Published:Updated:

`ஷார்ஜா ஓர் அற்புதமான ஊர்தான்.. ஆனா?' - ரசம் விரும்பியின் வேதனைப் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Unsplash )

இம்மாதம் பேசும்போது மெதுவாய் என் திருமணத்தைப் பற்றி அம்மாவிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது அம்மாவே அதுபற்றிக் கடிதம் எழுதியிருந்தார்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

தொண்ணூறுகளின் இறுதியிலும் இரண்டாயிரத்தின் தொடக்கத்திலும் இப்போது இருப்பதைப்போன்ற வசதிகள் ஷார்ஜாவில் இல்லை. கைப்பேசிகளோ இணைய தொடர்புகளோ மிகவும் அரிது. அப்போதெல்லாம் எட்டிசலாட்டின் தொலைபேசிக் கார்டுகள்தான் ஊரில் இருக்கும் குடும்பத்தாரைத் தொடர்புகொள்ள ஒரே வழி. அதைக் கொண்டுதான் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் வெள்ளி வீட்டிற்குப் பேசுவது.

இம்மாதம் பேசும்போது மெதுவாய் என் திருமணத்தைப் பற்றி அம்மாவிடம் பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது அம்மாவே அதுபற்றி கடிதம் எழுதியிருந்தார் (அது இன்னமும் கடிதம் எழுதும் காலமாக இருந்தது).

Representational Image
Representational Image
Pixabay

நன்றாக சமைக்கத் தெரிந்த பெண்ணாய் பாருங்கள் என்பது மட்டும் இந்த விஷயத்துக்கு என்னுடைய பங்களிப்பாய் இருந்தது. பேசும்போது எனக்கு அடுத்த வருடாந்திர விடுமுறை எப்போது எத்தனை நாள்கள் என்ற விசாரிப்பு இருந்தது. வரும் ஜூன் மாதத்தில் இரண்டு வாரங்கள் வருவேன் என்று தெரிவித்தேன். அதற்குள் எப்படியும் ஏற்பாடுகள் செய்வதாய் உறுதியளித்தனர் என் பெற்றோர். மற்ற சம்பிரதாயப் பேச்சுக்கள் முடிந்து தொலைபேசியிலிருந்து என் எட்டிசலாட் கார்டை உருவிக்கொண்டு திரும்பினேன். சாலையைக் கடந்து என் அறையை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

வெள்ளிக்கிழமைகளில் இப்படி மாலை நேரத்தில் சாலையோரம் நடப்பது எனக்குப் பிடித்தமான ஒன்று.

குட்டையாய் அகலமாய் முகப்பின் அழகைப் பற்றி சற்றும் கவலையில்லாமல் கட்டப்பட்ட கட்டடங்கள்.

சட்சட்டென்று ஆங்காங்கே நட்டு வைத்ததைப் போன்ற ஐம்பது அறுபது மாடி `ஸ்கைஸ்க்ரெப்பர்கள்’. அத்தனை கட்டடங்களிலும் வரிசையாய் துருத்திக்கொண்டிருக்கும் குளிர்சாதனப் பெட்டிகள்.

அகலமான சுத்தமான மேடு பள்ளம் இல்லாத சீரான சாலைகள். நூறு கிலோமீட்டர் வேகத்தில் அந்தச் சாலைகளில் வழுக்கும் புகையில்லாத வாகனங்கள்.

Representational Image
Representational Image
Unsplash

சாலைகளைப் பிரிக்கும் டிவைடர்களில் நடப்பட்டிருக்கும், வருடத்திற்கு மூன்று மாதங்களே சடை சடையாய்க் காய்த்துத் தொங்கும் பேரீச்சம் மரங்கள்.

கறுப்பு பர்தா அணிந்த இஸ்லாமியப் பெண்கள். வெள்ளை அங்கிகள் அணிந்த அரபு ஆண்கள்.

பத்தான் உடை அணிந்த பாகிஸ்தானியர்கள். சட்டையும் கால்சராயும் அணிந்த மேற்கத்திய பெண்கள்.

சூப்பர் மார்க்கெட்டுகளின் செக்-அவுட் கவுன்டர்களிலும் அழகு நிலையங்களிலுமே பெரும்பாலும் கண்ணில் படும் இந்தோனேசிய பிலிப்பினோ பெண்கள்.

மேகமே இல்லாத வெளிர் நீல வானம். ஏதோவொரு ஸ்கைஸ்க்ரெப்பரின் மொட்டை மாடியில் நின்று கைதூக்கினால் கைக்குள் சிக்கிவிடும் போல் அந்தரத்தில் தொங்கும் பௌர்ணமி நிலவு. காலணி இல்லா கால்களுக்குள் குறுகுறுத்து நழுவும் பாலைவன மணல். கண்ணெதிரே நீட்டிய கையைப் பார்க்கமுடியாமல் சுழன்றடிக்கும் மணற்புயல்.

Representational Image
Representational Image
Unsplash

நான் வந்ததிலிருந்து ஒரே ஒரு முறை பெய்திருக்கும் அபூர்வமான மழை. அத்தனையுமே புதிதாய் இருந்தது ஷார்ஜாவுக்கு முதலில் வந்திறங்கியபோது. சாதாரண விற்பனையாளனாய் தேர்வு செய்யப்பட்டு என்னை வேலைக்கு அமர்த்திய நிறுவனத்தின் விசா விமான டிக்கெட்டோடு வந்து மூன்றரை வருடங்களாகிவிட்டன. கொஞ்சம் கொஞ்சமாய் பதவி உயர்வு பெற்று இப்போது சேல்ஸ் சூப்பர்வைசர். இப்போது எல்லாம் பழகிவிட்டது - ரசத்தைத் தவிர.

வந்த புதிதில் என் நிறுவனம் எனக்கு ரோலாவில் தங்கும் அறை ஏற்பாடு செய்துகொடுத்திருந்தது. சென்னைக்கு பாரிஸ் கார்னர் போல ஷார்ஜாவிற்கு ரோலா. சற்றே பெரிய ஓர் அறையும் அதை ஒட்டிய ஒரு குளியலறையும் - இதில் மொத்தம் இருந்தது நான்கு பேர். அதில் நான் ஒருவனே தமிழன். ஒருவன் பாகிஸ்தானி. ஒருவன் பஞ்சாபி. ஒருவன் பங்களாதேஷி. அவர்கள் மூவருக்கும் ரொட்டியும் சுக்காவும் இந்தியும் போதுமானதாய் இருந்தது.

தமிழ் உணவு, அதுவும் மதிய சாப்பாடு எங்கே கிடைக்குமென்று அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆயினும் என்னைப் பல்வேறு உணவகங்களுக்கு அழைத்துச் சென்று என்னை அவர்களின் அறை நண்பனாக அறிமுகம் செய்து வைத்தனர். நால்வரில் நான் இளையவன் என்பதால் என் மேல் அவர்களுக்கு அலாதிப் பிரியம். அவர்கள் அழைத்துச் சென்ற உணவகங்களிலேயே விசாரித்து விசாரித்து கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் உணவு கிடைக்கும் உணவகங்களைத் தெரிந்து வைத்துக்கொண்டேன் (இப்போது போல் அஞ்சப்பரும் சரவண பவனும் அப்போது கிடையாது).

Representational Image
Representational Image

வெள்ளிக்கிழமை அந்த உணவகங்களுக்கு மதிய உணவருந்த ஆவலுடன் சென்றபோதுதான் தெரிந்தது எந்த ஓர் உணவகத்திலும் ரசம் என்பது வெறும் புளி நீராய் இருக்குமென்பது. ஷார்ஜாவிலுள்ள ஒவ்வொரு உணவகத்தையும் தேடிச்செல்வதுதான் எனது வெள்ளிக்கிழமை வேலையாயிற்று. எங்குமே நான் எதிர்பார்க்கும் ரசம் கிடைக்கவில்லை. ஒரு சில இடங்களில் அது சற்று சுமாரானதாய் இருக்கும். ஆனால், அங்கே பரிமாறப்படும் பாசுமதி அரிசி சாதம் அல்லது மோட்டா அரிசி எனப்படும் சிவப்பு அரிசி சாதத்தில் அது ஒட்டாமல் போய்விடும்.

என் நினைவு தெரிந்த நாள் முதல் ரசம் எனது உணவில் முக்கியப் பங்காய் இருந்துவந்திருக்கிறது. எவ்வகை குழம்பும் சாம்பாரும் இருந்தாலும் அதை அவசர அவசரமாய் முடித்துவிட்டு ஆவலுடன் ரசத்துக்காகக் காத்திருப்பேன். அதுவும் பருப்பு இருக்கும் தினங்களில் இரட்டிப்பு அவசரம்.

பருப்பு நீரின் சுவை கலந்து, புளிப்பு அதிகமின்றி, பெருங்காய வாசனை சற்றே பசி கிளற, மல்லித்தழைகள் லேசாக மிதக்க, ஆங்காங்கே பல்லிடை சிக்கும் மிளகுத் துண்டைக் கடித்தபடி வெள்ளை வெளேர் பொன்னியரிசி சாதத்தில், பிசைந்தும் பிசையாமலும் சாதப் பருக்கைகள் ரசத்தில் மிதக்க, சற்றே உண்டபின் தேங்கும் ரசத்தைத் தட்டுடன் எடுத்துப் பருகும் அந்தச் சுகம் இந்த மூன்றரை வருடங்களில் எனக்கு இழக்கப்பட்டிருந்தது.

Representational Image
Representational Image

வேலை நிமித்தம் ஒரு முறை அஜ்மான் செல்ல நேர்ந்தபோது அங்கே `புகாரி ரெஸ்டாரண்ட் - தமிழ் உணவகம்’ என்ற பெயர்ப்பலகையைப் பார்த்தவுடன் மதிய உணவிற்கு அங்கு சென்றேன். எல்லா உணவகங்களைப் போலத்தான் இருந்தது அங்குள்ள ரசமும். ஆனால், அங்கே பொன்னி அரிசி சாதம் கிடைத்ததால் சற்றே சகிக்கும்படி இருந்தது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் டாக்ஸிக்குப் பத்து திர்ஹாம் கொடுத்தேனும் மதிய உணவிற்கு அங்கே செல்வதை அதன் பின் வழக்கமாக்கிக்கொண்டேன்.

ஜூன் மாதத்திற்குப் பிறகு அதற்கு அவசியம் இருக்காது. வாழ்க்கை திடீரென்று சுவாரஸ்யமாய் ஆகிவிட்டதாகப்பட்டது. வீடு பார்க்க ஆரம்பித்தேன். இப்போதைய என் பதவிக்கு என் நிறுவனம் எனக்கு ஸ்டூடியோ வீடு ஏற்பாடு செய்து கொடுக்கும். உள் தடுப்புச் சுவர்கள் எதுவுமின்றி வெளியே உள்ள நான்கு சுவர்கள் மட்டுமே உள்ளதுதான் ஸ்டூடியோ வீடு. அந்த நான்கு சுவர்களுக்குள்தான் படுக்கை, இருக்கை, சமைத்தல், துவைத்தல், குளியல் சகலமும். குளியலறை மட்டும் நான்கு சுவர்களுடன் கூடி தனித்து இருக்கும். நல்ல இடமாய் ஒன்று அமைந்தது.

Representational Image
Representational Image

என் அறை நண்பர்களின் பலத்த கிண்டல்களுக்கிடையில் ஒரு வெள்ளிக்கிழமை அங்கு குடிபெயர்ந்தேன். இனி ஒவ்வொரு தேவையாக வாங்க வேண்டும். அடுப்பும் வாஷிங் மெஷினும் இருந்தது. மற்றவைகளை நான்தான் சேர்க்க வேண்டும். செலவுகளைக் குறைக்க ஆரம்பித்தேன். புகாரி உணவகத்துக்குச் செல்வதை நிறுத்தினேன். இன்னும் சில நாள்கள்தானே. அதன்பின் வீட்டில் தினமும் ரசம் குடிக்கலாம் என்று சமாதானப்படுத்திக்கொண்டேன்.

இதன் நடுவில் பெண்ணின் புகைப்படமும் குடும்ப விவரங்களும் கடிதத்தில் வந்தன. புகைப்படத்தைப் பார்த்து எதுவும் விசேஷமாகத் தோன்றவில்லை. பெண் நன்றாய் சமைப்பாள், பி.காம் படித்திருக்கிறாள், உடன் பிறந்தவர் யாரும் இல்லை, பெற்றோர் இருவரும் ஆசிரியர்களாய் பணிபுரிகிறார்கள், பெண்ணின் தந்தைக்கு தீவிரமான அல்சர் என்பது போன்ற வழக்கமான விவரங்கள் இருந்தன. நன்றாய் சமைப்பாள் என்ற விவரத்துடன் மற்ற விவரங்களும் எதுவும் ஆட்சேபிக்கும்படி இல்லாததால் என் சம்மதத்தை கடிதத்தில் தெரியப்படுத்தி என் விடுமுறை விவரங்களையும் எழுதினேன்.

Representational Image
Representational Image

விரைவில் திருமணப் பத்திரிகைகள் வந்து சேர்ந்தன. கொடுக்கவேண்டியவர்களுக்குக் கொடுத்துவிட்டு சந்தோஷமாய் ஊருக்குக் கிளம்பினேன். இரண்டு வாரங்கள் திருமண சடங்குகளிலும் உறவினர் விருந்துகளிலும் போனது தெரியாமல் ஓடிவிட்டன. ஷார்ஜா சென்று விசாவுக்கு ஏற்பாடு செய்துவிட்டு விமான டிக்கெட் எடுத்து அனுப்புவதாகக் கூறிவிட்டு வந்தேன். விசா எடுப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனது. நாளை வெள்ளிக்கிழமை வருகிறாள் என் மனைவி. சூப்பர் மார்க்கெட்டிற்குச் சென்று மளிகை சாமான்கள் வாங்கி வந்தேன். முக்கியமாய் புளியும் பூண்டும் மிளகும் சீரகமும் பெருங்காயமும் தக்காளியும்.

வந்ததும் அவளால் சமைக்க முடியாது. சற்றே இடம் பழகட்டும். சனிக்கிழமைக்கு சமைக்கச் சொல்லலாம்.

சனிக்கிழமை காலை கிளம்பும்போது கேட்டாள், ``ராத்திரிக்கு ஏதாவது செஞ்சு வைக்கறேன். என்ன செய்யட்டும்?” என்று.

``சாப்பாடே செஞ்சிடு”, என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

மாலை சக ஊழியர்களின் காதைக் கிழித்த கிண்டல்களுக்கு நடுவில் அவசரமாய் வீடு திரும்பினேன். சாப்பாடு தயாராய் இருப்பதைப் பார்த்துக்கொண்டே முகம் கழுவி உடுப்பு மாற்றிக்கொண்டு வந்து அமர்ந்தேன்.

Representational Image
Representational Image

பரிமாறுவதற்குத் தயாராய் என் மனைவி. தட்டில் பொன்னி அரிசி சாதமும், முருங்கைக்காய் சாம்பாரும், புடலங்காய் கூட்டும், முட்டைக்கோஸ் பொரியலும் வைக்கப்பட்டன. ஆவலுடன் எடுத்து ருசி பார்த்தேன். நன்றாய் சமைப்பாள் என்று உண்மையாய்த்தான் சொல்லியிருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். சாம்பாரே இவ்வளவு அருமை என்றால், ரசம்? அவசரமாய் சாம்பார் சாதம் உண்டு முடித்தேன். மறுபடி சாதம் வைத்து சாம்பார் ஊற்றப்போனாள் என் மனைவி.

``போதும். ரசம் ஊத்து” என்றேன்.

``ரசமா?” என்றாள்.

``ஆமாம், ரசம். ஏன், வைக்கலையா?” என்றேன் ஒருவித கலவரத்தோடு.

``இல்லங்க, வைக்கலை. எங்கப்பாவுக்கு சின்ன வயசுல இருந்தே ரொம்ப மோசமான அல்சர். அதனால டாக்டர்ஸ் சுத்தமா ரசம் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. எங்கம்மா அதனால யாருக்குமே ரசமே செய்யறதில்லை. எனக்கு நினைவு தெரிஞ்சதில இருந்து எங்க வீட்ல ரசமே வச்சதில்லை. மத்ததெல்லாம் நல்லா சமைப்பேன். ரசம் மட்டும் வைக்கத்தெரியாது” என்றாள்.

-கா.தாஸ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு