Published:Updated:

ஆச்சரியங்களும் விநோதங்களும் நிறைந்த அமெரிக்க அதிபர் தேர்தல்! - ஒரு விரிவான பார்வை #MyVikatan

Representational Image ( Pixabay )

அமெரிக்க அரசியலின் போக்கு உலகம் முழுக்கவே பெரும் தாக்கத்தை உண்டாக்கும் என்பதால், அமெரிக்கத் தேர்தல் முடிவுகளை உலகமே ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

ஆச்சரியங்களும் விநோதங்களும் நிறைந்த அமெரிக்க அதிபர் தேர்தல்! - ஒரு விரிவான பார்வை #MyVikatan

அமெரிக்க அரசியலின் போக்கு உலகம் முழுக்கவே பெரும் தாக்கத்தை உண்டாக்கும் என்பதால், அமெரிக்கத் தேர்தல் முடிவுகளை உலகமே ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

Published:Updated:
Representational Image ( Pixabay )

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

தேர்தல்கள் உலகத்தில் பற்பல புரட்சிகளை நிகழ்த்தி இருக்கின்றன. ஒரு நாட்டின் தேர்தல் முடிவுகள், உலகின் பல்வேறு நாடுகளின் சமூக, பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளன. தேர்தல் முடிவுகள் நாடுகளிடையே பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தினாலும், உலக நாடுகளின் தேர்தல் முறைகள் ஒரே மாதியாக இருப்பதில்லை. ஒவ்வொரு நாட்டின் தேர்தல் முறைகளும் வெவ்வேறானவை. அந்த வகையில், உலக வல்லரசுகளுள் ஒன்றான அமெரிக்காவின் அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.

அமெரிக்க அரசியலின் போக்கு உலகம் முழுக்கவே பெரும் தாக்கத்தை உண்டாக்கும் என்பதால், அமெரிக்கத் தேர்தல் முடிவுகளை உலகமே ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

Hillary clinton
Hillary clinton
Andrew Harnik

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மக்களாட்சி நாடாக இருந்தாலும் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் முறை சற்று விநோதமானது. 2016-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபரான டொனால்டு ட்ரம்ப்பைவிட, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன் அதிக வாக்குகளைப் பெற்றார். ஆனால், ஹிலாரியால் அதிபராக முடியவில்லை. நம் ஊர் ஸ்டைலில் ``வெற்றிகரமான தோல்வி" என்று கூறி ஹிலாரி ஒதுங்கிக்கொண்டார். ட்ரம்ப் அதிபரானார். இதில் சட்டவிரோதம் எதுவுமில்லை! எப்படி நடந்தது இந்த மாயம்?

கிரிக்கெட் போட்டிகளின் டக்வெர்த் லூயிஸ் (Duckworth–Lewis) விதிமுறைகளைப் போன்று ஆச்சர்யமான, சற்று குழப்பமான தேர்தல் விதிமுறைகளே இதற்குக் காரணம். அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிக அளவு வாக்குகளைப் பெற்றால் மட்டுமே அரசியல் சட்டப்படி வெற்றியாளராக முடியாது!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வேறு என்ன வேண்டும்? ஆச்சர்யங்களும் விநோதங்களும் நிறைந்த அமெரிக்க அதிபர் தேர்தல் - ஒரு விரிவான பார்வை இதோ!

White House
White House
Louis Velazquez on Unsplash

தேர்தல் நாள்:

அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள். அமெரிக்க அரசியல் சாசனத்தின் 24 வது திருத்தத்தின்படி ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக முடியும். அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வழக்கமாக நவம்பர் மாதம் முதல் செவ்வாய்க்கிழமை நடத்தப்படும். இந்த ஆண்டு நவம்பர் 3 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நவம்பர் மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தேர்தல் நடத்தப்படும் என்பது மாற்றம் இல்லாதது, நிலையானது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கட்சிகள்:

அமெரிக்க அரசியல் அமைப்பின்படி அமெரிக்காவில் இரு கட்சிகள் மட்டுமே இருக்கின்றன. அவை குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியவை ஆகும். அதிபர் வேட்பாளர் இவற்றில் ஒரு கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.

US Election
US Election
Evan Vucci

குடியரசுக் கட்சி:

குடியரசுக் கட்சி அமெரிக்காவின் பழைமைவாத அரசியல் கட்சி ஆகும். இந்த ஆண்டு தேர்தலில் இக்கட்சியின் அதிபர் வேட்பாளர் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆவார். குடியரசுக் கட்சி கிராண்ட் ஓல்ட் கட்சி என்றும் அழைக்கப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் இக்கட்சி வரி குறைப்பு, துப்பாக்கி உரிமைகள் மற்றும் குடியேற்றத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் ஆகிய பல்வேறு சீர்திருந்தங்களை மேற்கொண்டது. எப்போதுமே அமெரிக்காவின் கிராமப்புறங்களில் உள்ள மக்களிடம் குடியரசுக் கட்சிக்கான ஆதரவு வலுவாக இருக்கும். ஜார்ஜ் டபிள்யூ புஷ், ரொனால்ட் ரீகன் மற்றும் ரிச்சர்ட் நிக்சன் ஆகியோர் இக்கட்சியில் புகழ்பெற்ற தலைவர்கள் ஆவர்.

ஜனநாயகக் கட்சி:

ஜனநாயகக் கட்சி அமெரிக்காவின் தாராளவாத அரசியல் கட்சி ஆகும். இக்கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன். இவர் பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது துணை அதிபராக 8 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார். இவர் மிகவும் பிரபலமான மற்றும் அனுபவமிக்க அரசியல்வாதி. சமூக சமத்துவம், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் தாராளமயம் மூலம் சமூக பாதுகாப்பு வலையை வலுப்படுத்துதல் ஆகியவை இக்கட்சியின் முக்கியக் கொள்கைகள் ஆகும். எல்.ஜி.பி.டி உரிமைகள், பன்முக கலாசாரவாதம், மதச்சார்பின்மை, வாக்களிக்கும் உரிமைகள் மற்றும் சிறுபான்மை உரிமைகள் ஆகியவற்றையும் இக்கட்சி ஆதரிக்கிறது. பராக் ஒபாமா, பில் கிளின்டன், ஜிம்மி கார்ட்டர் உள்ளிட்டோர் இக்கட்சியின் புகழ்பெற்ற தலைவர்கள் ஆவர்.

Trump
Trump
Matt York

அவைகள்:

இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவை இருப்பது போல அமெரிக்க நாடாளுமன்றத்திலும் இரு அவைகள் உண்டு. அவை பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகும். இவை இரண்டும் இணைந்தது காங்கிரஸ் எனப்படும்.

பிரதிநிதிகள் சபை:

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிரதிநிதிகளின் எண்ணிக்கை ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையால் தீர்மானிக்கப்படுகிறது. தற்போது பிரதிநிதிகள் சபையில் 435 வாக்குரிமையுள்ள மற்றும் 6 வாக்குரிமையற்ற உறுப்பினர்கள் உள்ளனர். பிரதிநிதிகள் சபையின் பதவிக்காலம் 2 ஆண்டுகள்.

செனட் சபை:

அமெரிக்காவில் 50 மாநிலங்கள் உள்ளன. ஒரு மாநிலத்துக்கு 2 பிரதிநிதிகள் வீதம் மொத்தம் 100 செனட் சபை உறுப்பினர்கள் உள்ளனர். செனட் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள்.

இரண்டாண்டுக்கு ஒரு முறை செனட்டின் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் மாறும்விதமாக தேர்தல்கள் நடக்கும்.

பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரண்டு அவைகளிலும் உள்ள உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

Senate house
Senate house
Stephen Walker on Unsplash

செனட்டர்கள் தங்கள் முழு மாநிலத் தேவைகள் மற்றும் பிரச்னைகளை முன்னெடுக்கின்றனர். பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் தனிப்பட்ட மாவட்டங்களின் தேவைகளை முன்னெடுப்பர்.

பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகியவற்றிற்கான தேர்தல்களும் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலும் வெவ்வேறானவை.

அதிபர் தேர்தல் படிநிலைகள்:

Step 1: மாநிலங்களில் கட்சி அளவிலான தேர்தல்கள்.

(தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என்பதை இரு கட்சிகளும் முடிவு செய்யும் தேர்தல்கள்.)


Step 2: Electoral College உறுப்பினர்களை மக்கள் தேர்வு செய்யும் பொதுத்தேர்தல்.

Step 3: தேர்வு செய்யப்பட்ட Electoral College உறுப்பினர்கள் கூடி அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல்.

Trump
Trump
Evan Vucci

அதிபருக்கான முக்கியத் தகுதிகள்:

* அதிபர் வேட்பாளர் அமெரிக்காவில் பிறந்த குடிமகனாக இருக்க வேண்டும்.


* தொடர்ந்து 14 ஆண்டுகள் அமெரிக்காவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.


* 35 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

அதிபர் தேர்வு செய்யப்படும் முறை:

அமெரிக்க அதிபர், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவது கிடையாது. 50 மாநிலங்களிலுள்ள மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் தேர்வு செய்வது ``தேர்வு செய்வோர் அவை" எனப்படும் Electoral College உறுப்பினர்களையே. Electoral College என்பது அமெரிக்க அரசியலமைப்பால் நிறுவப்பட்ட ஒன்று.

இது வாக்காளர்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமைப்பாகும். இது அமெரிக்காவின் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் ஒரே நோக்கத்துக்காக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாகிறது.

Representational Image
Representational Image

ஒவ்வொரு மாநிலமும் அதன் மக்கள் தொகையின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான Electoral College பிரதிநிதித்துவத்தைப் பெறுகின்றன. உதாரணமாக, மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட கலிபோர்னியா மாநிலத்துக்கு 55 தேர்வு செய்வோர் அவை உறுப்பினர்கள் உண்டு. அதே போல மிகச் சிறிய மாநிலமான வெர்மாண்ட் மாநிலத்துக்கு 3 உறுப்பினர்கள்தான்.

இதில் ஒரு ஆச்சர்யமான சுவாரஸ்யம் என்னவெனில் 50-ல் 48 மாநிலங்களில் மாநில வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவருக்கு, அந்த மாநிலத்தின் எல்லா அவை உறுப்பினர் இடங்களையும் தந்துவிடுகின்றன.

இதற்கு "Winner takes all" என்று பெயர்.

(மாநிலத்தில் அதிக வாக்குகள் வென்றவருக்கு அந்த மாநிலத்தின் அனைத்து Electoral College இடங்களையும் வழங்குவது.)

இதில் விதிவிலக்காக மெயின் மற்றும் நெப்ராஸ்கா மாநிலங்கள் உள்ளன. இவை இரண்டும் தங்கள் மாநிலத் தேர்தலில் எந்தத் தொகுதியில் எந்தக் கட்சி ஜெயிக்கிறதோ,அதைப் பொறுத்து அந்தக் கட்சியின் அதிபராகப் போட்டியிடுபவருக்கு Electoral College இடங்களை அளிக்கின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் வாக்களிக்கும்போது, மாநில அளவில் மட்டும்தான் மக்களின் வாக்குகள் உபயோகமாகின்றன. அதாவது, மக்கள் வசிக்கும்-வாக்களிக்கும் மாநிலத்தில் வெற்றி பெறப்போவது யாரென்று அறிய மட்டும்தான் இந்த வாக்கு பயன்படும்.

US
US
Renan Kamikoga on Unsplash

இதன் பொருள் மக்கள் தங்களுக்கு விருப்பமான வேட்பாளருக்கு வாக்களிக்கும்போது,அவர்கள் ஒரு தேசிய போட்டியைவிட மாநில அளவிலான போட்டியில் வாக்களிக்கின்றனர்.

மேலும், வெற்றியாளர் தேசிய அளவில் அதிக வாக்குகளைப் பெறும் வேட்பாளர் அல்ல. அதிக Electoral College வாக்குகளைப் பெறுபவரே. தேசிய அளவில் மொத்தம் 538 Electoral College இடங்கள் உள்ளன. இந்த Electoral College வாக்குகளை வெல்ல அதிபர் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 270 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களை வென்றவர் அதிபர் ஆகிறார்.

எனவே சதவிகித அடிப்படையில் அதிக ஓட்டுகளைப் பெறுபவரை விட, அதிக Electoral College-களைப் பெறுபவரே வெற்றியாளர் ஆகிறார்.

உதாரணமாக 2016 தேர்தலில் ஹிலாரி கிளின்டன், டொனால்டு ட்ரம்ப்பை விட 2.1% அதிக வாக்குகளைப் பெற்றும் தோல்வியடைந்தார்.

ஏனெனில், 2016 தேர்தலில் ட்ரம்ப் 304 Electoral College வாக்குகளையும், ஹிலாரி கிளின்டன் 227 Electoral College வாக்குகளையும் பெற்றனர் (2016-ல் 7 உறுப்பினர்கள் மாறி வாக்களித்தனர்). எனவே, இந்த Winner takes all மற்றும் Electoral College முறைகளில் சீர்திருத்தங்கள் தேவை என அமெரிக்காவில் அப்போதே பரவலான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், எவ்வித மாற்றமும் இன்றி அதே முறையில்தான் இத்தேர்தலும் நடக்கிறது.

Trump
Trump
Evan Vucci

செல்வாக்கு:

இரு கட்சிகளும் குறிப்பிட்ட மாநிலங்களில் அசைக்க முடியாத செல்வாக்குடன் இருக்கும். பொதுவாகவே, அமெரிக்காவின் மொத்தமுள்ள 50 மாநிலங்களில், குடியரசுக்கட்சி 20 மாநிலங்களில் உள்ள அனைத்து Electoral College இடங்களையும் பிடித்துவிடும். அவ்வாறே ஜனநாயகக் கட்சியும் 20 மாநிலங்களில் உள்ள Electoral College இடங்களையும் பிடித்துவிடும்.

மீதமுள்ள 10 மாநிலங்களை வெல்வது யார் என்பதுதான் உண்மையான போட்டி (Toss-up). இந்த Toss-up மாநிலங்கள் கடந்த தேர்தல்களில் இரு கட்சிகளுக்கும் மாறிமாறி ஆதரவு அளித்தவை (Swing States) ஆகும்.

எனவே, குடியரசுக் கட்சி பலமாக இருக்கும் டெக்ஸாஸ் போன்ற மாநிலங்களில் இரு கட்சிகளின் பிரசாரங்களைப் பெரிதும் காண முடியாது. அவ்வாறே ஜனநாயகக் கட்சி பலமாக இருக்கும் கலிபோர்னியா, நியூயார்க் போன்ற மாநிலங்களிலும் பெரிய அளவில் இரு கட்சிகளுமே பிரசாரங்கள் செய்யாது.

எனவே, Swing States-களில் மட்டுமே இரு கட்சிகளும் தீவிரப் பிரசாரங்கள் மேற்கொள்ளும். வேட்பாளர்களின் நேரடிப் பிரசாரங்கள் இங்கு அனல் பறக்கும். இவை தவிர தொலைகாட்சிகள் மற்றும் இணைய தளங்கள் மூலமாகவும் கட்சிகள் விளம்பரங்கள் செய்யும். வேட்பாளர்களின் பல்வேறு ஆதரவுக் குழுக்கள்,பல்வேறு கொள்கை சார்ந்த குழுக்கள்,பெரு வணிக நிறுவனங்கள், சூப்பர் பேக்ஸ் எனப்படும் அரசியல் செயல்பாட்டுக் குழுக்கள் ஆகியவை தாம் சார்ந்த வேட்பாளருக்கு ஆதரவாகக் கடும் பிரசாரங்களை மேற்கொள்கின்றன.

US elections
US elections
Jennifer Burk on Unsplash

கருத்துக் கணிப்புகள்:

அதிபர் தேர்தலில் 270 இடங்களுக்கு மேல் வென்று யார் அதிபராகப் போகிறார் என்ற கருத்துக் கணிப்புகள் உலகம் முழுக்கவே பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக வந்துகொண்டிருக்கின்றன. உதாரணமாக இங்கிலாந்தின் Financial Times மொத்த Electoral College இடங்களை Solid, Leaning, Toss-up என்று மூன்று வகையாகப் பிரித்து கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் இரண்டாவது வார நிலவரப்படி Financial Times வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகள் கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளன.

Solid என்பது நிச்சயமாக வெல்லக்கூடிய தொகுதிகள். இதில் ஜோ பிடனுக்கு 190 இடங்களும், டொனால்டு ட்ரம்ப்புக்கு 80 இடங்களும் கிடைக்கலாம்.

Leaning என்பது கட்டாயம் மக்கள் இவ்வாறுதான் முடிவு எடுப்பார்கள் என்னும் தொகுதிகள். இவற்றில் ஜோ பிடனுக்கு 108 இடங்களும், டொனால்டு ட்ரம்ப்புக்கு 39 இடங்களும் கிடைக்கலாம்.

இறுதியாக 121 தொகுதிகள் Toss-up எனப்படும் சமமான வாய்ப்புள்ள தொகுதிகளாக உள்ளன. இந்த 121 தொகுதிகளும் 9 மாநிலங்களில் அமைந்துள்ளன! (Swing States)

(பார்க்க: https://ig.ft.com/us-election-2020/ )

வாக்களிக்கும் முறைகள் மற்றும் கருவிகள்:

அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் வாக்களிக்கும் கருவிகளின் மற்றும் வாக்களிக்கும் முறைகள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகின்றன.

மின்னணு சாதனங்கள், காகித வாக்குகள், அஞ்சல் முறைகள் எனப் பல்வேறு முறைகள் வழக்கத்தில் உள்ளன.

1. ஆப்டிகல் ஸ்கேன் பேப்பர் வாக்குச்சீட்டு அமைப்புகள் (Optical Scan Paper Ballot Systems-OSP).

2. நேரடி பதிவு மின்னணு அமைப்புகள் (Direct Recording Electronic (DRE) Systems.

3. வாக்குச்சீட்டு குறிக்கும் சாதனங்கள் மற்றும் அமைப்புகள் (Ballot Marking Devices and Systems-BMD).

4. பஞ்ச் கார்டு வாக்களிப்பு முறைகள் (Punch Card Voting Systems) என வாக்களிக்கும் கருவிகளின் வகையும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.

ஆச்சரியங்களும் விநோதங்களும் நிறைந்த அமெரிக்க அதிபர் தேர்தல்! - ஒரு விரிவான பார்வை #MyVikatan

பதவியேற்பு:

அமெரிக்க அரசியல் அமைப்பு சட்டப்படி ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபருக்கான பதவியேற்பு நாள் ஆகும். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கேபிடல் கட்டடத்தின் படிகளில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் புதிய அதிபர் ஜனவரி 20 அன்று அதிகாரபூர்வமாகப் பதவியேற்கிறார்.

பதவியேற்பு விழாவுக்குப் பிறகு, புதிய அதிபர் வெள்ளை மாளிகையில் தனது நான்கு ஆண்டுகாலப் பதவியைத் தொடங்குகிறார்.

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான உலக அரசியல் முன்னெடுப்புகள் அமெரிக்க அரசியலையும், புதிய அதிபரையும் சார்ந்தே அமையும். இந்தக் காலகட்டத்தில் குடியரசுக் கட்சி அல்லது ஜனநாயகக் கட்சியின் கொள்கைகள் மற்றும் முடிவுகள் உலக அளவில் பெரும் தாக்கத்தை உண்டாக்கும். எனவே, ஜனவரி 20, 2021 அன்று ஜோ பிடன் அல்லது டொனால்டு ட்ரம்ப் ஆகிய இருவரில் அமெரிக்க அதிபராக யார் பொறுப்பேற்கப் போகிறார் என்ற மில்லியன் டாலர் கேள்விக்கான பதிலை அறிய உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism