Published:Updated:

`ஆளாளுக்கு ஹலோ ஹலோனு கத்தாதீங்கப்பா..!’ - ஆன்லைன் க்ளாஸ் சோதனைகள் #MyVikatan

Representational image
Representational image ( Pixabay )

முதன்முறை வீடியோ கால் வரும்போது எல்லாரும் வேற்றுமொழிப்பட வில்லன் ரேஞ்சுக்குப் பயங்கரமா இருந்தோம்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

"படிக்கிற புள்ளைக எங்கிருந்தாலும் படிக்கும்" என்பதற்கு டிஜிட்டல் வெர்சன் உதாரணம்தான் ஆன்லைன் வகுப்புகள். எங்கிருந்தாலும் வாழ்க என்பது போல் எங்கிருந்தாலும் படிப்பிக்கலாம் என்பது உபயோகமானது.

``எம் புள்ளைக்கு ஆன்லைன் வகுப்பு இருக்கு’’ எனப் பெருமையாகச் சொல்லும் தருணமிது. ஆனால் அதிலும் நம் பிள்ளைகள் கலாய்க்கிற கலாய்ப்பு ஆன்லைன் வகுப்பு எடுத்துப் பார்த்தால்தான் தெரியும் என்பது போல் ஆசிரியர்கள் ஜென் நிலைக்கே போய்விடுவார்கள்.

பத்துமணிக்குப் படுக்கையிலிருந்து எழுபவர்களை எட்டுமணிக்கே எழுப்பிவிடுகிறது. தினசரி குளிக்க வைக்கிறது. லீவு நாளிலுமா படிப்பு எனக் கல்லூரி மாணவர்களைக் கலங்கடிக்க வைக்கிறது..

Representational image
Representational image

#ட்ரையல் வகுப்பு

லோக்கல் கிரிக்கெட்டில் ட்ரையல் பால் போடுவார்கள். அவன் அந்த பாலை அடிக்கிற வரை அதை ட்ரையல் பால் என்று ஒத்துக்கொள்ளமாட்டான். அதுபோல்தான் ட்ரையல் வகுப்பும். வகுப்பெடுப்பவர் திருப்தியடையும் வரை நடத்துவார்கள்.

முதலில் எல்லோரையும் Zoom app, Google Hangsout meet இன்ஸ்டால் செய்யசொல்லி லிங்க் மெயில் அனுப்பி ஜாய்ன் பன்னச்சொன்னார்கள். நாங்களும் கெடா வெட்டுக்குப் போகிற ஆடுகள் மாதிரி நம்பி ஏறிப் போனோம். ஆடியோ, வீடியோ, சரியா கனெக்ட் ஆகிறதா என்று பார்த்தபின், மெளனராகம் கார்த்தி மாதிரி Can u hear me, can everyone hear me என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். எல்.ஆர் ஈஸ்வரி பாட்டு கேட்கிற மாதிரி எல்லோரும் பொறுமையாக காத்துக்கொண்டிருப்போம்.

முதன்முறை வீடியோ கால் வரும்போது எல்லோரும் வேற்றுமொழிப்பட வில்லன் ரேஞ்சுக்குப் பயங்கரமாகதான் இருந்தோம்.

ஆளாளுக்கு ஹலோ ஹலோ என்று சொல்ல கடுப்பாகி.. ``நீங்க வந்தாமட்டும் போதும் வணக்கமெல்லாம் சொல்ல வேண்டாம்’’ என்று ஆர்டர் போட்டுவிட்டார்கள்.

முதல்முறை வகுப்பு முடிந்ததும் ஜிம்மிற்கு முதல் நாள் போய்வந்தது போல் ஒரு திருப்தி.

#மெயின் க்ளாஸ்

``இப்ப விடுறா பார்க்கலாம்’’ என்று வடிவேல் சொல்வது போல் 9 மணி வகுப்பிற்கு 8-45க்கு ஒவ்வொருத்தராக வர ஆரம்பிப்பார்கள். 9 மணிக்கு ஆன்லைன் வகுப்புக்குப் பாதிப்பேர்தான் வந்திருப்பார்கள். `எங்க மீதிப்பேர்’’ என்று ஆசிரியர் கேட்டால் கேட்டால்..

``சார் அவன் கிராமத்தில இருக்கான். வா ன்னா உடனே எப்பிடி வருவான் அவன் மெதுவாதான் வருவான்’’ என்று பில்டப் கொடுப்பார்கள். அதிலும் ஒருத்தன் ``சார் இன்னிக்கு எங்க ஏரியாவுல ஷட் டவுன்’’ என்று முதல் நாளே முக்காடு போட்டு ஓடிருவான்.

டிஸ்கசனில் ஆசிரியர், ஆளாளுக்குப் பேச மைக் ஒன், மைக் டூ ஒரு முடிவுக்கு வாங்கடா என்று கிளாஸ் எடுத்தவாரே ஓயாமல் கத்திக்கொண்டிருப்பார். ஒருசிலர் என்னவோ நடக்குது மர்மமா இருக்குது என்பது மாதிரி, கைகட்டி உட்கார்ந்து, வகுப்பு முடிந்தபின்தான் கை எடுப்பார்கள்.

Representational image
Representational image

#டவர் வீக் சார்

சில கல்லூரிகளில் ப்ரேயர் சாங்குடன் சாஷ்டமாக இறைவணக்கம் பாடி பயபக்தியோடு ஆன்லைன் வகுப்பை ஆரம்பிப்பார்கள். பாடம் நடத்தும் போது எல்லாமே புரிஞ்ச மாதிரி ஆன்லைனில் முகம் காட்டுவதைப் பார்த்தால் சிவாஜி கணேசனுக்கே சியர்ஸ் சொல்லுகிற மாதிரி நடிப்பார்கள். திடீர் என்று பார்த்தால் Smule ல் பாடுவது போலவே ரியாக்சன் கொடுப்பார்கள்.

என்ன கேள்வி கேட்டாலும் பிதாமகன் சித்தன் மாதிரி அப்படியே அசையாமல் இருப்பது. இப்ப பதில் சொல்லு என்று ஆசிரியர் கேட்ட உடனே ஆன்லைன் விட்டே ஓடி விடுவது.

இன்னும் சிலர் சர்வர் கிடைக்க லேட்டாகுது என்று ஒரு குத்து மிக்சரை கையில் அள்ளி வாயில் போட்டபோது கரெக்டா சார் வந்து கேள்வி கேட்பார்.. மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம..அந்த வேதனையிருக்கே வேதனை..அது சொன்னாபுரியாது.

#அலப்பறை ஆரம்பம்

நமக்குப் புடிச்ச பெண் தோழி ஆன்லைன் வந்த பிறகு தான் மனசு மண் லாரி மாதிரி வேகமாகப் போகும். அந்தப் பெண்ணுக்கு அடுத்தாப்பில அட்டெண்டண்ஸ் போட்டு நான்தான் அவளுக்கு இல்லத்து அரசன் என்பது மாதிரி ஆன்லைனில் ஆஜர் ஆவோம். மைக் ஆன் பண்ணாமல் மணிக்கணக்கில் பேசும்போதெல்லாம் ஹரி சார் படத்தை ம்யுட்ல பார்க்கிற மாதிரி இருக்கும். இன்னும் சிலர் இங்கதான் எங்கியோ வச்சேன்னு ம்யூட் பட்டனை ஆன் செய்யத் தேடுவார்கள்.

*சிலசமயம் சம்பந்தப்பட்டவன் நெட் கனெக்ட் பன்னிட்டு ஆன்லைன் வரமாட்டான். திடீர் என்று அவங்க அம்மா வந்து எம் புள்ளை நல்லா படிக்கிறானு என்று கேட்டு உறியடிப்பார்கள்.

*ஆன்லைன் வகுப்பு நடப்பது அறியாமல் திடீர் என்று அவன் சகோதரி சடார்னு கதவு திறந்து ஹேங்கரில் இருக்கிற சட்டையைத் துவைக்கிறதா என்று கேட்பார்கள்.

*என்ன பேசினாலும் அதற்கு எதுகை மோனையில் மீம்ஸ் போட ஒருத்தன் இருப்பான். வித்தியாசமான போட்டோ போட்டு சிரிப்பு மூட்டுவான்.

*ஆன்லைனில் இருப்பது போல் பச்சைகலர் காட்டும். ஆனால் பசங்க பருத்திவீரன் மாதிரி காணாமல் போய்விடுவார்கள்.

*அந்தப்பக்கம் சைனா, இந்தப்பக்கம் கொரோனா..நடுவில எங்க நைனா என்று கவிதை கிண்டி தனிக் குழுவில் போடுவார்கள்.

*47 பேர் வகுப்புக்கு 20 பேர்தான் வந்திருப்பாங்க. இருங்க அவங்களைக் கூப்பிட்டு வர்றோம் என்று சொல்லிட்டு இவர்களும் போய்விடுவார்கள்.

*சிரிச்சா போச்சு ரவுண்டு மாதிரியே கொட்டாவி விட்டா போச்சு ரவுண்ட் இருக்கும். அது சின்சியரா பாடம் நடத்தும் பேராசிரியர் முன்னால கொட்டாவி விடாமா தம் கட்டணும்.

*ஏ கிசான் காவ் மே ரகுதாத்தா மாதிரி எதாச்சும் சாப்பிட்டுக்கிட்டே சிலர் க்ளாசைக் கவனிப்பார்கள்.

*சிலர் படத்தை டவுன்லோடு செய்து அன்றைய நெட் கோட்டாவை காலி செய்துவிடுவதால் பாதியிலேயே நம்மை நேர்ந்து விட்டுட்டு பிரிந்து போய்விடுவார்கள்.

Representational image
Representational image

*சிலர் ஆசிரியரின் கேள்விகளுக்கெல்லாம் டான் டான் என்று பதில் சொல்வார்கள். விசாரித்தால் அவர்களின் அக்காவோ அண்ணனோ பதில் சொல்ல உதவி செய்து கொண்டிருப்பார்கள்.

*ஆன்லைன்ல பேச கூச்சப்பட்டு இருப்பவருக்குக் கண்டுபிடித்த மாதிரியே இருக்கும் chat box. பேச நினைச்சதெல்லாம் கவிதையா எழுதி அனுப்பிற மாதிரி இதில் எழுதி அனுப்புவார்கள்.

*ஆன்லைன் டெஸ்ட்டுக்கு எவனோ அனுப்பிய ஆன்சைரைப் போட்டுவிட்டு அடுத்து என்ன டெஸ்ட்டு என்று நரசிம்மா மாதிரி நார்மலாக இருப்பார்கள்.

#ஆசிரியர்கள் நிலை

இவிங்க ஒவ்வொருத்தரும் வந்து குட் மார்னிங் சார் சொல்லி ஆன்லைன் வகுப்பைப் தொடங்குவதும் மழையில் நனைந்த பழைய டிவிஎஸ் 50யை ஸ்டார்ட் செய்வதும் ஒன்று. ஒருவழியா பாடம் நடத்திக் கேள்வி கேட்கும் போது நம்மையே அசர வைக்கிற மாதிரி ஒரு பதில் சொல்லுவாங்க பாருங்க.. அப்பப்பா

அது அப்ப புரியாது..

சத்து மாத்திரை சாப்பிட்டு வந்த மாதிரி டவர் கிடைக்காத இடத்திலிருந்து ஒருத்தன் பேசுவான். அப்பிடியே சொல்லாமலே லிவிங்க்ஸ்டன் மாதிரி தலையை மட்டும் ஆட்டிக்கணும். முக்கியமான பாய்ன்ட் ஒண்ணு சொல்லும் போது கோரசா ஒண்ணும் கேட்கல என்று சொல்லுவார்கள். அப்ப கவுண்டமணி மாதிரி கல்யாணமா? காதுகுத்தானு? கத்திக் கத்திப் பேச வேண்டியிருக்கும்.

சிலர் ஆளில்லாத கடைக்கு டீ ஆத்துவது போலத்தான் ஆன்லைனில் இல்லாதவருக்கு வகுப்பு எடுப்பதும். வகுப்பறையில் கவனம் சிதறினால் உடனே கொண்டு வரலாம். இங்கு சாத்தியம் குறைவு. இதில ஒரு சிலர் பேக்ரவுண்டில் மடிக்காத போர்வை, காயவைத்த உள்ளாடையெல்லாம் தெரிய கடுப்படிப்பார்கள். ஒரு வழியா ஒன்றரை மணி நேர க்ளாஸ் முடிவது ஒன் டே மேட்ச் முடிந்த மாதிரி ஒரு நிம்மதியாக இருக்கும்.

Representational image
Representational image

#கற்றல்-கற்பித்தல்

நேரடி முறையிலான கற்றலும் கற்பித்தலும்தான் சிறந்தது என ஆன்லைன் வகுப்புகள் உணர்த்துகிறது. புரியாத மாணவர்களை ஆசிரியர் எளிதில் கண்டுணர்ந்து குறைதீர கற்பிக்கவும் வழிகாட்டவும், கவனம் சிதறும்போதெல்லாம் ஆசிரியர்கள் தம் அனுபவத்தைக் கூற இதில் வாய்ப்பில்லை. தெரிந்தது போல் காட்டிக்கொள்ள, தன் அறிவிலிருந்து சுயமாகச் சிந்தித்து விடையளிக்காமல் இணையத்தில் உடனே தேடி விடை சொல்லும் போக்கு மாணவர்களிடம் வளர்ந்துள்ளது.செயற்கை அறிவு மேன்மைப்படும் போது கணினிகள் மனிதர்களைவிட அறிவில் சிறந்திருக்கும் என்பார் இரா.முருகன். தன்னுள்ளிருந்து விடையளிக்காமல் ஏற்கெனவே இணையத்தில் இருக்கும் குறிப்புகளையே பயன்படுத்திச் சொல்வார்கள். கற்றல் கற்பித்தலுக்கான ஒரு உக்தியாக தொழில்நுட்ப வகுப்புகள் உதவும். முறையான கற்றல் கற்பித்தலுக்கு நேரடி வகுப்புகளே உதவும் எனப் புரியவைத்துள்ளது ஆன்லைன் வகுப்புகள்.

-மணிகண்ட பிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு