Published:Updated:

`வாடகை வீட்டை நேசிப்பது ஆகப் பெரும் குற்றம்..!' - வாசகியின் கண்ணீர்ப் பகிர்வு #MyVikatan

வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு மாத மாதம் வாடகை தருவதை விட கஷ்டமானது பிடித்த வீட்டிலிருந்து காலி செய்வது...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

"சரி காலி பண்ணுங்க.. என் அக்கா பொண்ணு இந்த வீட்டுக்கு வரலாம்" ..vஅம்மாவும் அப்பாவும் திடுக்கிட்டு நின்றனர். "பொண்ணுக்கு 22 வயசாச்சு.. இந்த வருஷ முடிவுக்குள்ள கல்யாணம் பண்லாம்னு இருக்கோம்.. அதுக்கப்பறம் காலி பணிடுறோம்.. திரும்ப இந்த அளவுல வீடு பாத்து போறது கஷ்டம்மா" அம்மா வலிகள் நிறைந்த வார்த்தைகளை உதிர்த்தார். அவர்கள் மனம் இரங்கவில்லை.. இரண்டு மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும்.

Representational Image
Representational Image
Pixabay

வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு மாத மாதம் வாடகை தருவதை விட கஷ்டமானது பிடித்த வீட்டிலிருந்து காலி செய்வது. வாடகை வீட்டின் மேல் பற்று வைக்கவே கூடாது. அது சிதைக்கப்பட்டு விடும். காதல் கொள்ள கூடாது எந்நேரமும் தோல்வியில் முடியும். எனக்கு விவரம் தெரிந்து இது நான்காம் வீடு. முதல் வீட்டின் ஞாபகங்கள் மிக சொற்பமே நினைவில் உள்ளன. இரண்டாம் வீட்டின் பின்புறத்தில் சிறிது காலி இடம் இருக்கும். அங்கே முருங்கை மர குச்சியை அம்மா நட்டு சில வாரம் சாணி பூசி தண்ணீர் விட்டதில் கிடு கிடு வென வளர்ந்தது. பக்கத்தில் ஒரு நெல்லி மரமும் வைத்தோம்.

இன்று நினைத்தாலும் அதன் வாசனை மணக்கிறது மனதில். என்னைப் பள்ளிக்கு அனுப்பி வைத்த வீடு. சில வருடங்களில் அந்த வீட்டிலிருந்து புறக்கணிக்கப்பட்டோம். பின் மூன்றாம் வீடு நல்ல நீளமான வீடு. அசைவம் வாங்கி வந்தால் பின் உள்ள அறையில் சென்றுதான் உண்போம். பென்சிலைப் பள்ளியில் தொலைத்ததற்கு அப்பா அடிப்பாரோ என்ற பயத்தில் ஒளிந்திருந்தபோது என்னை பத்திரமாகப் பார்த்துக்கொண்ட சாமி அறை.

Representational Image
Representational Image
Pixabay

அப்பா அம்மாவின் பாவுத் தொழில் செய்வதற்கு ஏற்றதாய் அமைந்த அகலமான வீடு என்பதால் அவர்களுக்கு மகிழ்ச்சி கிட்டியது. அந்த மகிழ்ச்சி வெகு நேரம் நீடிக்க வில்லை. இறுதியாக நாங்கள் இப்பொழுது இருக்கும் வீடு. கிட்டத்தட்ட பத்து வருடங்களாக இங்கு இருக்கிறோம். முதன் முதலாக நாங்கள் வாழ்ந்த மாடி வீடு. என் பள்ளி நாள்கள் என் கல்லூரி நாள்களைப் பார்த்த வீடு. நான் பெரிய மனுஷி ஆனதைப் பார்த்த வீடு. எனக்கெனத் தனி அறை தந்த வீடு. அந்த மகிழ்ச்சியை எல்லாம் வார்த்தைகளில் சொல்லும் அளவிற்கு எளிமையானது அல்ல. மேல் மாடியில் எனது அறை.. எனது அறையின் கூரை ஓட்டினால் ஆனது. ஓட்டின் இடையில் உள்ள கண்ணாடியின் ஊடே விடிந்ததும் என்னைத் தொடுவான் சூரியன். எழுந்ததும் மொட்டை மாடிக் கதவைத் திறந்தால் முகத்தில் வந்து அறையும் சூரியணை அணைத்தால்தான் இரவு மயக்கம் என்னை விட்டுச் செல்லும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இடி, மின்னல், மழை, காற்று, வெயில், குளிர் என எல்லாவற்றையும் எனக்கு உணரத் தந்த வீடு. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வின் போது எனக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்த வீடு. அதிகாலை எழுந்து படிக்கும் போது வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க.. என் அறை அதில் உள்ள சன்னல்.. என்னைச் சாய்த்து தாலாட்டும் சுவர் என்னுடன் முழித்திருந்து எனக்கு ஊக்கமூட்டியது. அந்த 5 நாள்களுக்கு அம்மா பூஜை அறைக்குள்ளும் சமையல் அறைக்குள்ளும் விடமாட்டார். எனது அறைக்குள் பதுங்கி விடுவேன். அது தரும் இதம் என் வயிற்று வலியைப் போக்கும்.

Representational Image
Representational Image
Matt Jones / Unsplash

விடுமுறை நாள்களில் அறை முழுக்க அதிரும் ஒலியுடன் ரேடியோவைக் கேட்கும் சுகம், நிம்மதி, ஆனந்தம் இன்னும் வேறெதிலும் கிட்டவில்லை. அடக்கமான சமையல் அறை.. நான் சுட்ட தோசையால் கருகிய போதும் என்னை வஞ்சிக்காமல் கற்றுக் கொடுத்தது. என் குளியல் அறை தான் எனக்கும் கவிதை வரும் என்ற ரகசியத்தைச் சொன்னது. ஹாலில் நான் வளர வளர கோடிட்ட அடையாளங்களை இன்னும் தாங்கிக்கொண்டு நிற்கிறது.

எங்கள் மூச்சுக் காற்றை எங்கள் வீட்டிற்கு உணவாக இட்டுள்ளோம். எங்கள் இருப்பின் வெப்பத்தால் பல வருடங்களாக மினு மினுக்கும் வீடு. இப்பொழுது எங்களை அதனிடமிருந்து பிரிக்கப் பார்க்கிறார்கள். என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை.. வேகமெடுத்து அழத் தொடங்கியதும் அம்மா மனதை திடப்படுத்திக்கொண்டு என்னைத் தேற்றத் தொடங்கினார்.

"நம்ம இந்த வீட்டைக் காலி பண்ணலனாலும் நீ கல்யாணம் ஆகி வேற வீட்ல போய் வாழப் போறவ.. இதுக்காக இப்படி அழலாமா "

Representational Image
Representational Image
Pixabay

"கல்யாணம் ஆனா என்ன திரும்ப வரவே மாட்டானாமா.. இப்போ வர முடியாமப் போய்டுச்சில"

"நம்ம நாலு வீடு மாத்திட்டோம்.. இது நடக்கிறது தான"

"அப்போல்லாம் நான் ரொம்ப சின்ன பொண்ணுமா.. இப்போ முடில.. இந்த வீடு அளவுக்கு நான் வேறேதும் அதிகம் நேசிக்கல"

"புரிது கண்மணி.. வாடகை வீட்ல இருந்துட்டு இதுக்கலாம் அழக் கூடாது.. இத மனசு ஏத்துக்கணும்"

மனது ஏற்றுக்கொள்ளவில்லை எனினும் அம்மாவிற்காக அழுவதை நிறுத்தினேன். திரும்பி என் அறையைப் பார்த்தேன். நான் விட்ட இடத்திலிருந்து அழுதுகொண்டு இருக்கிறது.

-செ.ரேவதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு