Published:Updated:

கொரோனா அலை.. அமெரிக்காவில் சிக்கிய தமிழரின் பாசிடிவ் அனுபவங்கள் ..! #MyVikatan

கையிலிருந்த காசெல்லாம் செலவாகி விட்ட சூழல். ஆறு மாதங்களைக் கடக்கும்போது, விசா நீட்டிப்புக்காக கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம். இப்படி இக்கட்டான நிலை.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

‘படிப்பறிவை விடப் பட்டறிவே உயர்வானது!’ என்பது ஒத்துக் கொள்ளப்பட்ட உண்மை.

’’அனுபவம் என்பது சீப்பு போன்றது. நம் தலையில் முடி உதிர்ந்த பிறகுதான் அது நமக்குக் கிடைக்கிறது.’ என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.. சரி..

கொரோனா காலத்தில் அமெரிக்காவில் சிக்கிய அடியேனின் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வே.

அமெரிக்கா போவது அடியேனுக்குப் பழக்கப்பட்டு விட்ட ஒன்றுதான் என்றாலும் கொரோனா காரணமாக, மூன்று மாதத்தில் திரும்ப வேண்டிய நாங்கள் ஏழு மாதங்கள் இழுத்தடிக்கப்பட்டது மனசை நோகச் செய்தது. யாருமே எதிர்பார்க்காத, உலகளாவிய ஒரு நிகழ்வு என்ற காரணத்தால், ’பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை’ என்பதும் புலனாகியது.

Airport
Airport
Pixabay

சில முறை மூன்று மாதங்களும், ஓரிரு முறை ஆறு மாதங்களும் தங்கியிருந்தாலும், இம்முறை கட்டாயமாக ஆறு மாதங்களுக்கு மேல் தங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. கொரோனா காரணமாக, வானூர்திகள் வழக்கத்திற்கு மாறாக ஓய்வு எடுக்கச் சென்றுவிட்டதால் எம்மைப் போன்றோர் அவதிப்பட நேர்ந்தது. இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்கும் (மெட்ரோ பாலிடன் சிட்டி) நமது சென்னைக்கு இன்று வரை முறையான விமானப் போக்குவரத்து தொடங்கப்படாதது ஆச்சரியமளிக்கும் ஒன்றே.

’சீனியர் சிடிசன்’ என்றழைக்கப்படும் 60 வயதைத் தாண்டிய வயது முதிர்ந்தோரில் பெரும்பாலானோர் தங்கள் குழந்தைகளுடன் அமெரிக்காவில் உள்ளதை அரசு உணராமல் போனது வியப்பானதே. ‘வந்தேபாரத்’ திட்டம் தொடங்கப்பட்டாலும், எல்லோராலும் அதில் பயன்பெற முடியவில்லை.

காரணம், எந்த விமான நிறுவனமும் பயணக் கட்டணத்தைத் திருப்பித் தர முன்வரவில்ல. ஏற்கெனவே பலர் வேலை இழந்த நிலை. கையிலிருந்த காசெல்லாம் செலவாகிவிட்ட சூழல். ஆறு மாதங்களைக் கடக்கும்போது, விசா நீட்டிப்புக்காக (Extension) கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம். இப்படி இக்கட்டான நிலை.

இதில் எங்கிருந்து புதிதாக வந்தே பாரத்துக்குப் பயணக் கட்டணம் செலுத்த இயலும்? இந்தக் கூத்தில் அமெரிக்காவில் செப்டம்பர் மாதத்தில் இலையுதிர் காலம் (Falls season) ஆரம்பித்து விட, சீதோஷ்ண நிலை மாறுபாடுகள் தோன்றி நம்மவர்களைச் சற்றே பயமுறுத்தும். நம்மவர்கள் அங்கு தங்க உகந்த மாதங்கள் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகியவையே. இந்த மாதங்களில் நாம் அணிந்திருக்கும் சாதாரண ஆடைகளுடன், ’ஜெர்கின்’ போன்ற குளிராடைகள் இன்றி சுதந்திரமாக வலம் வரலாம். வியர்வையும், குளிருமல்லாத அருமையான சீதோஷ்ணத்தை அனுபவிக்கலாம்.

Falls season
Falls season

நாங்கள் இந்தியர்கள். எதிர்த்த வீட்டினரோ சௌதி அரேபியர்கள். மேல் வீட்டுக்காரர்களோ ஆப்பிரிக்கர்கள். பக்கத்து வீட்டுக்காரர்களோ ‘ஸ்பானிஷ்’ பேசும் ஸ்பெயின் நாட்டவர்கள்.

சற்று தள்ளி பிரிட்டிஷ்காரர்கள். அதற்கு அப்பால் அமெரிக்கர்கள். பார்க்கும்போது, மனது நிறைந்த சிரிப்புடன் ஒரு ஹை. ஹலோ. மார்னிங்/ஈவ்னிங். அவரவர் வழியில் அவரவர்கள். எங்கும் அமைதி. நிம்மதி. உண்மையில், வேற்றுமையில் ஒற்றுமை. பார்க்குகளில் சந்திப்பு. பரஸ் பர நலம் விசாரிப்பு. சில சமயங்களில் ‘ பார்பிக்யூ’ என்ற பெயரில் கூட்டாஞ்சோறு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாடல்! ஆடல்! உற்சாகம்!

இங்கு செல்போன் டவர்களைப் பார்ப்பது அரிது. எல்லாம் சாட்டிலைட் மூலமே. எனவே சிட்டுக்குருவிகள் தினந்தினம் ஊர்வலம் போகின்றன. அதனைக் காணும் நம் மனங்களும் ஆனந்தத்தில் சிறகடிக்கின்றன. பாட்டியோவில் தூவும் அரிசிகளை அவை கொத்தும்போது, நம் மனங்கள் உற்சாகத்தில் குதூகலிக்கின்றன! ’சிட்டுக் குருவி தினம்’ கொண்டாடும் நாம் நம் நாட்டில் அவை மகிழ்வாகச் சிறகடிக்க வழி செய்யவில்லையே என்று குற்றவுணர்ச்சி தோன்றாமல் இல்லை.

Deer
Deer
Pixabay

நீண்ட சாலைகளை ஒட்டியுள்ள சிறு சிறு இடைவெளிகளிலுங்கூட நெடிதுயர்ந்த மரங்களை வளர்க்கிறார்கள். 50 அடிகளுக்கு அப்பாலுள்ள சாலைகளைக் கூடப் பார்க்க முடியாத அளவுக்கு மரங்களைக் காடுகளாகவே பராமரிக்கிறார்கள். பனி பெய்நாடு என்பதால் பாம்புகளின் பயம் அவ்வளவாக இல்லை. வேறு விஷ ஜந்துக்களையும் பார்ப்பது அரிது. அடர்ந்த மரங்களின் நிழல்களில் நடைப் பயிற்சிக்கான பாதைகளை அமைத்துள்ளார்கள்.

மக்கள் உற்சாகமாக வலம் வருகிறார்கள். அக்காடுகளுக்குள் வாழும் மான்கள் நம்மை மிரட்சியுடன் பார்க்கும்போது மனது லேசாகி, அதன் அழகை ரசிக்கிறோம். மற்றொரு பக்கம் முயல்கள் தங்கள் விருப்பப்படி தத்திக் குதிக்கின்றன.

எந்த மனிதராலும் அவைகளுக்கு சிறு தீங்கு கூட இழைக்கப்படுவதில்லை. அவற்றின் சுதந்திரத்திற்கும் எந்தப்பங்கமும் நேர்வதில்லை. இவையெல்லாந்தான் வளர்ந்த நாடுகளின் இலக்கணம் போலும்.

குட்டை, குளம், ஏரி இவைகளுக்கும் குறைவேயில்லை. ஆங்கங்கு அவை பஞ்சமின்றி நிறைந்திருக்கின்றன. அவற்றில், வரிசையாக வாத்துகள் ஊர்கோலம் போவதைப் பார்ப்பதற்கு இரண்டு கண்கள் போதவில்லை. பெரிய ஏரி என்றால், படகு சவாரி செய்கிறார்கள். அவைகளில் யாரும் இறங்கவோ, குளிக்கவோ, நீந்தவோ கூடாது என்ற அறிவிப்பு உள்ள இடங்களில் அதனை அப்படியே, இம்மியும் பிசகாமல் கடைப்பிடிக்கிறார்கள். நம்மூரில், சட்ட, திட்டங்களை மீறுவதையே சிலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளது, வேதனை தரும் விஷயமே.

நன்றி மிகக் கொண்ட நாய்களைத்தான் நாம் அதிகம் விரும்பி வீடுகளில் வளர்க்கிறோம். அங்கும் நாய்கள் வளர்க்கிறார்கள். எப்படி? பிள்ளைகளைப்போல். ஆம்! அவைகள் வீட்டின் உள்ளேயே உள்ளன.

Virginia
Virginia

வீட்டின் எந்த அறைக்கும் எப்பொழுதும் செல்லும் முழுச் சுதந்திரம் அவைகளுக்குத்தான். ’வாக்’ வரும்போது மட்டும் வெளியில் கூட்டிக் கொண்டு வருகிறார்கள். சின்னப் பிள்ளைகளைப் போல் சமர்த்தாய் அவை வருகின்றன. அவை மலம் கழித்தவுடன், அதற்கென உள்ள பையில் எடுத்து. ஆங்காங்கே அதற்கென உள்ள பெட்டிகளில் போட்டுவிடுகிறார்கள். பல வீடுகளில் இரண்டு நாய்கள் வளர்த்தாலுங்கூட அவற்றின் குரைப்புச் சத்தத்தைக் கேட்கவே முடிவதில்லை. பழக்கம் அப்படி.

நம்மூரில், எங்கள் தெருவில், பக்கத்துத் தெருக்காரர் நாயைப் பிடித்துக் கொண்டுவர, அது இவரின் வீட்டு வாசலில் மலம் கழிக்க, இருவரும் போட்ட குஸ்தி ஏனோ எப்பொழுதும் மனதில் திரைப்படமாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. நாம் எப்பொழுதுதான் தூய்மை கடைபிடிக்கப் போகிறோம் என்று ஏக்கமாக இருக்கிறது.

சாலைகள் அனைத்தும் படு சுத்தம். தூய்மையில் மட்டுமல்ல. அமைப்பிலும். நானும் கையில் ‘செல்’லை வைத்துக் கொண்டு, போகின்ற சாலைகளிலெல்லாம், எங்காவது ‘மேன் ஹோல்’ பள்ளமாகவோ, மேடாகவோ அமைக்கப்பட்டிருக்கிறதா? என்று பார்த்து, அதனைப் புகைப்படம் எடுக்கலாமென்று முயன்றேன். எனக்கு முழுத் தோல்வியே. மேன் ஹோல் இருப்பதே தெரியாத அளவுக்கு நேர்த்தியாகச் சாலைகளை அமைத்துள்ளார்கள். அது மட்டுமா? மழை பெய்து கொண்டிருக்கும் போது கூட, சாலைகளில் நீர் தேங்குவதில்லை. அவ்வளவு அருமையான வடிகால் அமைப்பு.

Virginia
Virginia

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணந்தான் யாம் தங்கியிருந்த இடம்! ‘VIRGENIA IS FOR LOVERS’ என்ற வாசகம், காரின் நம்பர் பிளேட்டுகளிலிருந்து எல்லா முக்கிய இடங்களிலும் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். ஒவ்வொரு மாகாணமும் ஒவ்வொன்றுக்குப் பேர் போனதாகக் கூறுகிறார்கள். வெர்ஜீனியா காதலுக்குப் பேர் போன மாநிலமாம். இங்கு சாதாரணமாகவே நாம் கொரோனாவுக்காகச் சொல்லுகின்ற சமூக இடைவெளி (social distancing)யை எப்பொழுதுமே கடைப்பிடிக்கிறார்கள். இருந்தும் கலிபோர்னியா, நியூயார்க் போன்ற மாகாணங்களில் இறப்பு அதிக அளவில் நிகழ்ந்துள்ளதுதான் கொடுமை. பல நிபுணர்கள் கூறுவதைப்போல, இந்த வைரஸ், மக்களை அழிக்கவென்றே கண்டுபிடித்ததுதானோ என்று எண்ணவே தோன்றுகிறது.

வழக்கமாக யாம் எந்த நாடு சென்றாலும், அந்த நாட்டில் நமது நாட்டுத் தயாரிப்புகள் புழக்கத்தில் உள்ளனவா என்று பார்ப்பது வழக்கம். ஆனால், குண்டூசி தொடங்கி பெரிய பொருட்கள்வரை எல்லாமே சீனத் தயாரிப்பாக இருப்பதைப் பார்க்கும்போது சீனர்களின் மீது ஒரு பாசம் மனதில் ஓடும். சிறுவர்கள் விளையாட்டுப் பொருட்கள் தொடங்கி, அனைத்துப் பொருட்களையும் தயாரித்து, அனைத்து நாடுகளிலும் விற்பனை செய்யும் அவர்களின் திறமையை என்னென்பது!

சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் நமது மசாலாப் பொருட்களும், தஞ்சாவூர் பொன்னி அரிசியும் கிடைக்கின்றன. அன்று வெர்ஜீனியாவின் சாலைகளில் இருந்த மேன் ஹோல்களில் ‘Made in India’ என்பதைப் பார்த்தவுடன் மனம் முழுவதும் ஓர் இன்ப ஓட்டம். உலகம் பூராவிலும் தற்பொழுது நமது இட்லி, தோசை, வடை என்று அனைத்து ஐயிட்டங்களும் கிடைக்கின்றன. நமது உணவு வகைகளை, அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் ஒரு பிடிபிடிக்க ஆரம்பித்துவிட்டனர். நாம்தான் பிசா என்றும், பாஸ்டா என்றும், நூடுல்ஸ் என்றும் அலைகிறோம்.

Flight
Flight

ஒரு வழியாக, விமானப் போக்குவரத்து தொடங்கி வாஷிங்டன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டோம். விமானம் மேலெழுந்து பறக்க ஆரம்பித்ததும் ஏர் ஹோஸ்டஸ் சில படிவங்களைக் கொடுத்து, பூர்த்தி செய்து தரச் சொல்ல, நான்கைந்து சீட்டுகள் தள்ளி அமர்ந்திருந்த இளைஞர், ‘பேனா வேண்டுமா?’ என்று சைகையில் கேட்க, ’இருக்கிறது என்னிடம்!’ என்று சைகையில் கூறினேன்! பின்னர், சீட் அருகில் வந்த அவர் ‘ஏதாவது உதவி தேவை என்றால் கூச்சப்படாமல் கேளுங்கள். உதவக் காத்திருக்கிறேன்’ என்று கூறி மனதை நெகிழச் செய்தார்.

ஒரு சிலருக்கு அந்தப் படிவங்களைப் பூர்த்தி செய்ய உதவினார். ‘வட இந்தியர் போலும்’ என்று மனதுள் நினைத்துக் கொண்டோம். மீண்டும் அபுதாபியில் இறங்கிய போது, நட்புடன் சிரித்தார்’ எந்த மாநிலம்?’ என்று நான் கேட்டதும், ’பாகிஸ்தான்’ என்றார். மனது நிறைந்தது.

எனது உறவினர் அலுவலகத்தில் பணிபுரியும் சீனர் ஒருவரும் நன்கு உதவி செய்வார். எம்மைக் கூட காரில் ஒரு முறை கடைக்கு அழைத்துச் சென்றார். இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா நட்புடன் செயல்பட்டால், உலகத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்கலாமோ.

இன்னும் சொல்ல வேண்டியது நிறைய உள்ளன. ஒரே நேரத்தில் வேண்டாம் என்பதால் இத்துடன் இப்பொழுது நிறுத்திக் கொள்வோம்.

-ரெ.ஆத்மநாதன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு