Published:Updated:

``பிளாக்கில் கறி மட்டுமல்ல... காபியும் கிடைக்கிறது"- ஒரு குடும்பஸ்தரின் லாக்டெளன் அனுபவம் #MyVikatan

Representational Image
Representational Image

டீக்கடைக்கு சென்று டீ ஆர்டர் சொன்னபோது,``பைசா இங்கே குடுத்திருங்க.. இங்கிருந்து 4 கடை தள்ளிபோனீங்கன்னா... நம்ம கடை பையன் சைக்கிள்ல டீ கேன் வச்சிருக்கான், அவன்கிட்ட வாங்கிங்கங்க” என்றார் நாயர்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

வழக்கமாக நைட் 10 மணிக்கு மேல் டாஸ்மாக் கடை ‘சரக்கு’ தான் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படும். அதே மாதிரி காந்தி ஜெயந்தி, குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற நாட்களில் குறிப்பிட்ட சில இடங்களில் ‘கோட்வேர்டு’ சொன்னால் சரக்கு கிடைக்கும். இப்ப டீ குடிக்கக் கூட அந்த நிலை ஏற்பட்டிருச்சு.

இதோ சென்னையில் எனது லாக்டவுன் அனுபவத்தை பகிர்கிறேன்.

மே 24-ந் தேதி முதல் தளர்வு இல்லா ஊரடங்கு அமலில் இருந்தாலும், சில டீக்கடைகளில் டீ வினியோகம் நடந்து கொண்டுதான் இருந்தது. அதனால், நான் வழக்கமாக குடிக்கும் டீக்கடைக்கு சென்று டீ ஆர்டர் சொன்னபோது,``பைசா இங்கே குடுத்திருங்க.. இங்கிருந்து 4 கடை தள்ளிபோனீங்கன்னா... நம்ம கடை பையன் சைக்கிள்ல டீ கேன் வச்சிருக்கான், அவன்கிட்ட வாங்கிங்கங்க” என்றார் நாயர்.

என்னடா இது புது அனுபவமா இருக்கு. கடைசியில டீயும் கள்ளச் சந்தையில் விற்பனைக்கு வந்திருச்சே..! என்ற ஆச்சரியத்துடன், 4 கடை தள்ளிப் போய் டீ குடித்தேன்.

வீட்டுக்கு வந்த உடனே சில பல மளிகை சாமான்கள் வேண்டும் என வீட்டம்மணி பட்டியலை நீட்டினார். நடமாடும் மளிகை வண்டியெல்லாம் எதிர்பாத்திகிட்டு இருக்க முடியாதுன்னு நினைச்சுகிட்டு, வழக்கமாக வாங்கும் பலசரக்கு கடைக்கு சென்றேன். கடை பூட்டியிருந்தது. ஆனால் எதிரே பூட்டப்பட்டிருந்த டீக்கடை வாசலில் பலசரக்கு கடை உரிமையாளர் உட்கார்ந்திருந்தார்.

Representational Image
Representational Image

நம்மை பார்த்ததுமே, ``என்ன வேணும் சார் என்று கேட்ட கடைக்காரர் இங்கேயே உட்காந்திருங்கள். நீங்கள் கேட்ட பொருள் வந்து சேரும்” என்று, டீக்கடையில் நம்மை அமரவைத்துவிட்டு, சட்டென்று அவரது கடையின் ஷட்டரை திறந்து உள்ளே சென்று, மூடிக்கொண்டார்.

இந்த இடைப்பட்ட நேரத்தில் டீக்கடை பெஞ்சில் இருந்த தினசரியை படித்துக் கொண்டிருந்தேன். பக்கத்தில் ஒரு பிளாஸ்க் மற்றும் டீ கப் இருந்தது. அதை உத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, 2 கடை தள்ளி நம்மையே நோட்டம் விட்டிருந்திருக்கிறார் பிளாஸ்க்கின் உரிமையாளர், அதாவது அந்த டீக்கடைக்காரர்.

``சார்… காபி வேணும்னா ஒரு டம்ளரில் ஊத்திக் குடிச்சிட்டு, காச அப்படியே இங்க வந்து கொடுத்திட்டுப் போங்க” என அங்கிருந்தபடியே சொன்னார். அப்பத்தான் சிறுமூளையில் உரைத்தது, ஆகா இங்கேயும் ஒரு வியாபாரம் நடக்குதுன்னு.!

பக்கத்திலேயே ஒரு டிரை சைக்கிளில் முட்டை வியாபாரம். அதற்கு கொஞ்சம் தள்ளி தரையிலேயே காய்கறி வியாபாரம். எல்லாமே பூட்டப்பட்ட கடைகளின் வாசலிலேயே விற்பனை நடந்து கொண்டிருந்தது.

லாக்டெளன் தொடர் கதை! - ஹவுஸ் ஓனரின் புலம்பல் #MyVikatan

இதற்கிடையே, பலசரக்கு கடை பையன் நான் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து பொருளையும், 15 ரூபாய் சில்லரை காசையும் கொடுத்தான். என்னடா இது, பொருளையும் கொடுத்து, மேற்கொண்டு பைசாவும் கொடுக்கிறான்னு பார்த்தால், ``சார்.. இந்த பொருளுக்கு விலை ரூ.185. இப்ப ரூ.15 திருப்பிக் கொடுத்திருக்கேன். அதனால் நீங்க மொத்தமாக ரூ.200 கொடுங்கன்னு” வாங்கிட்டுப் போனான்.

வீட்டுக்கு வந்தால் பையன், ``அப்பா இன்னைக்கு சன்டே அதனால கறி வாங்கிட்டு வாங்க” என்றான். மீண்டும் கடைக்கு சென்று வழக்கமாக வாங்கும் நபரிடம் கேட்டால், இல்லசார் முடிஞ்சிருச்சு என்றார்.

Representational Image
Representational Image

சரின்னு வீட்டுக்கு வரும் வழியில், நண்பர் ஒருவர் தென்பட்டார். அவர்கிட்ட கறி எங்கே கிடைக்கும் என்ற கேட்ட உடனே, அவர் செல்போனில் பேசிவிட்டு, நம்மிடம் செல்போனை நீட்டினார்.

நான் வாங்கிப் பேசும்போது, ரூ.200 விற்கிற கறி இன்றைக்கு ரூ.300 என்றார் கறிக்கடைக்காரர். சரி நான் எங்க வந்து வாங்கனும், கடை எங்கே இருக்கிறது? என்று கேட்டால், வழக்கமாக நான் வாங்கும் கடையை சொல்கிறார். இப்பத்தானே அங்கு வந்து கேட்டேன் நீங்க இல்லைன்னு சொன்னீங்களே என்றேன்.

``சார்… நீங்களா என்று சுதாரித்தவர், இல்ல சார் நம்மகிட்ட இருக்கிறது பிரீசர்ல வச்சது. அதனால இல்லைன்னு சொல்லிட்டேன். நாளைக்கு ஃபிரெஷா வரும். அப்பத் தாரேன்” என்றார்.

உண்மையைத்தான் சொல்றாரா? இல்ல பொய் சொல்றாருன்னு குழப்பத்திலேயே… சரின்னு சொல்லிட்டு வீட்டிற்கு வெறும் கையோட சென்றேன். பையன்கிட்ட இன்றைக்கு லாக் டவுன்ங்கிறதால கறிக்கடை இல்லடான்னு சொல்லி சமாளிச்சிட்டேன்.

உள்ளே அடுப்பறையில் மசாலா ரெடி பண்ணிகிட்டிருந்த வீட்டம்மணி, ``உங்கப்பாவால அரைக்கிலோ கறி கூட வாங்க முடியாதுடா, ஆனா பெரிய ஆபிசர்னு பீத்திக்கிடுவார்” என்றார்.

``ஏன்.. இப்ப போய் நீ கறி வாங்கிட்டு வந்திடு பார்ப்போம்னே..” அடுத்து சத்தத்தையே காணோம்.

-சி.அ.அய்யப்பன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு