Election bannerElection banner
Published:Updated:

`ஏன் நனையாம ரெயின்கோட் போட்டுட்டு போற..!' - மழையுடன் ஒரு ஜில் உரையாடல் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

பெற்றோரிடம் ஒரு மாம்பழத்துக்காகக் கோபித்துக்கொண்டு வந்த முருகனை, பல நிகழ்வுகளைச் சொல்லி சமாதானம் செய்த பார்வதியைப் போல, நானும் பல நினைவுகளை மழையிடம் சொல்ல ஆரம்பித்தேன்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அதிகாலையையும்

அதன் வாசத்தையும்

அது தரும் புத்துணர்வையும்

அமைதியையும்

மென் பனிக் காற்றையும்

மலைக் குழந்தைகளை அணைத்துக் கிடக்கும் மேக அன்னையையும்

பனியில் நனைந்த பச்சை மரஞ்செடிகளையும்

மயில் மைனா புறா காக்கை கிளிகளையும்

நான் தினமும் ரசிப்பதால்தான்

நீ ஊடல்/ பொறாமை கொண்டு

இதெல்லாம் எனக்குக் கிட்டாதவாறு

செய்து விடுகிறாயோ?

ஏ மழையே!

என் ஏகாந்த வேளையைப் பறிக்காதே!

சிறிது நேரம் கழித்துதான் பெய்யேன்!

- என்று இரண்டு மூன்று நாள்களாகப் பெய்யும் அதிகாலை மழையிடம் நான் கேட்டேன்.

Representational Image
Representational Image
Vikatan Team

நானும்தான் பார்க்கிறேன்

நீ முன்பு போல என்னை ரசிப்பதில்லை

மகள் பள்ளிக்குச் செல்லும்/வரும் போதும், பெய்யாதே என்றாய்

துவைத்த துணி காய்வதில்லை, பெய்யாதே என்றாய்

களிமண் ரோட்டில் நடக்க பயமாய் இருக்கிறது, பெய்யாதே என்றாய்

இப்போது என்னடா வென்றால் அதிகாலையிலும் பெய்யாதே என்கிறாய்.

- என்று சோகமாகப் பதில் சொன்னது மழை.

பெற்றோரிடம் ஒரு மாம்பழத்துக்காகக் கோபித்துக்கொண்டு வந்த முருகனை, பல நிகழ்வுகளைச் சொல்லி சமாதானம் செய்த பார்வதியைப் போல, நானும் பல நினைவுகளை மழையிடம் சொல்ல ஆரம்பித்தேன். கவிதை (மாதிரி?) நடையிலிருந்து கட்டுரை நடைக்கு உரையாடல் மாறுகிறது.

Representational Image
Representational Image
Rajesh Kumar Singh

எனக்கு நினைவு தெரிந்தது முதல், மழையை ரசித்துதான் இருக்கிறேன். எனக்கு நான்கைந்து வயதாக இருந்தபோது சென்னையில் பலத்த புயல் மழை. நாங்கள் வசித்தத் தெருவில் மழை நீர் புரண்டு ஓடுகிறது. நான் அழுது அடம்பிடித்ததால், மழை சற்றே ஓய்ந்த நேரத்தில், என் அப்பா ஒருசில நொடிகள் என்னை ஓடும் நீரில் நிற்க வைத்தார். இப்போதும் சில்லென்று இருக்கிறது அந்த முதல் மழையின் நினைவு.

நம்பிக்கை..! - கொரோனா கால குட்டிக்கதை #MyVikatan

நாங்கள் அன்று குடியிருந்த திருவல்லிக்கேணி வீட்டில், மழை வந்தால் வராண்டா முழுவதும் தண்ணீர் நிரம்பிவிடும். மழை நின்று சில மணி நேரங்களில் தானாகவே வற்றிவிடும். ஆனால், பலத்த மழை பெய்தால், வராண்டா நிரம்பி, வீட்டுக்குள் நீர் புகுந்துவிட்டால் என்ன ஆவதென்று பயந்து, வீட்டு பெரியவர்கள் பக்கெட்டில் நீரைப் பிடித்து தெருவில் இறைப்பார்கள். ஏழெட்டு வயதான நானும், ஒரு சிறிய குவளையில் நீர் வடிய உதவுவேன். அந்த வயசில் அவ்வளவு மகிழ்ச்சியான வேலை அது.

Representational Image
Representational Image
Vikatan Team

நான் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் நேரம். அதே மழை. மழையில் நனையும், என் அதே ஆவல். ஆனால், பள்ளிக்கு செல்கையில் புத்தகப் பை நனையாமல் இருக்கணுமே என்பதால், வடாம் காயப்போடும் பிளாஸ்டிக் கவர்தான், என்னுடைய அப்போதைய ரெயின்கோட் (பின்பக்கம் & தலை முற்றும் மூடியிருக்கும். முன்பக்கம் பின்'னினால் மூட வேண்டும்).

"ஏன் நனையாம ரெயின்கோட் போட்டுட்டு போற"ன்னு கோவமா தலைல மழை `கொட்டும்.'

என் கல்லூரிக்காலம். அதே மழை. மழையில் நனையும் என் அதே ஆவல். ஒருவழியாக இந்த முறை என் ஆசை நிறைவேறியது. கல்லூரி என்றாலே, அதும் பெண்களின் பிரத்யேகக் கல்லூரி என்றால், இவற்றையெல்லாம் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். எனவே, கல்லூரி கேன்டீனில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக்கொண்டே, மழையில் நனைந்ததெல்லாம் மறக்கவே முடியாத ஆனந்தம்.

Representational Image
Representational Image
Pixabay

வாழ்க்கை ஒரு சுழற்சக்கரம் போல சுழல, என் மகளுடன் இப்போது நான் சேர்ந்துகொண்டேன் மழையை ரசிக்க. அவள் என்ன செய்துகொண்டிருந்தாலும், அதை அப்படியே போட்டுவிட்டு, ``அம்மா, சீக்கிரம் வா. பால்கனிக்குப் போலாம்"ன்னு என்னையும் அழைத்துக்கொண்டு போய்டுவா. சாரலில் நனைந்து, கையை வெளிய நீட்டி குதூகலிப்பாள். ஓரிரு முறை மெல்லிய மழையில் நனைந்தும் இருக்கிறாள்.

இப்படி நான் எல்லாவற்றையும் நினைவுபடுத்தி, மழையை எனக்கு எவ்வளவு பிடிக்கும், அதுதான் என்னுடைய எனர்ஜி பூஸ்டர் என்பதை மழைக்கு புரிய வைத்தேன். மேலும், கொரோனா முடக்கம் காரணமாக, வெளியே செல்ல முடியாததால்தான், அதிகாலை மொட்டைமாடி நடைப்பயிற்சி. நீ வந்து அதற்கும் தடை போட்டதால்தான், உரிமையாக உன்னைத் தட்டி கேட்டேன் என்று மழைக்குப் புரிய வைத்தேன்.

Representational Image
Representational Image
Pixabay

நான் சொன்னவற்றையெல்லாம் கேட்டு, கோபம் நீங்கி, உற்சாகமாகி, ``சரி, உன்னைத் தொந்தரவு செய்யாமல் இனி வரப் பார்க்கிறேன்" என்றது மழை. நாளை முதல் பார்ப்போம், மழை தன் வாக்கை காப்பாற்றுகிறதா என்று.

- வி.சுதா சத்யநாராயணா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு