Published:Updated:

மதிய உணவுக்காகப் பள்ளிக்குச் சென்ற மாணவர்களின் இப்போதைய நிலை? - வருந்தும் மருத்துவர் #MyVikatan

மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள்
மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள்

வேலை இல்லை, பொருளாதார நெருக்கடி, திரும்பும் இடமெல்லாம் மரண ஓலங்களால் மக்கள் முட்டி மோதும் இக்காலக்கட்டத்தில், அதற்கு இணையாக கல்வித்துறையும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. ..

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கொரோனா அச்சுறுத்தல் இரண்டாம் அலையினால் பெரியவர்கள் எந்த அளவுக்கு மன நெருக்கடிக்கு உள்ளானார்களோ அதே, அளவுக்கு குழந்தைகளும், மாணவர்களும் மன நெருக்கடிக்குள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். இதில் வசதி படைத்தவர்கள், வசதி இல்லாதவர்கள் என்ற கணக்கு வழக்கு இல்லாமல் எல்லா குழந்தைகளும் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்பதே உண்மை. பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக உடலும், மனமும் சோர்ந்து போகிற அளவுக்கு இந்தக் காலக்கட்டம் அனைவரையும் மனதளவில் உருக்கிவிட்டது.

Representational Image
Representational Image
Pixabay

பிறந்த குழந்தை முதல் இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், கொரோனா நோய் தொற்று பாதித்ததால், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க மிகவும் பயந்தனர். இதனால் சிலருக்கு பால் கட்டி உள்ளிட்ட பலவித அவஸ்தைகள் உண்டானது. அதோடு, நோய்தொற்றினால் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் போது தாயின் அரவணைப்பு இல்லாமல் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். பிறந்த இரண்டு வருடத்திற்கு குழந்தைகளுக்கு உணவும், பெற்றோரின் அரவணைப்பும் தான் குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு மிக முக்கியம். நோய்த் தொற்றால் தாய் தனியாக இருக்க வேண்டிய சூழல் வந்தால், குழந்தைகள் அழுது கொண்டும், சரியாக சாப்பிடாமலும் இருப்பதாக பலரும் வேதனைப்பட்டு புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அதன்பிறகு, இரண்டு வயதுக்குள் இருக்கும் குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்களுக்கு முறைப்படி இந்தியன் மெடிக்கல் கவுன்சில் சொன்ன பல வித ஆலோசனைகளை டிவி விளம்பரங்கள் மூலமும், செய்திகளின் மூலமும், சமூக ஆர்வலர்கள் மூலமாகவும் பேசி விழிப்புணர்வை உண்டாக்கி இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அடுத்ததாக, வேலை இல்லை, பொருளாதார நெருக்கடி, திரும்பும் இடமெல்லாம் மரண ஓலங்களால் மக்கள் முட்டி மோதும் இக்காலக்கட்டத்தில், அதற்கு இணையாக கல்வித்துறையும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது.

Representational Image
Representational Image
Pixabay

மாணவர்கள் நிறைந்த பள்ளிக்கூடங்கள் இப்போது, வெற்றுக் கூடங்களாக உடலற்ற கூடாக இருக்கும் வலியை கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அது வெறும் கட்டிடம் இல்லை, மாணவர்களின் நம்பிக்கை, மாணவர்களின் எதிர்காலம், மாணவர்களின் கொண்டாட்டம் இப்படி பல விஷயங்களை செய்து இருக்கிறது என்பதை மாணாக்கர்கள் மனதிலிருந்து உணர துவங்கிவிட்டார்கள். பள்ளிக்கூடம் செல்லாமல் வீட்டிலேயே சிறகுகள் பறிக்கப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்ட மாணவர்கள் பல விதத்தில் பலவிதமானப் பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள்.

பள்ளியும், ஊட்டச்சத்தும் :

ஊட்டச்சத்து மிக்க மதிய உணவுக்காக பள்ளிக் கூடத்திற்கு வரும் சிறார்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இந்த கொரோனா காலக்கட்டத்தில் அவர்களின் நிலையை நினைத்துப் பார்த்தால் மனது பதறுகிறது. அங்கன்வாடியில் இருந்து சத்துமாவு கொடுப்பதாக இருக்கட்டும், வளரிளம் பருவத்திற்கானத் திட்டத்தின் மூலம் சுண்டல், பாசிப்பயறு உள்ளிட்ட சத்தான உணவுகள், மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் கொடுப்பது வரை மாணாக்கர்களை உடலளவிலும், மனதளவிலும் பள்ளிகள் ஆரோக்கியமாக வளர்த்தெடுத்தது. ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலையில் வறுமையின் கோரப் பிடியினால், மாணவர்கள் பலரும் கூலி வேலைக்குப் செல்ல துவங்கிவிட்டனர். இதனால், வளரிளம் பருவத்தினரின் எதிர்காலம் கேள்விக் குறியாகியிருக்கிறது.

சத்தான உணவு கிடைக்காததன் விளைவால், மனதளவில் மாணவர்கள் பாதிப்படைகின்றனர். அதாவது, 80 மாணாக்கர்களில் 25 மாணவிகள், 65 மாணவர்கள் பயத்தினால் (Anxiety Disorders) மிக அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அதுபோல, 80 மாணாக்கர்களில் 67 மாணவர்கள் & 24 மாணவிகள் மன அழுத்தத்தால் (Depression) பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நோய்த் தொற்றுக்காலத்தில், குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றி பலரும் பேச வேண்டிய சூழலில் இருக்கிறோம். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மாணவர்களின் சாப்பிடும் முறை முற்றிலும் மாறி இருக்கிறது. பலருக்கு சத்துமிக்க உணவுகள் சரியாக கிடைப்பதில்லை என்ற குரல்களும், பல இடங்களில் நேரத்திற்கு சாப்பிடமாட்டார்கள் என்ற குரல்களும் கேட்டுக் கொண்டு இருக்கிறது.

Representational Image
Representational Image

பள்ளி நாட்களில் சாப்பிடாமல் வந்தால் நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடுவதையும், சத்துணவு வாங்கி சாப்பிடுவதையும் நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் தற்போது இந்த நோய்த் தொற்று காலத்தில் ஏதோ சாப்பிட்டால் போதும் என்று அரைகுறையாக சாப்பிட்டு, படம் பார்த்துக் கொண்டோ, வீடியோ கேம்ஸ் விளையாடியோ அல்லது ஏழை மாணவர்கள் கூலித் தொழிலுக்குச் செல்வதால் வேலைப்பளுவின் காரணமாகவோ சாப்பிடாமல் இருக்கிறார்கள்.

இந்த மாதிரி உணவு சிக்கல் ஏற்படும் போது, அவர்கள் பலவித மனநோய்களுக்கு உள்ளாவார்கள். என்ன மாதிரியான மன பாதிப்புகள் வரும் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

  1. அனோரெக்சியா நெர்வோசா : (பசியின்மை)

வளரிளம் பருவத்தினர் உடல் அழகின் மீது கவனமாக இருப்பார்கள். பருவமடைதல் ஏற்படும் காலக்கட்டத்தில் உடல் மாற்றத்தின் போது தங்களது உடலைப் பற்றி மிக அதிகமாக யோசிப்பார்கள். அதனால் உடலுக்கு என்ன தேவையோ அதைச் சாப்பிட மாட்டார்கள். உணவில் ரொம்ப கான்ஷியஸாக செக் செய்து கொண்டே சாப்பிடுவார்கள்.

கொரோனாவுக்குப் பிறகு, வீட்டிலேயே இருந்து சாப்பிடுவதாலும், உடல் உழைப்பு இல்லாததாலும் பல்வேறு மன அழுத்தத்துக்குள் வளரிளம் பருவ வயதினர் அதிகமாக போய்க் கொண்டு இருக்கிறார்கள். அதனால் அவர்கள் மிகவும் நம்பும் விஷயம் டயட் என்ற வார்த்தை தான். சாப்பிடாமல் இருப்பதாலும் அல்லது குறைவாகச் சாப்பிடுவதாலும் உடலை பராமரிக்க முடியும் என்று நம்புகிறார்கள்.

இந்த நம்பிக்கையால் சாப்பிடாமல் இருப்பதால், எப்போதும் ஒருவித சோர்வுடனே இருக்கிறார்கள். அதனால் அவர்கள் தினம் செய்ய வேண்டிய செயல்கள் அனைத்தும் தடைபடுகிறது. சோர்ந்தே இருப்பதால் வீட்டில் உள்ளவர்களிடம் அடிக்கடி திட்டு வாங்க நேரிடுகிறது. அதனால் தன்னைப்பற்றி பல வித குழப்பங்களும் அவர்களுக்கு வருகிறது.

Representational Image
Representational Image
August de Richelieu from Pexels

தாழ்வு மனப்பான்மையும், எதிலும் நாட்டம் இல்லாது இருப்பதும் நடக்கிறது. தன்னை நிரூபிக்க, தான் செய்வது சரி என்று சொல்ல நண்பர்களைத் தேட ஆரம்பிக்கின்றனர். ஆனால் எங்கும் செல்ல முடிவதில்லை. அதனால் பலவித தீவிர யோசனைகளுடனேயே இருக்கின்றனர். இந்த யோசனையே விணையாகும் என்பதே உண்மை.

நேரத்துக்கு முறையாக சாப்பிட தவறும்போது, உடல் அதன் விளையாட்டை காண்பிக்கும். ரத்த சோகை, எலும்பு தேய்மானம், முடி கொட்டுதல், மாதவிடாய் பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.

PICA : (பிக்கா)

இந்தியாவில் மட்டும் 42 கோடி குழந்தைகள் பசியினால் ஒவ்வொரு நாளும் அவதிப்படுகின்றனர். நோய்த்தொற்று காலத்தில் தினக்கூலிகள் பசி, பட்டினியோடு வாழ்க்கையைக் கழிக்க வேண்டியக் காட்டாயத்துக்குள் இருக்கிறார்கள். நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் 400 மில்லியனுக்கும் அதிகமான இந்திய குழந்தைகளுக்கு பள்ளிகளில் இருந்து கிடைக்கும் சத்துணவு கிடைக்காமல் தவிப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. விளைவாக, உணவு அல்லாத பொருட்களான குச்சி, களிமண், திருநீறு, பென்சில், இலைகளை சாப்பிடுகிறார்கள். இது எல்லா காலக் கட்டத்திலும் நடக்கும் விஷயங்கள் தான். ஆனால் சமீப காலமாக அதிகமான குழந்தைகள் பசியால் கையில் கிடைக்கும் பொருட்களைச் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். வாசிக்கும் உங்களை அதிர்ச்சியில் உறையவைத்தாலும், அதுதான் உண்மை.

இதனால், உடல் நலக் கோளாறுகளுடன், மனநல கோளாறுகளும் உருவாக வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. சத்தான சாப்பாடு இல்லாமல், ரத்த சோகை உருவாக்கும் உணவுகளை அடிக்கடி எடுக்கும் போது ஆட்டிசம், அறிவுத்திறன் குறைபாடுகளும் ஏற்படுகிறது.

இவற்றையெல்லாம் கவனிக்க வேண்டியது நம் கடமை. நம் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், நம்மை சுற்றி இருக்கும் குழந்தைகளுக்கும் உதவி செய்திட வேண்டும் அல்லது உதவி கிடைக்கும் வகையில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

கூடுதலாக, தமிழக அரசு குழந்தைகளின் உணவு, உறைவிடம் மற்றும் பாதுகாப்புக்காக சில தொலைப்பேசி எண்களை கொடுத்து இருக்கிறது. உங்களுக்குத் தெரிந்த குழந்தைகளுக்கு ஏதும் உதவி தேவைப்பட்டால் 1098, 9944290306, 04425952450 இந்த எண்களைக் கொடுத்து உதவவும்.

-காயத்ரி மஹதி (மனநல ஆலோசகர் )

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு