கோயில்களில் வேண்டுதல் நிமித்தமாக காணிக்கை செலுத்துவது வழக்கமானது. பணம், பொன், முடி, பழங்கள் என பல்வேறு விதமான பொருள்களை காணிக்கையாகச் செலுத்துவர். இவற்றுள் விசித்திரமான காணிக்கைகளும் அடக்கம்.
குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கோயிலில் நண்டுகளை காணிக்கையாகச் செலுத்தி வழிபாடு செய்கின்றனர். இதன் மூலம் காது தொடர்பான பிரச்னைகள் குணமடைவதாக மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது.

குஜராத் மாநிலம், சூரத்தில் அமைந்துள்ள ராம்நாத் ஷிவ் கெலா என்ற சிவன் கோயிலில், காது தொடர்பான பிரச்னை உடையோர், உயிருடன் இருக்கும் நண்டை காணிக்கையாகச் செலுத்தி வேண்டுகின்றனர். இதனால் காது தொடர்பான பிரச்னைகள் குணமடைந்து விடும் என உறுதியாக நம்புகின்றனர். இதனால் சூரத் மட்டுமல்லாது பிற பகுதிகளில் இருந்தும் இக்கோவிலுக்கு வருகின்றனர்.
ஆண்டிற்கு ஒரு முறை இவ்வாறு காணிக்கை செலுத்தும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக இக்கோயில் பக்தர்கள் கூறுகின்றனர். உயிருள்ள நண்டுகளை காணிக்கையாகச் செலுத்துவது பார்ப்பதற்கே விசித்திரமாக உள்ளது.