Published:Updated:

``பசியில் தவிச்சோம்; இன்னைக்கு 60 பேரின் பசிக்கு உதவறோம்!" - சமூக சேவையில் அசத்தும் இளைஞர்கள் குழு

Prem kumar
Prem kumar

"ஒருவேளைகூட நல்ல சாப்பாடு கிடைக்காம, சிரமத்துல இருந்தோம். அப்போல்லாம் தேன் மிட்டாய்தான் எங்களோட பலநேர பசியைப் போக்கியது."

``நம்மள்ல பலரும் தினமும் மூணு வேளை சாப்பாட்டைத் திருப்தியா சாப்பிடுறோம். ஆனா, நம்ம ஊர்ல, நம்ம பக்கத்துல வாழ்றவங்கல பலர் ஒருவேளை உணவுக்குக்கூட வழியில்லாம சிரமப்படுறாங்க. இதைக் கண்டும் காணாம இருக்கிறது நியாயமா? அந்தக் குற்ற உணர்வு எனக்கு வந்ததாலும், இனி வரக்கூடாது என்பதாலும்தான் நண்பர்களுடன் இணைந்து எங்களால இயன்ற சமூகப் பணிகளைச் செய்துகிட்டிருக்கிறோம்." - எளிமையாகவும், யதார்த்தமாகவும் உரையாடலைத் தொடங்குகிறார், பிரேம் குமார். 

Prem kumar mother & wife
Prem kumar mother & wife

திண்டுக்கல் மாவட்டம் வட மதுரை அருகேயுள்ள மோர்பட்டியைச் சேர்ந்தவர், `பசியில்லா வடமதுரை' என்ற குழுவின் மூலம் தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் ஆதரவற்ற மக்களின் பசியைப் போக்கிவருகிறார். தவிர, இவர்களின் பிற சமூகப் பணிகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் அதேவேளையில், நம் சமூகப் பொறுப்புணர்வு குறித்துச் சிந்திக்கவும் தூண்டுகின்றன.

``என் கூடப் பிறந்தவங்க அஞ்சு பேர். அப்பா மாடு வியாபாரம் செய்றார். சின்ன வயசுல இருந்தே எனக்கு சினிமா இயக்குநராகணும்னு ஆசை. படிப்பில் பெரிசா ஆர்வமில்லை. டிப்ளோமா படிப்பை முடிச்சதும், சென்னை போனேன். கலைஞர் டிவி `நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியிலும், பிறகு `மாணிக்' என்ற திரைப்படத்துலயும் உதவி இயக்குநராக வேலை செய்தேன். என்னுடன் நண்பன் விஸ்வநாதனும் இயக்குநர் கனவுடன், உதவி இயக்குநரா வேலை செய்தார். உதவி இயக்குநரா வேலை செய்தப்போ பெருசா வருமானம் கிடைக்கலை. அந்த அஞ்சு வருஷ சென்னை வாழ்க்கையில நிறைய கஷ்டம். ஒருவேளைகூட நல்ல சாப்பாடு கிடைக்காம, சிரமத்துல இருந்தோம். அப்போல்லாம் தேன் மிட்டாய்தான் எங்களோட பலநேர பசியைப் போக்கியது.  

Prem kumar
Prem kumar

அப்போல்லாம் வடபழனியிலதான் அதிகம் சுத்திட்டிருப்பேன். என்னோட பசியை பிறர்கிட்ட சொல்லி, உதவிக் கேட்க முடியும். ஆனா, மனநலம் சரியில்லாத பலரும் தனக்கு உதவி வேணும்ங்கிறதைக்கூட பிறர்கிட்ட கேட்க முடியாம, கீழ கிடந்ததை எடுத்துச் சாப்பிடுவாங்க. அந்தக் காட்சிகளைப் பார்த்து ரொம்பவே நொந்துபோனேன். இப்படியான மனிதர்களுக்கு ஒருவேளை உணவாவது கொடுத்து உதவணும்னு நினைச்சது அப்போதான்.

ஒருநாள் வீட்டுக்கு வந்திருந்தேன். சரியா சாப்பிடாம இருந்ததால, உடல்நிலை கொஞ்சம் சரியில்லாம இருந்தேன். அதனால, வருத்தப்பட்ட அப்பா, என்னை மேற்கொண்டு சென்னைக்குப் போக வேண்டாம்னு சொல்லிட்டார். அப்பாகூட சேர்ந்து மாட்டு வியாபாரத்துக்குப் போயிட்டிருந்தேன். ஓய்வு நேரம் அதிகம் கிடைச்சதால, என் ஆசைப்படி ஏழ்மை நிலை மனிதர்களுக்கு உதவ ஆரம்பிச்சேன்" என்கிற பிரேம் குமாரின் சமூகப் பணி அப்போதுதான் தொடங்கியிருக்கிறது. 

சமூகத்துல மாற்றம் நடக்கணும்னு நாம நினைக்கிறது சரிதான். ஆனா, அந்த மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கினால் முன்னேற்றம் எளிதில் நிறைவேறும்.
பிரேம் குமார்

``ஆரம்பத்துல தினமும் மதிய நேரத்துக்கு மட்டும் அஞ்சு பேருக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுத்தோம். அதை போட்டோ எடுத்து சோஷியல் மீடியாவுல பதிவிட்டோம். அதைப் பார்த்து, சிலர் எங்களுக்கு உதவ முன்வந்தாங்க. பலரின் ஒத்துழைப்பால், அதிகமானோருக்குச் சாப்பாடு கொடுக்க ஆரம்பிச்சோம். இப்போ ஒருநாளைக்கு 60 பேருக்குச் சாப்பாடு கொடுத்து உதவறோம். அவ்வப்போது இரவு நேரமும் உணவு கொடுக்கிறோம்.

கலவைச் சாதம், பிரியாணி உட்பட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சாப்பாடு கொடுப்போம். என் அம்மாவும், மனைவியும்தான் சமைப்பாங்க. திண்டுக்கல், வட மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள பசியில் வாடும் மக்களுக்கு உணவுகளைக் கொடுக்கிறோம். சோஷியல் மீடியாவுல எங்களுக்குத் தேவையான உதவிகளைப் பதிவிடுவோம். அதன் மூலம், அரிசி, காஸ் சிலிண்டர், ஆயில் மற்றும் மளிகைப் பொருள்கள் உட்பட சமையலுக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் மாதம்தோறும் பலர் எங்களுக்குக் கொடுத்து உதவறாங்க" என்னும் பிரேம் குமார், சேவைப் பணிக்குப் பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் விஸ்வநாதன் மற்றும் கார்த்திக் ஆகியோரை நமக்கு அறிமுகப்படுத்தினார். 

prem kumar and his friends
prem kumar and his friends

ஆதவற்றவர்களுக்கு உணவு வழங்குவது தவிர, மனநலம் பாதித்தவர்கள் மற்றும் யாசகர்களைக் குளிப்பாட்டிவிடுவது, புத்தாடை அணிவித்து விடுவது மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கும் உதவுகிறார்கள். அவர்களில் இருவரைக் காப்பகத்தில் சேர்த்துவிட்டிருக்கிறார்கள். ஆதரவற்ற பிணங்களை அடக்கம் செய்வது, மரக்கன்றுகள் நடுவது, ரத்த தான முகாம் நடத்துவது என இவர்களின் சமூகப் பணிகள் நீள்கின்றன.

``எங்களுடையது நடுத்தரக் குடும்பம்தான். வாடகை வீட்டில்தான் வசிக்கிறோம். அப்பாவின் வருமானம்தான் பிரதானமா இருக்கு. நானும் மாட்டு வியாபாரம் செய்றேன். அடுத்தத் தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்கணும்ங்கிற எண்ணமெல்லாம் எங்களுக்கு இல்லை. எங்களைப் பார்த்து, என் இரண்டு மகள்களும் உதவுற குணத்துடன் வளர்ந்தாலே போதும். 

prem kumar
prem kumar

`பையன் பொறுப்பா இருக்கான். ஊர்ல நாலு பேர் மதிக்கிற மாதிரி நடந்துக்கிறான்'னு அப்பா ரொம்பவே பெருமைப்படறார். குடும்பத்தினர் எல்லோருமே என்னோட சேவைப் பணிக்கு முழு ஊக்கம் கொடுக்கிறாங்க. இப்படியான குடும்பத்தினர், நண்பர்கள் இருக்கிறப்போ நாம சமூகத்துக்குப் பயனுள்ள விஷயங்கள் செய்யலைனாதான் தப்பு. சராசரி மனிதர்களைப்போல `தன் குடும்ப நலன், எதிர்காலத் தேவைக்கான சேமிப்பு'ன்னு இருக்கிறதுல எனக்கு உடன்பாடில்லை.

எங்க பணிகளால சுற்றுவட்டாரப் பகுதிகள்ல, கடந்த ஒன்றரை வருஷத்துல நிறைய மாற்றங்கள் நடந்திருக்கு. எங்களைப் பார்த்து, பல இளைஞர்கள் சமூகப் பணிகள் செய்ய முன்வர்றாங்க. எங்களைப்போல, திண்டுக்கல் மாவட்டம் நத்தம்ல `பசியில்லா நத்தம்'னு இளைஞர்கள் குழுவினரை ஊக்கப்படுத்தியிருக்கிறோம். அவர்களும் சிறப்பா செயல்படறாங்க. 

நம்மள்ல பலரும் தினமும் மூணு வேளை சாப்பாட்டைத் திருப்தியா சாப்பிடுறோம். ஆனா, நம்ம ஊர்ல, நம்ம பக்கத்துல வாழ்றவங்கல பலர் ஒருவேளை உணவுக்குக்கூட வழியில்லாம சிரமப்படுறாங்க. இதைக் கண்டும் காணாம இருக்கிறது நியாயமா?
பிரேம் குமார்

சமூகத்துல மாற்றம் நடக்கணும்னு நாம நினைக்கிறது சரிதான். ஆனா, அந்த மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கினால் முன்னேற்றம் எளிதில் நிறைவேறும். சினிமா இயக்குநராகும் கனவு இன்னும் எனக்குள் இருக்கு. அது நடந்தால், சேவைப் பணியை இன்னும் பெரிய அளவில் செய்வேன்" என்கிற பிரேக் குமாரின் முகத்தில், அளவில்லா மகிழ்ச்சி.

`2 வேளை மட்டுமே உணவு; ஃபீஸ் கட்டக்கூட பணமில்லை!’ - காஷ்மீர் இளைஞர்களுக்கு டெல்லியில் நேர்ந்த சோகம்
அடுத்த கட்டுரைக்கு