Published:Updated:

`குமரி டு மெரினா; ஒற்றைக் காலில் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு!’ -அசத்தும் மாற்றுத்திறனாளி இளைஞர்

`காற்று மாசுபடுவதைத் தடுக்க மரம் வளர்ப்போம்’ என்பதை வலியுறுத்தி கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு ஒற்றைக் காலால் சைக்கிளை மிதித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார், மாற்றுத்திறனாளி இளைஞர் மணிகண்டன்.

மாற்றுத்திறனாளி இளைஞர் மணிகண்டன்
மாற்றுத்திறனாளி இளைஞர் மணிகண்டன்

ராமநாதபுரம் மாவட்டம், திருநகரில் உள்ள ஆயுதப்படை குடியிருப்பு பின்புறப் பகுதியைச் சேர்ந்தவர் விஜயசாமி. ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவரின் மகன் மணிகண்டன் (36). ஒரு காலை இழந்த இவர் ‘சைக்கிளிங்’ மூலம் ‘கின்னஸ்’ சாதனைக்கு முயற்சி செய்து வருகிறார். மரம் வளர்ப்பு குறித்தும் ஒற்றைக் காலால் சைக்கிளை மிதித்துச்சென்று பிரசாரம் செய்துவருகிறார்.

ஒற்றைக் காலில் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு
ஒற்றைக் காலில் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு

இந்த நிலையில், ‘டெல்லி, சென்னை போன்ற பெரு நகரங்களில் காற்று மாசடைந்துள்ளதால் ஏற்படப் போகும் விளைவுகள் குறித்தும் அதைத் தடுக்க மரங்களை வளர்க்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தியும் கன்னியாகுமரியிலிருந்து கடந்த 13-ம் தேதி சென்னைக்கு சைக்கிளில் விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கினார்.

நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தைக் கடந்த மணிகண்டன் இன்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகம் வந்துசேர்ந்தார். பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு செய்தார். நம்மிடம் பேசிய அவர், ‘எனக்கு 15 வயதிருக்கும். 10-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினேன்.

வேலூர் கலெக்டர் அலுவலகம்
வேலூர் கலெக்டர் அலுவலகம்

பந்தை கேட்ச் பிடிக்க ஓடியபோது, கால் தடுக்கி கற்கள் மீது விழுந்ததில் ஒரு கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சை எடுத்துக்கொண்டும் காயம் குணமடையாததால் தொடைப்பகுதி வரை கால் வெட்டி எடுக்கப்பட்டது. அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. கடவுள் கொடுத்தது அவ்வளவுதான் என்று நினைத்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தினேன்.

எம்.காம், பி.எட் வரை படித்துள்ளேன். போட்டித் தேர்வுகளை எழுதிவருகிறேன். திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ‘சாதிப்பதற்கு ஊனம் தடையில்லை’ என்பதை உணர்ந்து 2008-ம் ஆண்டு சிவகங்கையிலிருந்து சென்னைக்கு சைக்கிளில் ஒற்றைக் காலால் மிதித்துக்கொண்டே சென்றேன். பிறகு, 2013-ம் ஆண்டிலும் ராமேஸ்வரத்திலிருந்து கன்னியாகுமரி வரை சைக்கிள் ஓட்டிச்சென்றேன்.

ஒற்றைக் காலில் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு
ஒற்றைக் காலில் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு

இப்போது, மேற்கொண்டுள்ள விழிப்புணர்வு பயணத்தை ஜனவரி 1-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நிறைவு செய்கிறேன். அங்கு, காற்று மாசுபடுவதை தடுப்பது குறித்தும், நதிநீர் இணைப்பு, மழை நீர் சேகரிப்பு, மரக்கன்று நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு, இயற்கை விவசாயம் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளேன்’ என்றார் தன்னம்பிக்கையுடன்.