Published:Updated:

கண்கள் முக்கியம் பாஸ்! #MyVikatan

ஒரு வீட்டில் தாத்தா பாட்டி நல்ல கண்பார்வையுடன் இருக்கும்போது, அந்த வீட்டில் உள்ள பேரன் பேத்திகள் பார்வைக் குறைபாடு காரணமாக கண்ணாடி அணிந்து வலம்வருவது நமக்கு எதை உணர்த்துகிறது?

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

தாத்தா, பாட்டி காலத்தில் கண்பார்வைக் குறைபாடு என்பது அரிதிலும் அரிதாக சில பேருக்கு வந்த ஒரு பிரச்னை. ஏனென்றால் அந்தக்காலத்தில் கண்களை கூச வைக்கும் ஒளி விளக்குகள், கண்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் டிவி, கம்ப்யூட்டர், செல்போன், வீடியோ கேம்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் கிடையாது. மேலும், முன்னோர்கள் கண்களைக் காக்க ஆரோக்கியமான உணவுமுறைகளையும் வாழ்க்கைமுறையையும் கடைப்பிடித்தார்கள். அதனால் வாழ்வில் பிறப்பு முதல் இறப்புவரை கண்பார்வைக் குறைபாடு என்ற ஒன்றைப் பெரும்பாலும் அவர்கள் சந்திக்கவே இல்லை.

Representational Image
Representational Image

காலமாற்றத்தில் அந்த உணவுமுறைகளை, பழக்கவழக்கங்களை மறந்துவிட்டு நவீனம் என்று எதைக்கண்டாலும் அதன் நன்மை தீமை பற்றி ஆராயாமல் அப்படியே பின்பற்றும் போக்கு மக்களிடையே அதிகரித்துவிட்டது. இதன் விளைவாக பல்வேறு விதமான உடல் பிரச்னைகளும் நோய்களும் அதிகரித்து மருத்துவமனையே வீடு என்று கிடக்கும் நிலை உருவாகிவிட்டது.

சமீபகாலமாக பார்வைக் குறைபாடு காரணமாக அநேகம் பேர் கண்ணாடி அணிந்திருப்பதைப் பார்க்கலாம். வீடுகளில், சாலையில், மக்கள் கூட்டம் அதிகமான இடங்களில், வீட்டு விசேஷங்களில் என நம்மைச் சுற்றிலும் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அலட்சியமாக இருந்தால் எல்லாரும் ஒருநாள் அந்தநிலையை அடையவேண்டி வரும் என்பது நிதர்சனம்.

முன்பு இப்படி இல்லை. இப்போது இந்த நிலை வரக் காரணம், சத்தான உணவுமுறைகளை தாய், தந்தையர்கள் பின்பற்றுவது இல்லை. டிவி, செல்போன், கம்ப்யூட்டர் போன்றவற்றை தொடர்ந்து மணிக்கணக்கில் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துவிட்டது. நவீன தொழில்நுட்பங்கள் மனித வாழ்க்கைக்கு அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், அவற்றை நமது உடல், மன நலத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்.

சில வீடுகளில் மற்றவர்களிடம் பெருமையாகப் பேசுவதற்காகவும், குழந்தைகளைக் கவனிப்பதில் ஏற்படும் சோம்பேறித்தனத்தினாலும் டிவி, செல்போன், கம்ப்யூட்டர் போன்றவற்றை சிறு குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி, அவற்றில் குழந்தைகள் அதிக நேரம் செலவிட பெற்றோர்களே ஊக்குவிக்கும் அவலமும் நடக்கிறது.

Representational Image
Representational Image

ஒரு வீட்டில் தாத்தா பாட்டி நல்ல கண்பார்வையுடன் இருக்கும்போது, அந்த வீட்டில் உள்ள பேரன் பேத்திகள் பார்வைக் குறைபாடு காரணமாக கண்ணாடி அணிந்து வலம்வருவது நமக்கு எதை உணர்த்துகிறது? இந்த மோசமான மாற்றம் ஏற்பட காரணம் என்ன என்பதை நாம் கண்டறிந்து இந்த அவலத்தை நீக்குவது அவசியம்.

இப்போதெல்லாம் குடும்பத்தில் சராசரியாக ஒருவர் பார்வைக் குறைபாடு காரணமாக கண்ணாடி அணியும் நிலை அதிகரித்து வருகிறது. முதுமை காரணமாக ஒருவர் கண்ணாடி அணிந்தால் அது இயற்கை. ஆனால், சிறுவர்களும் இளைஞர்களும் கண்ணாடி அணிவது நமது சமுதாயத்துக்கு, எதிர்கால சந்ததிகளுக்கு நல்லதல்ல.

சின்னஞ்சிறு குழந்தைகள்கூட கண்ணாடி அணிந்து வலம்வரும் அவலத்துக்குப் பரம்பரை ஒரு காரணமாக இருந்தாலும் சத்துக்குறைவான உணவுப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றும் பெற்றோர்கள்தான் முக்கியமான காரணம். இதே நிலை நீடித்தால் அடுத்தடுத்து வரும் தலைமுறைகள் முற்றிலும் கண்பார்வையிழந்த தலைமுறைகளாக மாறும் கொடுமையும் நடக்கும்.

Representational Image
Representational Image

என் உறவினர் ஒருவர் பிரபலமான கண் மருத்துவமனையில் வேலை செய்கிறார். பள்ளி, கல்லூரிகள் மற்றும் கிராமப்புறங்களில் கண் பரிசோதனை முகாம் நடத்துவது போன்ற பணிகளைச் செய்துவருகிறார். அவரது அனுபவங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் கண் பரிசோதனை முகாம்களின் மூலமாக சுமார் 1000 குழந்தைகள் படிக்கும் பள்ளியில் 100 முதல் 200 மாணவர்களுக்கு பார்வைக் குறைபாடு பிரச்னை இருப்பது கண்டறியப்படுவதும் இந்த எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதும் தெரியவந்தது. இது அதிர்ச்சியாக இருந்தாலும் இதுதான் உண்மை.

மேலும், சில தனியார் மருத்துவமனைகள் பரிசோதனை என்ற பெயரில் எளிதில் சரி செய்யக்கூடிய சிறு பார்வைக் குறைபாடுகளையும் சிக்கலான பிரச்னையாக மாற்றும் அவலமும் நடக்கிறது. இதற்கெல்லாம் காரணம் நமது அலட்சியமும் அறியாமையும்தான். ஆரோக்கிய உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட மாற்றம் பல்வேறு வகையான துன்பங்களுக்கு நம்மை ஆட்படுத்துகிறது என்பதை யோசிக்க, புரிந்துகொள்ளக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கை முறை பலருக்கு.

உடலில் உள்ள மிகமுக்கியமான அங்கம் கண். உடல் உழைப்பதைப் போலவேதான் கண்களும் உழைக்கின்றன. எனவே, உழைப்புக்குப் பிறகு உடலுக்கு எந்த அளவு ஓய்வு தேவைப்படுகிறதோ அதே அளவு கண்களுக்கும் ஓய்வு தேவை. இதைப் பலர் உணர்வதே இல்லை. ஓய்வு எடுப்பதாக சொல்லிக்கொண்டு அதிக அழுத்தத்தைக் கண்களுக்குக் கொடுப்பதனால் நாளடைவில் கண்பார்வை பாதிக்கப்படுகிறது.

Representational Image
Representational Image

குழந்தைகள் டிவி, செல்போன், கம்ப்யூட்டர் திரை போன்றவற்றை அதிக நேரம் பார்ப்பதை அனுமதிக்கக் கூடாது. அந்தப் பழக்கம் பெரியவர்களிடம் இருந்துதான் குழந்தைகளுக்கு வருகிறது. எனவே, பெரியவர்கள் முதலில் தங்களின் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்வது அவசியம். பணியின் நிமித்தம் இவற்றை உபயோகப்படுத்த வேண்டி இருப்பவர்கள் கண் சம்பந்தப்பட்ட சிறு சிறு பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் பார்வைக் குறைபாடு ஏற்படாமல் தவிர்க்கலாம். பெற்றோர்களின் ஆரோக்கியம் மூலம்தான் பிள்ளைகளுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.

கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வராமல் காக்க வைட்டமின் ஏ சத்துள்ள உணவுகளை, கீரை வகைகளை தினசரி உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது அவசியம். ஆரோக்கியமான பெற்றோர்களால்தான் ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்க முடியும். பெற்றோர் இதை உணர்ந்து நடந்துகொள்வது அடுத்துவரும் தலைமுறைகளுக்கு நல்லது.

எந்த நோயும் வளர்ந்த பின்பு நிவாரணம் தேடி அலைவதைவிட வரும்முன் காப்பதே சிறந்தது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற கூற்றுக்கு ஏற்ப பிள்ளைகளுக்கு வங்கியில் செல்வத்தைச் சேர்த்து வைப்பதைவிட சிறந்தது அவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்குவதுதான். இது ஒவ்வொரு பெற்றோரின் கடமையும் கூட.

- ருத்ரன்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/