை சமூக வலைதளத்தில் கண்ட போது என்னையறியாமல் கண்கள் குளமாகின.
பசியின் அருமையா... கொடுமையா விளங்கவில்லை. இதுவும் ஒரு வகை நம்பிக்கைத் துரோகமா? மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகள், பறவைகள்கூட இதற்கு விதிவிலக்கில்லை. உணவுத் தேடலுக்கு முடிவு என்பதே இல்லை. இந்த மண்ணில் கடைசி உயிர் இருக்கும் வரை இந்தத் தேடல் தொடரும்.
அன்றே சொன்னார் நம் பாரதி, தேசிய கவி அல்ல தெய்வக் கவி. தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்...
-ப்ரியா ராமன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.