Published:Updated:

`பிட் காயின் மோசடி டு ஹெல்மெட் விழிப்புணர்வு'- மீம்ஸ் போட்டு அப்ளாஷ் அள்ளும் ஈரோடு காவல்துறை!

ஈரோடு போலீஸார் உருவாக்கிய மீம்
ஈரோடு போலீஸார் உருவாக்கிய மீம்

மீம்ஸ்களை வைத்து சமூக விழிப்புணர்வையும் உண்டாக்க முடியும் என நிரூபித்து அசத்தி வருகின்றனர் ஈரோடு மாவட்டக் காவல்துறையினர்.

இன்றைக்கு திருவிளையாடல் படம் எடுத்து, `பிரிக்க முடியாதது எதுவோ!’ என நாகேஷ் கேட்டிருந்தால், சற்றும் யோசிக்காமல், `சோஷியல் மீடியாவும் - மீம்ஸ்களும்’ என்றிருப்பார் நடிகர் திலகம். அந்த அளவுக்கு இன்றைக்கு சோஷியல் மீடியாவின் அனைத்து தளங்களிலும் மீம்ஸ்களின் ஆதிக்கம்தான். ஒட்டு மொத்த நக்கலையும் ஒரே ஃபோட்டோவுக்குள் நிரப்பி, வகை தொகை பார்க்காமல் வைத்து செய்து வருகின்றனர் மீம் கிரியேட்டர்கள்.

கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள்தான் இப்படியான மீம்ஸ்களை அதிகளவில் உருவாக்கி வருகின்றனர். இத்தகைய மீம்ஸ்கள் பெரும்பாலும் தனி ஒரு நபரை விமர்சிக்கும் வகையிலோ, கலாய்க்கும் வகையில் காமெடியாகவோ தான் இருக்கும். ஆனால், இப்படியான மீம்ஸ்களை வைத்து சமூக விழிப்புணர்வையும் உண்டாக்க முடியும் என நிரூபித்து அசத்தி வருகின்றனர் ஈரோடு மாவட்டக் காவல்துறையினர்.

ஈரோடு போலீஸார் உருவாக்கிய மீம்
ஈரோடு போலீஸார் உருவாக்கிய மீம்

ஈரோடு மாவட்டக் காவல் துறையின் சார்பில் `Erode Smc' என்கின்ற முகநூல் பக்கம் இயங்கி வருகிறது. இந்த முகநூல் பக்கத்தில் ஈரோட்டில் நடக்கும் குற்றச் சம்பவங்கள், விவரங்கள் போன்றவற்றை மக்களுக்கு கார்ட்டூன் மூலமாகத் தினமும் தெரிவித்து வருகின்றனர். அதுபோக, ஹெல்மெட் அணிவது, சாலைப் பயணம், வங்கி மோசடி, பிட் காயின் மோசடி போன்றவற்றை மீம்ஸ் மூலமாகப் பதிவிட்டு விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

`அடிச்சும் கேப்பாய்ங்க, ஓ.டி.பி பின் நம்பரை கொடுத்துடாதீங்க’ என்ற வடிவேலுவின் காமெடியில் ஆரம்பித்து, சந்தானத்தின் காமெடியை வைத்து `ஹெல்மெட் போடுன்னு சொன்னா தலைவலிக்குது, முடி கொட்டுதுன்னு சொன்ன... இப்ப மண்டையில கட்டோட அய்யோ அம்மான்னு கத்துறியே!'... என கலாய்ப்பதாகட்டும், விவேக்கின் காமெடியை வைத்து காவலன் செயலிக்கு விழிப்புணர்வு செய்வதாகட்டும், `புள்ளிங்கோ கவனத்திற்கு... சாலையில் சாகசம் செய்வதைத் தவிர்த்துவிடுங்கள்’ என மீம்ஸ் போட்டு அப்ளாஸ் அள்ளுகின்றனர்.

மேலும், `ஆபத்தான இடங்களில் செல்ஃபி எடுப்பதைத் தவிர்ப்பீர்’, `மனித நேயத்தோடு இருப்போம். மற்றவர்களின் வாழ்க்கையைக் காப்பாற்ற ஆம்புலன்ஸுக்கு வழி விடுவோம்’ , `ஹலோ மக்களே... ஊரு முழுக்க ஒரே காய்ச்சலா இருக்கு, ஒழுங்கா எல்லாரும் பப்பாளி இலைச் சாறு, நிலவேம்பு கசாயம் குடிக்கவும்’ என்றெல்லாம் மீம்ஸ் மூலமாக மக்களை அறிவுறுத்தி வருகின்றனர்.

ஈரோடு போலீஸார் உருவாக்கிய மீம்
ஈரோடு போலீஸார் உருவாக்கிய மீம்

இதுகுறித்து ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசனிடம் பேசினோம். "இன்றைக்கு மீம்ஸ் என்பது மக்களிடம் அதிகமாக ரீச் ஆகியிருக்கிறது. எனவே, நாம் சொல்லவரும் கருத்துகள் மக்களுக்குச் சென்றுசேர வேண்டுமென இந்த முறையைக் கையாண்டு வருகிறோம். இதுமட்டுமல்லாமல், எஃப்.எம் மூலமாகவும் நோட்டீஸ் கொடுத்தும், மக்கள் கூடும் இடங்களில் மைக் மூலமாகவும் கூடுமான வரை பல்வேறு வகையான விழிப்புணர்வுகளைக் கொடுத்து வருகிறோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு