Published:Updated:

13 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, பள்ளிக்கு அழைத்துவந்த 8-ம் வகுப்பு மாணவி முகிலா!

ஒரு குழந்தைக்கு சிக்கலான பாடம் தேவையா... முதலில் எங்களைப் பற்றி நாங்களே தெரிந்துகொள்ளும் இன்றைய கல்வி முறை இருக்கிறதா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``குழந்தைகளின் உரிமைகளை அவர்களில் ஒருவராக இருந்து பேச வேண்டுமானால், நான் நீதிபதியாக வேண்டும். இதுவே எனது லட்சியம்" என்று வலிமையான வார்த்தைகளோடு நம்மிடம் பேசத் தொடங்கினார் தூத்துக்குடியைச் சேர்ந்த சிறுமி முகிலா ராஜ்.

சென் செபாஸ்டியன் நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவியான முகிலா நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவர். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே தான் வளர்ந்துவரும் சூழலை மிக நுட்பமாகக் கவனிக்கத் தொடங்கியுள்ளார். அந்தப் பாதிப்பின் வெளிப்பாடாக தற்போது அவரைச் சுற்றி இருப்பவர்களுக்காக இயங்கத் தொடங்கியுள்ளார்.

குறிப்பாக, குழந்தைகளின் உரிமைகளைப் பற்றி பள்ளியில் ஐந்தாம் வகுப்பிலேயே பேசத் தொடங்கியவர், அதன்பிறகு குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். தற்போது முகிலா, குழந்தைகளின் உரிமைகள், சட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட விஷயங்களை எந்தத் தடையும் இல்லாமல் பேசுகிறார். அதோடு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு அரசின் பல்வேறு துறைகளைத் தொடர்புகொண்டு அந்தப் பிரச்னைகளுக்கு தீர்வைத் தேடித் தருகிறார்.

குழந்தைகள்
குழந்தைகள்

``குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பிரச்னைகள் குறித்து எங்கெல்லாம் பேச வேண்டும், ஒரு குழந்தைக்குப் பிரச்னை இருந்தால் அந்தக் குழந்தை தன்னுடைய பிரச்னை குறித்து எங்கு பேச வேண்டும்... எங்கு பேசினால் தீர்வு கிடைக்கும்.... போன்ற விரிவான விஷயங்களையும் பகிர்ந்தும் வருகிறேன். என்னுடைய இந்த யோசனை குழந்தைகள் மத்தியில் பேசப்படுகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படிக் குழந்தைகளுக்கான அடிப்படையான தகவல்களை எடுத்துரைக்கும் பணி ஒருபுறம் இருந்தால், அவர்களுக்கான பிரச்னைகளைத் தீர்க்கவும் போராடிக்கொண்டிருக்கிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறிப்பாக நாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உரைகிணறு, கீழ முந்தல், மாணிக்கம் நகர் ஆகிய இடங்களில் மில் வேலையில் 13 குழந்தைகள் வேலை செய்வதாக தகவல் கிடைத்தது. அது குறித்து நேரில் விசாரித்தபோது, அங்கு குழந்தைகள் வேலை செய்வது உறுதியானது. குறிப்பாகப் பொருளாதாரப் பிரச்னையால் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களே அந்தக் குழந்தைகளின் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு மில் வேலைக்கு அனுப்பியுள்ளனர். அந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களிடம் பேசினோம். பின்னர் மில் உரிமையாளர்களிடமும் பேசினோம்.

குழந்தை தொழிலாளர்கள்
குழந்தை தொழிலாளர்கள்

படிக்கும் வயதில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்புவது சட்டப்படி குற்றம். இது குழந்தைகளுக்கு எதிரான செயல். இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் புகார் தெரிவித்தால் உங்கள் மீது சட்ட ரீதியாக அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறியதைத் தொடர்ந்து, அந்தக் குழந்தைகளை மில் வேலையிலிருந்து விடுவித்தனர். பின்னர் விடுவிக்கப்பட்ட அந்த 13 குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்தோம். இவ்வளவு பெரிய செயலை நான் மட்டும் செய்துவிட முடியாது.

அமைப்பு ரீதியாக எனக்கு ஆதரவு இருக்கிறது. அதனால் இந்த நல்ல செயல்களைச் செய்கிறேன். இதேபோன்று மற்றொரு பிரச்னை எங்களுடைய பள்ளியின் அருகில் குப்பை மேடு இருந்தது. அந்தக் குப்பையால் மாணவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் இருந்தது. அது குறித்து நகராட்சி நிர்வாகத்துக்குக் கடிதம் மூலம் தெரிவித்தேன். ஆனாலும் அதில் எந்த ஒரு நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து மாவட்டச் சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுதினேன். பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்துவிட்டு அதை அகற்றினார்கள்.

சத்துணவு
சத்துணவு

மேலும், நான் படிக்கும் பள்ளியில் 300 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். அதில் சத்துணவு சாப்பிடும் ஒரு மாணவருக்கு ஒரு நாளைக்கு 5 ரூபாயிலிருந்து 7 ரூபாய் வரை செலவு செய்கிறது அரசாங்கம். அரசாங்கத்தின் ஒதுக்கீட்டை வைத்துக் கணக்கிட்டால் ஒரு நாளைக்கு 210 ரூபாய் வருகிறது. ஒரு நாளைக்கு 210 ரூபாய் எங்களுடைய பள்ளியில் சத்துணவுக்குச் செலவு செய்ய வேண்டும். ஆனால், ஒரு நாளைக்கு 150 ரூபாய் கூட செலவு செய்வதில்லை.

இந்தத் தொகை எப்படி 300 மாணவர்களுக்கு போதுமானதாக இருக்கும். சாம்பாரைக் கேட்டால் இதுதான் சாம்பார் என்று ரசத்தை ஊற்றுவார்கள். அதோடு உணவும் சுகாதாரமாக இருக்காது. மேலும், சத்துணவுக் கூடத்தையும் கழிவறைக்கு அருகிலேயே ஏற்படுத்தி வைத்துள்ளனர். எப்படி அவர்களால் சுகாதாரமான உணவை வழங்க முடியும்? இந்தச் சத்துணவைச் சாப்பிடும் மாணவர்களுக்கு நோய்தான் வரும் என்று பள்ளிக்கு எதிராகக் குரல் கொடுத்தேன். மேலும், அது தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலருக்கும் புகார் கடிதம் எழுதினேன். எனது இந்தப் புகார் கடிதத்தின் அடிப்படையில் எங்களுடைய பள்ளிக்கு கல்வி அலுவலர் நேரில் வந்து ஆய்வு நடத்தினார். அதன் பிறகு அது குறித்து கேட்டறிந்தார்.

`3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த அரசுப் பள்ளி மாணவிகள்
`3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த அரசுப் பள்ளி மாணவிகள்

அப்போது இந்தப் பிரச்னை குறித்து அவரிடம் நேரிலும் எடுத்துரைத்தேன். அதன் பின்னர் அந்த அதிகாரி சத்துணவுக் கூடத்தை மாற்றி அமைக்க உத்தரவிட்டார். அதோடு மாணவர்களுக்குப் போதுமான சுகாதார உணவை வழங்க வேண்டும் என்று எனது தலைமை ஆசிரியருக்கும் உத்தரவிட்டார். இது தொடர்பாக எனது தலைமை ஆசிரியரிடம், `மன்னித்து விடுங்கள் உங்களிடம் சொல்லாமல் செய்துவிட்டேன்' என்றேன். அதற்கு அவர் `தவறில்லை. அது உன்னுடைய பிரச்னை நீ போராடுவதில் எந்தத் தவறும் இல்லை முகிலா, பாராட்டுகள்' என்றார்.

தற்போது எங்களுடைய பகுதியில் முக்கியப் பிரச்னையாக இறால் கம்பெனி இயங்கி வருகிறது. அந்தக் கம்பெனியிலும் குழந்தைத் தொழிலாளர்கள் வேலைசெய்து வருகிறார்கள். அவர்களை மீட்க வேண்டிய மிகப் பெரிய கடமை எனக்கு இருக்கிறது. இது தொடர்பாக ஏற்கெனவே மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்குத் தகவல் தெரிவித்திருந்தேன். அந்த கம்பெனிக்கு அதிகாரிகள் ரெய்டு வரும்போது அதன் உரிமையாளர்கள் குழந்தைத் தொழிலாளர்களை மறைத்து வைத்து விடுகிறார்கள். அதனால் அந்தப் பிரச்னையில் தீர்வு பெறுவது சவாலாக இருக்கிறது. அதற்காக அந்தப் பிரச்னையை கைவிடாமல் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

முகிலாராஜ் தூத்துக்குடி
முகிலாராஜ் தூத்துக்குடி

மேலும், எங்களுக்கு மற்றொரு முக்கியப் பிரச்னையாக இருப்பது, இன்றைய கல்வி முறை. இதில் போதாக்குறைக்கு மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையைக் கொண்டு வரவுள்ளது. ஒரு குழந்தைக்கு சிக்கலான பாடம் தேவையா... முதலில் எங்களைப் பற்றி நாங்களே தெரிந்துகொள்ளும் இன்றைய கல்வி முறை இருக்கிறதா... குழந்தைகளின் உரிமையைப் பற்றி பேசுகிற ஒரு பாடம் இருக்கிறதா அல்லது விழிப்புணர்வுச் சட்டங்கள் குறித்துத் தான் அதில் சொல்லப்பட்டுள்ளதா... எனவே, குழந்தைகளின் கல்வியைப் பாடத்திட்டத்தில் மத்திய- மாநில அரசுகள் கொண்டு வர வேண்டும். அதை வலியுறுத்தும் விதமாக 10,000 கடிதங்கள் கையொப்பமிட்டு தேசியக் குழந்தைகள் நல ஆணையத்துக்கு அனுப்ப உள்ளோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு