பரபர நடப்பு நிகழ்வுகளும் அதற்கேற்ற 7 ஃபேஸ்புக் எமோஜிகளும்! #MyVikatan

ஆயிரம் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத நமது உணர்வுகளை ஒரு எமோஜி அற்புதமாக வெளிப்படுத்தி விடுகிறது.
பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்
ஃபேஸ்புக் பதிவுகளுக்கு நம்முடைய பொருத்தமான எதிர்வினைகளை வெளிப்படுத்த ஃபேஸ்புக்கில் நமக்கு ஏழு எமோஜிகள் கிடைக்கின்றன.
விருப்பம், அன்பு, சிரிப்பு, கோபம், சோகம், வியப்பு மற்றும் கவனம் ஆகிய இந்த எமோஜிகள் நமது மன உணர்வுகளை அழகாக வெளிக்காட்டக் கூடியனவாய் இருக்கின்றன. ஆயிரம் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத நமது உணர்வுகளை ஒரு எமோஜி அற்புதமாக வெளிப்படுத்தி விடுகிறது.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த எமோஜிகள், இன்றைய சோஷியல் மீடியா உலகின் முடிசூடா மன்னர்களாகத் திகழ்கின்றன.
தற்சமயம் நாட்டில் நிலவக்கூடிய பல்வேறு பிரச்னைகளுக்கும் நிகழ்வுகளுக்கும், தங்கள் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகப் பெரும்பாலான மக்கள் வழங்கக்கூடிய ஃபேஸ்புக் எமோஜிகள் என்னவாக இருக்கும் என்ற யோசனையின் வெளிப்பாடு இந்தப் பதிவு.
சாத்தான்குளம் பெண் காவலருக்கு - LIKE :
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளத்தில் தந்தை-மகன் ஆகியோர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் மனசாட்சிக்குப் பயந்து, அச்சமின்றி நேர்மையாகச் சாட்சியம் அளித்துள்ளார் சாத்தான்குளம் பெண் காவலர்.

இன்றைய உலகில் பொய்கள்தான் உண்மைகள் போன்று மாயத்தோற்றம் கொடுக்கின்றன. பொய்களே எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. இத்தகைய சூழலில் காவலரின் சாட்சியம் உண்மைக்கும் உலகில் மதிப்புண்டு என்பதாகவே நேர்மறையாகப் பார்க்கப்படுகிறது. தற்போது சி.பி.ஐ இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ள நிலையில், தாமதமின்றி நீதி வழங்கப்படும் என மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
கேரளாவின் ஓராண்டு லாக்டௌன் விதிமுறைகளுக்கு - CARE:
இந்தியாவில் முதல் மாநிலமாகக் கேரளாவில் லாக்டௌன் விதிமுறைகள் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளன. அடுத்த ஓராண்டிற்கு மக்கள் கட்டாயம் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை கேரளா அரசு வெளியிட்டுள்ளது.

இதன்படி அடுத்த ஓராண்டிற்கு கேரளாவில் பெரிய கூட்டங்கள் நடத்த அனுமதியில்லை. அரசு அனுமதி பெற்று மட்டுமே கூட்டங்கள் நடத்த வேண்டும்.
திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். கொரோனா பாதிப்பு இல்லாத உயிரிழப்பு நிகழ்வுகளில் 20 பேர் வரை பங்கேற்கலாம். மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு கேரள அரசால் வெளியிடப்பட்டுள்ள இந்த விதிமுறைகள் மக்கள் மனமுவந்து ஏற்கக்கூடிய ஒன்றாக இருக்கின்றன.
மேலும் இத்தகைய நடைமுறைகள் கேரளாவுக்கு மட்டுமல்லாது உலகம் முழுவதற்கும் தேவையான ஒன்றாகவும் அமைந்துள்ளன!
கொரோனா மீம்ஸ்களுக்கு -LAUGH:
முழுமையான கொரோனா லாக்டெளன் காலகட்டத்தில் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாயினர். துன்பம் வரும்போதும் சிரிக்க வேண்டும் என்னும் பழமொழிக்கு உயிர் கொடுக்கும் வகையில், கடந்த சில மாதங்களாக கொரோனா சூழல் மற்றும் சீனா குறித்த பல்வேறு மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன.
தன்னைத்தானே பகடி செய்துகொள்ள ஒரு மனிதனுக்கு மிகுந்த மனவலிமை தேவை.

அந்த வகையில் நகைச்சுவை உணர்வுடன்கூடிய மன வலிமையை நமக்கு அளிக்கக்கூடியதாக இன்றைய மீம்ஸ்கள் மாறியுள்ளன.பார்த்தவுடன் சிரிப்பைத் தூண்டும் வகையிலும், பகடி செய்யப்படும் நபரும் ரசிக்கக்கூடிய வகையிலும் இவை இருப்பது கூடுதல் சிறப்பு. சமூக வலைதளங்களில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் இத்தகைய கொரோனா மீம்ஸ்கள் மக்களின் லாக்டௌன் கால மன அழுத்தத்தைக் குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்றால் அது மிகையல்ல.
சீன செயலிகள் தடைக்கு -WOW:
பாதுகாப்புக் காரணங்களுக்காக சீனாவின் 59 செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. பொருளாதார ரீதியில் பின்னிப் பிணைந்த இந்தியாவும் சீனாவும் எந்த ஒரு பிரச்னையை முன்னிட்டும் உடனடியாகப் பொருளாதார உறவுகளைத் துண்டித்துக்கொள்வது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்று. ஆனால், நம்மால் உடனடியாகப் புறக்கணிக்கக்கூடிய ஒன்று உண்டு எனில், அது சீனாவின் செயலிகள்தான்.
தற்போது தடை செய்யப்பட்டுள்ள செயலிகள் எதுவும் மக்களின் அத்தியாவசியத் தேவைகள் இல்லை.

எனவே, நாட்டின் பாதுகாப்பு கருதி இவற்றைத் தடை செய்வதால் மக்களுக்கு எந்தவிதப் பிரச்னையும் ஏற்படப்போவது இல்லை. தடை செய்யப்பட்ட சீன செயலிகளுக்கு மாற்றாக இந்தியாவின் செயலிகள் வேகமாகக் களத்திற்கு வரத் தொடங்கியுள்ளன. இதே வேகத்தில் இந்தியா அனைத்துத் துறைகளிலும் சுயசார்புப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டும். அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா அடிப்படையான பல்வேறு முக்கியத் துறைகளில்
தற்சார்புடைய நாடாக மாற வேண்டும் என்பது இந்திய மக்களின் விருப்பம்.
கொரோனா பாதிப்பில் மூன்றாமிடத்துக்கு-SAD:
உலக அளவில் கொரோனா பாதிப்பில் ரஷ்யாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா மூன்றாமிடத்துக்குச் சென்றுள்ளது.
இந்தியாவின் மக்கள்தொகை அடிப்படையில், சதவிகிதக் கணக்கில் கணக்கிடும்போது நோய்தொற்றின் அளவு குறைவே என்றாலும், உலகளவில் மூன்றாமிடம் என்பது ஒரு சோகமயமான நிகழ்வாகும்.

வறுமை, மக்கள் அடர்த்தி போன்றவை இதற்கான காரணங்களாகக் கூறப்பட்டாலும், இப்பிரச்னையில் இருந்து இந்தியா விரைவில் மீண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. விழிப்புணர்வு, சுகாதார நடவடிக்கைகள் மற்றும் நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பு ஆகியவற்றின் வாயிலாக கொரோனா பிடியில் இருந்து இந்தியா விரைவில் மீளும் என நம்புவோம்!
சிறார் வதை நிகழ்வுக்கு - ANGRY:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமி சிறார் வதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் உடலில் முட்களைக் கொண்டு காயங்களை ஏற்படுத்தி, கொலை செய்யப்பட்டு முட்புதரில் தூக்கி வீசிய இந்த நிகழ்வு மக்கள் மனதில் கனலை உண்டாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிக்கு மிக விரைவில் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது.

தொடர் கதையாகிக்கொண்டிருக்கும் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்கக் கூடாது என்பதே அனைவரின் விருப்பமாகும்.போக்ஸோ உள்ளிட்ட கடுமையாகச் சட்டங்கள் இயற்றப்பட்டும் இதுபோன்ற கொடுமையான நிகழ்வுகள் தொடர்ந்த வண்ணம் இருப்பது வேதனையான ஒன்று. இத்தகைய குழந்தைகளுக்கு எதிரான நிகழ்வுகள் சமுதாயத்தின் சிதைந்துபோன மனநிலையை வெளிப்படுத்துவதாகவே உள்ளன. இனி என்ன செய்தால் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறையும் என்ற ஏக்கமும், விடையற்ற கேள்வியும் மட்டுமே நீண்டகாலமாக மக்களிடம் தொக்கி நிற்கிறது!
இந்திய-சீன சுமுகப் பேச்சுவார்த்தைக்கு - LOVE:
கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் மோதல் சம்பவம் எதிரொலியாகத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இருதரப்பும் படைகளை விலக்கிக்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மனிதன் தோன்றிய காலந்தொட்டே மனித குலம் போர்களால் அவதிப்பட்டு வருகிறது.
போர்கள் உயிர்களை மட்டுமல்ல, இரு நாட்டு மக்களின் உணர்வுகளையும் கொன்று குவிக்கக் கூடியவை.
இருநாடுகள் இடையேயான கருத்து வேறுபாடுகள் வேற்றுமையாகவும்,
போராகவும் மாறிவிடாமல் இந்த விஷயம் தற்போதைக்குப் பரஸ்பர புரிதலுக்கு வந்தது அமைதியை விரும்பும் அனைவருக்கும் நிம்மதி அளிக்கக்கூடிய ஒன்றாகும்.
- அகன் சரவணன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.