Published:Updated:

மழைக்கால ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் என்ற எச்சரிக்கைகளுக்கு என்ன அர்த்தம்? | Doubt of Common man

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இந்திய வானிலை ஆய்வுத்துறை வெளியிடும் எச்சரிக்கை
இந்திய வானிலை ஆய்வுத்துறை வெளியிடும் எச்சரிக்கை

இந்திய வானிலை ஆய்வுத்துறை வெளியிடும் எச்சரிக்கை அறிவிப்புகள் அனைத்தும் குறிப்பிட்ட சில நிறங்களை அடையாளமாகக் கொண்டு வெளியாகின்றன. இந்த நிறங்களைக் கொண்டு எச்சரிக்கை அறிவிப்பின் தன்மையினை நாம் அறிந்துகொள்ள முடியும்.

விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் ரவி என்ற வாசகர், ``ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் என்று கலர்களில் எச்சரிக்கை விடப்படுகிறதே… அதற்கு அர்த்தம் என்ன?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
Doubt of common man
Doubt of common man

இந்தியாவில் புவி அறிவியல் அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department, IMD), வானிலையியல் கணிப்புகள், வானிலை முன்னறிவிப்புகள், நிலநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை, கவுகாத்தி, கொல்கத்தா, மும்பை, நாக்பூர், புதுதில்லி உள்ளிட்ட 6 நகரங்களில் மண்டல வானிலை மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இம்மையங்கள் அமைந்திருக்கும் இடங்களில், முன்னறிப்பு அலுவலகங்கள், வேளாண் வானிலை ஆய்வுப் பரிந்துரை சேவை மையங்கள், வெள்ள எச்சரிக்கை அலுவலகங்கள், ஆட்புலச் சூறாவளி எச்சரிக்கை மையங்கள் போன்றவைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இம்மையங்களிலிருந்து பல்வேறு வானிலை முன்னறிவிப்புகள், எச்சரிக்கைகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்திய வானிலை ஆய்வுத்துறை வெளியிடும் எச்சரிக்கை
இந்திய வானிலை ஆய்வுத்துறை வெளியிடும் எச்சரிக்கை

இந்திய வானிலை ஆய்வுத்துறை வெளியிடும் எச்சரிக்கை அறிவிப்புகள் அனைத்தும் குறிப்பிட்ட சில நிறங்களை அடையாளமாகக் கொண்டு வெளியாகின்றன. இந்த நிறங்களைக் கொண்டு எச்சரிக்கை அறிவிப்பின் தன்மையினை நாம் அறிந்து கொள்ள முடியும். எச்சரிக்கை அறிவிப்புகள் 1) அடைமழை மற்றும் பனிப்பொழிவு, 2) இடி மழை, திடீர் புயல் மற்றும் ஆலங்கட்டி மழை, 3) தூசிப்புயல் என்று மூன்று பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. மூன்று பிரிவுகளிலும் இடம் பெற்றிருக்கும் நிறங்களும், அந்நிறத்திற்கான விளக்கங்களும் கீழேத் தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன.

அடை மழை மற்றும் பனிப்பொழிவு

நாள் முழுவதும் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் மழையினை அடை மழை என்றும், பெரிய அளவிலான துளிகளைக் கொண்ட மழையினைக் கனமழை (Heavy Rain Fall) என்றும் குறிப்பிடுகின்றனர். இதே போல், குளிர் காலங்களில் வானிலிருந்து பொழியும் வெண்ணிற உறைந்த பனித்திவலைகளைப் பனிப்பொழிவு (Snowfall) என்கின்றனர். இப்பனிப்பொழிவு குளிர் பிரதேச நாடுகளில் நாள் முழுவதும் விழுவதுண்டு. இந்திய வானிலை ஆய்வுத் துறை, அடைமழை / கனமழை மற்றும் பனிப்பொழிவினை பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்று நான்கு நிறங்களில் அடையாளப்படுத்துகிறது.

பச்சை நிறம்

ஒரு மணி நேரத்திற்கு 70 மில்லி மீட்டர் எனும் அளவில் பெய்யும் மழை / பனிப்பொழிவு பச்சை நிறத்தில் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த மழை சாதாரணமானதாக (No Heavy Rainfall) எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் எவ்விதப் பாதிப்புமில்லை என்று அறிந்து கொள்ளலாம். இதனை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

மஞ்சள் நிறம்

இருபத்து நான்கு மணி நேரத்திற்கு 64.5 மில்லி மீட்டரிலிருந்து 115.5 மில்லி மீட்டர் வரை பெய்யும் மழை / பனிப்பொழிவு மஞ்சள் நிறத்தில் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த மழையினை அடைமழை அல்லது கனமழை (Heavy Rainfall) என்கின்றனர். இம்மழையினால் ஒரு சில பாதிப்புகள் ஏற்பட்டாலும், பெருமளவிலான பாதிப்புகள் இருக்காது என்று அறிந்து கொள்ளலாம். இதனை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளலாம்.

கனமழை
கனமழை
mParivahan செயலியில் உள்ள ஆவணங்களை வாகன  சோதனையின்போது அதிகாரிகளிடம் காட்டலாமா?| Doubt of Common Man

ஆரஞ்சு நிறம்

இருபத்து நான்கு மணி நேரத்திற்கு 115.6 மில்லி மீட்டரிலிருந்து 204.4 மில்லி மீட்டர் வரை பெய்யும் மழை / பனிப்பொழிவு ஆரஞ்சு நிறத்தில் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த மழையினை பெரு மழை அல்லது மிகக் கனமழை (Very Heavy Rainfall) என்கின்றனர். இப்பெரு மழையினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். எனவே, எச்சரிக்கையுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

சிவப்பு நிறம்

24 மணி நேரத்திற்கு 204.5 மில்லி மீட்டர் அல்லது அதற்கு அதிகமான அளவில் பெய்யும் மழை / பனிப்பொழிவு சிவப்பு நிறத்தில் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த மழையினை மிகமிகக் கனமழை என்கின்றனர். இம்மிகப் பெரு மழையினை விதிவிலக்கான கன மழை (Exceptionally Heavy Rainfall) என்று குறிப்பிடுகின்றனர். இம்மழையினால் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். எனவே, எச்சரிக்கையுடன் முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இடி மழை, திடீர் புயல் மற்றும் ஆலங்கட்டி மழை

புவி வளிமண்டலத்தில் இடி அல்லது மின்னலுடன் கூடிய மழையினை இடி மழை (Thunderstorm) என்றும், கடுமையான காற்றுடன் கூடிய புயல் திடீர் புயல் (Squall) என்றும், வானிலிருந்து பந்துகளாகவோ அல்லது ஒழுங்கற்ற வடிவங்களிலோ விழும் திடநிலைப் பொழிவினை ஆலங்கட்டி மழை (Hailstorm) என்றும் வகைப்படுத்துகின்றனர். இந்திய வானிலை ஆய்வுத் துறை இவற்றை பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிறங்களிலும், சிகப்பு நிறத்தில் மூன்று பிரிவுகளுமாக அடையாளப்படுத்துகிறது.

பச்சை நிறம்

இடி முழக்கம் எதுவுமில்லாமல் வீசக்கூடிய காற்று (No Thunderstorm) பச்சை நிறத்தில் அடையாளப்படுத்தப்படுகிறது. இதனால் எவ்விதப் பாதிப்புமில்லை என்று அறிந்து கொள்ளலாம். இதனை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

மஞ்சள் நிறம்

அதிகபட்ச மேற்பரப்புக் காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோ மீட்டருக்கும் குறைவான நிலையில் காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை இருப்பது இலகுவான இடியுடன் கூடிய கனமழை (Light Thunderstorm) என்று மஞ்சள் நிறத்தில் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த இலகுவான இடியுடன் கூடிய மழையினால் ஒரு சில பாதிப்புகள் ஏற்பட்டாலும், பெருமளவிலான பாதிப்புகள் இருக்காது என்று அறிந்து கொள்ளலாம். இதனை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளலாம்.

இடியுடன் கூடிய மழை
இடியுடன் கூடிய மழை
அஞ்சல் குறியீட்டு எண்கள் எப்படி வழங்கப்பட்டன? அதற்கான அர்த்தம் என்ன? | Doubt of Common Man

ஆரஞ்சு நிறம்

அதிகபட்ச மேற்பரப்புக் காற்றின் வேகம் மணிக்கு 41 முதல் 61 கிலோ மீட்டர் எனும் அளவில் காற்று அல்லது புயலுடனான இடியுடன் கூடிய கனமழை இருப்பது, மிதமான இடியுடன் கூடிய கனமழை (Moderate Thunderstorm) என்று ஆரஞ்சு நிறத்தில் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த மிதமான இடியுடன் கூடிய மழையினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று அறிந்து கொள்ளலாம். எனவே, எச்சரிக்கையுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

சிவப்பு நிறம்

அதிகபட்ச மேற்பரப்புக் காற்றின் வேகம் மணிக்கு 62 முதல் 87 கிலோ மீட்டர் எனும் அளவில் காற்று அல்லது புயலுடனான இடியுடன் கூடிய கனமழை இருப்பதை கடுமையான இடியுடன் கூடிய கனமழை (Severe Thunderstorm) என்று சிகப்பு நிறத்தில் அடையாளப்படுத்தப்படுகிறது.

அதிகபட்ச மேற்பரப்புக் காற்றின் வேகம் மணிக்கு 88 கிலோ மீட்டர் எனும் அளவிற்கு மேற்பட்ட காற்று அல்லது புயல் இடியுடன் கூடிய கனமழை அல்லது மழையில்லாமலிருப்பதை மிகக் கடுமையான இடியுடன் கூடிய கனமழை (Very Severe Thunderstorm) என்று சிவப்பு நிறத்தில் இரண்டாவதாக அடையாளப்படுத்தப்படுகிறது.

இடியுடன் கூடிய கனமழைப் பொழிவு ஆலங்கட்டிகளுடன் இருக்கும்போது, அதனை ஆலங்கட்டி கனமழை (Hailstorm) என்று சொல்லப்படுகிறது. இது சிவப்பு நிறத்தில் மூன்றாவதாக அடையாளப்படுத்தப்படுகிறது.

இந்த மூன்று சிவப்பு நிறப் பிரிவுகளிலும் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். எனவே, எச்சரிக்கையுடன் முன் கூட்டியே பாதுகாப்புக்கேற்றபடி தேவையானவற்றைச் செய்து கொள்ள வேண்டும்.

தூசிப்புயல்

கடல் நீர் ஆவியானவுடன் உப்பிலுள்ள வேதிப்பொருள்கள் காற்றில் கலக்கின்றன. இதனால் ஆண்டொன்றுக்கு இருநூறு கோடி டன் உப்பு வளி மண்டலத்தில் கலக்கிறது. பாலைவனம் போன்ற வறட்சிப் பகுதிகளில், தூசிப்புயல் உண்டாகிறது. இதனாலும் வளிமண்டலத்தில் பல்லாயிரம் டன் தூசி கலக்கிறது. இந்தத் தூசிகளுடனான காற்று தூசிப்புயலாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்திய வானிலை ஆய்வுத் துறை இவற்றை பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிறங்களிலும், இரண்டு பிரிவுகளில் சிகப்பு நிறத்திலும் அடையாளப்படுத்துகிறது.

பச்சை நிறம்

தூசியின்றி வீசும் புயல் (No Dust Storm) பச்சை நிறத்தில் அடையாளப்படுத்தப்படுகின்றது. இதனால் எவ்வித பாதிப்புமில்லை என்று அறிந்து கொள்ளலாம். இதனை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

மஞ்சள் நிறம்

காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்திலும், பார்வைத்திறன் 1000 மீட்டருக்குக் குறைவாகவும், ஆனால் 500 மீட்டருக்கு அதிகமாகவும் இருந்தால் அதனை இலகுவான தூசிப்புயல் (Light Dust Storm) என்று மஞ்சள் நிறத்தில் அடையாளப்படுத்துகிறது. இதனால் ஒரு சில பாதிப்புகள் ஏற்பட்டாலும், பெரும் அளவிலான பாதிப்புகள் இருக்காது என்று அறிந்து கொள்ளலாம். இதனை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளலாம்.

தூசிப்புயல்
தூசிப்புயல்

ஆரஞ்சு நிறம்

காற்றின் வேகம் மணிக்கு 41 முதல் 61 கிலோ மீட்டர் வேகத்திலும், பார்வைத்திறன் 499 மீட்டருக்குக் குறைவாகவும், ஆனால் 201 மீட்டருக்கு அதிகமாகவும் இருந்தால் அதனை மிதமான தூசிப் புயல் (Moderate Dust Storm) என்று ஆரஞ்சு நிறத்தில் அடையாளப்படுத்துகிறது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று அறிந்து கொள்ளலாம். எனவே, எச்சரிக்கையுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

சிவப்பு நிறம்

காற்றின் வேகம் மணிக்கு 62 முதல் 87 கிலோ மீட்டர் வேகத்திலும், பார்வைத்திறன் 200 மீட்டருக்குக் குறைவாகவும் இருந்தால் அதனைக் கடுமையான தூசிப் புயல் (Severe Dust Storm) என்று சிவப்பு நிறத்தில் முதல் பிரிவாக அடையாளப்படுத்துகிறது. காற்றின் வேகம் மணிக்கு 87 கிலோ மீட்டருக்கு அதிகமான வேகத்திலும், பார்வைத்திறன் 200 மீட்டருக்குக் குறைவாகவும் இருந்தால் அதனை மிகக் கடுமையான தூசிப் புயல் (Very Severe Dust Storm) என்று சிவப்பு நிறத்தில் இரண்டாம் பிரிவாக அடையாளப்படுத்துகிறது.

இந்த இரண்டு சிவப்பு நிறப் பிரிவுகளிலும் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். எனவே, எச்சரிக்கையுடன் முன்கூட்டியே பாதுகாப்புக்கேற்றபடி தேவையானவற்றைச் செய்து கொள்ள வேண்டும்.

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

Doubt of common man
Doubt of common man
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு