Published:Updated:

அப்பாவும் ஞாபக மறதியும்! - வாசகி பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Balaji )

அன்றொரு நாள் பயிற்சி முடிந்தும் என்னை அழைத்துச் செல்ல அப்பா வரவில்லை. தோழிகள் அனைவரும் வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அது ஒரு அழகிய காலைப்பொழுது. பரபரப்பாக சமையல் வேலைகளை முடித்துவிட்டு அடுப்பில் பால் காய்ச்சிக் கொண்டிருந்தேன். அப்பாவிடமிருந்து போன், "என்னம்மா எப்படி இருக்க.. வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா.. சாப்பிட்டாச்சா.. சரி, தங்கச்சி கிட்ட பேசு" என வழக்கமாகப் பேசும் இரண்டு வரிகள் இவைதான். பிறகு தங்கையிடம் பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை.

Representational Image
Representational Image
Eswar reddy / Unsplash

அப்பாவைப் பற்றிய பழைய நினைவுகள் மனதில் எழ ஆரம்பித்தன. ஞாபக மறதி கொஞ்சம் அதிகம்தான் என்றாலும் நாங்கள் செய்யும் தவறை மட்டும் ஒருபோதும் அவர் மறந்ததில்லை.

உறவினர்களிடம் நாங்கள் செய்த சேட்டைகளை நகைச்சுவையாகக் கூறி கிண்டல் செய்வார். நாங்கள் இருந்த வீடு இரண்டு மாடிக் கட்டடம் என்பதால் மாடி ஏறி இறங்குவதிலேயே பாதி பொழுது கழிந்துவிடும்.

மாடியிலிருந்து அப்பாவின் குரல் கேட்கும்," அந்தக் கண்ணாடியைக் கொஞ்சம் எடுத்துட்டு வா.’’

``கீழ அப்பாவோட பேன்ட் பாக்கெட்டுல துண்டுச்சீட்டு வச்சிருப்பேன்.. கணக்குப் பார்க்கணும் கொஞ்சம் எடுத்துட்டு வாம்மா.. மறந்துட்டேன்" இப்படி ஒன்றா இரண்டா அடுக்கிக்கொண்டே போகலாம்.

சிறுவயதில் பரதநாட்டியம் நடன பயிற்சி வகுப்புக்கு அப்பாதான் என்னை அங்கே கொண்டு விடுவதும் பிறகு பயிற்சி முடிந்ததும் என்னைத் திரும்ப அழைத்து வருவதுமாக இருந்தார். அன்றொரு நாள் பயிற்சி முடிந்தும் என்னை அழைத்துச் செல்ல அப்பா வரவில்லை. தோழிகள் அனைவரும் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். இப்போது நான் மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தேன். வகுப்பும் வீடும் ஒன்று என்பதால் ஆசிரியை என்னை அவர்கள் வீட்டுக்கு அழைத்தார்.

Representational Image
Representational Image
Pixabay

நானும் ஆசிரியருடன் மாடிக்குச் சென்று அமர்ந்து அப்பாவுக்காகக் காத்திருந்தேன். நேரம் சென்றது.. அப்பா வருவதாக இல்லை. எனக்குக் கண்களில் நீர் வெள்ளம் போல் பெருக்கெடுக்க தேம்பி அழத் தொடங்கினேன்.

" அழாதே! அப்பாவின் போன் நம்பர் தெரியுமா?" என்றார் ஆசிரியர்.

கண்ணீரைத் துடைத்துக்கொண்டு மனப்பாடமாய்த் தெரிந்த எண்ணைக் கூறினேன். போனை எடுத்த அவர் கூறிய பதில்

"அச்சச்சோ! வீட்டுக்கு உறவினர்கள் வந்தார்கள். அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த ஆர்வத்தில் நான் மறந்தே போயிட்டேன். இதோ வருகிறேன்" என்றார்.

பின்பு அடம்பிடித்து கால் வலிக்கிறது என்று சொல்லி நடன வகுப்பை நிறுத்தியது வேறு ஒரு கதை.

அன்றொருநாள் அப்பாவும் நானும் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தோம். நல்ல கூட்டம். கஷ்டப்பட்டு ஒரு இடத்தைப் பிடித்து என்னை அமர வைத்தார். நேரம் செல்லச் செல்ல கூட்ட நெருக்கடியில் என்னைவிட்டு வெகுதூரம் சென்று பின்னால் நின்றுகொண்டார். நான் அவ்வப்போது திரும்பிப் பார்த்து அவரைக் கண்காணித்துக்கொண்டு வந்தேன்.

கூட்டம் குறையத் தொடங்கவே அவருக்கு இருக்கை கிடைத்து அமர்ந்துகொண்டார். என்னை அழைப்பார் என்று காத்துக்கொண்டிருந்தேன்.வேலை நிமித்தமாக அடிக்கடி அவர் தனியாகப் பேருந்துப் பயணம் மேற்கொள்வதால் அன்றும் அப்படியே நினைத்துக்கொண்டார் போல.. என்னைக் கண்டுகொள்ளவே இல்லை, ஏதோ சிந்தனை செய்து கொண்டே வந்தார்.

Representational Image
Representational Image

ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை இழந்து அப்பாவின் அருகில் இடம் காலியாக இருந்ததால் நானே ஓடிச் சென்று அவர் அருகில் அமர்ந்துகொண்டேன். ஏதோ ஒரு சிறு குழந்தை நம்மை நோக்கி ஓடி வருகிறதே என்று குழம்பியவாறே என் முகத்தைப் பார்த்தார். அப்போதுதான் அவருக்கு ஞாபகமே வந்தது,

" ஏய், நீயும் என்கூட வந்தேல்ல.. நான் மறந்தே போயிட்டேன்" என்றாரே பார்க்கலாம்.

அன்றிலிருந்து நாங்கள் எங்கு சென்றாலும் அப்பாவின் அருகிலேயே அமர்ந்துகொள்வேன்.

எண்ணத்தில் மூழ்கி சிரித்துக்கொண்டிருக்கும்போது மூக்கின் உள்ளே ஏதோ கருகும் வாசனை, " அட! அடுப்பில் பால் வைத்திருந்தேனே. மறந்தே போயிட்டேன்"

அப்பாவின் மகளாயிற்றே…!

-தாமரை

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு