Published:Updated:

`மிதமான வெளிச்சம், கேட்ஜெட் ஃப்ரீ!' - படுக்கை அறையைப் பராமரிக்க ஈசி டிப்ஸ் #MyVikatan

Representational Image
Representational Image

படுக்கையறை அமைதியான அதிர்வைக் கொண்டிருக்க வேண்டுமெனில், அதனை முதன்மையானதாகவும், சரியானதாகவும் நாம் பராமரிக்க வேண்டியது அவசியமாகும்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

வீடு - மனிதனுக்கு அமைதியையும், நிம்மதியையும் அள்ளி வழங்கக்கூடிய அழகான ஒரு இடம். வேலை நிமித்தமாக நாம் எங்கெங்கோ வெளியில் சுற்றித் திரிந்தாலும், இறுதியில் ஓய்வெடுக்க மனது நாடுவது வீட்டைத்தான்.

அந்தவகையில் வீடு என்பது மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு கூடு.

படுக்கை அறை - வீட்டின் மிக முக்கியமான அறைகளில் ஒன்று. ஒரு பரபரப்பான நாளுக்குப் பிறகு, நமது மனதையும், உடலையும் ஆற்றுவதற்கு சிறிது நேரம் வேண்டும். வீட்டை ஓய்வெடுப்பதற்கான சிறந்ததொரு இடமாக மாற்றுவதில் படுக்கையறையின் பங்கு மகத்தானது.

சோர்வைக் குறைக்க, அமைதியான மற்றும் இனிமையான அதிர்வை நமக்கு வழங்க ஒழுங்கமைக்கப்பட்ட சிறந்ததொரு படுக்கை அறை மனிதனுக்கு அவசியமாகிறது.

படுக்கையறை அமைதியான அதிர்வைக் கொண்டிருக்க வேண்டுமெனில், அதனை முதன்மையானதாகவும், சரியானதாகவும் நாம் பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.

படுக்கை அறையினைச் சிறப்பாகப் பராமரிக்க சில குறிப்புகள்:

BedRoom
BedRoom

சுத்தம் - சுகாதாரம்:

படுக்கை அறையினை நாம் எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அறையினுள் ஒட்டடைகள், தூசுகள், குப்பைகள் ஆகியவை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

படுக்கை அறையைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்வதை நாம் ஒரு பழக்கமாகவே வைத்துக் கொள்வது சிறந்தது. நமக்கு ஆழ்ந்த உறக்கத்தையும், சிறந்த ஓய்வையும் கிடைக்கச் செய்வதில் சுத்தத்தின் பங்கு முக்கியமான ஒன்று!

வெளிச்சம்:

ஜன்னல்களில் திரைகள் அமைத்து, இரவு நேரங்களில் வெளியில் இருந்து வெளிச்சம் அறையினுள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

உறங்கும்போது அறையினுள் மிதமான வெளிச்சம் இருக்குமாறு அமைத்துக் கொள்ள வேண்டும்.

மாலை உள்ளிட்ட மற்ற நேரங்களில் அறையினுள் சூடாக்கும் விளக்குகளைத் தவிர்த்து, LED போன்ற மென்மையான விளக்குகளை அமைத்துக் கொள்வது சிறந்தது. வெளிச்சம் நம்முடைய மனநிலையில் சாதகமான மாற்றத்தை உண்டாக்கும் சிறந்ததொரு காரணியாக இருக்கும்.

BedRoom
BedRoom

அலங்காரம்:

படுக்கை அறை நமக்குப் பிடித்தமான அலங்காரத்தில் இருக்குமாறு அமைத்துக்கொள்ள வேண்டும். சுவர்களில் நமக்குப் பிடித்தமான வண்ணங்கள் மற்றும் உருவங்களில் வால் போஸ்டர்கள், படங்கள் உள்ளிட்டவற்றை ஒட்டி வைக்கலாம்.

படுக்கை அறை அலங்காரத்திற்கென கடைகளில் பொருட்களை வாங்குவதைவிட, நமக்கு தெரிந்த கை வேலைப்பாடுகளைக் கொண்டு செய்யப்பட்ட அலங்காரப் பொருட்களைக் கொண்டு படுக்கை அறையை அலங்கரிக்கலாம். இது நமது மனதுக்கு நெருக்கமானதாக அமையும்.

அலங்காரத்திற்கு செயற்கையான அல்லது பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பதைக் காட்டிலும், நமது அன்றாட சூழலில் கிடைக்கும் இயற்கையானப் பொருட்களைக் கொண்டு படுக்கை அறை அலங்காரத்தை நாம் அமைப்பது நமது மனதில் நேர்மறையான சிந்தனைகளை உண்டாக்க உதவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அன்பாலே அழகாகும் வீடு! #KidsTalentCorner

சுவர்கள்:

படுக்கையறையின் நான்கு சுவர்களுக்கும் நமக்குப் பிடித்தமான,மெல்லிய வண்ணங்கள் தீட்டப்பட்டு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

வண்ணங்களின் தரம் உயர்வானதாக இருப்பது அவசியம். ஐந்தாவது சுவரான கூரையில் நமது மனதுக்குப் பிடித்தமான அலங்காரம் இருக்குமாறு அமைத்துக் கொள்ளலாம்.

கூரைக்கு பெரும்பாலும் வெள்ளை நிறம் உகந்ததாக இருக்கும். படுக்கை அறையின் ஆறாவது சுவரான தரையானது வழுக்காத வகையிலும்,அழகானதாகவும்,மனதுக்கு நெருக்கமானதாகவும் இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும்

Bed Room
Bed Room

தொந்தரவுகள்:

படுக்கை அறையின் கதவுகள், ஜன்னல்கள் போன்றவை காற்றுக்கு அடித்துக் கொள்வது நமது உறக்கத்திற்கு தொந்தரவு அளிக்கக்கூடும். எனவே, படுக்கை அறையில் ஏற்படும் பராமரிப்பு வேலைகளை உடனுக்குடன் செய்து முடித்துவிட வேண்டும்.

அட்டாச்டு பாத்ரூம் உள்ள படுக்கை அறையில் பூச்சி புழுக்கள், கரப்பான்கள் உள்ளிட்டவை நமக்கு பெரும் தொந்தரவாக அமையும். எனவே அட்டாச்டு பாத்ரூமை சுகாதாரமாகப் பராமரிப்பது அவசியம்.

கொசுக்கள் நமது உறக்கத்தைக் கெடுக்கும் என்பதால், படுக்கை அறையின் ஜன்னல்களுக்கு கொசுவலை அமைத்து கொசுக்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஃபேன்கள் மற்றும் ஏ.சி யிலிருந்து வெளிப்படும் சத்தம், பாத்ரூம் குழாயில் நீர் சொட்டும் சத்தம் உள்ளிட்டவை நமது உறக்கத்தைக் கெடுக்கக்கூடும். எனவே, அவற்றை உரிய காலஇடைவெளியில் முறையாகப் பராமரித்து வைத்துக் கொள்வது சிறந்தது.

வேலை:

ஏதேனும் அலுவலக வேலைகளை வீட்டிலிருந்தபடியே பணியாற்ற வேண்டிய அவசியம் இருந்தால், அதனைப் படுக்கையில் அமர்ந்து செய்வதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். படுக்கையறை என்பது பணியாற்றுவதற்கான இடம் அல்ல. அது ஓய்விற்காகவும், உறக்கத்திற்காகவும் உருவாக்கப்பட்டது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாம் செய்யக்கூடிய வேலைகளைப் படுக்கை அறையினைத் தவிர்த்து, வீட்டின் வேறு ஏதேனும் ஒரு இடத்தில் அமர்ந்தே செய்ய வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

`மிதமான வெளிச்சம், கேட்ஜெட் ஃப்ரீ!' - படுக்கை அறையைப் பராமரிக்க ஈசி டிப்ஸ் #MyVikatan

உணவு:

படுக்கையறையில் உணவுப்பொருட்கள் உண்பதை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். உணவுப் பொருட்களையும், நொறுக்குத் தீனிகளையும் படுக்கை அறைக்குள் கொண்டு செல்வதையே முடிந்தவரை தவிர்த்துவிடல் சிறந்தது.

பிஸ்கட் போன்ற உணவுப்பொருட்கள் எதையும் படுக்கை அறையினுள் வைக்கக்கூடாது. ஏனெனில், உணவுப் பொருட்கள் படுக்கை அறையின் தரையில் சிந்தும்போது பூச்சிகள், எறும்புகள் உள்ளிட்டவைகள் அறையினுள் வர வழி ஏற்படும். இவை நமது ஆழ்ந்த உறக்கத்தைக் கலைத்துவிட வாய்ப்புண்டு.

படுக்கை விளக்கு:

படுக்கை அறை நைட் லேம்ப் நம்முடைய தலைக்குப் பின்னால் அல்லது நம்முடைய முகத்திற்கு எதிரே எரியுமாறு இருந்தால் நமக்கு உறக்கம் கெட வாய்ப்புண்டு. எனவே, அவற்றை படுக்கையின் பக்கவாட்டில் இருக்குமாறு அமைத்துக்கொள்ள வேண்டும்.

அதிக வெளிச்சம் தராத, மென்மையான மற்றும் தரமான நைட் லேம்புகளை நமது படுக்கை அறையில் அமைத்துக்கொள்வது சிறந்தது.

Representational Image
Representational Image

நீர்:

இரவு உறக்கத்தின்போது தாகம் எடுத்தால் கிச்சனுக்கு சென்று தண்ணீர் குடித்து வரவேண்டிய தேவை ஏற்படாதவாறு, படுக்கை அறையில் தேவையான அளவு நீரை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

சில்வர் அல்லது காப்பர் வாட்டர் பாட்டில்கள் இதற்குப் பொருத்தமாக இருக்கும்.

பாட்டில்களில் இருந்து நீர் கசியாதவாறு, பாட்டில்கள் தரமாகவும், மூடிகள் போதுமான இறுக்கமாகவும் இருக்க வேண்டும்.

மெழுகுவர்த்திகள்:

மெழுகுவர்த்திகள் அலங்காரத்திற்காக மட்டுமல்லாது நம்முடைய மனநிலையை மாற்றவும் பயன்படக் கூடியவை. எனவே, படுக்கை அறையில் அவ்வப்போது விளக்குகளுக்கு பதில் மெழுகுவர்த்திகளை சிறிது நேரம் பயன்படுத்துவது நமது மென்மையான மன உணர்வுகளை அதிகரிக்கச் செய்யும்.

அதிகம் புகை வராத, தரமான மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்துவது சிறந்தது. பல வண்ணங்கள் கொண்ட மெழுகுவர்த்திகள் சிறப்பு.

Representational Image
Representational Image

இடைவெளி:

படுக்கை அறையில் நாம் நடமாடுவற்கு போதுமான இடவசதி இருக்கவேண்டும்.

கட்டில், மேஜை, அலமாரிகள் இவற்றுக்கு இடையேயான இடைவெளி குறுகலாக இல்லாமல், போதுமான அளவு இடவசதி இருக்கவேண்டும்.

தேவையற்ற பொருட்களைப் படுக்கை அறையில் போட்டு அறையை நிறைத்து விடாமல், போதுமான இடைவெளியைப் பராமரிப்பது சிறந்ததாக இருக்கும்.

சாமான்கள்:

படுக்கை அறையில் இருக்கும் கட்டில், மேஜை, நாற்காலி, அலமாரிகள் உள்ளிட்ட தளவாட சாமான்கள் தரமானவையாகவும், நமக்கு வசதியானவையாகவும் இருக்க வேண்டும். நமது ரசனைக்கு ஏற்ற வகையிலும் இவை இருப்பது சிறந்தது.

கட்டில்கள் பலமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.

படுக்கை அறையினுள் உள்ள தளவாடப் பொருட்கள் நாம் தூங்கும் போது ஆடக் கூடியவையாகவோ அல்லது சத்தம் எழுப்பக் கூடியவையாகவோ இருக்கக்கூடாது.

மின்சாதனங்கள்:

டி.வி, ஆடியோ பிளேயர்கள் உள்ளிட்ட மின் சாதனங்களை நமது படுக்கை அறையினுள் கட்டாயம் அனுமதிக்கக்கூடாது. இரவு நேரங்களில் செல்போன்கள் நமது படுக்கை அறையில் கட்டாயம் இருக்கவே கூடாது. இரவு நேரங்களில் செல்போன்களை படுக்கையறை தலைமாட்டில் வைத்திருப்பது நமது உடல்நலனுக்கு உகந்தது அல்ல.

முடிந்தவரை தேவையற்ற Gadget-கள் எதுவும் படுக்கையறையில் இல்லாமல் பார்த்துக்கொள்வது நம்முடைய இரவு உறக்கத்தைச் சிறப்பாக்க உதவும்.

நமது வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களைச் செலவிடப் பயன்படும் படுக்கை அறைக்குப் போதுமான முக்கியத்துவம் அளித்துப் பராமரிப்பது,

நமது உறக்கத்தைச் சிறப்பானதாக மாற்றுவதுடன்,நிம்மதியான வாழ்க்கையைத் தொடரவும் உதவும். மேலும் சிறந்ததொரு படுக்கை அறை நமது ஓய்வையும், உறக்கத்தையும் கூட ரசனைக்குரிய ஒன்றாக நிச்சயம் மாற்றும் என்பது உறுதி!

Representational Image
Representational Image

விரிப்புகள்:

படுக்கையறையில் பயன்படுத்தக்கூடிய போர்வைகள்,விரிப்புகள், தலையணை உறைகள் போன்றவற்றை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

அவ்வப்போது துவைத்து,அவற்றின் தூய்மையை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

இவை நமக்குப் பிடித்தமான வண்ணங்களில், உடலை உறுத்தாமல் மென்மையானவையாக இருப்பது மிகவும் அவசியம். போர்வைகளைப் பொறுத்தவரை நாம் அவற்றை மடித்து வைத்த பிறகு அவற்றின் கால்பகுதி, தலைப்பகுதி வேறுபாடு தெரியாதவண்ணம் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்புண்டு.எனவே பொருத்தமான குறியீடுகள் மூலம் அவற்றை அடையாளப்படுத்திக் கொள்வது அவசியம். அவ்வாறே,ஒரே மாதிரி இருக்கும் தலையணையின் மேல்பகுதி, கீழ் பகுதியையும் நாம் அடையாளப்படுத்திக் கொள்வது சிறந்ததாக இருக்கும்.

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு