Published:Updated:

பிரியங்களின் கூடாரம்..! - லாக் டெளன் திருமணங்களின் வலி #MyVikatan

Representational Image
Representational Image ( Photo by cottonbro from Pexels )

ஆடம்பரத்திற்காகவும் கெளரவத்திற்காகவும் பல திருமணங்கள் நடந்தன. அவையெல்லாம் ரொக்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

"திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன" என்னும் வாக்கியம் எதற்காக சொல்லப்பட்டது? இப்போதும் திருமணங்கள் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகின்றனவா? அப்படியெனில் சொர்க்கத்திலிருந்து இந்த திருமணங்களை யார் நிச்சயிக்கிறார்கள்? என்னும் கேள்விகள் பல நாட்களாக மனதுக்குள் ஓடிய வண்ணம் இருக்கிறது. இதற்கெல்லாம் விடைகள் காண கட்டாயம் திருமணம் செய்திருக்கவேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் அது குறித்த தேடலும் அறிந்துகொள்ளும் ஆர்வமும் இருக்கும் பட்சத்தில் வயதின் மீது பொழியும் நினைவு மழையென காலம் பின்னோக்கி இழுத்துச்சென்று மறக்கமுடியா நாட்களின் ஈரத்தை மனமெங்கும் பரவச்செய்யும்.

திருமணம்
திருமணம்
representational image

ஒருகாலத்தில் கல்யாணத்துக்கு போறோம் என்பதே பெரும் கொண்டாட்டமாக இருக்கும். புதுத்துணி போட்டுக்கலாம், இனிப்பு பலகாரங்கள் பாயாசத்தோடு நல்ல சாப்பாடு கிடைக்கும், கல்யாணம் வார நாட்களில் வருமெனில் பள்ளிக்கூடத்திற்கு லீவு போட்டுக்கலாம் என்பதையெல்லாம் தாண்டி, வெவ்வேறு ஊருகளில் இருக்கும் உறவுகளை ஒரே இடத்தில் சந்திக்கலாம் என்னும் சந்தோசம் மிகுந்திருக்கும். சிறுவயது கொண்டாட்டங்களுள் என்றைக்குமே மறக்க முடியாதவையாக அத்தை மாமா கல்யாணத்திலோ, சித்தி சித்தப்பா கல்யாணத்திலோ, தூரத்து உறவுகளின் கல்யாணத்திலோ விளையாடிக்களைத்து பரட்டை தலையோடு படிந்த பவுடர் முகத்தோடு ஒளிந்து ஒளிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் இன்னும் இருக்கத்தான் செய்யும். இவையெல்லாம் ஆண்பிள்ளைகளுக்கு மட்டும் பொருந்தும். பெண் பிள்ளைகள் பெரும்பாலும் மருதாணி விரல்களோடும் கலையாத ஒப்பனைகளோடும் வலம் வருவார்கள்.

திருமண வீடுகளில் பெரிய பெரிய ஸ்பீக்கர்களில் "மணமகளே மருமகளே வா வா உன் வலதுகாலை எடுத்துவைத்து வா வா"ன்னு மணமகளுக்கான பாடல்கள் ஒலித்தபடி இருக்கும். மணமகனுக்கான பாடலை இதுவரை கேட்டதாய் நினைவில்லை. பழைய மடக்கு சேர்கள்,"வெல்கம் ட்ரிங்க்" என "லவ்ஓ , ரஸ்னா" க்களோடு உண்மையான அன்பையும், நியாமான கோபங்களையும் சுமந்தபடி நடந்து முடிந்த திருமணங்கள் ஏராளம். கூலிங்கிளாஸ் போட்டபடி அண்ணன்களும், ஊதா ரிப்பனோடும் கனகாம்பரம் பூவோடும் இருக்கும் சடையை முன்னாடி போட்டபடி அக்காக்களும் போட்டோவுக்கு போஸ் கொடுத்த காலங்கள் பேரழகு. பந்தியில் பரிமாற சிறுவர்களுக்கென ஒதுக்கப்படும் தண்ணீர் டம்ளர்களும் ஒடுங்கிய ஜக்குகளும் பால்யத்தின் நினைவுச்சின்னங்கள்.

திருமணம்
திருமணம்

ஆண்டுகள் பல கடந்த பின்பு எல்லாவற்றையும் கான்ட்ராக்ட் விட்டுவிட்டு ஆடம்பரத்திற்காகவும் கெளரவத்திற்காகவும் பல திருமணங்கள் நடந்தன. அவையெல்லாம் ரொக்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள். திருமணமென்னும் ஒருவார கொண்டாட்டங்கள் இரண்டு நாள் சம்பிரதாயங்களாக மாறிப்போயின. ஒருபக்கம் கல்யாண வயதைக்கடந்தும் ஆண்களும் பெண்களும் கனவுகளைச் சுமந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் சிறுவயதிலேயே மணமக்களின் அரைகுறை புரிதல்களோடு கல்யாணங்களும் நடந்தவண்ணம் இருப்பது முரண். இந்த அவசரயுகம் திருமணத்தை மட்டுமல்ல சேர்ந்து வாழ்வதையும் அவசர அவசரமாக முடித்துக்கொள்கிறது என்பதுதான் உண்மையான வேதனை. பிரிவதற்காக அத்தனை போராடும் பலருக்கு வாழ்வதற்காக அதில் பாதியாவது போராட வேண்டுமென்பது தெரிவதே இல்லை. அல்லது முயற்சிப்பதே இல்லை.

உலகை கைக்குள் கொண்டுவந்து அடக்கிய காலத்திற்கு முன்னால் இருந்த கூட்டுக்குடும்பங்களில் திருமணம், காதுகுத்து, வளைகாப்பு, சீர் போன்ற விசேஷங்கள் எத்தனை அழகாய் இருந்தன. மாமா-அத்தைகள், சித்தி- சித்தப்பாக்கள், பெரியப்பா- பெரியம்மாக்கள் அவர்களின் பிள்ளைகளென ஒட்டுமொத்த குடும்பத்தையும் வழிநடத்தும் தாத்தா பாட்டிகளென ஒரே கூடாரத்தின் கீழ் ஒட்டுமொத்த பிரியங்களும் அன்பும் கொட்டிக்கிடக்கும். கடந்த தலைமுறை மனிதர்கள் சந்தித்துக்கொள்ளும்போது அவர்களது சிறுவயது பட்டப்பெயர்களையோ குடும்பப்பெயர்களையோ சொன்னால் சட்டென அடையாளம் கண்டுகொண்டு உரையாடத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் இப்போது..? மிக நெருங்கிய சொந்தத்தில் நடக்கும் திருமணமொன்றில் கலந்திருப்பவர்கள் யார், என்ன உறவுமுறை எனத் தெரியாமல் கைப்பேசிகளுக்குள் மூழ்கிவிடுகிறோம்.

பிழைப்புக்காக வேறு வேறு ஊர்களுக்கு மாறிப்போனபின்பு எப்போதாவது உறவுகளின் திருமணத்திற்காக பிறந்த ஊருக்குப் போகும் மனிதர்களின் மனநிலை எத்தனை சந்தோசங்களால் நிரம்புகிறது. "இந்த தெருக்குழாயிலிருந்துதான் நான் தினமும் தண்ணி பிடிப்பேன், இந்த கடையில் தான் நாங்கள் வளையல்கள், தோடுகள் வாங்குவோம், அப்போ இங்க ஒரு திண்ணை இருக்கும் அதில் தான் பேருந்துகளுக்காக காத்திருக்கும்போது உட்கார்ந்திருப்போம், இந்த மண்டபத்தில் தான் எனக்கு சீர் வெச்சிருந்தாங்க" என்று பல கதைகளை தன் பிள்ளைகளிடம் சொல்லும் அம்மாக்களின் மனது மருதாணியைப்போல மாதக்கணக்கில் சிவந்துகிடக்கும்.

"இந்த பள்ளிக்கூடத்துலதான் நான் படிச்சேன், இங்கதான் நான் முடிவெட்டிக்க வருவேன், இந்த மைதானத்தில் தான் நான் சைக்கிள் ஓட்டிப் பழகினேன், இந்த கோவில் திருவிழா அப்போதான் நீ பொறந்த" என்று தன் பால்யத்தை மகன்களிடம் சொல்லிக்கொண்டே நடக்கும் ஆண்களின் மனது பழைய காதலியைப் பார்த்ததைப்போல பல நினைவுகளை மீட்டெடுக்கும். அந்த அழகிய நினைவுகளின் ஈரத்தை, மருதாணி போன்ற வாசத்தை, கனவுகள் சுமந்து கொண்டிருக்கும் ஏக்கத்தை பல நாட்கள் மனம் அசைபோடும். சென்ற இடத்தில் கல்யாணநாளோ, பிறந்தநாளோ வந்துவிட்டால் உறவுகளோடு கூடித் திளைக்கும் அந்த நாள் இன்னுமொரு மறக்க முடியாத நாளாய் மாறும்.

திருமணம்
திருமணம்

இப்போது இருக்கும் சூழலில் இந்த சந்தோஷங்கள் எதுவுமில்லை. வாட்சப்பில் வந்து விழும் அழைப்பிதழ்களுக்கு வாட்சப் வழியாகவே வாழ்த்துகளையும் அனுப்ப வைத்திருக்கிறது காலம். நெருங்கிய சொந்தமென்றாலும் கூட திருமணத்திற்கு நேரடியாக வரவேண்டாமென சொல்லிவிட்டு வீட்டிலிருந்தபடியே நேரலையில் வாழ்த்துச்சொல்ல வைத்திருக்கிறது. தவிர்க்கவே முடியாமல் அழைக்கப்படும் உறவுகளும் கைகுலுக்கியோ, கட்டிப்பிடித்தோ நலம் விசாரிக்க முடியாமலும், வாழ்த்துகளை சொல்ல முடியாமலும், பாதங்கள் பணிந்து ஆசீர்வாதங்கள் வாங்க முடியாமலும் தனித்து நிற்கின்றன. இந்த சூழலை அறிவோடு பொருத்திப்பார்ப்பவர்கள் எதார்த்தத்தை எளிதாக கையாளுகிறார்கள். உணர்வோடு பொருத்திப்பார்ப்பவர்கள் வெளியில் புன்னகைத்தாலும் உள்ளுக்குள் ஒரு வெறுப்பு நெருப்பை அணையாமல் வைத்திருப்பார்கள்.

மிக நெருங்கிய உறவுகள் கூடவே இருந்து திருமணத்தை சிறப்பித்துவிட்டு ஆசீர்வாத மழையை அள்ளி வீசினாலும் கூட, மணமக்களுக்கு சந்தோஷமென்பது உடைந்துபோன கனவுகளின் மீது தெளிக்கப்படும் ஆறுதல் துளிகளாகத்தான் அவை இருக்கும். இப்போது திருமணம் செய்துகொள்ளும் இருவரும் எத்தனை திருமணங்களுக்கு போயிருப்பார்கள், நண்பர்கள், உறவுகள், கூட படித்தவர்கள், வேலை செய்பவர்கள் என எல்லோரோடும் எத்தனை குதூகலமாய் கேலியும் கிண்டலுமாய் அந்த திருமணங்களைக் கடந்து வந்திருப்பார்கள், தங்களது கல்யாணமும் இப்படியெல்லாம் நடக்க வேண்டுமென எத்தனை கனவுகளை மனதுக்குள் அடுக்கி வைத்திருப்பார்கள்.

எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி, மிகச்சிலரோடு விரைவில் முடிக்கவேண்டுமென்ற நிபந்தனைகளோடு, போட்டோக்களுக்கு கூட முழுப்புன்னகையை கொடுக்க முடியாமல் நடந்தேறும் இந்த கொரோனா காலத்திருமணங்கள் எல்லாமே நினைவுகளின் அலமாரியில் எப்போதுமிருக்கும் நிறைவேறாக்கனவுகளில் ஒன்றுதான்.

Representational Image
Representational Image
Pixabay

இந்த காலம் நிச்சயம் மாறும் இழந்து போன அத்தனை சந்தோஷங்களையும் இன்னொரு காலம் மூட்டை கட்டிக் கொண்டு வந்து கைகளில் திணிக்கும், அப்போது மனம் சுமந்த கனவுகளில் சிலவேனும் நிறைவேறும் வாய்ப்பு வரும். உறவுகளோடு கூடிக்களிக்க, நண்பர்களோடு ஆடித்திளைக்க, பயணங்கள் மூலம் பூமி அளக்க, வானம் நோக்கி சிறகுகள் விரிக்க இந்த வாழ்க்கை வழங்கும் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளவேனும் இப்போதைக்கு சில சங்கடங்களை தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்.

பிரியங்களின் கூடாரத்தில் அலங்காரங்களாய் இருக்கும் பொய்களைவிட அவசியமாய் இருக்கும் உண்மைகளை இன்னும் கொஞ்சம் நேசிப்போம்.
எஸ்.எம். தனபால்

சில உறவுகளுடன் வரும் பிணக்குகள் நீர்க்குமிழி போல சட்டென உடைவதும், உடைந்த கண்ணாடியைப்போல சிதறியே கிடப்பதும் நேசத்தின் மீதான முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு தேவையான கடவுச்சொற்கள் மறந்துபோன தருணங்களாய் காலத்தின் பரணில் கைக்கு எட்டாத தூரத்தில் தூக்கி எறியப்பட்டுவிடுகின்றன. தொடுத்துக்கொண்டிருக்கும் ஈகோவை அன்பால் கட்டிவிட ஒரு பக்கம் தயாராய் இருந்தாலும் வெறுப்பின் கயிறுகளைக்கொண்டு இன்னும் கொஞ்சம் இறுக்கிக்கட்டிவிட மறுபக்கம் வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

எதன் பொருட்டும் உறவுகளின் அன்பை, பிரியங்களை இன்னும் இன்னும் நெருங்கி பற்றிக்கொள்ளவே கைகள் நீளுகின்றன. அந்த பற்றுதலில் உதிரும் ஒரு துகள் ஒட்டுமொத்த ஈகோவையும் உடைத்துத் தகர்க்குமெனில் கைகளை இன்னும் கொஞ்சம் இறுகப்பற்றுவோம். பிரியங்களின் கூடாரத்தில் அலங்காரங்களாய் இருக்கும் பொய்களைவிட அவசியமாய் இருக்கும் உண்மைகளை இன்னும் கொஞ்சம் நேசிப்போம்.


-எஸ்.எம். தனபால்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு