பொருளாதாரம்னா என்ன..? - சிம்பிளாக விளக்கும் புத்தகம் #வாசிப்பனுபவம் #MyVikatan

ஒரு பெரும் முதலாளி கடன் வாங்கினால் ஏன் அவரது சொத்தை முடக்கவில்லை? ரோபோவின் வருகையால் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு வேலை இருக்குமா? என ஒரு காமன் மேனுக்கு எழும் சந்தேகங்களை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கார்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
"தேடுதலிலிருந்து நாம் ஓயமாட்டோம் தேடுதலின் இறுதி என்பது எங்கிருந்து தொடங்கினோமோ அங்கு வந்து சேர்ந்து அதை முதல் முறையாக அறிவதுபோல அறிவதுதான்."டி.எஸ்.இலியட்
சமீபத்தில் யானிஸ் வருஃபாகிஸ் எழுதி மூத்த எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை மொழிபெயர்த்து க்ரியா வெளியிட்ட புத்தகம் "பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த புத்தகம்" வாசித்தது குறித்து பகிர்கிறேன்.
ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றிய யானிஸ் வருஃபாகிஸ் தன் மகளுக்குப் பொருளாதாரம் குறித்து எளிமையாய் விளக்குவதுதான் இப்புத்தகம்.
மிக எளிமையாகப் பல்வேறு உதாரணங்கள் கூறி நமக்கும் புரிய வைக்கிறார். இலக்கியங்கள், திரைப்படங்கள், வரலாறுகளிலிருந்து எடுத்துக்காட்டுகள் கூறியது ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொரு கட்டுரையும் சங்கிலித் தொடர்போல் பிணைக்கப்பட்டு ஒரு நாவல் போல் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. பொருளாதாரத்தை வரலாற்றுடன் இணைந்து படிக்கும்போது சுவாரஸ்யமாய் இருக்கிறது.

குழந்தைகள் பிறக்கும்போது ஒன்றுபோல் பிறக்கின்றன. ஆனால், வளரும்போது உடையிலிருந்து வசதிவாய்ப்பு வரை ஏன் இவ்வளவு ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன எனத் தந்தையிடம் கேட்கும் மகளுக்கு ஆஸ்திரேலிய பூர்வகுடிகளான 'அபராஜின்கள்' மீது வெள்ளையர் இழைத்த கொடுமைகளையும் ஆக்கிரமிப்பு அதிகாரத்தையும் கூறுகிறார். இதற்கான விடையை இடையிடையே வரும் கட்டுரையிலும் இறுதியிலும் சொல்வது திரைப்படம் பார்ப்பதுபோல் இருந்தது.
இயற்கையாய் கிடைத்த உணவுப் பொருள்களை உண்டு வாழ்ந்த மனிதனுக்கு பிரச்னை எழவில்லை. அதன் பிறகு, இயற்கையைப் பயன்படுத்தி மனிதன் நிலத்தை சாகுபடி செய்ய கற்றுக்கொண்டான். இதில் தன் தேவைக்குப் போக அதிக பொருள்கள் மீதமானது (உபரி).
இவற்றைப் பரிமாற்றம் செய்து வேறு ஒருவரிடம் மீதமான வேறு பொருளை வாங்க ஆரம்பித்தான். பண்டமாற்று செய்ய தானியம் இல்லாதபோது அதற்குப் பதில் `பணம்' புழக்கத்துக்கு வருகிறது. பண்டங்கள், பணம் இல்லாதபோது நம்பிக்கையின் அடிப்படையில் கடன் உறுதிச்சீட்டு அறிமுகமாகிறது. இந்த மீதமான உபரியை சிலர் அபகரிக்க நினைத்தனர். அந்த உபரியை நிர்வகிக்க அதிகாரம் தேவைப்பட்டது.

#சர்வம் சந்தைமயம்
ஒருவருக்கொருவர் பொருள் பரிமாறும் வரை பிரச்னையின்றி இருந்தது. இருவரிடமும் குறையும்போது மற்றவர்களை நாடும் பழக்கம் வரும்போது வாங்க-விற்க சந்தை வந்தது. உனக்கான பொருள் எதையும் உற்பத்தி செய்துகொள்ளாதே. எல்லாவற்றுக்கும் என்னையே சார்ந்திரு எனும் நிலையை முதலாளிகள் ஏற்படுத்தினர். உதாரணத்துக்கு விதை, தீவனம் எரிபொருள் என அனைத்தும் அப்படியே வாணிபமாக மாறியது. இங்கிலாந்தில் கம்பளி நூலுக்கு கிராக்கி ஏற்பட்டபோது ஒரு முதலாளி தன் தோட்டத்தில் உள்ளோரை வெளியேற்றி ஆடுகளை வாங்கி வளர்த்தார். இதில் வேலையிழந்தோர் பண்ணையடிமைகள் போல் உயிர் வாழ பிறரை அண்டி உயிர் வாழ குறைவான ஊதியத்துக்குக்கூட உழைத்து வந்தனர்.
#லாபத்தின் இலக்கு லாபமேதான்
இந்தப் பண்ணையடிமைகள் ஒரு குறிப்பிட்ட நிலத்தை குத்தகைக்கு எடுத்து மேற்பார்வை செய்தனர்.
உற்பத்தி செய்த கம்பளி நூலை விற்பதற்கு முன் விதை வாங்குவது போன்றவற்றுக்கு பணம் தேவைப்பட்டதால் கடன் வாங்கினர். பொருள்களை விற்று லாபத்தில் முன்னர் வாங்கிய கடனையும் செலுத்தி, தனக்கு கீழ் வேலை பார்ப்போருக்கு குறைந்த கூலியும் வழங்கி தங்கள் வாழ்வையும் பார்த்துக்கொண்டனர். இந்தச் சுழற்சி தொடர்ந்துகொண்டே இருந்தது.

பணத்தேவைக்கு கடன் வாங்க வங்கியை நாடினர். குறைந்த வட்டிக்கு வைத்திருப்போரின் வைப்புத்தொகையை அதிக வட்டிக்கு இவர்களுக்குக் கடன் கொடுத்து பணத்தை சுழற்சி செய்தன வங்கிகள். கடன் பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது வங்கி. இவர்கள் கட்டத் தவறும்போது தான் வராக்கடன் போன்ற பிரச்னையில் தடுமாறுகிறது. கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு இருக்கும் ஒரு சலுகை கடன் கட்டாவிடில் நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளை எடுக்கலாமே தவிர அவரின் தனிப்பட்ட சேமிப்பை அல்ல.
ஏனெனில், வராக்கடன் அதிகமானால் வங்கி திவாலாகும் பயத்தில் மக்கள் தங்கள் சேமிப்பில் உள்ள பணத்தை எடுக்க முன்வருவார்கள். வங்கியின் நிலை இன்னும் மோசமாகும். இது பற்றிய விரிவாய் சொல்கிறது கட்டுரை.
லாபம் என்பதை இலக்காய் வைத்து ஓடும்போது ஒருவரோடு ஒருவர் போட்டி போட வேண்டியிருந்தது. மற்றவரைவிட குறைந்த விலைக்கு விற்க இயந்திரத்தை நாடினர். தொழில்நுட்பம் மனித உழைப்பைக் குறைத்தது. பொருளாதாரத்தில் ஒன்றில் ஒரு அடி பட்டால் அது மற்றொரு இடத்தில் நெறி கட்டுவதுபோல வேலையின்மை ஏற்பட்டால் நுகர்வு குறையும். வாங்க ஆள் இருக்க மாட்டார்கள். இதை ஒரு சில நிகழ்வுகள், உதாரணங்கள் மூலம் புரிய வைக்கிறார்.

குழந்தைக்கு கற்றுத்தருவது என்பதால் ஒவ்வோர் அத்தியாயத்திலும் ஒரு கதை இருக்கும். வெறுமனே அக்கதைகளை ஒரு கட்டுரைக்கு மட்டும் சொல்லாமல் பல கட்டுரைக்கும் பொருந்துமாறு சொல்லுவது சிறப்பு. ரூசோவின் ஒரு கதை "மான் வேட்டையாடும் செல்லும் ஒரு குடும்பம். எப்படியாவது மான் வேட்டையாட வியூகம் வகுக்கிறது.
"லாப நோக்கம் என்பது மனிதரிடம் உள்ள இயல்பான பண்பு என நாம் கருதினால், நமக்கு நேரிடும் மோசமான விசயமும் இதுதான்.''யானிஸ் வருஃபாகிஸ்
கிடைத்தால் உணவு இல்லையேல் பட்டினி என முக்கியமான கட்டம். ஒருவரின் கவனம் சிதறிவிட்டாலும் திட்டம் சொதப்பி, அன்றைய வாழ்வாதாரம் இல்லை. இதில் குறுக்கே முயல் வரும். அதை வேட்டையாடினால் ஒட்டுமொத்த கவனமும் சிதைந்து குடும்பத்திற்கு உணவு இல்லை. இக்கதையை வைத்து வேலையின்மை, உழைப்பு, பணம் சரக்குகள் என ஒவ்வொன்றையும் விவரித்திருப்பது எளிமையாகவும் புரியும்படியும் விறுவிறுப்பாகவும் இருந்தது. எதற்கு குறிவைத்தால் எது சிக்குகிறது எனும் எதார்த்தத்தை புரிய வைக்கிறார்.
கடைசி அத்தியாயத்தில் மனித மனங்களையும் அதைப் பயன்படுத்தும் முதலாளிகளின் இயல்பினையும் தெளிவாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.
"லாப நோக்கம் என்பது மனிதரிடம் உள்ள இயல்பான பண்பு என நாம் கருதினால், நமக்கு நேரிடும் மோசமான விசயமும் இதுதான்'' எனக் கூறிவிட்டு ''ஒவ்வொரு நுகர்வோரும் ஒரு வாக்காளர்தான். ஒரு பொருளை வாங்கும்போது அந்நிறுவனத்துக்கு வாக்களிக்கிறான். வாங்கவில்லையெனில் அந்நிறுவனத்தைத் தோற்கடிக்க வைக்கிறான்'' எனக்கூறி இறுதியில் இதற்கான தீர்வை கடைசி 20 பக்கங்களில் விவரித்திருப்பார். அதைப் படிக்கும்போதுதான் புத்தகம் முழுமையுறுகிறது.

# ரசித்த வரிகள்
புத்தகம் முழுக்க வரும் எடுத்துக்காட்டுகளும் கதைகளும், தத்துவங்களும் புத்தகத்தை மேலும் சுவாரஸ்யமாக்குகின்றன. அவற்றில் சில.
* எண்கள் பொறிக்கப்பட்ட கிளிஞ்சல்கள் ஊதியமாக வழங்கப்பட்டன. எண்கள் என்பது தர வேண்டிய தானிய அளவு அதாவது ஏடிஎம் கார்டு போல.
* கடன் என்ற சொல் நம்புதல் எனும் பொருள் தரும் க்ரெடெரே எனும் இலத்தின் சொல்.
* விலையில்லாத எதுவும், விற்கப்படாத எதுவும் மதிப்பற்றவை.
* நான் எங்கே இருக்கிறோனோ அது நரகம் - மார்லோவின் இவ்வரி மூன்றாம் கட்டுரை முழுமைக்கும் ஏற்ற உவமை.
* நிலத்திலிருந்து உணவைக் கொண்டு வரும் ஆற்றல் நம்மிடம் இருக்கிறது. பசித்தவர்களுக்கு வழங்கக்கூடிய சமூக அமைப்பை உருவாக்கவில்லை.
* ஒவ்வொருவரின் ஆழ்மனதுக்குள் நம்மை வியக்க வைக்கிற, அச்சுறுத்துகிற, நம்பிக்கை கொள்ள வைக்கிற ஏதோ ஒன்று இருக்கிறது.
* பாதிப்புகளுக்கு யார் ஆளாகிறார்களோ அவர்கள் மீதே அந்தப் பாதிப்புக்கான பழியைச் சுமத்து.
* பொருளாதாரம் நாட்டின் இன்ஜின். கடன் அதற்கான எரிபொருள்.
* தொழில்நுட்பம் மனிதனுக்கு சேவை புரிவதற்குப் பதிலாக அடிமைப்படுத்தும்.
* எல்லாவற்றையும் ஜனநாயகப்படுத்துக.
* மகிழ்ச்சியை அடைவதற்கான சிறந்த வழி,அதைக் கண்டறிய முற்படுவதல்ல.

# மகளுக்கல்ல மனிதர்களுக்கு
ஒரு பெரும் முதலாளி கடன் வாங்கினால் ஏன் அவரது சொத்தை முடக்கவில்லை? ரோபோவின் வருகையால் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு வேலை இருக்குமா? என ஒரு காமன் மேனுக்கு எழும் சந்தேகங்களை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கார்.
இன்னும் சொல்லப்படாத பல சுவாரஸ்ய கதைகள் கட்டுரைக்கு ஏற்றதாக இருக்கின்றன. பயமுறுத்தும் கலை சொற்கள் இல்லை. அவ்வாறு ஒன்றிரண்டு வந்தாலும் அடிக்குறிப்பில் தெளிவான விளக்கம் உள்ளது ரம்மியம். மொழிபெயர்ப்பு என்ற எண்ணமே ஏற்படாமல் மூத்த எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை. இதெல்லாம் என்னங்க, இதப்பத்தி எல்லாம் எனக்கு தெரியாது என நழுவுவோர்களும், இதைப் பத்தி வல்லுநர் வந்து கண்டுபிடிக்கும் வரை நான் அமைதியாய் இருப்பேன் எனப் பலரும் படிக்க வேண்டிய புத்தகம். அண்மையில் வந்த புத்தகத்தில் கவனம் ஈர்க்கும் புத்தகம்.
- மணிகண்ட பிரபு
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.