Published:Updated:

முகமூடிக்குள் துளிர்க்கும் புன்னகை; தட்டுத்தடுமாறி மீளும் பிரான்ஸ்! - வாசகர் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( papagnoc / Pixabay )

நெருக்கமாகக் கை குலுக்குவது, கன்னங்களில் முத்தமிட்டு முகமன் கூறுவது என வேறெந்த நாட்டையும்விடப் பிரான்சில் நெருக்கம் அதிகம்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

றக்குறைய மூன்று மாத கால ஊரடங்கு நிலையிலிருந்து சகஜ வாழ்க்கைக்குத் திரும்ப முயன்றுகொண்டிருக்கின்றன ஐரோப்பிய நாடுகள். ஆமாம். திரும்புகின்றன என்பதைவிட முயற்சி செய்து கொண்டிருக்கின்றன என்பதுதான் சரியாக இருக்கும்.

ஒரு கட்டத்துக்கு மேல் ஊரடங்கைத் தொடர்வது மீளமுடியாத பொருளாதார வீழ்ச்சிக்கு வழிகுத்துவிடும் என்பதோடு மக்களையும் கட்டுப்படுத்த முடியாது என்ற நிலையில் ஊரடங்கு தளர்த்தலை தொடங்கிவிட்டாலும், பெருந்தொற்று மீண்டும் திரும்பினால் எப்படிச் சமாளிப்பது என்ற அச்சமும் சேர, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலையில் தவிக்கின்றனர்.

Representational Image
Representational Image
Michel Euler / AP

ஒவ்வொரு நாடும் கொரோனா பாதிப்புக்கு ஏற்ப, படிப்படியாக ஊரடங்கைக் குறைத்துக்கொண்டு வருகிறது. எதிர்பாராத கொரோனா சூட்டிலிருந்து முழுமையாக மீள இன்னும் நீண்ட காலம் பிடிக்கும்!

பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், முதியோர் இல்லங்களின் பார்வை நேரங்களை பிரான்ஸ் அரசாங்கம் தடை செய்தபோது, "...அப்படிச் செய்தால் கொரோனா தொற்றினால் இறக்கும் முதியவர்களின் எண்ணிக்கையைவிட உற்றார் உறவினர்களைச் சந்திக்க முடியாமல் ஏங்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்" என்றார் ஒரு பிரபல சமூக சேவகர்.

"தனித்திரு, விழித்திரு, பசித்திரு" எனும் தத்துவ வாக்கியம் பேச சுலபமாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவது அனைவருக்கும் கைகூடாது. அது பழகி, பழகி கைக்கொள்ள வேண்டிய ஒருவித யோகநிலை. சமூக விலங்கு என அரிஸ்டாட்டில் வர்ணிக்கும் மனிதனுக்குப் பொதுவாகத் தனிமை ஒவ்வாது. அதுவும் நீண்ட காலக் கட்டாயத் தனிமை சிலரது மனநிலை சமன்பாட்டையும் குலைத்துவிடும்.

பிரான்சில் பள்ளி கல்லூரிகள் திறந்தாலும், பிள்ளைகளை அனுப்புவது பெற்றோர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. பயணங்கள் 100 கிலோமீட்டர் வட்டத்துக்குள்தான் இருக்க வேண்டும். பொது இடங்களில் 10 பேருக்கு மேல்கூட அனுமதி இல்லை.

Representational Image
Representational Image
Michel Euler / AP

பேருந்து, ரயில் பயணங்களின்போதும், வியாபார மையங்களிலும் முகக் கவசம் கட்டாயம். அரசு அறிவுறுத்தும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முற்றிலும் கடைப்பிடிக்கும் வியாபார நிறுவனங்களுக்கு மட்டுமே இயங்க அனுமதி. அதிலும் பெரிய ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரன்ட்டுகள், பார்கள் ஆகியவற்றைத் திறக்க இன்னும் அனுமதி கொடுக்கப்படவில்லை. அடுத்தகட்டமாக இந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம்.

இத்தனை கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு வெளியேறி, திறந்திருக்கும் கடைகளுக்கு வெளியே தனிமனித இடைவெளி விட்டு நிற்கும் நீண்ட வரிசைகளில் காத்திருப்பவர்களிடம் அவசரம் ஏதுமில்லை. மாஸ்க்குக்கு வெளியே தெரியும் கண்களில் மிச்சமிருக்கும் மிரட்சியோடு மீண்டும் சகஜ வாழ்க்கையினுள் நுழையும் நெகிழ்ச்சியும் மின்னுகிறது.

நெருக்கமாகக் கை குலுக்குவது, கன்னங்களில் முத்தமிட்டு முகமன் கூறுவது என வேறெந்த நாட்டையும்விட பிரான்சில் நெருக்கம் அதிகம்.

மூன்று மாதங்களாக நேரில் சந்திக்க முடியாதவர்களைக் கண்டதும் வேகமாக முன்னேறி, பின்னர் சுதாரித்துத் தடுமாறி இடைவெளிவிட்டு நின்று நலம் விசாரிக்கும் மக்களிடையே முதல் அடி எடுத்துப் பழகும் மழலையின் தயக்கம்.

டீக்கடைகளும் காபி சென்ட்டர்களும் அன்றாட அவசரங்களில் சிக்கிச் சுழலும் மக்களின் `இன்ஸ்டன்ட்' வடிகால்கள். காதலன், கணவன், தகப்பன், தோழன், முதலாளி, தொழிலாளி என எத்தனையோ முகமூடிகளைக் கொண்ட சராசரி மனிதன் தன் முகமூடிகளை மாற்ற ஒதுங்குவது டீக்கடைகளிலும் காபி சென்ட்டர்களிலும்தான். வேலைக்குப் போகும் முன்னர் டீ குடிக்கும் நேரத்தில் மேலதிகாரியின் அத்தனை கோபத்துக்கும் ஈடு கொடுக்கும் முகமூடியை மாட்டிக்கொள்ளும் அதே மனிதன்தான் வீடு திரும்பும் முன்னர் குடிக்கும் டீயின்போது வேலை எரிச்சலை மனைவியின் மீது கொட்டும் முகமூடிக்கு மாறிக்கொள்கிறான்.

Representational Image
Representational Image
Michel Euler / Ap

நம்மூர் டீக்கடைகளைப் போலவே பிரெஞ்சு சாமானிய மக்களின் சீக்ரெட் ஆப் எனர்ஜியாகத் திகழ்பவை பார்கள். காபி தொடங்கி மதுபானங்கள், சிகரெட், தபால் தலைகள், லாட்டரிச் சீட்டுகள் வரை கிடைக்கும் பார்களில் ஒரு நாளைக்கு ஒருமுறையாவது நுழையாத பிரெஞ்சுக்காரர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

சூடான டீ கிளாஸை கையில் சுழற்றிக்கொண்டு, தெரு ஆராவாரத்தை வெறித்தபடி அந்தநாளில் செய்ய வேண்டிய மிச்ச கடமைகளைப் பற்றி மனதுக்குள் ஸ்கெட்ச் போடும் நம்மவர்களைப் போலக் காலையும் மாலையும் பார்களுக்கு வெளியே போடப்பட்ட மேஜை நாற்காலிகளில் காபி கோப்பையும் புகையும் சிகரெட்டுமாய் நகரப் பரபரப்பை வெறிக்கும் பிரெஞ்சுக்காரர்களும் ஏராளம்.

இப்படியான பார்கள் தொடங்கி சினிமா, நாடகம், கால்பந்தாட்டப் போட்டிகள் என அனைத்து வடிகால்களையும் இழந்த லாக்டௌன் நாள்களில் பிரான்ஸ் நாட்டின் குடும்ப வன்முறை விகிதம் 50 மடங்கு அதிகரித்துவிட்டது.

தொழில்துறையில் முன்னேறிய நாட்டின் இயந்திர வாழ்க்கையில் உழன்று, துரித உணவகங்களில் உணவருந்தி, மிச்ச சொச்ச மாலைகளை அவரவருக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் கடத்தி, குழந்தைக்கு காப்பகங்கள், சாப்பிட உணவகங்கள் என அன்றாடத் தேவைகள் அனைத்துக்கும் நிறுவனங்களை நம்பி, வார இறுதியில் ஒதுக்கிய சொச்ச நேரத்தில் மட்டுமே ஒன்றாகச் சந்திக்கப் பழகிய மெட்ரோபாலிடன் கலாசாரக் குடும்பங்கள் வாரக்கணக்கில் வீடுகளில் அடைபட நேர்ந்த சூழல் சச்சரவுகளுக்கும் வன்முறைகளுக்கும் வித்திட்டதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

அவசர வாழ்க்கையில் மறந்துவிட்ட பழைய நட்புகளின் நாஸ்டால்ஜிக் நினைவுகளை மீட்டெடுக்க உதவி அந்த நட்புகளைப் புதுப்பிக்கவும் வழிவகுத்த கொரோனா லாக்டௌன், ஒரே கூரைக்குக் கீழே வாழும் குடும்பங்களில் வன்முறையையும் அதிகரித்தது முரண்நகையே.

Representational Image
Representational Image
Pixabay

ந்திக்க முடியாத சூழல் ஏற்படும்போதுதான் பக்கத்தில்தானே இருக்கிறார்கள் என அலட்சியப்படுத்தியதின் அபத்தம் புரிகிறது. அன்பான பார்வையும் ஆறுதலான பேச்சும் அருகில் கிடைக்காதபோதுதான் பெரும்பாலான முகநூல் நட்புகளும் வாட்ஸப் பகிர்வுகளும் பாலைவன பிம்பங்கள் என்ற உண்மை உரைக்கிறது.

முன்னால் இருப்பவரின் முகத்தைக்கூட பார்க்காமல் குனிந்த தலையுடன் குறுஞ்செய்திகளின் மூலம் எங்கோ இருப்பவரிடம் உரையாடிக்கொண்டிருக்கும் `டெக்ஸ்ட் மெசேஜ்' தலைமுறையையும் தவிக்க வைத்துவிட்டது இந்தக் கொரோனா லாக் டௌன்.

முகங்களைப் படிக்கத் தெரியாமல், தொடர்ச்சியாக நான்கு வார்த்தைகளில் நலம் விசாரித்து அறியாமல் வளர்ந்த தலைமுறையின் கண்கள் முதல்முறையாக வெறிச்சோடிய வீதிகளில் சகமனித முகத்தைத் தேடுகின்றன. சந்திக்கும் அந்நிய முகத்தை நேருக்கு நேர் நோக்கி உதிர்க்கும் நேசப்புன்னகையை முகமூடி மறைத்தாலும் கண்களின் நெகிழ்ச்சி பளபளப்பில் கண்டுகொள்ள முடிகிறது.

- காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு