Published:Updated:

போலீஸ் மட்டுமல்ல... பலர் அப்படிதான் இருக்காங்க! - அதிகார ஈகோ பற்றி விவரிக்கும் வாசகர் #MyVikatan

அரசு அலுவலகம்
அரசு அலுவலகம்

காவல்துறையால் பொதுமக்கள் மட்டுமல்ல அவர்கள் துறையினரே அவமானப்படுத்தப்படுகிறார்கள்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

அதிகார மனப்பான்மை அரசின் ஆணிவேர் வரை படர்ந்துள்ளது. காவல் துறையினர் நேரடியாகவும் மற்றத் துறையினர் அவர்கள் அறிந்த வகையிலும் மக்களைத் துன்புறுத்துகின்றனர். அதிகாரிகளுக்குப் பின்னால் இருக்கும் அரசியல், சாதி பலம் அவர்களை ஆணவக்காரர்களாக மாற்றிவிடுகிறது. சாத்தான்குளம் சம்பவம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தின் பிரதிபலிப்பே இந்தக் கட்டுரை. ஒட்டுமொத்த அதிகாரிகளையும் நான் விமர்சிக்கவில்லை. நேர்மை தவறும் அதிகாரிகளைப் பற்றிய ஆதங்கம்தான் இந்தப் பதிவு.

காவல்துறை
காவல்துறை

காவல்துறையால் பொதுமக்கள் மட்டுமல்ல அவர்கள் துறையினரே அவமானப்படுத்தப்படுகிறார்கள். சென்ற வருடம் ஒரு எஸ்.பி சென்ற வாகனத்தை மறித்த காவலர்கள் அவரையே ஒருமையில் பேசும் அளவுக்கு ஆணவம் வளர்ந்திருக்கிறது. சாலையில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட காவலர்கள், மது போதையில் போலீஸ் எனத் தலைப்புச் செய்தி ஆனாலும் அவர்கள் மாறவில்லை.

ஈகோவைக் காட்ட வேண்டிய இடத்தில் நட்பையும், நட்பை காட்டும் இடத்தில் ஈகோவையும் காட்டுகிறார்கள். ஒரு அமைச்சரோ, அதிகாரியோ, அரசியல் பிரமுகரோ தெரியாமல் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டக்கூட பயப்படும் இவர்களின் டார்கெட் அரசியல் சாரா, சாதி சாரா தனிக்குடித்தன அப்பாவிகள்தான். நீங்கள் புகார் கொடுக்க போனாலும் சரி, விசாரணைக்குச் சென்றாலும் சரி, உங்களை வார்த்தைகளால் வதைப்பதுபோய் இப்போது அடிக்கும் அளவுக்கு முன்னேறி விட்டார்கள்.

உண்மையில், அவர்கள் வாங்கிய அடியை யாருக்கோ கொடுத்து விட நினைக்கிறார்கள். சிலவேளைகளில் அடிக்க வேண்டியவர்களை அடிக்க முடியாமல் அப்பாவிகளின் மீது கோபத்தைக் காட்டுகிறார்கள்.

நீங்கள் குற்றவாளியோ, பாஸ்போர்ட் வாங்கச் செல்பவரோ அவர்களின் பலத்தை நம்மிடம் காட்டிவிட வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். வயதானவர்கள், பெண்கள், சான்றோர்கள் அவர்களுக்கு பொருட்டல்ல... என்னுடைய சில அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

Representational image
Representational image

ஓசூர் டு பெங்களூரு செல்லும் அரசுப் பேருந்தில் சீட் கிடைத்த சந்தோஷத்தில் அமர்ந்திருந்தனர் பயணிகள். முன்புற படிக்கட்டுக்கு அருகில் ஒரு வட மாநிலப் பையன் வேக வைத்த உரிக்காத நிலக்கடலையை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். படிக்கட்டில் ஏறிய நடத்துநர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை கன்னத்தில் பளார் பளார் என அறைந்துவிட்டார். பெண்கள்தான் முதலில் அதிர்ந்து கூச்சலிட்டனர், கண்டக்டர் சொன்ன காரணம் கடலைத் தோலை கீழே போட்டுவிட்டானாம். அதற்கு அவர் அடித்த அடியில் பலவீனமானவர்களாயிருந்தால் மரணம் வரை ஏற்பட்டிருக்கலாம். எப்படி இவ்வளவு கோபம் வருகிறது இவர்களுக்கு?

இன்னொரு முறை திருப்பத்தூரிலிருந்து சென்னை செல்லும் பேருந்தில் 8 வயதுக் குழந்தையுடன் ஏறி அந்தப் பேருந்து நிற்காத ஒரு நிறுத்தத்தின் பேரைச் சொல்லி டிக்கெட் கேட்டதுதான் தாமதம், வாக்குவாதம் ஏதோ ஏற்பட்டு, கண்டக்டர் அடித்த அடியில் அந்த நபர் பேருந்தினுள்ளேயே விழுந்துவிட்டார். அந்தக் குழந்தை அப்பா அப்பா என்று கத்திய கதறலால் பயணியர் வெகுண்டு நடத்துனரைத் திட்ட ஆரம்பித்துவிட்டனர், அதன் பின்தான் ஒரு நிலைக்கு வந்தார் நடத்துநர்.

தாலுகா அலுவலகம்... இவர்களுடன் பழகும் வாய்ப்பு 10 வருடங்களுக்கு முன் நிறைய கிடைத்தது. அவர்கள் எளியவர்கள், தென் மாநிலங்களிலிருந்து அலுவலக விஷயமாக ரயிலிலோ, பேருந்திலோ வந்து அவர்களுடைய சங்க கட்டடத்தில் வெறும் கோரைப் பாய் விரித்து இளைப்பாரி நீதிமன்றத்திற்கோ, தலைமை செயலகத்துக்கோ சென்று வரும்போது நமக்கே அவர்களின் நிலை குறித்து கவலையடையச் செய்யும்.

Representational image
Representational image

சில வருடங்கள் முன்னர் எங்களது ஊரில் உள்ள தாலுகா அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு எங்களை உள்ளாக்கியிருந்தார்கள். அதாவது, என் தந்தை பெயரிலிருந்த நிலத்தை தவறுதலாக வேறொருவர் பெயருக்கு சிட்டா கொடுத்து விட்டார்கள். தந்தையும் அந்த நபரைப் போய் கேட்க அவர் தனக்கு எதுவும் தெரியாது என்றும் அதிகாரிகளின் கவனக்குறைவால் நடந்திருக்கலாம் என்றும் கூறிவிட்டார்.

அன்றிலிருந்து ஒரு வருடம் என் தந்தை நடையாய் நடந்தும் அத் தவறு சரி செய்யப்படவில்லை. சரியென ஒரு முறை நடந்த DRO கூட்டத்தில் மனுக்கொடுத்துவிட்டோம். அதை ஒரு ஈகோ பிரச்னையாகக் கொண்டு இதுவரை நான்கு வருடங்களாக எங்களை, என் 70 வயது தந்தையை அலைக்கழிக்கிறார்கள். எனக்கென்னவென்றால் 30 - 40 வயது மதிக்கத்தக்கவர்கள் 70 வயதுக்காரர்களை தரக்குறைவாக நடத்துவதையும் அலைக்கழிப்பதையும் ஈகோ என்று கூறாமல் என்னவென்று கூறுவது..

Representational Image
Representational Image

"நீ எப்படி என்னுடைய அதிகாரியிடம் முறையிடலாம் , நீ எங்க வேணா போய்க்கோ , கடைசில நான்தான் உனக்கு செய்யணும்’’ , என்று வசைமொழி பாடியதைப்போலவே இன்று வரை அந்த வேலையை முடிக்கவில்லை .

இன்னும் சொல்லப்போனால் ஆட்சியர் அலுவகத்தில் இருந்து மனுவின் நிலைகுறித்து விளக்கம் கேட்டபின்னும் அந்த அதிகாரி கண்டுகொள்ளவில்லை.. அவர் வென்றுவிட்டதாக எண்ணுகிறார் , நாங்களோ எங்கள் வேலை முடிந்தால் போதும் இதில் வெற்றிக்கோ தோல்விக்கோ இடமில்லை என்றே கருதுகிறோம் .

சில அதிகாரிகள் இப்படி நடந்துகொள்ள காரணம் என்ன வேலைப்பளுவா, மன உளைச்சலா, அப்படி இருந்தாலும் ஏன் பொதுமக்களிடம் மட்டும் அத்தனை ஈகோவையும் அதிகாரத்தையும் காட்டுகிறார்கள்... ஈகோ அவர்களுக்கு மட்டும்தான் சொந்தமா?

Representational Image
Representational Image
Vikatan Team

அரசுப்பணி ஈகோவை வளர்க்கிறதா? இல்லை பின்னால் இருக்கும் பணம், படைபலம் ஈகோவை வளர்கிறதா? சிந்தித்துப் பார்த்தால் அரசுப்பணி ஈகோவை வளர்க்காது. ஏனெனில், அந்தப் பணியில் அத்தனை சுக துக்கங்களையும் தினம் பார்த்து உதவிவருபவர்கள் அவர்களே. இயற்கை பேரிடரோ பெருமழையோ, கொடுநோயோ, அவர்கள் இன்றி எதுவும் நடக்காது. அரசின் திட்டங்கள் முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்திட்டம், பசுமை வீடுகள் என அனைத்துத் திட்டங்களையும் 8 கோடி மக்களுக்கு கொண்டுபோய் சேர்ப்பதில் முக்கிய பங்குண்டு.

அவர்களுக்கு அரசுப்பணியே முழுநேரப்பணி அது அவர்களின் கனவும் எதிர்காலமும். விடுமுறை எடுக்காத அதிகாரிகள், விபத்து ஏற்படுத்தாத ஓட்டுநர், நல்லாசிரியர் எனப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், அவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதற்கு அவர்கள் மட்டுமே காரணமல்ல. கவுன்சிலர் முதல் அமைச்சர் வரை சிபாரிசுக்கு அவர்களை அணுகுவதும், கைம்மாறாக இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை கிடைப்பதும் ஒரு நிலையில் அவர்களை வழி மாறச் செய்கிறது, அவர்கள் பின்னால் இருக்கும் அந்தப் பலம்தான் ஈகோவை கூட்டுகிறது என்பது என் கருத்து .

பலம் பொருந்தியவர்களுக்கு மட்டும் வேலை செய்து பழக்கப்பட்டுவிட்ட அவர்களுக்கு பொதுமக்களாகிய நமக்கு வேலை செய்ய சொன்னால் ஈகோ துளிர்க்கிறது.

Representational Image
Representational Image

நாட்டின் மிகப்பெரிய பதவியில் இருந்தும் ஈகோ இல்லாத மனிதராக அப்துல் கலாம் வாழ்ந்த இந்த நாட்டில் இன்று எங்கு காணினும் ஈகோ... ரௌத்திரம் பழகு என்று படித்து வளர்ந்த நம்மால், ஆணவத்துக்கு அடங்கிச் செல்வது சிரமமாகத்தான் இருக்கிறது.

- உமாசங்கர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு