Published:Updated:

`சாகுறதுக்குள்ள மகனை ஒரு தடவைப் பார்த்துடணும்' - வீட்டை விற்று வெளிநாடு அனுப்பிய கோமதி பாட்டியின் ஏக்கம்!

ஆதரவற்றோர் முகாமில் கோமதி பாட்டி
ஆதரவற்றோர் முகாமில் கோமதி பாட்டி

”கணவர் இறந்ததும் மகனைப் படிக்க வைத்தேன். வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்பிய மகனுக்குத் தேவையான பண உதவிகளைச் செய்தேன். அதன் பிறகு மகனைத் தொடர்புகொள்ள முடியாததால் தவிக்கிறேன்"

நெல்லை மாநகராட்சி சார்பாக ஆதரவற்றோருக்கு உதவுவதற்காக முகாம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆதரவற்ற நிலையில் சாலையோரங்களிலும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் வசிப்போரை அழைத்து வந்து உணவு, தங்குமிடம், மருத்துவ வசதி செய்து கொடுக்கப்படுகிறது.

`ஊரடங்கால் உணவின்றித் தவித்த முதியவர்; போலீஸாரின் மனிதாபிமானம்!’- நெகிழ்ந்த யுவராஜ் சிங்

கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 24-ம் தேதி, நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் வயதான மூதாட்டி ஒருவர் பசியுடன் படுத்திருந்ததைப் பார்த்த தன்னார்வலர்கள் அவரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவரிடம் விசாரித்தபோது அவரது பெயர் கோமதி என்றும், சொந்த ஊர் தூத்துக்குடி என்பதும் தெரிய வந்திருக்கிறது.

88 வயதான கோமதி பாட்டியின் வாழ்க்கை, எத்தனையோ சோகங்களை உள்ளடக்கியிருக்கிறது. முகாமில் அங்கும் இங்கும் ஓடிச்சென்று பிறருக்கு உதவி செய்துகொண்டிருந்த கோமதி பாட்டியிடம் பேசினோம். ”எனக்கு தூத்துக்குடிதான் சொந்த ஊர். நான், அந்தக் காலத்திலேயே எம்.எஸ்ஸி இயற்பியல் படிப்பை முடித்திருந்தேன். 

ஆதரவற்றோர் முகாமில் கோமதி அம்மாள்
ஆதரவற்றோர் முகாமில் கோமதி அம்மாள்

எனக்குக் கல்யாணமானதும், கணவர் வெங்கட்ராமனுடன் சென்னைக்குச் சென்றுவிட்டேன். அவர் லூக்காஸ் கம்பெனிக்கான ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். நல்ல வருமானம். அதனால் சொந்தமாக ஒரு அப்பார்ட்மென்டில் வீடு வாங்கிக் குடியேறினோம். எங்களுக்கு விஸ்வநாதன் என்ற மகன் பிறந்தான்.

நாங்கள் சொந்த ஊரை விட்டுச் சென்னைக்குச் சென்று செட்டில் ஆகிவிட்டதால் தூத்துக்குடியில் இருந்த சொந்தக்காரர்களுடனான தொடர்புகள் எல்லாம் அறுந்துவிட்டது. மகனைப் படிக்க வைத்தபடி நாங்கள் சந்தோஷமாக இருந்தோம். 

சமயோசிதம்.. மனிதாபிமானம்.. மக்கள் பாராட்டும் போக்குவரத்துக் காவலர் ராஜதீபன்!

திடீரென என் கணவர் 1997-ல் இறந்துவிட்டார். எம்.காம் படித்திருந்த என் மகனுக்கு ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை கிடைத்தது. அந்த நேரத்தில் வெளிநாட்டுக்குச் சென்று வேலைபார்க்க வேண்டும் என்று அவன் விரும்பியதால், வீட்டை விற்று பணம் கொடுத்து அனுப்பி வைத்தேன்.

அப்போது என்னை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டுச் சென்றான். அந்த முதியோர் இல்லத்தில் 10 வருடங்கள் இருந்தேன். மகன் பணம் கட்டியதால், அவர்கள் என்னை நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள். நானும் அங்கிருப்பவர்களுடன் சேர்ந்து ஏதாவது வேலை செய்வேன். அப்படியே காலம் ஓடியது. 

தன்னார்வலர்கள் மற்றும் முகாம்வாசிகளுடன்
தன்னார்வலர்கள் மற்றும் முகாம்வாசிகளுடன்

திடிரென மகனிடமிருந்து பணம் வரவில்லை. அதனால் அவனுக்கு போன் செய்து பேசினேன். அப்போது, வேறொரு கம்பெனியில் வேலை செய்ய வேறு நாட்டுக்குப் போவதாகச் சொன்னான். ஆனாலும் பணம் வரவில்லை. அதனால் 2007-ல் அந்த முதியோர் இல்லத்திலிருந்து என்னை வெளியேறச் சொல்லிவிட்டார்கள்.

அதன் பிறகு, என் வாழ்க்கையே திசையில்லாமல் போய்விட்டது. அதன் பிறகு வயதான நிலையில், அங்குமிங்கும் வேலைக்குப் போனேன். நிறைய வீடுகளில் பாத்திரம் தேய்ப்பது, சமையல் செய்வது என வேலைகளைச் செய்தேன்.

`வீட்டிலேயே முடங்கிக் கிடந்தா சோறு கிடைக்காது..!' -சாத்தூர் பைபாஸில் கவனம் ஈர்த்த முதியவர்

சிலருக்குக் குழந்தை பிறந்த காலங்களில் அவர்களுக்குச் சமையல் செய்வது, குழந்தையைப் பார்த்துக் கொள்வது என்பதற்காக ஆறு முதல் எட்டு மாதம் வரை வேலை கொடுப்பார்கள். பிறகு வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள். இப்படியே அடுத்த 10 வருடங்களுக்கு என் வாழ்க்கை கழிந்தது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, என்னுடைய 86-வது வயதில் எனக்கு மீண்டும் அதிர்ச்சி கிடைக்கும் வகையில் மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டது. என் மகனின் போன் நம்பருக்குத் தொடர்பு கொண்டால், ‘அவர் இப்போது எங்கள் கம்பெனியில் வேலை செய்யவில்லை’ என்று மட்டுமே பதில் சொன்னார்கள்.

பேட்டரி காரில் கோமதி அம்மாள்
பேட்டரி காரில் கோமதி அம்மாள்

அதனால் தூத்துக்குடிக்கு வந்து என் கணவரின் நண்பர்கள், ஒரு சில உறவினர்களைச் சந்தித்து என் நிலைமையைச் சொன்னேன். அவர்களில் சிலர் அளித்த உதவியின் மூலம் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துக்கொண்டேன்.

சிகிச்சைக்குப் பிறகு என்னால் முன்பு போல வேலைக்குச் செல்ல முடியவில்லை. அதே சமயத்தில் வயதான காலத்தில் என் கணவரின் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்குப் பாரமாக இருக்கவும் விரும்பவில்லை. அதனால் திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்று அங்கேயே தங்கிவிட்டேன். 

வாழ்க்கையின் கடைசிக் காலத்தில் நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. அதனால்தான் கோயிலுக்குச் சென்று தங்கினேன்.
கோமதி அம்மாள்

பக்தர்கள் கொடுக்கும் பணம் அல்லது உணவைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிவந்தேன். கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் திருச்செந்தூருக்கு பக்தர்கள் வராததால் உணவுக்குக் கஷ்டப்பட வேண்டியதாகிப் போய்விட்டது

அந்த நேரத்தில் அங்கிருந்த சிலர் என்னை ஒரு வண்டியில் ஏற்றி நெல்லைக்கு அனுப்பிவைத்தார்கள். போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதனால் எங்கு செல்வது எனத் தெரியாமல் புதிய பேருந்து நிலையத்தில் தங்கியிருந்தேன்.

தன்னார்வலர்களுடன் செல்ஃபி
தன்னார்வலர்களுடன் செல்ஃபி

அப்போது என்னிடம் இருந்த 500 ரூபாய், என் செல்போன் ஆகியவற்றை யாரோ திருடிவிட்டார்கள். நல்ல வேளையாகத் தன்னார்வலர்கள் சிலர் வந்து என்னை இந்த முகாமுக்குக் கூட்டிவந்தார்கள்” என்று சோகத்துடன் பேசியவர் சற்று இடைவெளிக்குப் பின் தொடர்ந்தார்.

என் மகனிடம் கடைசியாக 2015-ம் ஆண்டு பேசினேன். அப்போது அவன், ‘இங்கே நிலைமை சரியில்லை. அதனால் சீக்கிரமே நான் திரும்பி வந்துவிடுவேன். அதன் பிறகு உங்களை என்னோடு வைத்துப் பார்த்துக்கொள்கிறேன்’ என்று சொன்னான். 

மாநகராட்சி ஆதரவ்ற்றோர் மையத்தில் கோமதி அம்மாள்
மாநகராட்சி ஆதரவ்ற்றோர் மையத்தில் கோமதி அம்மாள்

அதன் பிறகு அவனைத் தொடர்பு கொள்ளவே முடியலை. என் மகனுக்கு வரும் ஜூன் மாதம் 17-ம் தேதி வந்தால் 57 வயதாகும். நீண்ட காலமாக அவனைப் பார்க்காமல் மனம் வேதனையாக இருக்கிறது. சாவதற்குள் மகனைச் சந்திக்க வேண்டும் என்பதே என் விருப்பம்” என்று சொன்னபோது விழிகளில் கண்ணீர் உருண்டோடியது.

மாநகராட்சி ஆதரவற்றோர் மையத்தின் பொறுப்பாளரான சரவணனிடம் பேசினோம். “இந்த மையத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பின்னால் ஒவ்வொரு கதை இருக்கிறது. ஒவ்வொருவரும் சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் தங்களின் குடும்பத்தினரால் கைவிடப்பட்டு வேதனையை அனுபவித்து வருகிறார்கள்.

ஆதரவற்றோர் முகாம் பொறுப்பாளர் சரவணன்
ஆதரவற்றோர் முகாம் பொறுப்பாளர் சரவணன்

இங்கே இருக்கும் அனைவரையும் நாங்கள் உறவினர்களாகவே பார்க்கிறோம். அவர்களுக்கு மனநல ஆலோசனை, உடல் பரிசோதனை என அனைத்தும் செய்து கொடுக்கிறோம். கோமதி பாட்டியைப் பொறுத்தவரை, இங்கிருக்கும் எல்லோருக்கும் ‘அம்மா’வாக வாழ்கிறார்.

நாங்கள் இந்த முகாமில் திரை கட்டி பழைய திரைப்படங்களைக் காட்டுவோம். கடந்த வாரம் 'நாடோடி மன்னன்' திரையிடப்பட்டபோது கோமதி பாட்டி மிகுந்த உற்சாகத்துடன் அந்தப் படத்தைப் பார்த்தார். அந்தக் காலத்தில் கணவர், மகனுடன் அந்தப் படத்தை தியேட்டரில் பார்த்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.  

அவரை எப்படியாவது மகனுடன் சேர்த்து விட வேண்டும் என்பதற்காக நாங்களும் முயல்கிறோம். அவரது மகனிடம் கடைசியாகப் பேசிய நம்பர் உள்ளிட்ட அனைத்தும் திருட்டு போய் விட்டதால் மிகுந்த மன வேதனையில் இருக்கிறார். உங்களின் பேட்டியைப் பார்த்தாவது அவரது மகன் தொடர்பு கொண்டால் நல்லதுதான்” என்றார் நம்பிக்கையுடன். 

கோமதி பாட்டிக்கு இன்று பிறந்தாள் என்பதை அறிந்து அவரை வாழ்த்தினோம். நம்மைச் சந்தித்ததால் கோமதி பாட்டியின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. அவரின் கதையைக் கேட்டு நாம் கனத்த இதயத்துடன் விடைபெற்றோம்.

அடுத்த கட்டுரைக்கு