Election bannerElection banner
Published:Updated:

தீர்க்கதரிசன பதிலாக இருக்கும் எஸ்.பி.பி பாடல்..! - ரசிகரின் மடல் #MyVikatan

எஸ்.பி.பி
எஸ்.பி.பி

சகலகலா வல்லவன் படத்துக்குப் பிறகு தமிழனின் ஒவ்வொரு புத்தாண்டும் எஸ்.பி.பியின் இளமையும் இனிமையும் என்றும் குறையாத "ஹேப்பி நியூ இயர்" பாடலுடன்தான் தொடங்குகிறது...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மூன்று தலைமுறை உலக தமிழர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்திய ஆளுமைகளாக சிலரைக் குறிப்பிடலாம். எம்.ஜி.ஆர், சிவாஜி, கண்ணதாசன், எம்.எஸ்.வி, டி.எம்.எஸ், என தொடரும் அந்த பட்டியலில் பாடகர் எஸ்.பி.பிக்கும் நிச்சயமாய் ஒரு இடம் உண்டு .

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பாடல்களின் தாக்கம் இல்லாமல் வளர்ந்ததாக அல்லது வாழ்வதாக எந்த தமிழனாவது கூறினால் அது நிச்சயம் பொய்யுரையாகத்தான் இருக்கும் .

சகலகலா வல்லவன் படத்துக்குப் பிறகு தமிழனின் ஒவ்வொரு புத்தாண்டும் எஸ்.பி.பியின் இளமையும் இனிமையும் என்றும் குறையாத "ஹேப்பி நியூ இயர்" பாடலுடன்தான் தொடங்குகிறது . நமது அனைத்து உணர்வுகளுக்கும் பாடல் வடிவம் கொடுத்தவர் எஸ்.பி.பி . நிலவற்ற இரவுகளிலும் அந்த நிலவின் குளிர்ந்த ஒளியையும் ஏகாந்த உணர்வுகளையும் நம் இதயத்தில் ஒளிரச் செய்வது பாடும் நிலா பாலசுப்ரமணியத்தின் குரல் . அவர் இசையமைத்து நடித்த சிகரம் படத்தின் "இதோ இதோ என் பல்லவி" பாடலில் வரும் வரிகளைப் போலவே, பாடல் பாட வந்து நம் பாடலாகவே மாறிப்போனவர் பாலு . ஏழு ஸ்வரங்களையும் உள்ளடக்கிய எட்டாவது ஸ்வரம் எஸ்.பி.பி .

எஸ்.பி.பி
எஸ்.பி.பி
Photo: Vikatan

ரு மேடை நிகழ்ச்சியில் " நான் எப்போதுமே இளமையாகத்தான் இருப்பேன்... காரணம் நான் எஸ் பி "பால" சுப்ரமணியம் . " எனப் பால என்பதை அழுத்திக் குறிப்பிட்டு, கட்டை விரலைச் சூப்புவதைப் போல பாவனை செய்தார் எஸ்.பி.பி.

அவரது பாடல்களை கேட்கும் போதெல்லாம் அவரது குழந்தை முகமும் கருணை கண்களும் தான் ஞாபகம் வரும். அவரது பாடல்களை போலவே அவரது தோற்றத்தையும் முதுமை தொடாது என்ற அதீத நம்பிக்கையினாலோ என்னவோ, அரை நூற்றாண்டு காலம் இசைத்தேன் மழை தூவிய சங்கீத மேகம் மறைந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை .

சாதனை மனிதர்கள் மறையும் போதெல்லாம் அவர்களது புகழ் பாடுவது மானிட மரபு...

குரு பாரம்பரியத்தை அடிப்படையாக கொண்ட கர்நாடக சங்கீதத்தை கேள்வி ஞானத்தால் மட்டுமே கரைத்துக் குடித்தது தொடங்கி, நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், ஒரே நாளில் 19 பாடல்களைப் பாடியது, இசையமைப்பாளர் டப்பிங் கலைஞர், என பலமுக திறமைகளில் சாதித்தது என அவரது சாதனைகள் அனைத்தும் நினைவு கூறப்படுவதற்கு ஈடாக அவரது குணமும் கொண்டாடப்படுகிறது.

ஒரு மனிதன் என்ன சாதித்தான் என்பதைவிட எப்படி வாழ்ந்து அந்த சாதனையை செய்தான் என்பதுதான் முக்கியம் . அந்த வகையில் புகழையும் செல்வத்தையும் மண்டைக்குள் கர்வமாய் சுமக்காமல் தான் இதயத்தில் ஏற்ற கலைக்கு மட்டுமே இறுதிவரை உண்மையாய் இருந்த உத்தமர் எஸ்.பி.பி . அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பாமர மக்களின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் அவரது குரலுக்கானது மட்டுமல்ல, அவரது எளிய குணத்துக்கும் இனிய சுபாவத்துக்கும்தான் .

எஸ்.பி.பி
எஸ்.பி.பி
Photo: Vikatan

மேடைகளில் மட்டுமல்லாமல் பாலு ஏற்று நடித்த பாத்திரங்களிலும் அவரது குழந்தை மனதையும், நகைச்சுவை உணர்வையும் உணரலாம்...

நம் மீது நம்பிக்கை வைத்து, எப்போதும் கரிசனம் காட்டும் வாஞ்சையான ஒரு சித்தப்பாவோ மாமாவோ ஒவ்வொரு குடும்பத்திலும் இருப்பார்கள். அப்படியான ஒரு, பருத்த சரீரமும் கனிந்த குரலுமான வாஞ்சையான தோற்றம் பாலுவினுடையது .
காரை அக்பர்

அவ்வை சண்முகி படத்தில் அவர் ஏற்ற டாக்டர் பாத்திரத்தை சிறந்த உதாரணமாக சொல்லலாம். காரிலிருந்து இறங்கி, குழந்தையை சோதித்து முடிக்கும்வரை அனைத்து பாத்திரங்களின் பேச்சையும் கேள்விகளையும் ஹாஸ்யமாக்கி, தன் இயல்பான நடிப்பால் ஒரு மினி நகைச்சுவை பிரளயத்தை ஏற்படுத்தியிருப்பார் .

பெரும்பாலான பிரபலங்களின் மீது நமக்கு ஏற்படும் பிரமிப்பும் தயக்கமும் எஸ்.பி.பியின் தோற்றத்தை காணும் போது ஏற்படுவதில்லை...

குடும்பம் முழுவதும் நம் மீது கரித்துக்கொட்டும் போது,

"அட விடு . அவன் பார்த்துக்குவான் . "

என நம் மீது நம்பிக்கை வைத்து, எப்போதும் கரிசனம் காட்டும் வாஞ்சையான ஒரு சித்தப்பாவோ மாமாவோ ஒவ்வொரு குடும்பத்திலும் இருப்பார்கள். அப்படியான ஒரு, பருத்த சரீரமும் கனிந்த குரலுமான வாஞ்சையான தோற்றம் பாலுவினுடையது . எந்த பிரச்சனையையும், எதை பற்றியும் பகிர்ந்துகொள்ளலாம் பரிவுடன் பார்த்துக்கொள்வார் என்பதான தோற்றம் .

சினிமா விழாக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பேட்டிகள் என அவரது பேச்சுகள் அனைத்திலும் ஒரு உள்ளார்ந்த வாஞ்சையும் நேசமும் இருப்பதை உணரலாம்.

எஸ்.பி.பி
எஸ்.பி.பி
Photo: Vikatan

எஸ்.பி.பியின் மறைவை எப்படி ஏற்றுக்கொள்வது என்ற கேள்விக்கான தீர்க்கதரிசன பதிலும் அவர் பாடிய பாடல் வரிகளிலேயே இருக்கிறது...

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்…

ஆகாயம் பூக்கள் தூவும் காலம்...

நாளை என் கீதமே எங்கும் உலாவுமே...

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்…

எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அனையா விளக்கே .

நிலவும் தமிழும் நிலைத்திருக்கும் காலம்வரை பாலுவின் பாடல்கள் உயிர்த்திருக்கும்.


-காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு