Election bannerElection banner
Published:Updated:

``வாங்குங்க... மனசு சொல்ற காசை கொடுத்துட்டுப் போங்க!" - நெகிழ வைக்கும் கோவை கப்பல் தாத்தா

கப்பல் தாத்தா
கப்பல் தாத்தா

அழகான வீடுகள், கப்பல்கள், கோயில்கள் போன்ற கலைப்பொருள்களை அடுக்கி, அவற்றின் நடுவே அமர்ந்திருக்கிறார் நடராஜன் ஐயா.

``எந்தப் பொருளையும் வாங்கணும்னு கட்டாயம் இல்ல தம்பி, மனசுக்குப் பிடிச்ச பொருளை பயமில்லாமல் கையில் எடுத்துப் பாருங்க. நீங்க மனசுல நினைக்குற காசை பொருளுக்கு கொடுத்துட்டுப் போங்க. இவ்வளவு பணம், அவ்வளவு பணம்னு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது" - தன் பொருளுக்கான வியாபாரத்தை இப்படிச் செய்வதே நடராஜன் ஐயாவின் அடையாளம்.

கப்பல் தாத்தா
கப்பல் தாத்தா

பரபரப்புகளுக்குப் பஞ்சமே இல்லாத கோயம்புத்தூரின் சத்தி சாலை அம்மன் கோயில் பகுதி. மூங்கில்களால் செய்யப்பட்ட அழகான வீடுகள், கப்பல்கள், கோயில்கள் போன்ற கலைப்பொருள்களை அடுக்கி, அவற்றின் நடுவே அமர்ந்திருக்கிறார் நடராஜன் ஐயா. தலையில் ஒரு தொப்பி வைத்து, பொக்கைப் பல் சிரிப்புடன் வாடிக்கையாளர்களை அவர் வரவேற்கும் விதமே வித்தியாசமாக இருந்தது. `Don't touch' என்ற வாசகத்தை வைத்து, வாடிக்கையாளர்களிடம் விலைக்கு மல்லுக்கட்டும் கடைகளுக்கு மத்தியிலும் நடராஜனின் இந்தச் செயல் கவனம் ஈர்த்தது. நடராஜன் ஐயாவுடன் மனதுக்கு நெருக்கமான ஓர் உரையாடல்.

``30 வருஷமா இந்தத் தொழிலைத்தான் செய்துட்டு இருக்கேன். எனக்குச் சொந்த ஊர் நீலகிரி மாவட்டம் கூடலூர். எங்க அப்பாவுக்கு இதுதான் தொழில். ராப்பகலா செய்துட்டு இருப்பாரு. அந்தக் காலத்தில் எல்லாம் அழகுப் பொருள்களுக்கு வரவேற்பு கிடையாது. ஒரு பொருளுக்கு 20 ரூபாய் கிடைக்கும். பெருசா வருமானம் இல்லைனாலும் கடைசி வரை இந்தத் தொழிலை அவரு விடல. அவரோட கடைசிக் காலத்துல அவர்கிட்ட இருந்து இந்தக் கலையை நானும் கத்துக்கிட்டேன். அதுவரை கிடைக்குற தொழிலைப் பாத்துட்டு இருந்த நான் அப்புறம் இதையே என் தொழிலா செய்ய ஆரம்பிச்சேன்.

கப்பல் தாத்தா
கப்பல் தாத்தா

தொழிலுக்காக கோயம்புத்தூர் வந்துட்டேன். கடை வைக்கணும்னா காசு வேணும். நாடோடியா வந்த எனக்கு தெருதான் கடைனு ரோட்டோரம் உட்கார்ந்து, மூங்கில் பொருள் செய்துட்டு இருப்பேன். வெயில், மழையில் ஒதுங்ககூட இடம் இருக்காது. மழை வந்துட்டா, பொருளையெல்லாம் சாக்குல அள்ளி வெச்சுட்டு, நான் மழையில் நனைஞ்சுட்டு இருப்பேன். பொருள்கள் விற்காமல் காசு இருக்காது. சாப்பிடாம கூட இருந்துருக்கேன்.ஒரு பொருள் செய்து முடிக்க குறைஞ்சது ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆகும்.

தஞ்சை பெரிய கோயில், மீனாட்சி அம்மன் கோயில், சொகுசு வீடுகள், கப்பல்னு நிறைய டிசைன் பண்ணுவேன். பார்க்க வித்தியாசமாக இருந்ததால் மக்கள் என் பொருளை நின்னு வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சாங்க. எதிர்பார்த்த அளவு விற்பனை ஆகலைனாலும், நான் பொருள்கள் செய்யறதை விடல. வேடிக்கை பார்த்தவங்க பிறகு வாங்க ஆரம்பிச்சாங்க. வாய்வழி விளம்பரம் மூலமா நிறைய பேர் என்னைத் தேடி வர ஆரம்பிச்சாங்க.

கப்பல் தாத்தா
கப்பல் தாத்தா

என்னோட பொருள்களுக்கு ரொம்ப லாபம் வெச்சு விற்க மாட்டேன். நான் ஆரம்பத்துல 30 ரூபாய்க்கு மூங்கில் வீடுகளை வித்துட்டு இருந்தேன். அப்ப சில்லறை இல்லைனு மக்கள், 50 ரூபா கொடுத்து, `நீங்களே வெச்சுக்கோங்க'னு சொல்லுவாங்க. அதன் பின் வாடிக்கையாளர்களே என் வேலைப்பாடுகளைப் பார்த்துட்டு கூடுதல் காசு கொடுத்துட்டுப்போக ஆரம்பிச்சாங்க.

இப்ப மூங்கில் வீடு 300, 500, 750, 1,000-க்கு விக்கறேன். ஆனால், இவ்வளவுதான் விலை, காசு கொடுங்கனு கட்டாயப்படுத்தினது கிடையாது. பொருளைப் பார்த்து விலை கேட்குறவங்ககிட்ட, இதுக்கு முன்னாடி இதே பொருளை இவ்வளவு ரூபாய்க்கு வித்துருக்கேன். நீங்க வேலைப்பாட்டை பார்த்துட்டு காசு கொடுங்கனு சொல்லிருவேன். மக்கள் கொடுப்பதை வாங்கிப்பேன். என்னைப் பொறுத்தவரை உழைச்ச உழைப்புக்கான காசை கடவுள் நம்மகிட்ட கொண்டு வந்து சேர்ப்பாருனு முழுசா நம்புறேன். அதனால் கறார் காட்டுறது கிடையாது. உண்மையைச் சொல்லணும்னா இத்தனை வருஷத்தில் என் உழைப்புக்கு குறைவான கூலியை மக்கள் கொடுத்ததே இல்ல" என்றவர் ஒரு மூங்கில் கப்பலை திடீர் என்று தெருவில் தூக்கி வீசுகிறார்.

கப்பல் தாத்தா
கப்பல் தாத்தா

``பார்த்தீங்களா எவ்வளவு தூரத்தில் வீசிருக்கேன். ஆனாலும் பொருள் உடையாது. நிறைய பேர் மூங்கில் பொருள்கள் உடைஞ்சுருமானு கேட்பாங்க. அவங்களுக்கு நம்பிக்கை வர்றதுக்காக அவங்க முன்னாடியே பொருளை இப்படித்தான் தூக்கி வீசுவேன். வருஷம் ஆச்சுனா, ஒட்டியிருக்க பசை பிரிஞ்சுக்கிட்டு வரும். அதை திரும்பி ஒட்டிக்கலாம். துடைச்சு வெச்சா எத்தனை வருஷம் ஆனாலும் புதுசு மாதிரிதான் இருக்கும். கண்ணாடி , மெட்டல்னு ஏதோ ஒரு பொருளை கிஃப்ட் பண்றதுக்கு பதிலா இதை வாங்கிக்கொடுத்தா என்னை மாதிரி நிறைய பேரோட வாழ்க்கை மாறும்.

புது மூங்கிலில் செய்யணும்னா பொருளோட விலை அதிகமாயிரும். அதனால் பழைய வீடுகள், கடைகள்ல பிரிச்ச மூங்கில், காஞ்ச மூங்கில்களை வாங்கி சுத்தம் செய்து, அதை தப்பை, தப்பையா கட் பண்ணி, டிசைனுக்கு ஏற்ப பசை வெச்சு ஒட்டி காயவிடணும். கொஞ்சம் நுணுக்கமான வேலைதான். என்னோட வேலைப்பாடுகளைப் பார்த்துட்டு கோயம்புத்தூர் கமிஷனர், கலெக்டர் எல்லாம் கூட வீட்டுக்கே வந்து பாராட்டிட்டுப் போயிருக்காங்க. இதைவிட சந்தோஷம் என்ன வேணும்... எனக்கு இப்போ 65 வயசாகுது. 30 வருஷமா மூங்கில் பொருள்கள் செய்துட்டு இருக்கேன். காலையில 6 மணிக்கு பொருள் செய்ய உட்கார்ந்தா, ராத்திரி 10 மணி வரைக்கும் வேலை செய்துட்டு இருப்பேன். ஒரு நாளும் தொழில் செய்யாமல் ரெஸ்ட் எடுத்தது கிடையாது. படுத்து தூங்கலாம்னு மனசு சொன்னாலும் உடம்பு உழைக்க ஓடி வந்துரும். வேலை செய்ய வயசை காரணம் காட்டுனா, காலத்துக்கும் புள்ள குட்டிகளைத்தான் நம்பி இருக்கணும். இது உழைச்சு தேஞ்ச உடம்பு. உசுரு இருக்க வரைக்கும் உழைக்கும்.

மூங்கில் வீடு
மூங்கில் வீடு

எனக்கு ரெண்டு பொண்ணுங்க. ரெண்டு பேரையும் இந்த வருமானத்தில்தான் படிக்க வெச்சு, கட்டிக் கொடுத்துருக்கேன். மூங்கில் பொருள்கள் செய்ய அவங்களுக்கும் கத்துக் கொடுத்துருக்கேன். சோறு போட்ட தொழிலை விட்டுட்டுப்போக முடியாதுல. மக்களோட அன்பை இது எனக்கு கொடுத்திருக்கு. ஒரு முறை ஒரு குழந்தை, `தாத்தா உங்களுக்கு ஏதும் அவார்டு கிடைச்சுருக்கா?'னு கேட்டுச்சு. `இல்லடா கண்ணா'னு சொன்னேன். அதுக்கு அந்தக் குழந்தை, `ச்சேய்.. இந்நேரம் அவார்டு கொடுத்துருக்கணும்... சீக்கிரமே கிடைக்கும் தாத்தா'னு சொல்லுச்சு என்று சொல்லும்போதே கண்ணீர் பெருக்கெடுக்கிறது நடராஜன் ஐயாவுக்கு. கட்டுப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பிக்கிறார்.

``எனக்குப் பின்னாடியும் இந்தக் கலை இருக்கணும்னு ஆசை. ரோட்டுல உட்கார்ந்து செய்யுறதுனால இந்தத் தொழிலை கேவலமாகப் பார்க்குறாங்க. கத்துக்கணும்னு என்னைத் தேடி வர்றவங்களுக்கு கத்துக் கொடுத்துருக்கேன். உண்மையைச் சொல்லணும்னா ஓசியா கத்துக் கொடுக்கிறேன்னு சொன்னா கூட, யாரும் பெருசா ஆர்வம் காட்ட மாட்றாங்க. தெருவுல உட்கார்ந்து தொழில் செஞ்சா அது கேவலம் இல்ல. வெளிச்சம் தெரியாமல் நின்னவனுக்கு மூங்கில் பிரகாசமான ஒளியைக் காட்டிருக்கு. இப்போ எல்லாருமே அழகு பொருளுக்கு முக்கியத்துவம் தர்றாங்க. வெளிநாடுகளிலிருந்து கூட ஆர்டர் வருது. கிடைக்கிற ஆர்டரையெல்லாம் எடுத்துப் பண்ணா, மாசம் லட்சங்களில் கூட சம்பாதிக்கலாம்.

`தேங்காய் வியாபாரத்துக்கு மாறிய மிட்டாய் தாத்தா!' - ஊரடங்கிலும் உதவும் 114 வயது உழைப்பாளி

தாய், தகப்பன் இல்லாத புள்ளைங்க இருந்தா, அவங்களும் இங்க வந்து தங்கி கத்துக்கலாம். நான் சொல்லித் தர தயாரா இருக்கேன். நிச்சயம் அவங்க வாழ்க்கையில் இது மாற்றமாக இருக்கும்னு நம்புறேன். அரசு ஏதாவது பயிற்சி மையம் தொடங்கினாக்கூட, நிறைய பேருக்கு சொல்லித்தர முடியும். இந்த உலகம் ரொம்ப பெருசு. என் ஒருத்தனால மட்டும் இந்தக் கலையை எல்லார்கிட்டயும் சேர்க்க முடியாது. ஆனா, என்னோட கடைசி மூச்சு இருக்கற வரை, நான் இந்த வேலையை விடமாட்டேன்" என்றார் உறுதியான குரலில்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு