Published:Updated:

தெருக்கடையில் கேட்பரி ஆரம்பித்த டெய்ரி மில்க்! #VikatanInfographics

சாக்லேட் என்ற ஒரு விஷயம் உலகில் இருக்கும் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கிறது என்றே கூறலாம். கொண்டாட்டங்களுக்கு சாக்லேட் வழங்கும் சாக்லேட்டுக்கான தினமாக ஜூலை ஏழாம் தேதி இன்று உலக சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது.

கேட்பரி சாக்லேட்
கேட்பரி சாக்லேட்

ருப்பும் பழுப்பும் கலந்த இந்தப் பொருள் எந்த வடிவில் இருந்தாலும் அதன் சுவையை ருசித்தவர்களுக்கு அது ஒரு வகை போதையைத் தரும். திடமாக இருந்தாலும் சரி, திரவமாக இருந்தாலும் சரி இதனைப் பிடிக்காதவர்கள் என்று யாருமே இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவர். ஆம்... எந்த நேரத்திலும் எதற்குப் பிறகும் சாப்பிடக்கூடிய ஓர் அமிர்தமாகவே சாக்லேட் படைக்கப்பட்டுள்ளது. அனைவரும் விரும்பி சாப்பிடும் இதற்குள்ளும் ஒரு ரகசியம் இருக்கிறது. கொஞ்சம் கசப்பு, அதிக இனிப்பு மட்டுமே இதன் ரகசியம்.

சாக்லேட்
சாக்லேட்

சாக்லேட் என்ற ஒரு விஷயம் உலகில் இருக்கும் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கிறது என்றே கூறலாம். அனைத்து நாடுகளிலும் அனைவராலும் விரும்பப்படும் பொருளாகவே இருக்கிறது. அதிலும் முக்கியமாக அனைத்து விதமான சுப நிகழ்ச்சிகளிலும் நிச்சயம் இடம்பெற்றிருப்பது டெய்ரி மில்க் சாக்லேட் தான். தினமும் நாம் பார்த்தும், சுவைத்துக் கொண்டும் இருக்கிறோம்.

டெய்ரி மில்க் சாக்லேட்
டெய்ரி மில்க் சாக்லேட்

சுவையை மட்டுமே அறிந்து கொண்ட நாம் அது உருவான கதையையும் அறிந்துகொள்வோம். உலக சாக்லேட் தினத்தில் டெய்ரி மில்க் சாக்லெட்டில் அப்படி என்னதான் ஸ்பெஷல் இருக்கிறது என்பதைப் பார்ப்போம்!

முதன்முதலில் `மெஸ்ஸோ அமெரிக்கா'வில் சாக்லேட் கண்டுபிடிக்கப்பட்டாலும், டெய்ரி மில்க் சாக்லேட் உருவானது இங்கிலாந்தில்தான். 1905-ல் கேட்பரி டெய்ரி மில்க் அறிமுகம் ஆனது. ஆனால், அதன் ஆரம்பமானது 1824-ல் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் என்ற இடத்தில் ரிச்சர்ட் கேட்பரியால் சிறிய அளவிலான தெருக்கடை ஒன்றில் தான் தொடங்கியது.

தன்னுடைய 22 வயதில் சிறிய கடையை ஆரம்பித்த ரிச்சர்ட் கேட்பரி, முதலில் கோகோ, சாக்லேட், குளிர்பானங்கள் போன்றவற்றை விற்பனை செய்து வந்தார். சாக்லேட் விற்பனை அமோகமாகச் சென்று கொண்டிருந்ததால் சொந்தமாக ஒரு சாக்லேட் நிறுவனத்தைத் தொடங்கும் எண்ணம் கேட்பரிக்குத் தோன்றியது. அதன்படி 1931-ல் க்ரூக்ட் லேன் பகுதியில் சிறிய அளவில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த நிறுவனத்தின் மூலம் பல்வேறு வகையான சாக்லேட்டுக்களை புதிதாகத் தயாரித்து விற்பனை செய்தார்.

இதய வடிவ சாக்லேட்
இதய வடிவ சாக்லேட்

1842-ல் 16 வகையான குளிர்பானங்கள் மற்றும் 11 வகையான கோகோ சாக்லேட் வகைகளை அவர் விற்பனை செய்தார். தன்னுடைய நிறுவனத்தைப் பெரிதாக்க வேண்டும் என்ற எண்ணத்தால் 1847-ல் தன்னுடைய சகோதரர் பெஞ்சமின் உதவியுடன் பர்மிங்காமில் உள்ள பிரிட்ஜ் தெருவில் மற்றொரு நிறுவனத்தைத் தொடங்கினார். அன்றுமுதல் 'கேட்பரி பிரதர்ஸ்' என்று இருவரும் அழைக்கப்பட்டனர்.

அந்த வருடம் கோகோ மற்றும் சர்க்கரை கொண்டு முதல் 'சாக்லேட் பார்' தயாரித்து விற்பனை செய்தனர். 14- வருடங்களுக்குப் பின் 1861-ல் காதலர் தினத்தின் பரிசாக இதய வடிவில் சாக்லேட் தயாரித்து காதலர்களின் மனதைக் கவர்ந்தார் ரிச்சர்ட் கேட்பரி. (தற்போது வரை உலகம் முழுவதும் இதய வடிவ சாக்லேட் பிரபலமாவதற்குக் காரணம் கேட்பரிதான்).

ரிச்சர்ட் கேட்பரிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவருடைய மகன்களான ரிச்சர்ட் மற்றும் ஜார்ஜ் இருவரிடமும் தன்னுடைய நிறுவனத்தை ஒப்படைத்தார். 5 வருடங்கள் சிறப்பாக வழிநடத்தி வந்தவர்கள், 1866-ல் கேட்பரி கோகோ எஸன்ஸை அறிமுகப்படுத்தினர். அதன்பின் 1875-ல் ஈஸ்டர் தின ஸ்பெஷலாக ஈஸ்டர் எக்-கை அறிமுகப்படுத்தினர். மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றது இந்த ஈஸ்டர் எக் சாக்லேட்.

சகோதரர்கள் இருவரும் இணைந்து 1878 - ல் போர்ன்வில்லே நகரில் நிறுவனத்தின் கிளையைத் தொடங்கினர். 1897-ல் கொக்கோ எஸன்ஸ் மூலம் முதல் மில்க் சாக்லேட் பாரை அறிமுகம் செய்தனர். அதன்பின், தன்னுடைய நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தால் 1900-ம் ஆண்டு முதல் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தனர்.

புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற முயற்சியால் அனைவரையும் கவரும் விதத்திலும், நறுமணத்துடனும் புதிய வடிவில் ஒரு சாக்லேட் ஒன்றைத் தயார் செய்தார் ஜார்ஜ் கேட்பரி. அதற்கு பெயரிட ஜார்ஜ் கேட்பரி பலரிடம் ஆலோசனைக் கேட்டார். பல்வேறு நிறுவனத் தலைவர்கள், கடைகளின் உரிமையாளர்கள், 'ஹைலேண்ட் மில்க், ஜெர்சி, டெய்ரி மேட்' என்று பல்வேறு பெயர்களைப் பரிந்துரைத்தனர். அந்தப் பெயர்கள் இவரைத் திருப்திப்படுத்தவில்லை. ஒரு வாடிக்கையாளரின் மகள் 'டெய்ரி மில்க்' என்று சொல்ல அந்தப் பெயர் இவருக்கு மிகவும் பிடித்து விட்டது.

1905-ம் ஆண்டு ஜூன் மாதம் 'டெய்ரி மில்க்' என்ற பெயருடன் கேட்பரி டெய்ரி மில்க் விற்பனைக்கு வந்தது. அதுமட்டுமின்றி தன்னுடைய புதிய சாக்லேட்டின் அடையாளமாக கோகோ மரத்தின் படத்துடன் கூடிய முதல் கேட்பரி லோகோவும் வெளிவந்தது. டெய்ரி மில்க் விற்பனையானது முதலில் மெதுவாகச் சென்றாலும் சிறிது நாட்களில் அனைத்து மக்களும் விரும்பி வாங்கக் கூடிய ஒன்றாக மாறி விட்டது. இந்த சாக்லேட் விற்பனைக் கொடுத்த நம்பிக்கையினால் மேலும் புதிது புதிதாக சாக்லெட்களைத் தயாரிக்க ஆர்வம் வந்தது.

டெய்ரி மில்க் லோகோ
டெய்ரி மில்க் லோகோ

மூன்று வருடங்களுப்பின் 1908-ல் போர்ன்வில்லே சாக்லேட் அறிமுகப்படுத்தப்பட்டது. 1914 ரோஸ் ஃபிளேவருடன் 'ஃப்ரைஸ் துர்கிஸ் டிலைட்' அறிமுகமானது. அடுத்த வருடமே கேட்பரி மில்க் டிரே அறிமுகமானது. 1920-ல் கேட்பரி ஃபிளேக் சாக்லேட் அறிமுகமானது. தன்னுடைய நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் சாக்லேட் உலகம் முழுவதும் இருக்கும் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணி, புதிய அடையாளத்துடன், கையெழுத்து வடிவிலான புதிய லோகோவுடன் 1921-ல் டாஸ்மேனியாவில் தனது முதல் வெளிநாட்டு நிறுவனத்தை நிறுவியது.

1928 முதல் பத்திரிகைகள் மற்றும் விளம்பரங்களில் 'a glass and a half' என்ற ஸ்லோகனைப் பயன்படுத்தியது. அதன் பின், கேட்பரி கிரன்ச்சி சாக்லேட், கேட்பரி ரோஸஸ் அறிமுகமானது. 1939-ல் இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில் கேட்பரி ரேஷன் சாக்லேட் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கேட்பரி மில்க் டிரே பார், ஃபுட்ஜ் சாக்லேட், ஃப்ரைஸ் பிக்னிக் மற்றும் லக்கி நம்பர் சாக்லேட் வகைகள் அறிமுகமானது.

1948-ம் ஆண்டு ஜூலை மாதம் 19-ம் தேதி மும்பையில் 'கேட்பரி ஹவுஸ்' என்ற பெயரில் இந்தியாவுக்குள் நுழைந்தது. இந்தியாவில் சாக்லேட் மிட்டாய், பிஸ்கட்டுகள், குளிர்பானங்கள், ஜெம்ஸ் மற்றும் மிட்டாய் வகைகள் தயாரிக்கப்படுகின்றன. பத்திரிக்கைகள் மூலம் செய்யப்படும் விளம்பரம் மக்களிடம் சென்றடைவது முகவும் குறைவு என்று கருதி1955-ல் முதல் தொலைக்காட்சி விளம்பரம் கொடுக்கப்பட்டது.

1959-ல் ஒரு பெண் நடித்த விளம்பர வீடியோ வெளியிடப்பட்டது. ஸ்கிப்பி சாக்லேட், அஸ்டெக் மற்றும் டாஃபி சாக்லேட் பார் அறிமுகமானதுக்குப் பின், 10 வருடம் கழித்து 1969-ல் முதல் ஆண் நடித்த விளம்பர வீடியோவும் வந்தது. கர்லி வர்லி மற்றும் ஓல்டி ஜமைக்கா சாக்லேட், க்ரீம் எக் 1971-ல் அறிமுகமானது. க்ரீம் எக் சாக்லேட் குழந்தைகள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றது.

க்ரீம் எக்
க்ரீம் எக்

விஸ்பா சாக்லேட், கேட்பரி பூஸ்ட் சாக்லேட், ட்விரில் சாக்லேட், இன்ஸ்பிரேஷன் சாக்லேட், கேட்பரி பியூஸ், கேட்பரி ஹீரோஸ் என்று பல்வேறு சாக்லேட் வகைகள் 1981 முதல் 1999 வரை அறிமுகமானது. 2000-ம் ஆண்டின் புதிய வருடத்தில் புதிய முயற்சியை மேற்கொண்டது கேட்பரி நிறுவனம். தன்னுடைய தொலைக்காட்சி விளம்பரத்தில் முதல் முதலாக கொரில்லாவைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் உள்ள சாக்லேட் பிரியர்களை தன் வசம் ஈர்த்தார். 2008-ல் க்ரீம் எக் ட்விஸ்டட் அறிமுகமானது. கேட்பரி கிராப்ட் புட்ஸ் உடன் ஒரு பகுதியாக 2010-ல் இணைந்தது.

Cadbury Chocolate Time Line
Cadbury Chocolate Time Line

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர் இருப்பதால், தன்னுடைய போர்ன்வில்லே சாக்லேட் நிறுவனத்தை 2012-ல் விரிவாக்கம் செய்தது. மேலும் தன்னுடைய நிறுவனத்தின் மூலம் 2014-ல் சாக்லேட் தொழிற்பயிற்சி திட்டத்தைத் தொடங்கியது. தன் நிறுவனத்தின் மூலம் உருவான 'கேட்பரி வோல்ட்'ன் 25-வது உலக கொண்டாட்டத்தை 2015-ல் கோலாகலமாகக் கொண்டாடியது. உலகளவில் அதிகம் சாக்லேட்டுகளை விரும்பி சாப்பிடும் மக்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் பாலில் தயாரிக்கப்படும் சாக்லெட் வகையை கண்டுபிடித்த சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெர்மன், அயர்லாந்து, பிரிட்டன் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் உள்ளன.

சாக்லேட் சாப்பிடக் காரணங்கள் வேண்டுமா? கால நேரம் பார்க்க வேண்டுமா?. சுவீட் எடு கொண்டாடு...,