Published:Updated:

`தகவல், அறிவு, தெளிவு..!' - வேறுபாட்டை விளக்கும் குட்டிக்கதை #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

இன்றைய இளைய தலைமுறை தகவல்களைச் சேகரிக்கும் இணைய தலைமுறையாகவே வளர்ந்து வருகிறது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நமக்குத் தேவைப்படும் பற்பல தகவல்களை பல்வேறு இணைய மூலங்களில் இருந்தும் நாம் தெரிந்துகொள்கிறோம். நேரடியாகப் பார்த்தும், கேட்டும், புத்தகங்களில் படித்தும் பல விஷயங்களை அறிகிறோம். சில விஷயங்களை சுயமாகச் சிந்திக்கிறோம்.

இவ்வாறு நாம் ஏதேனும் ஒன்றினை அறிந்துகொள்வதில் பல முறைகள் இருப்பினும், இவற்றின் இடையே என்ன வேறுபாடு என்பது கேள்விக்குரியதே!

எனது ஒரு குட்டிக்கதை மூலமாக இதை விளக்க முயல்கிறேன்!

அது காட்டினுள் அமைந்துள்ள ஒரு பிரபலமான ஆசிரமம். அந்த ஆசிரமத்துக்கு பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள். ஒருநாள் அந்த ஆசிரமத்தின் தலைமைத் துறவி பக்தர்களுக்கு சொற்பொழிவாற்றி முடித்த பின்னர், அதில் ஒரு பக்தர் துறவியைத் தனியாகச் சந்திக்க வேண்டுமென சீடர்களிடம் விருப்பம் தெரிவித்தார்.

Representational Image
Representational Image

அவரைத் துறவி தன் அறைக்கு அழைத்து வரச் செய்தார். துறவியிடம் பக்தர், ``ஐயா எனக்கு ஒரு மிகப்பெரிய சந்தேகம் இருக்கிறது. நீங்கள் பேசும்போது பெரும்பாலான விஷயங்கள் எனக்குப் புரிந்ததுபோல் உள்ளன. ஆனால், பிறகு சிந்தித்துப் பார்த்தால் குழப்பமாகவே உள்ளது. ஒன்றுமே நினைவுக்கு வருவதில்லை. நான் தெளிவடைவது எப்படி?" என்று கேட்டார்.

அதற்குத் துறவி சன்னமாக சிரித்துக்கொண்டே, ``தெளிவு என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். சற்று யோசித்த பக்தர், ``இல்லை ஐயா! தெளிவு என்றால் என்ன என்பது குறித்த அறிவு எனக்கு இல்லை" என்றார்.

``சரி அது போகட்டும்! அறிவு என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?" என்ற தனது அடுத்த கேள்வியைக் கேட்டார் துறவி.

நாம் கூறிய பதில்களில் இருந்து நம்மிடமே கேள்வி கேட்கிறாரே என்ற ஆச்சர்யத்துடன் பக்தர் ``அறிவு என்பது தகவல்களை அறிந்து வைத்திருப்பது" என்றார்.

``சரி இரண்டும் போகட்டும், தகவல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?" என்ற தனது அடுத்த கேள்வியைப் போட்டார் துறவி.

பக்தர் சற்று எரிச்சலுடன் "அனைத்துக் கேள்விகளுக்கும் நீங்களே பதில் கூறிவிடுங்கள்" என்றார்.

பக்தரின் பொறுமையின்மையைப் பார்த்த துறவி மீண்டும் மென்மையாகச் சிரித்துக்கொண்டே, ``சரி கூறுகிறேன். அதற்கு முன்பாக என்னிடம் மூன்று முக்கியமான சீடர்கள் உள்ளனர். அவர்களை உங்களுக்கு அறிமுகம் செய்யட்டுமா?" என்று கேட்டார்.

தான் கேட்ட கேள்விக்கும், துறவி மூன்று சீடர்களை அறிமுகம் செய்வதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்று பக்தருக்குப் புரியவில்லை!. இருந்தாலும் துறவி கூறுவதில் ஏதோ அர்த்தம் இருக்கிறது என்ற நோக்கில், ``சரி ஐயா!" என்றார்.

துறவி தன்னுடைய மூன்று சீடர்களையும் அழைத்தார். முதல் சீடரைக் காட்டி, ``இவர் எனக்கு மிகவும் முக்கியமானவர். என்னுடைய அன்றாடப் பணிகள், எனக்குத் தேவையான தகவல்கள், நான் யாரைச் சந்திக்க வேண்டும் போன்ற அனைத்தையுமே இவர்தான் செய்து கொடுப்பார். என்னுடைய பயணத் திட்டங்களை வகுப்பதும் இவரே. எனக்கு ஏதாவது தேவை என்றால் உடனே இவரை அழைத்தால் அடுத்த நொடி அந்த தேவையை எனக்கு அவர் நிறைவேற்றித் தருவார்" என்றார்.

``அப்படியா!" என்றார் பக்தர்.

Representational Image
Representational Image

அடுத்ததாக இரண்டாவது சீடரைக் காட்டிய துறவி, ``இவர் முதல் சீடர் அளவுக்குப் பெரிதாக எனக்கு எந்த உதவியும் செய்ய மாட்டார். ஆசிரமத்துக்கு வரும் என்னுடைய பக்தர்களுடன் உரையாடுவார். அவர்களுக்குத் தேவையான விளக்கங்களைக் கொடுப்பார்.

ஆசிரமத்தில் உள்ள பழைமையான நூல்களைப் படித்து புரிந்து வைத்திருப்பார். தத்துவங்கள் குறித்து தொடர்ந்து படித்துக்கொண்டிருப்பார்.

என்னுடைய சொற்பொழிவுகளில் ஒன்றைக்கூட தவறவிடாமல் தொடர்ச்சியாகக் கேட்பார். ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் எனக்கு சந்தேகம் ஏற்படும்போது இந்த சீடரை நான் பயன்படுத்திக் கொள்வேன். ஆனால், இவர் முதல் சீடர் அளவு எப்போதும் எனக்குப் பயன்படமாட்டார். அவ்வப்போது மட்டுமே எனக்கு உதவுவார். நல்ல திறமையானவர்" என்றார் துறவி.

பெரும் வியப்புடன், ``அப்படியா!" என்றார் பக்தர்.

இறுதியாக மூன்றாவது சீடரைக் காட்டி பேசத்தொடங்கினார் துறவி, ``இவர் என்னுடைய மூன்றாவது சீடர். இவர் முதல் சீடர் மற்றும் இரண்டாவது சீடர் செய்யக்கூடிய பணிகள் எதையுமே செய்ய மாட்டார். ஆசிரமத்தில் இருப்பார். அனைத்து சீடர்களும் தியானங்கள் செய்கையில் இவரும் அங்கு அமர்ந்திருப்பார்.

தனியாகவும் அடிக்கடி தியானங்கள் செய்வார். வேறு எந்தக் குறிப்பிட்ட பணியையும் இவர் செய்ய மாட்டார். இவர்தான் என்னுடைய மூன்றாவது சீடர்" என்றார் துறவி.

``உங்கள் சீடர்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி" என்றார் பக்தர் புன்னைகையுடன்.

துறவி தொடர்ந்தார் ``எனது இந்த மூன்று சீடர்களும் சிறப்பானவர்கள். இப்போது நான் உங்களிடம் இறுதியாக ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்குப் பதில் கூறுங்கள்" என்றார் துறவி.

``கேளுங்கள் ஐயா! என்னால் இயன்றால் பதில் கூறுகிறேன்" என்றார் பக்தர்.

``இந்த மூன்று சீடர்களில் யாரை நான் என்னுடைய அருகிலேயே வைத்திருக்க வேண்டும்? யாருக்கு அதிக முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுக்க வேண்டும்?" என்றார் துறவி.

பக்தர் சற்றும் யோசிக்காமல் ``முதல் சீடரைத்தான் உங்களுடைய அருகில் எப்போதும் வைத்திருக்க வேண்டும். அவர் உங்களுடன் எப்போதும் இருந்தால், உங்களுக்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் செய்துகொண்டே இருப்பார்தானே" என்றார்.

துறவி சத்தமாக வாய்விட்டுச் சிரித்தபடியே ``இல்லை! இல்லை! நான் எப்போதுமே என்னுடைய மூன்றாவது சீடரைத்தான் அருகிலேயே வைத்துக்கொண்டுள்ளேன்" என்றார்.

Representational Image
Representational Image

பக்தருக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. ஒன்றுமே செய்யாத மூன்றாவது சீடரை அருகில் வைத்துக்கொண்டு துறவி என்ன செய்து கொண்டிருப்பார்? என்று சிந்தித்தபடி ``எனக்குப் புரியவில்லை ஐயா! ஏன் அப்படி?" என்று கேட்டார்.

``தெளிவு என்றால் என்ன என்று நீங்கள் முதலில் என்னிடம் ஒரு கேள்வி கேட்டீர்களே அதற்கான விளக்கம்தான் இது."

``நம் முதல் சீடர் இணையதளங்களில் இருந்து நாம் பெறக் கூடிய தகவல்களைப் போன்றவர். எந்த உதவி வேண்டுமானாலும் முதல் சீடரிடம் இருந்து உடனுக்குடன் கிடைப்பது போன்றே, இணையதளங்களில் இருந்து அனைத்து தகவல்களும் நமக்கு உடனுக்குடன் கிடைக்கும். ஆனால், சில நாள்கள் கழித்து அதே தகவலை மனிதனிடம் கேட்டால், அவனுக்குத் தெரியாது. மறந்து போயிருக்கும். மீண்டும் இணையத்தில் தேடித்தான் அதைத் தெரிந்துகொள்ள முடியும். ஏனென்றால் இணையதளத்தில் பல்வேறு மூலங்களிலிருந்தும் நாம் பெறுவது தகவல் மட்டுமே! அவ்வாறு இந்த முதல் சீடர் எனக்கு தகவல் அளிப்பவராக மட்டுமே இருக்கிறார். தகவல்கள் தேவைப்படும்போது மட்டுமே நான் இவரைப் பயன்படுத்திக் கொள்கிறேன்!.

இரண்டாவது சீடர் மனிதர்கள் நேரிடையாகப் பார்த்தும், பிறரிடமிருந்து கேட்டும், புத்தகங்களைப் படித்தும், அனுபவித்தும் உணரும் அறிவு போன்றவர். ஏதாவது ஒரு விஷயத்தை மனிதன் நேரடியாக அனுபவித்து உணர்ந்தாலோ அல்லது படித்தோ, கேட்டோ, பார்த்தோ உணர்ந்தாலோ அந்த விஷயம் அவனுக்கு அவ்வளவு சீக்கிரம் மறந்து போய் விடாது. அது அவனது அறிவாக நீண்டகாலம் நீடித்திருக்கும்.

என்னுடைய இரண்டாவது சீடர் அப்படிப்பட்டவர்தான். இவர் அறிவு போன்றவர். அதனால் நான் அவரை அவ்வப்போது பயன்படுத்திக் கொள்கின்றேன்" என்ற துறவி தொடர்ந்தார்.

Representational Image
Representational Image

``மூன்றாவது சீடர் மனிதர்களின் சுயசிந்தனை போன்றவர். மனிதனுக்கு சுயசிந்தனை மிக மிக முக்கியமானது.

சுயசிந்தனையின் விளைவு உடனே வெளியில் தெரியாது. ஆனால், சுய சிந்தனையின் காரணமாய் மனிதனுக்குக் கிடைப்பதே தெளிவாகும். தெளிவின் உச்சம் ஞானம். எனவே, மூன்றாவது சீடரை - தெளிவை என்னுடைய அருகிலேயே எப்போதும் வைத்துக்கொண்டிருக்கிறேன்.

அவருக்கு மேலும் மேலும் தெளிவூட்டிக் கொண்டு இருக்கின்றேன்" என்றார் துறவி.

பக்தர் மகிழ்வுடன், ``புரிந்தது ஐயா"என்றபடி துறவியிடமிருந்து விடைபெற்றார்.

ஆம் நண்பர்களே! இணையதளத்தின் பல்வேறு மூலங்களில் இருந்து நமக்கு கிடைக்கக் கூடியவை தகவல்கள் மட்டுமே! அந்தத் தகவல்கள் நம் மனதில் பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவற்றால் அப்போதைக்கு மட்டுமே பயன்.

இணையதளங்கள் மூலமாகப் பார்ப்பதும், கேட்பதும், படிப்பதும் தகவலா? அறிவா? எனும் கேள்வி இந்த இடத்தில் இயல்பாகவே எழும். நேரடி அனுபவங்களே முழுமையான அறிவூட்டும்.

இணையதளங்களில் இருந்து நாம் கிரகிக்கக் கூடியவை அனைத்தும் அறிவு போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கக் கூடிய தகவல்கள்தான்.

இதில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் என்னவெனில், ஒருவர் பணிபுரிவதே கணினி வழிதான் எனும்போது அவர்களது பணி இந்தத் தகவல்கள் எனும் வகையினுள் வருவதில்லை! அவர்களது வட்டம் வேறு.

தமக்குத் தேவைப்படும் பற்பல தகவல்களை பல்வேறு இணைய மூலங்களில் இருந்தும் தேடித் தெரிந்துகொள்வோரையே தகவல் தெரிந்துகொள்வோர் என்கிறோம்.

கணினிகளிலேயே பணியாற்றுவதும், கணினி வழிச் சேவைகளும் காலத்தின் கட்டாயம் என்பதால் அவற்றை நாம் திறந்த மனதுடன் ஏற்கவே வேண்டும்!

Representational Image
Representational Image

இன்றைய இளைய தலைமுறை தகவல்களைச் சேகரிக்கும் இணைய தலைமுறையாகவே வளர்ந்து வருகிறது. ``மூக்கணாங் கயிறுகள் மாற்றப்படுவது மாடுகளுக்கு ஒருபோதும் பயனளிக்காது" என்ற தோழர் ஹோசிமினின் வரிகளுக்கேற்ப,

மனிதர்களுக்கு அடிமையாக வாழ்வது மட்டுமல்ல, தொழில்நுட்பத்துக்கு அடிமையாக வாழ்ந்தாலும் நாம் அடிமைகள்தான் என்பதை மறந்துவிடக் கூடாது!

புத்தகங்களில் படித்தும், ஏதேனும் ஒன்றைப் பார்த்தும், கேட்டும் நம் அனுபவங்களில் இருந்தும் நாம் அறிந்துகொள்ளக் கூடியதாக அறிவு இருக்கின்றது.

அறிவு மனிதனுக்கு அடிப்படையான ஒன்று. அதை வளர்த்துக்கொள்ள நாம் புத்தகங்களை வாசிப்பதும், காதுகளையும், கண்களையும் கூர்மைப்படுத்திக் கொள்வதும், அனுபவங்களைத் திறந்த மனதுடன் ஏற்பதுமே மிகச் சிறந்த வழி. வாசித்து அல்லது அனுபவித்து அறிந்துகொள்வதன் மூலமாக மட்டுமே ஒருவன் அறிவாளியாகவும் புத்திசாலியாகவும் முடியும்!

அடுத்தது தெளிவு. இந்தத் தெளிவானது படிப்பதாலும், அனுபவிப்பதாலும் ஒருபோதும் வரப்போவதில்லை.

தெளிவெனும் ஊருக்கு, அறிவானது சிறந்ததொரு வழிகாட்டிப் பலகையாகவே இருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் சுய சிந்தனையின் விளைவாக விளைவதே தெளிவு. தெளிவின் உச்சத்தையே ஞானம் என்கின்றனர்.

மூளையைக் கொண்டு சிந்திப்பது அறிவென்றும், மனதைக் கொண்டு சிந்திப்பது தெளிவென்றும் ஞானியர் கூறுவர்.

சுயசிந்தனை மட்டுமே போதுமா? தொழில்நுட்ப அறிவே மனிதனுக்குத் தேவையில்லையா? என்றால் தொழில்நுட்பம் அவசியம் தேவை! சுயசிந்தனை எனும் உணவுக்கு ஊறுகாயாக!

எனவே, வெறும் தகவல்களை மட்டுமே அறிந்து வைத்திருக்கும் கணிப்பொறிகள், மொபைல் போன்கள் போன்ற கருவிகளுக்கு இணையாக நாம் மாறிவிடாமல், அறிவாளிகளாகவும்,

தெளிந்தவர்களாகவும் மாற வேண்டும். அதற்கு நமக்கு சிறந்த அனுபவங்கள் தேவை. சிறந்த நூல்கள் தேவை.

நம்முடைய சுய சிந்தனையே தெளிவுக்கான அடிப்படையாக அமைந்திருப்பதால், ஒவ்வொருவரும் சுய சிந்தனையின் பக்கம் நம்முடைய கவனத்தைத் திருப்புவோம்.

அனைத்துக்கும் இணையத்தையே நம்பியிராமல், கூகுளையே ஆண்டவராக மாற்றிவிடாமல், தகவல்களைத் தேவையின்போது மட்டுமே பயன்படுத்துவோம். அறிவை அடிக்கடி உபயோகிப்போம். சுய சிந்தனையை எப்போதும் கைக்கொள்வோம்!

தெளிவான சுயசிந்தனை கொண்ட சமுதாயம் உருவாவதற்கு ஆரம்பப் புள்ளியாக மாறுவோம்!

-அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு