Published:Updated:

``தாயாக மாறிய இன்ஸ்பெக்டர்; தாராளமாக உதவிய காவலர்கள்" - சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்

மணமகள் பிரியதர்ஷிணி, அவரின் அம்மா ஜோதி
மணமகள் பிரியதர்ஷிணி, அவரின் அம்மா ஜோதி

மூன்று குழந்தைகளோடு தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக்கூறிய பெண்ணுக்கு ஆறுதல் கூறிய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, அந்தக் குடும்பத்தினருக்குப் பல உதவிகளைச் செய்துவருகிறார்.

சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையம் கடந்த 4-ம் தேதி களைகட்டியது. ஓட்டேரியைச் சேர்ந்த பலர் காவல் நிலையத்துக்கு வந்தனர். அவர்களோடு பிரியதர்ஷிணியும் அவரின் அம்மாவும் வந்திருந்தனர். பிரியதர்ஷிணிக்கு விடிந்தால் திருமணம். அதனால் மணமகளான அவர், வெட்கத்தோடு அங்கு வந்திருந்தார்.

அவருக்கு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீஸார் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அதோடு பிரியதர்ஷிணியின் திருமணத்துக்குத் தேவையான சீர்வரிசைப் பொருள்களையும் போலீஸார் வாங்கி அன்பளிப்பாகக் கொடுத்திருந்தனர்.

பிரியதர்ஷிணி, அவரின் அம்மா ஜோதி
பிரியதர்ஷிணி, அவரின் அம்மா ஜோதி

அப்போது ஜோதியின் கண்கள் கலங்கியிருந்தன. இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் போலீஸாருக்கு நன்றிகளைத் தெரிவித்த ஜோதியும் பிரியதர்ஷிணியும் இன்று நாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்றால் அதற்கு நீங்கள்தான் காரணம் என்று கூறினர்.

ஜோதியின் ஃப்ளாஸ்பேக் கதையை நம்மிடம் பகிர்ந்தனர் தலைமைச் செயலக காலனி போலீஸார்.

``2017-ம் ஆண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஓட்டேரியைச் சேர்ந்த ஜோதி (45), காவல் நிலையத்துக்கு வந்தார். அன்றைய தினம் அவரால் பேசக்கூட முடியவில்லை. ஜோதி மற்றும் குழந்தைகளின் முகங்களில் சொல்ல முடியாத அளவுக்கு சோகம்.

ஜோதி மற்றும் பிரியதர்ஷிணி ஆகியோருக்கு ஆறுதல் கூறினோம். பிறகு அவர்களிடம் என்ன நடந்தது என்று கேட்டோம். அப்போது ஜோதியும் பிரியதர்ஷிணியும் கூறிய தகவல்கள் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின. பின்னர் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுத்த பிறகு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியைத் தனியாகச் சந்தித்தார் ஜோதி.

அப்போது வீட்டில் நடந்த சில கசப்பான சம்பவங்களால் என் வீட்டுக்காரர், என்னையும் குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். நான் 2 பெண் குழந்தைகள் ஒரு மகனை எப்படி வளர்க்கப்போகிறேன் என்று தெரியவில்லை.

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியுடன் மணமகள் பிரியதர்ஷிணி
இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியுடன் மணமகள் பிரியதர்ஷிணி

என்னை மன்னித்துவிடுங்கள், நானும் என் 3 குழந்தைகளும் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர எனக்கு வேறுவழி தெரியவில்லை என்று ஜோதி கூறினார். அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர், தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனம். வீட்டு வேலைக்குச் சென்று பிள்ளைகளைக் காப்பாற்று என்று அறிவுரை கூறினார். அதோடு பிரியதர்ஷிணி, பத்தாம் வகுப்பு படித்திருந்தாள். அவளுக்குச் சம்பளத்துடன் கூடிய பாதுகாப்பான இடத்துக்கு இன்ஸ்பெக்டர் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

மேலும், ஜோதியின் மகனையும் மகளையும் படிக்க ஏற்பாடு செய்தார். இந்தச் சமயத்தில் ஜோதியின் மகன், வழக்கில் ஒன்றில் சிக்கிக் கொண்டார். இந்தத் தகவலை ஜோதி எங்களிடம் கூறியதும், சம்பந்தப்பட்ட போலீஸாரிடம் பேசி ஜோதியின் மகன் தரப்பு நியாத்தை எடுத்துக்கூறி அவனை விடுவித்தோம். தற்போது ஜோதியின் மகன், விளையாட்டில் ஆர்வமாக இருக்கிறார். அதற்கான பயிற்சியில் அவன் ஈடுபட்டுவருகிறான். ஜோதியின் 2வது மகள், 8-ம் வகுப்பு படித்துவருகிறார்.

மணமகளுடன் போலீஸ் டீம்
மணமகளுடன் போலீஸ் டீம்

பிரியதர்ஷிணியைத் திருமணம் செய்து கொடுக்க ஜோதி திட்டமிட்டார். இதற்காக மாப்பிள்ளை பார்க்கும் படலம் நடந்தது. ஜோதியின் குடும்பச் சூழலைத் தெரிந்த ஒருவர், பிரியதர்ஷிணியை வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். இருப்பினும் தன்னுடைய மகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஜோதி ஆசைப்பட்டார். ஆனால் வறுமை காரணமாக அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. தன்னுடைய சூழலை இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியிடம் கூறினாள் ஜோதி.

உடனே எதற்கு நீங்கள் கவலைப்படுகிறீர்கள். நாங்கள் இருக்கிறோம். திருமணத்துக்கான வேலையை நீங்கள் பாருங்கள். மற்றவற்றை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறியதோடு பிரியர்தர்ஷிணிக்குத் தேவையான சீர்வரிசை பொருள்களை வாங்கினோம். கட்டில், பீரோ, மெத்தை, 6 கிராம் தங்க கம்மல், பாத்திரங்கள், 10,000 ரூபாய் ஆகியவற்றை தலைமைச் செயலக காலனி போலீஸ் நிலையம் சார்பில் பிரியதர்ஷிணிக்கு அன்பளிப்பாக வழங்கினோம். 5-ம் தேதி அயனாவரத்தில் பிரியதர்ஷிணிக்குத் திருமணம் நடைபெற்றது.

கம்மல்
கம்மல்

தலைமைச் செயலக காவல் நிலையத்தில் பணியாற்றும் எஸ்.ஐ மீனா, தலைமைக் காவலர் ஜான் மற்றும் வாசுதேவன், கணபதி என அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை பிரியதர்ஷிணியின் திருமணத்துக்குச் செய்தனர். இந்தத் தகவல் தெரிந்ததும் ஜோதியின் குடும்பத்தினர் மற்றும் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து காவல் நிலையத்திலேயே பிரியதர்ஷிணிக்கு விழா எடுத்துவிட்டார்கள் என்றனர்.

இதுகுறித்து ஜோதியிடம் கேட்டதற்கு, ``இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மேடம் இல்லையென்றால் நாங்கள் இன்று உயிரோடு இருந்திருப்போமா என்று தெரியவில்லை. எங்களுக்குத் தேவையான உதவிகளை இன்ஸ்பெக்டரும் அவருடன் பணியாற்றும் போலீஸாரும் செய்துள்ளனர்.

அதனால்தான் பிரியதர்ஷிணிக்கு நல்ல படியாக திருமணம் நடந்து முடிந்துவிட்டது. பிரியதர்ஷிணிக்கு இன்ஸ்பெக்டரும் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒவ்வொருவரும் தாயாகவும் தகப்பனாகவும் இருந்து இந்த உதவியைச் செய்துள்ளனர். என் உயிர் உள்ளவரை அவர்களை மறக்க மாட்டேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு