Election bannerElection banner
Published:Updated:

``உடைந்து அழவைத்த கலைப் படைப்புகள்..!’’ - வாசகர் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

நாடகம் ஒன்றில் ஒப்பாரி காட்சி வருகிறது. அதைக் கேட்டவுடன் அப்படி ஒரு துக்கம். நெஞ்சம் சுக்கு நூறாக வெடித்துச் சிதறுவதுபோல் இருக்கிறது...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஈரத்துணி காற்றில் மெல்ல உலர்வதைப் போல மனத் துயரிலிருந்து விடுபடுவதற்கு கண்ணீர் வழியாக மனம் தன்னை சுத்தம் செய்துகொள்கிறது என எழுதியிருப்பார் எஸ்.ரா.

அழுகை ஓர் அபூர்வ சுமைதாங்கி!

உணர்ச்சிப் பெருக்கால், மழைமேகம் நீரை சேர்த்துவைப்பது போல பகிர முடியாத சோகத்தைத் தன்னுள் தேக்கிவைக்கிறார்கள். குளிர்க்காற்று தொடும்போது உதிரும் வான்முகில் போல எங்கிருந்தோ வரும் அழுகை தன்னுள் மறைந்திருக்கும் துக்கத்தை நினைவுபடுத்தத் தொடங்குகிறான் அல்லது தன்னைவிட துக்கப்படும் மனிதர்களை நினைத்து இரக்கப்பட்டு சோகமாகிறான்.

Representational Image
Representational Image
Eric Ward / Unsplash

அழுவது வேறு, மனம் கணப்பது வேறு என கண்ணதாசன் சொல்வார்.

"பாலை சூடு செய்யும்போது முதலில் பொங்கும், அதுதான் அழுகை. தொடர்ந்து சூடு செய்யும்போது சுண்டிவிடும். பால் சுண்டுவதுபோலதான் மனம் கனக்கும். அழுவதற்கும் அடுத்த கட்டம்தான் மனம் கனப்பது. அழுகை வராது. ஆனால், மனது ஏதோ சுமையை சுமப்பது போலவே இருக்கும். இந்தக் கனம்தான் படைப்புகளாக வெளிப்படுகின்றன .

நமது கவிதைகள் எல்லாமே எல்லைகடந்த சோகத்தில் பிறந்தவையே என்பார், ஆங்கிலக் கவி ஷெல்லி. இதைத்தான் வைரமுத்து முதல்மரியாதை படத்தில் சொல்லியிருப்பார், "சொக ராகம் சோகந்தானே" என்று.

விமர்சகர் வெங்கட் சாமிநாதனுடன் எழுத்தாளர் பாவண்ணன் உரையாடும்போது ஒரு நிகழ்வை விவரிக்கிறார். தான் பார்த்த நாடகம் ஒன்றில் ஒப்பாரி காட்சி வருகிறது. அதைக் கேட்டவுடன் அப்படி ஒரு துக்கம். நெஞ்சம் சுக்கு நூறாக வெடித்துச் சிதறுவதுபோல் இருக்கிறது.

``ஒப்பாரி பாடும் அந்த அம்மாவை மேடையில் பார்க்க, அந்த அம்மாவின் உருவம் மறைந்து, வேற என்னென்னமோ தெரிய ஆரம்பிச்சுடும். ஒரு கணம் நம்முடைய அக்காவின் குரலாக, அம்மாவின் குரலாக, அடுத்த கணமே ஒரு பெண் குலத்தின் குரலாகத் தெரியும்.

Representational Image
Representational Image

வஞ்சிக்கப்பட்ட ஒரு இனத்தின் குரலாகத் தெரியும். இப்படிப் பல பரிமாணங்களை உடையதாய் அந்த ஒப்பாரிக்குரல் மாறும். கலை என்பது இப்படிப் பல அற்புதங்களை நிகழ்த்தக்கூடிய ஆற்றல் உள்ள வடிவம்'' என்பார்.

"கூரையில் பார்க்க என்னதான் இருக்கிறது."

எஸ்தர் கதையில் வரும் வண்ணநிலவன் எழுதிய இவ்வரி, எப்போது இரவில் படுத்தாலும் நினைவுக்கு வரும்.

உண்மையில் தூக்கம் வருவதற்கு முன் எல்லோரும் மேற்கூரையைப் பார்ப்போம். கடந்த கால நினைவு, சோகம், ஏமாற்றம், எதிர்காலத் திட்டம் எல்லாம் அக்கூரையில்தான் தெரியும்.

Representational Image
Representational Image

வ.வே.சு அய்யரின் 'குளத்தங்கரை மரம்' எனும் சிறுகதை ஆரம்பிக்கும்போது...

"பார்க்கப்போனால் நான் மரம்தான். ஆனால்,என் மனசிலுள்ளதையெல்லாம் சொல்லுகிறதானால் இன்னைக்கெல்லாம் சொன்னாலும் தீராது என மரத்தின் மனநிலையை விளக்கியிருப்பார்.

இன்றைக்கு, ஊரடங்கில் பலர் சிரமப்பட்டு வெளிமாநிலத்திற்கு நடந்தோ, சைக்கிளிலோ செல்வதைப் பார்க்கும்போதெல்லாம் மனம் கணக்கிறது. இதனைப் பார்க்கும்போது கு.அழகிரிசாமியின் 'திரிபுரம்' கதையின் முதல் பத்தி நினைவுக்கு வருகிறது.

"பஞ்சம் வந்துவிட்டது.

பஞ்சம் வந்துவிட்டால் என்ன?

மக்கள் பட்டினியோடு பரிதாபமாக ஒரு பஞ்சப்பிரதேசத்தை விட்டு அதைவிடக் கொடுமையான மற்றொரு பஞ்சப்பிரதேசத்திற்குக் குடிபெயர்வார்கள். இந்தப் பட்டினிப் பட்டாளங்கள் ஏதோ நம்பிக்கையுடன் ஒரே சாலையில் எதிரெதிர் திசையில் பிரயாணம் செய்வது பஞ்சத்தின் கோரமான அலைக்கழிவுகளில் ஒன்று என ஆரம்பிக்கும். இவ்வாறான படைப்புகள் நம்முள் இருக்கும் ஈரத்தை சுரப்பது போல.

Representational Image
Representational Image
Anh Nguyen / Unsplash

சினிமாக்களிலும் மக்களை அழவைக்க முயற்சி செய்திருப்பார்கள்.

கத்திக்குத்து பட்டு உயிருக்குப் போராடும்போதோ, விஷமருந்திய ஒருவனைப் பார்த்து, "கண்ணத் தொறந்து பாருயா"னு கதறும்போதோ சத்தியமா அழுகை வராது. இயக்குநர் மகேந்திரன் சொல்வது போல் sentiments என்பது ஊசி ஏற்றுவது போல் இருக்கணும். இல்லையெனில், ஒரு அண்டா பாயசத்தை தரையில் தட்டிவிட்டது போல் ஆகிவிடும்.

சில காட்சிகள் வயிற்றைக் கிழித்து பிள்ளை எடுப்பது போல மனதை லாகவமாக நெருடவைப்பார்கள்.

அதுதான் காலத்திற்கும் நம் மனதில் மறவாது ஒரு படிப்பினை தரும். ஒரு முறை ஒன்றிவிட்டால், பிறகு எப்போது அந்தக் காட்சியைப் பார்த்தாலும் அந்த உணர்வை மீட்டுக்கொண்டு வரும்.

*கமல், இந்த விஷயத்தை மிக நேர்த்தியாகச் செய்வார். த ன் சோகத்தை அப்படியே உணர்வில் வெளிப்படுத்தி ரசிகர்க்குக் கடத்துவார். 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில், ஸ்ரீதேவி மெளலியிடம் அப்புவின் குறையைச் சொல்லும்போது, கமலின் முக உணர்ச்சியும் பின்னணி இசையும்...

* 'மகாநதி'யில் மகளை மீட்டெடுத்து அழும்போதும், 'பாபநாசம்'படத்தில் கடைசி காட்சி அழுகையும், கமல் எனும் நடிகன் மறைந்து அப்பாவாக, ரசிகன் தன்னை பொருத்திப்பார்க்க வைத்திருப்பார்.

Representational Image
Representational Image
Fabio Neo Amato / Unsplash

* 'எங்கேயும் எப்போதும்' படத்தில், விபத்து நடந்துமுடிந்து ஒரு மகள் அப்பா எங்கேயென செல்போனில் கேட்கும்போதும், ஜெய் இறக்கும்போதும், 'ராஜா ராணி'யில் நஸ்ரியா அடிபடும்போதும் அந்த நிமிடம் ஒரு மாதிரியாய் இருக்கும்.

* 'அங்காடித்தெரு'வில் அஞ்சலியின் தந்தையாய் வரும் விக்ரமாதித்யன், "நான் ஒரு நாய் தம்பி"னு உடையும்போதும்...

* 'அப்பா' படத்தில் அந்தக் குள்ளமான சிறுவன் தன் பிறவிகுறித்து வருந்தும்போதும்...

* 'கிழக்குச்சீமையிலே'வின் இறுதிக் காட்சியில் வசனமே இல்லாமல் ராதிகாவின் மனநிலையை உணரவைக்கும்போதும். 'தவமாய் தவமிருந்து' படத்தில் ராஜ்கிரண் பல இடங்களில் நம்மை அழுந்தவைத்திருப்பார்.

* 'துப்பாக்கி'பட இறுதிக் காட்சியில், சண்டை முடிந்தவுடன் படத்தை முடித்திருக்கலாம். ஆனால், குடும்பத்தைப் பிரியும் ராணுவ வீரர்களை மெல்லிய இசையின் பின்னணியில் நம்மையும் உணரவைத்திருப்பார்கள்.

* 'துலாபாரம்', 'பாசமலர்' மற்றும் 'பொறந்த வீட்டுப் பட்டுப்புடவை'னு ஒரு சில படங்கள், அந்நாளில் மிகுந்த சோகம் தாங்கி வந்து வெற்றிபெற்ற படங்கள். கஷ்டத்தையே அனுபவித்த மக்கள், அதைத் தமது கலைப் படைப்பாகப் பார்த்தார்கள்.

Representational Image
Representational Image

#மனிதர்களை நேசிப்போம்

எதையும் கண்டுகொள்ளாத, கவலையும்படாத கேளிக்கையில் மட்டுமே ஈடுபடும் மோசமான ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. சக மனிதனின் துக்கம் கண்டு நிஜத்தின் வலியை, வாழ்வின் சூட்டை அறியாமல் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் இருக்கிறார்கள். சந்தோஷம் தேவைதான் அதுபோல் துக்கத்தையும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அதில் தான் நாம் கற்றுக்கொள்ள அதிகம் இருக்கும்.

ஒரு காங்க்ரீட் ரோடு பார்க்க நன்றாய் இருக்கும். ஆனால், மழை நீர் புகாது. பல்வேறு உணர்ச்சிகளை உள்புகவிட்டு அதிலிருந்துதான் நாம் நம்மை பண்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு வாழ்க்கைக்குள் ஓராயிரம் வாழ்வை வாழச்செய்யும். பல்வேறு கலை இலக்கியப் படைப்புகள் இப்படித்தான் நம் மனதினுள் சென்று மாற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றன. நாமும் அப்படைப்பின் வழி சென்று உருமாறி வர வேண்டும். இதுபோல் மனம் கணக்கும் நிகழ்வுகள் இந்த உலகையே அர்த்தமில்லாத ஒன்றாய் உணரவைக்கும். நம்முள் இருக்கும் இரக்க குணத்தை, பரிவை இதுபோன்ற படைப்புகள்தான் வெளிக் கொணர்கின்றன.

Representational Image
Representational Image

"எண்ணங்களை அமைதியாக உற்று கவனித்து, அவற்றை விலக்கி விலக்கி அவற்றின் இடையில் இருக்கும் மெளனத்தை மணலுக்கு அடியில் இருக்கும் நீர் ஊற்றுபோல் கவனிக்க வேண்டும்' என்பார் இறையன்பு. வாசிப்பின் வழியேயும் அனுபவங்கள் வழியேயும் சக மனிதர்களைப் படித்து, நம் எண்ணங்களை மேம்படுத்துவோம்.

-மணிகண்ட பிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு