அரவிந்த் கெஜ்ரிவாலின் புதிய கொள்கை..! - டெல்லியின் மூச்சுத்திணறலைக் குறைக்குமா? #MyVikatan

காற்றில் மாசுக்களை உண்டாக்குவதில் வாகனங்களின் புகை கணிசமான பங்கு வகிக்கிறது. காற்று மாசுபாடு என்பது தற்போது டெல்லி அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
எரிபொருள்களுக்கு மாற்றாக மின்சக்தியால் இயக்கப்படுபவை எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles-EV) எனப்படுகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களில் இருந்து புகை வெளிப்படுவது இல்லை என்பதால், இவை சுற்றச்சூழலுக்கு உகந்தவை. மேலும், இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகள், வளைகுடா நாடுகளிடம் இருந்துதான் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கின்றன.
எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை கூடும்போது, கச்சா எண்ணெயின் இறக்குமதி தானாகக் குறையும்.
இறக்குமதி குறைவதால், நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும். எனவே, எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாது, நாடுகளின் பொருளாதாரச் சூழலுக்கும் பெரும் நன்மை அளிக்கக்கூடியவவை.

நமது தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. காற்றில் மாசுக்களை உண்டாக்குவதில், வாகனங்களின் புகை கணிசமான பங்கு வகிக்கிறது. காற்று மாசுபாடு என்பது தற்போது டெல்லி அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
வாகனங்களின் பதிவு எண் அடிப்படையில் (ஒற்றைப்படை, இரட்டைப்படை) குறிப்பிட்ட நாளில் மட்டும் அந்த வாகனத்தை இயக்குவது, பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல செயல்பாடுகள் மூலம் காற்றின் மாசுபாட்டைக் குறைக்க டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவை அனைத்தும் தற்காலிகத் தீர்வுகளே.
ஆனால், காற்று மாசுபாட்டினை நிரந்தரமாகக் குறைக்க வேண்டியது டெல்லியின் அவசியமாகிறது. அதற்காக EV எனப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களைப் பரவலாக்க டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் புதிய மின்சார வாகனக் கொள்கையை (Electric Vehicle Policy) டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார். இது மாநிலத்தின் பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கக் கூடியதாகவும், மாசு அளவைக் குறைக்கச் செய்யும் நிரந்தரத் தீர்வாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ள டெல்லியின் மின்சார வாகனக் கொள்கை குறித்த ஒரு பார்வை இதோ...
சிறப்பம்சங்கள்:
* இந்த மின்சார வாகனக் கொள்கை நாட்டின் மிக முற்போக்கான கொள்கையாகும்.
* அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் புதிய மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்படுவதை இக்கொள்கை இலக்காகக் கொண்டுள்ளது.
* புதிய கொள்கையின் கீழ் வாகனப் பதிவுக் கட்டணம், மின்சார வாகனங்கள் மீதான சாலை வரி போன்றவற்றை அரசாங்கம் முழுமையமையாகத் தள்ளுபடி செய்யும்.
*டெல்லி அரசு மக்கள் மின்சார வாகனங்கள் வாங்குவதற்கான பல்வேறு சலுகைகளை வழங்கும்.
* மின்சார வர்த்தக வாகனங்களுக்கு குறைந்த வட்டிக்கு அரசு கடன் வழங்கும்.
* இரு சக்கர வாகனங்கள், இ-ரிக்ஷாக்கள் மற்றும் இருசக்கர சரக்கு வாகனங்களுக்கு ரூ.30,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.
* வாகனத்தின் பேட்டரி அளவில் கிலோவாட் ஒன்றுக்கு ரூ.5,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.
* பயனர் தனது பழைய ஐ.சி.இ (Internal combustion engine) இரு சக்கர வாகனத்தை விற்றுவிட்டு, புதிய எலெக்ட்ரிக் வாகனம் வாங்கத் தயாராக இருந்தால் கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
* உற்பத்தி அளவிலான சலுகைகள் வழங்கப்பட்டு மின்சார வாகனங்கள் மலிவு விலையுடையவையாக மாற்றப்படும்.
* மின்சார நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.

* டெல்லி அரசு தற்போது அறிவித்துள்ள சலுகைகள் அனைத்தும் மத்திய அரசு வழங்கும் FAME-2 சலுகைகளுடன் கூடுதலாக வழங்கப்படும்.
* மின்சார வாகனக் கொள்கையைச் செயல்படுத்த தனியாக "மின்சார வாகன அமைப்பு" நிறுவப்படும்.
* நகரம் முழுவதும் அதிக சார்ஜிங் மையங்களை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* 2021-ம் ஆண்டில் குறைந்தபட்சம் 200 சார்ஜிங் நிலையங்களைப் புதிதாகக் கட்டமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மின்சார வாகனக் கொள்கையின் பயன்கள்:
# எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிகமாகும். காற்று மாசுபாடு குறையும்.
# மாசற்ற இருசக்கர வாகனங்களின் விற்பனை இயல்பாகவே அதிகரிக்கும்.
# மின்சார வாகனங்கள் தற்போதைய உயர் விலையை விட, சாதாரண வாகன விலைக்குக் கிடைக்க வாய்ப்புண்டு.
# வாகனம் வாங்க விரும்புபவர்களுக்கு எலெக்ரிக் வாகனங்கள் குறித்த புரிதல் எளிதாகவும் விரைவாகவும் கிடைக்கும்.
# எரிபொருள்கள் கொண்டு இயங்கக்கூடிய வாகனங்களை வாங்குவது குறைவதால், டெல்லியில் மாசு பிரச்னை நிரந்தரமாகக் குறையும்.
# எலெக்ட்ரிக் வாகனங்களை விரைவாக ஏற்றுக்கொள்ள இக்கொள்கை மக்களை ஊக்குவிக்கிறது.
# மாசிலிருந்து தேசத்தைக் காப்பாற்றுவதற்கான முக்கியமான, முன்மாதிரி முயற்சியாக இது அமையும்.

# பொருளாதார ரீதியில் எரிபொருள் பிரச்னைக்கான நீண்ட கால, நிரந்தரத் தீர்வாக இக்கொள்கை அமையும்.
# எதிர்கால மின்சார வாகனக் கொள்கைகளுக்கான ஒரு வழிகாட்டுதலாக இக்கொள்ளை அமையும்.
எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்குவிக்க மத்திய அரசு FAME என்னும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தியா அதிவிரைவாக எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கு மாற வேண்டும் என்பதே FAME (India-Faster Adoption and Manufacturing of Hybrid and Electric vehicles in India) திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும்.
FAME திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 2019-ல் ஆரம்பித்தது. இது 3 வருட காலத்துக்குத் தொடர உள்ளது. இதற்கான பட்ஜெட்10,000 கோடி ரூபாய். மொத்த பட்ஜெட் ஆதரவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவையை உருவாக்கவும், ஊக்கத்தொகைக்கும் 86 சதவிகிதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மின்சார வாகனங்களைத் தனிநபர் அல்லது வணிக நோக்கத்துக்காக கடனில் பெறுகையில் செலுத்தும் வட்டிக்கு மத்திய நிதியமைச்சகம் வருமானவரிச் சட்டம் பிரிவு 80EEB-ன் கீழ் ரூ.1,50,000 வரை விலக்கு அளிக்கிறது. எனவே, எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசும் தன் பங்குக்கு பல்வேறு ஊக்குவிப்புகளை வழங்குகிறது.
டெல்லி அரசின் மின்சார வாகனக் கொள்கை அனைத்துத் தரப்புமே ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறப்பான ஒன்று. இதைத் தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்படுத்த அரசுக்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.
டெல்லியின் மின்சார வாகனக் கொள்கை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படும்போது, தலைநகரின் காற்று மாசுபாடு குறைந்து மக்கள் இயல்பாகச் சுவாசிக்க வழி பிறக்கும்!
- அகன் சரவணன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.