`நான் பாவம் இல்லையா மவனே!' - மகனிடம் மொக்கை வாங்கிய அப்பாவின் பகிர்வு #MyVikatan

செல்போனை கையில் பிடித்தபடி எதையோ விளையாடிக்கொண்டிருந்த என் அன்பு மகன் நான் ஷோபாவில் அமர்ந்து எதையோ யோசித்தபடி இருந்ததைக் கவனித்துவிட்டான்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
அது ஓர் அழகிய மாலை நேரம். ஏனெனில், வீட்டில் நானும் என் 8 வயது மகனும் மட்டுமே இருந்தோம். எஜமானியம்மா (என் மனைவிதான்) பக்கத்து ஊரிலிருக்கும் அவரின் அம்மாவைப் பார்க்க தனி வண்டியில் சென்றிருந்தார். இனி மாமியார் என்றே சொல்கிறேன். (எதற்கு வீண் வம்பு?)...
செல்போனை கையில் பிடித்தபடி எதையோ விளையாடிக் கொண்டிருந்த என் அன்பு மகன் நான் ஷோபாவில் அமர்ந்து எதையோ யோசித்தபடி இருந்ததைக் கவனித்துவிட்டான். கிட்ட வந்து எதிர் ஷோபாவில் அமர்ந்தான்.
"என்னப்பா... ரொம்ப நேரமா யோசனை?"
நாம் யோசிக்காமல் இருந்தாலும் இப்படி யாராவது கேட்டால் எதையோ வெற்றிக்கரமாகச் சிந்தனை செய்ததுபோல் பாவ்லா காட்டுவோம் என்று எனக்கு அப்போது தெரியவில்லை.
"ஒண்ணுமில்ல தங்கம்.. ஏன் இன்னும் கொரானாவுக்கு மருந்து கண்டுப்பிடிக்க முடியலனு யோசிச்சிட்ருக்கேன்"
"இல்லப்பா... பொய் சொல்ற. அம்மா இன்னக்கி காலைல உன்னைத் திட்டிட்டுனு நினைச்சுதானே கவலையா இருக்க?"
"ச்சே... ச்சே அதெல்லாம் அப்பவே மறந்துட்டேன் செல்லம்."
"பொய் சொல்லாதப்பா... எனக்கு முன்னாடி உன்னைத் திட்டுனதை என்னாலயே பொறுத்துக்கொள்ள முடியல. உன்னால தாங்கிக்கொள்ள முடியாதுனு தெரியும்ப்பா..."
அட நான் பெத்த மவனே... அப்பா மனசை அப்படியே புரிஞ்சு வச்சிருக்கியேடா. நான் என்னலாம் நினைக்கிறேனு சரியா சொல்றியேடா எனச் சொல்ல வேண்டும்போலவே இருந்தது. இருந்தாலும் எந்தளவுக்கு என் மனதை அறிந்து வைத்திருக்கிறான் அவனே சொல்லட்டும் என,
"கணவன் மனைவின்னா இப்படி சண்டை வரத்தான் செய்யும் தங்கம். அதுக்காக இப்படி நொந்துப்போயி உட்கார முடியுமா என்ன?" என்றேன்.

" அப்பா... தாத்தாவை எதிர்த்து ஆச்சி எதுவுமே பேசாது. ஆனா, உன்னை எதிர்த்து அம்மா நிறைய பேசுது உன்னாலயும் பதில் பேச முடியல. விட்டா ஓடிரலாம்ங்ற மனநிலைல இருக்குற? உன்னைப் பார்த்தாலே பரிதாபமா இருக்குப்பா."
அவன் அப்படிச் சொன்னதும் என் கண்ணில் கண்ணீர் வர எத்தளித்தது.
சமாளித்துக்கொண்டு "யாராவது ஒருத்தர் விட்டுக்கொடுக்கணும்பா... அதான் வாழ்க்கை" என்றேன்.
"நீ மட்டுமேதான்பா விட்டுக்கொடுக்கிற. இப்படிக் கொஞ்சமும் கோபப்படாம நொந்துப் போயி உட்கார உனக்கு அம்மாவை அடிக்கணும்னு எண்ணம் வரவே இல்லியாப்பா?"
``என்னது எண்ணம் வரலியா? ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு... பார்க்கிறியானு சிங்கம் சூர்யா கைய ஓங்கி அடிக்கிறாப்ல அடிக்கணும்தான் தோணுது. அப்படி அடிச்சிட்டேன்னா.. கொடுமைப்படுத்துறானு கம்ப்ளைன்ட் கொடுத்துடுவா. கொஞ்சமும் யோசிக்க மாட்டா. இப்படித்தான் கல்யாண ஆன புதுசுல ஊர் ஸ்டேஷன்ல போயி சொல்லிட்டா... யப்பா... அதை மறக்கவே முடியாது'' என்று என் மைண்ட் வாய்ஸில் ஓடிக்கொண்டிருந்தது.
சரி பழசை ஏன் கிளற வேண்டும் என்று, "அடிக்கிறது தப்புப்பா... அன்பால திருத்தணும்" என்றேன்.

"நீ திருந்தவே மாட்டப்பா... எனக்குக் கல்யாணம் பண்றப்ப நல்லப் பொண்ணா பாருப்பா... உன்னை மாதிரிலாம் சகிச்சுட்டு என்னால இருக்க முடியாது" என்றான்.
வயது எட்டுதான், ஆனாலும் பேச்சு வளர்ந்தவன் அளவுக்குப் பேசுவான். என் மீது பாசம் உண்டுதான். இருந்தாலும் அவன் அம்மா மீது ரொம்பவே அதிகம். என் மனநிலையில் இப்படியொரு ஆறுதலான வார்த்தையை என் நண்பர்களிடத்தில்தான் கேட்டிருக்கிறேன். ஏன் அவர்களுக்கும் அறிவுரையெல்லாம் கூறியிருக்கிறேன். வீட்டிற்கு வீடு வாசப்படியல்லவா... இருப்பினும் அப்போதைக்கு அவன் கேட்டது ஆறுதலாகவே பட்டது.
இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று அவனுக்குச் சொல்லிப் புரிய வைக்க வேண்டிய கடமை என்னுதல்லவா? ஆனால், பொய்ச் சொல்லாதே எனச் சொல்லித்தரும் நாம் இங்கே பொய் சொல்லித்தான் ஆக வேண்டும். வள்ளுவரும் பொய்யால் ஒரு நல்லது எனில் பொய் தவறில்லை என்றுதானே சொல்லிருக்கிறார்.
ஆதலால் என் மகனின் மனநிலையில் மாற்றம் வர வேண்டி,
"அப்பா அம்மாகிட்ட இறங்கிப் போறதால தப்பு எதுவுமில்ல. இதுதான் வாழ்க்கைப்பாடம்" என்றேன்.

"இல்லப்பா... டிவில வடிவேலு கோவை சரளாட்ட ரெண்டு ஒண்ணும் நாலுனு சொல்றப்பலாம் நீ விழுந்து விழுந்து சிரிச்ச. அதுக்கும் அம்மாட்ட திட்டு வாங்குன. உனக்கு அம்மாவை அடிக்கணும்னு தோணுதுலப்பா..."
`வடிவேலு சொல்றாப்ல... ஷ்ஷ்... முடியலப்பா...' என நினைத்தபடியே,
"தங்கம் அம்மா ரொம்ப நல்லவங்க. நமக்காகச் சமைக்கிறது... வீட்டைப் பாத்துக்கிறது... உனக்குப் பாடம் சொல்லித் தர்றதுனு எவ்ளோ செய்றாங்க. போகட்டும்... ரெண்டு திட்டு வாங்கிறதால என்ன நடந்துட்டு இப்ப..."
"எங்க? எனக்குத் தெரிஞ்சி பாதி சமையல் வேலை நீயும்தான் செய்ற. பாத்திரம் வெளக்குற. வேலைக்கும் போற. வாஷிங் மிஷின்ல துணித் துவைச்சு காயவும் போடுற. அம்மாவைக் காட்டிலும் நீதான்பா பாவம்."
அட என் தங்க மவனே என் மீது இவ்வளவு கருசணையானு கட்டியணைக்கத் தோன்றியது. ஆனாலும் திடீரென இப்படியெல்லாம் அவன் கேட்டதும் ஒரு நிமிடம் உறைந்துதான் போனேன். என்னுள் அடக்கி வைத்த அவள் மீதான கோபம் அவன் கேட்ட மாத்திரத்தில் வெளிவரத் தொடங்கியபோது சற்று உள்ளுணர்வு பொறிதட்டியது.

"என்னடா... அவ போயி 5 நிமிஷத்துல இப்படி சொல்லி வச்சாப்ல எவ்ளோ சொல்லியும் திரும்ப திரும்ப கேட்குறான். காலைல நடந்த விஷயத்தை இப்போ கிளர்றான்... புரியலியே?" என மனதுக்குள் நினைத்தவாறு அவன் அமர்ந்த ஷோபாவுக்குப் பின் கண்ணாடியில் அவன் வைத்திருந்த செல்போனைப் பார்த்தேன்.
கால் ரெக்கார்டர் ஆன் செய்து வைத்துக்கொண்டு பேச்சுக் கொடுக்கிறான் என அப்போதுதான் புரிந்தது.
"அடப் பாவி மவனே... அவ செல்போன் கொடுத்துட்டுப் போனதுக்கு நன்றிக்கடனா செய்றேனு... என்னய கோத்துவிட உனக்கு எப்படிதான் மனசு வந்துச்சோனு" மனதுக்குள் நினைத்தவாறு பெருமூச்சுவிட்டபடி சிந்தனையில் மூழ்கலானேன்...
காப்பாத்திட்ட கடவுளே... கண்ணாடி வடிவத்துல வந்து காப்பாத்திட்ட... ஆண் பாவம். ஆம், கணவனாகப் பாவம்... ஏன் இப்போ ஒரு தந்தையாகப் பாவம்... கடைசி வரைக்கும் நானே என் மீது கவலைப்பட்டுக்கணும் போல..!
- செ.ஆனந்த ராஜா
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.