Published:Updated:

`சிரிக்காமல் படிக்கவும்; இது எங்க ட்ரெக்கிங் வரலாறு!' - வாசகரின் ஜாலி பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Vikas Shankarathota / Unsplash )

புனே சி.எஸ்.ஐ.ஆர்-ல் ஆராய்ச்சியாளராக இருக்கும் முனைவர் கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி, தன் ட்ரெக்கிங் அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பெரு நகரங்களில் வாழ்பவர்கள், விருப்பப்படுகிற பொழுதுபோக்கில் ஈடுபட முடியும். அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மாறாக, சிறு நகரங்களில் வாழ்பவர்கள், இருக்கிற வசதிகளுக்கேற்ப பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எல்லா இரவுகளிலும் காணக்கிடைக்கும் நட்சத்திரங்கள் போலல்லாமல், எப்பொழுதாவது தோன்றும் வால்நட்சத்திரம் போல், எப்பொழுதாவது மழை பொழியும் மண் கமுதி (ராமநாதபுரம்).

வளங்களற்ற ஊரில், வாய்ப்புகளும் குறைவு. அங்கே, எனக்கிருந்த வாய்ப்புகளில் புத்தக வாசிப்பையும் பேட்மின்டன் விளையாடுவதையும் பொழுதுபோக்காக வைத்திருந்தேன். குதிரையேற்றம், ட்ரம்ஸ் வாசிப்பது, மலையேற்றம் ஆகியவற்றில் ஈடுபட வேண்டுமென்று விருப்பம் இருந்தது. கமுதியில் இதற்கான வாய்ப்புகள் இருக்கவில்லை. அதன்பின்னர் வேலை, ஆராய்ச்சி பணிகள் நிமித்தமாகப் பல்வேறு இடங்களில் வசிக்க நேர்ந்தது.

நண்பர்களுடன் அழகர் கோவில் மலை ட்ரெக்கிங்..
நண்பர்களுடன் அழகர் கோவில் மலை ட்ரெக்கிங்..

சில ஆண்டுகளுக்கு முன்பு, தினமும் குதிரைகளை அருகில் பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது. ஜெர்மனியில் நான் வசித்த வீட்டுக்கருகே, பல குதிரைகளை வளர்த்து வந்தார்கள். அந்தக் குதிரைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த என்னை, குதிரை அளவு குண்டான ஒருவர் முறைத்துக்கொண்டிருந்தார். நான் குதிரையைப் பார்ப்பதில் இவருக்கு என்ன பிரச்னை என சிந்தித்துக் கொண்டிருந்த பொழுதுதான், குதிரையின் மேலிருந்த பெண் நினைவுக்குவந்தார். அதோடு, குதிரையை வேடிக்கை பார்ப்பதையும் விட்டுவிட்டேன்.

புனேயில் தற்போது நான் வசிக்கும் பகுதியில், ட்ரம்ஸ் பயிற்சி தருவதை அறிந்து, ட்ரம்ஸ் கற்றுக்கொள்ளும் ஆர்வம் கொளுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. அதில், பத்து பக்கெட் தண்ணீரை ஊற்றிவிட்டது கொரோனா.

மதுரையில் நான் படித்த காலத்தில், மலையேற்றம் சாத்தியப்பட்டது. அழகர் கோயில் மலையில் ஏறினோம். முதியவர்களுடன் அழகர் கோயில் போனதை, மலையேற்றம் என்று சொல்வது காமெடியாக இருக்கும். நாங்கள் ஏறியது, கோயிலுக்கும் மேலே உள்ள மலையில். பெருமிதத்தோடு ஏறினால், எங்களுக்கு முன்பே அங்கே குடிகாரர்கள் அமர்ந்து கும்மாளமிட்டுக்கொண்டிருந்தனர். 2020-ல், இவர்களை மதுப்பிரியர்கள் என்று அழைக்கிறார்கள். அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து, குடிகாரர்களை, `பொருளாதார மீட்பர்' என்று அழைக்கப்போகிறார்களோ எனப் பயந்தேன்.

நானே காட் ட்ரெக்கிங்..
நானே காட் ட்ரெக்கிங்..

ஐஐடி பாம்பேயில் சேர்ந்த பின், எனது நண்பர் மோகன்ராஜா, நானேகாட் என்ற மலையில் ஏறலாம் என அழைத்துப்போனார். கொஞ்சம் கடினமான மலையேற்றம். மலையேற்றத்திற்கான ஷூ அணியாததால், மலையேற்றம் கடினமானதாக இருந்ததாக சொல்லிக்கொண்டிருந்தபொழுது, ஒரு பெண் தலையில் விறகுக் கட்டை வைத்துக்கொண்டு என்னைக் கடந்துபோனார். காலில் செருப்பு அணியவில்லை. அதைப் பார்த்தவுடன், மலை ஏறியதை சாதனையாக நினைத்து, காற்றடித்த ட்யூப் போல இருந்த மனது பஞ்சராகிவிட்டது.

முதன்முதலில், தானே மாவட்டத்தில் உள்ள நானேகாட் மலையில் ஒரு கோடை காலத்தில் ஏறினோம். மழைக் காலத்தில் மீண்டும் அதே மலையில் ஏறத் திட்டமிட்டு, ஒரு பெரிய குழுவுடன் புறப்பட்டோம். மலையேறும்பொழுது, எங்களின் ஒரே சுமை புளி மற்றும் எலுமிச்சைச் சோறு. குடிநீரும் எடுத்துச்செல்வோம். குடை எடுத்துச்செல்ல மாட்டோம். மழையில் ஒதுங்க இடம் இருக்காது. எனவே, மழை நிற்கிற நேரத்தில் சாப்பிட்டுவிட வேண்டும். ஒருமுறை சாப்பிடும்பொழுது... என் நண்பரும், இன்றைக்கு VIT பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருப்பவருமான பழனி,

"கிச்சா, சாம்பார் பொறியல் கூட்டெல்லாம் இருந்தா நல்லாருக்கும்" என்றார்.

பாயசம், ஜாங்கிரியெல்லாம் மறந்துவிட்டாரே என்று நானும் வருத்தப்பட்டுக்கொண்டேன்! மலையேறுவதை, பிக்னிக் போவது போல செய்துகொண்டிருந்தோம்.

மவுண்ட் டாம் ட்ரெக்கிங்..
மவுண்ட் டாம் ட்ரெக்கிங்..

மழைக் காலத்தில் மலையேறுவது பிடித்துவிட்டதால், பலமுறை நண்பர்களுடன் நானேகாட்டில் ஏறியிருக்கிறேன். ஒருமுறை, மேகமூட்டம் அதிகமாகி, 100 மீட்டருக்கு அப்பால் உள்ள இடங்கள்கூட தெரியவில்லை. கொஞ்சம் பயமாக இருந்தது. நல்லவேளையாக, ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு, மேகமூட்டம் கலைந்து கீழிறங்கினோம். நாம் திட்டமிடுவது ஒன்றாகவும் நடப்பது இன்னொன்றாகவும் அமைந்துவிடுவது உண்டு.

ஒரு உயரமான மலையில் ஏற, ஒரு குழுவாகக் கிளம்பினோம். மலையடிவார கிராமத்திலிருந்து ஒரு வழிகாட்டியையும் அழைத்துக்கொண்டு ஏற ஆரம்பித்தோம். அவர், இட்லி-சாம்பார் என்று எங்களை கேலி செய்துகொண்டே வந்தார். குழுவில் இருந்த அனைவரும் தமிழர்கள் என்பதால், அவர் அப்படி கேலி செய்தார். நண்பர்களில் சிலர் எரிச்சலடைந்து, திருப்பி கேலி செய்தனர். அதனால் வழிகாட்டி, அழுகிற நிலைக்குப் போய்விட்டார். நண்பர் ரங்கநாதன் அவரை சமாதானம் செய்து, பணம் கொடுத்து திருப்பி அனுப்பினார். பிறகு, நாங்களாகவே மலையேறினோம்.

உச்சிக்குப் போனால், அங்கே ஒரு வேன் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தோம். விசாரித்தோம், அது பீமாசங்கர் என்று சொன்னார்கள். இது புகழ்பெற்ற சிவன் கோயில். ஆனால், நாங்கள் போக நினைத்தது பீமாசங்கர் அல்ல. வழி தவறிப்போய் விட்டோம். சரி, சிவனே அழைத்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு கோயிலுக்குப் போய்விட்டு பஸ்ஸில் ஏறினோம்.

Naneghat
Naneghat

ரங்கநாதன் 10 டிக்கெட் கேட்டார். நடத்துநர் 70 ரூபாய் என்றார். ரங்கநாதன் கொடுத்த 70 ரூபாயை வாங்கிக்கொண்டு, ஒரு டிக்கெட் கொடுத்தார். இன்னும் 9 டிக்கெட்டிற்கு 630 ரூபாய் கூடுதலாகக் கேட்டார். அப்போதுதான், மும்பையில் இருந்து நீண்ட தூரம் வந்துவிட்டது புரிந்தது.

நல்லவேளையாக போதுமான பணம் இருந்தது. திட்டமிட்ட பயணங்கள் இப்படி சிக்கலாகும்பொழுது, திட்டமிடாத மலையேற்றத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

ஒருமுறை, நாசிக்கில் நடந்த கும்பமேளாவிற்குப் போனோம். போகிறபொழுது, என் நண்பன் ஓஜா சொன்ன கவிதை இன்றைக்கும் நினைவில் இருக்கிறது. It is not a politically correct poem. தகவலுக்காகச் சொல்கிறேன்.

"தாஜ்மஹால் கட்ட வேண்டும்

மும்தாஜ் கிடைக்கவில்லை

திருமணத்திற்குப் பின்பு

தாஜ்மஹால் கட்ட வேண்டும்

மும்தாஜ் சாகவில்லை"

கும்பமேளாவில், விதவிதமான சாமியார்களின் விநோத நடவடிக்கைகள், அது ஒரு வித்தியாசமான உலகம் என்று உணர்த்தியது. ஒரு இடத்தில், கூட்டமாக சாமியார்கள் நின்றிருந்தார்கள். தலைமை சாமியார் ஒரு ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரின் அருகே நின்றவர், "ராம், லக்ஷ்மண், ராவண், பாகல் அட்டாரா இஸ் தரஃப் ஆயியே" என்று சொன்னார்.

கும்பமேளா
கும்பமேளா

இதன் பொருள், "ராம், லக்ஷ்மண், ராவண், பைத்தியம் பதினெட்டுப் பேர் இந்த பக்கம் வாருங்கள்". இதுபோன்ற சாமியார்களை தமிழகத்தில் பார்த்ததில்லை. இப்பொழுது, உருவாகியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. அங்கே சிறிய மலை உச்சியில் ஒரு கோயில் இருந்தது. எல்லோரும் படிக்கட்டு வழியாக ஏறினர். இவ்வளவு காலமாக மலையேறிக் கொண்டிருக்கும் நானும் படிக்கட்டு வழியில் ஏறுவது என் திறமைக்கு அவமானம் என நினைத்து, பாறைகளின் வழியாக ஏறினேன். முக்கால் பகுதி ஏறிய பிறகு கனமழை பெய்ய ஆரம்பித்து வழுக்கத் தொடங்கியது. கீழே இறங்குவது சாத்தியமில்லை. மேலே ஏறவும் முடியவில்லை. வாழ்வு முடிந்தது என்று நினைத்துக்கொண்டு, ஒரு கல்லைப் பிடித்து நின்றுகொண்டிருந்தேன்.

படிகள் வழியாக மேலே ஏறிய நண்பர்கள், கவலையுடன் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆச்சர்யமாக ஒரு நல்ல யோசனை தோன்றியது. ஷூவைக் கழற்றிவிட்டு, வெறுங்காலுடன் ஏற முடிவுசெய்தேன். இப்பொழுது வழுக்குவது குறைந்தது. பெரும் போராட்டத்திற்குப் பின், ஒருவழியாக மேலே ஏறிவிட்டேன். அதன் பிறகு நீண்ட காலம் மலையேறவில்லை.

Representational Image
Representational Image

பிறகு அமெரிக்காவில் இருந்தபொழுது, நான், ரங்கநாதன் மற்றும் சிவா ஆகியோர் Mount Tom எனும் மலையில் ஏறினோம். எளிதாகவே இருந்தது. மலையில் இருந்து கீழே பார்த்தபொழுது, நேர் கோட்டில் வீடுகள் இருந்தது தெரிந்தது. புகைப்படம் எடுத்தேன். புகைப்படத்தைப் பார்த்தபொழுதுதான், அவை கல்லறைகள் என்று தெரிந்தது.

மலையில் இருந்து இறங்கும்பொழுது, எங்கள் கார் நிறுத்தியிருந்த பகுதிக்கு எதிர் திசையில் இறங்கிவிட்டோம். அப்பொழுது ஸ்மார்ட்ஃபோன்கள் கிடையாது. ரங்கநாதன், திசைகளை ஒரு பேப்பரில் எழுதிக்கொண்டு வந்திருந்தார். அதன்மூலம் ஒரு வழியாக காருக்கு வந்து ஆம்ஹெர்ஸ்ட் வந்தடைந்தோம். அதற்குப் பிறகு மலையேறவில்லை. அதுவும், மகள் பிறந்த பிறகு இரண்டாவது மாடியில் இருந்து கீழே பார்த்தாலே, மகளின் முகம் கண்ணில் தோன்றிவிடுகிறது.

-முனைவர்.கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி, ஆராய்ச்சியாளர், சி.எஸ்.ஐ.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு