Published:Updated:

மாத்தி யோசி! - சுட்டி மகளின் அழுகையை இப்படியும் நிறுத்தலாம் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

முதல் நாள் பரீட்சைக்குப் பின் மகிழ்ச்சியாகக் காணப்பட்ட மகள், அடுத்த நாள் பரீட்சைக்குப் பின் வீட்டுக்கு வந்ததிலிருந்தே தேம்பிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சில வருடங்களுக்கு முன் நடந்தது. பணி மாற்றம் காரணமாகப் பள்ளியில் ஜூன் மாதமே குழந்தைகளைச் சேர்க்க முடியவில்லை. செப்டம்பர் மாதத்தில்தான் எந்த ஊர் என்பதே முடிவானது. அந்த ஊருக்கு வந்து வீடு பார்த்து, சிறிது சிறிதாக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ஊரில் புதுப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்த பெரிய மகளுக்கு ஒரு வாரத்துக்குள் காலாண்டுத்தேர்வு ஆரம்பமானது. புது பள்ளி, புது நண்பர்கள் எனக் கொஞ்சம் புலம்பல்களுடனே மகள் வீட்டுக்கு வருவாள். பரீட்சை ஆரம்பமாகிவிட்ட நிலையில் அதில் கவனம் செலுத்து ஆரம்பித்துவிட்டாள். நானும் மகளுக்கு புதுப் பள்ளி செட் ஆகிவிட்டது என்று நிம்மதியில் இருந்தேன்.

Representational Image
Representational Image

முதல் நாள் தேர்வுக்குப் பின் மகிழ்ச்சியாகக் காணப்பட்ட மகள், அடுத்த நாள் தேர்வுக்குப் பின் வீட்டுக்கு வந்ததிலிருந்தே தேம்பிக்கொண்டிருந்ததைப் பார்த்ததும்,

"என்ன ஆயிற்று? பரீட்சை சரியாக எழுதவில்லையா?" என்றேன்.

அழுதவாறே, "இல்லை... இல்லை... நல்லாத்தான் எழுதினேன்..."

"அப்பறம் என்ன பிரச்சனை?"

"அது வந்து ஒண்ணுமில்லை..."

"ஒண்ணுமில்லேன்னா ஏன் அழுற..."

"ம்... அது வந்து... என் கிளாஸ்ல சண்முகப்பிரியானு ஒரு பொண்ணுப்பா... நேத்து நான் பரீட்சைக்குப் போனப்பவே... என்னோட அட்டையை புடிங்கிக்கிட்டா... அவளோட வளை‌ஞ்சு போன அட்டையை எங்கிட்ட கொடுத்திட்டா... சரியாவே எழுத முடியலை தெரியுமா..? சரி ஒரு நாளைக்குத்தானேனு பார்த்தா... இன்னிக்கும் சரியா பரீட்சை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி வந்து, மறுபடியும் என்னோட அட்டையப் புடுங்கிக்கிட்டா..." 

"ஏன் புடுங்கவிட்ட..?"

 "இல்லப்பா... கத்திக்கூட பார்த்தேன்... உங்க வீட்ல புது அட்டை வாங்கித்தரச் சொல்ல வேண்டியது தானேனு சொன்னேன்... அவள் சொல்றா... எங்க அப்பால்லாம் வாங்கித்தரவே மாட்டார்னு சொல்றா." 

Representational Image
Representational Image

"சரி அந்தப் பொண்ணு புடுங்கிக்கிச்சு... இப்ப எதுக்கு அழுகுற..? நாளைக்கு நாங்க‌ வேணா உங்க ஸ்கூலுக்கு வந்து உங்க டீச்சர்கிட்ட சொல்லவா?"

"வேணாம்... வேணாம்...."

"அப்பறம் ஏன் அழுகுற..? ஒண்ணு புடுங்க விட்டுருக்கக் கூடாது. இல்லேனா நீயாவது உங்க டீச்சர்கிட்ட சொல்லியிருக்கணும்... இல்லேன்னா, நாங்க வந்து உங்க டீச்சர பார்க்கறோம்னா... அதுக்காவது அனுமதிக்கணும். இப்படி ஒண்ணுமே செய்யாம அழுதுக்கிட்டிருந்தா எப்படி..?"

அழுகை தொடர்ந்தது...

"...சரி சரி... அழுகாத..."

இவ்வாறு சமாதானப்படுத்தி தூங்க வைத்தோம். அடுத்த நாள் தேர்வுக்குச் சென்று வந்த பெண் வீட்டில் சிரித்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் மிகவும் நிம்ம‌தியாக இருந்தது...

"உன் தோழி சண்முகப்பிரியா இன்னைக்கு என்ன சொன்னா?"

"உங்க அப்பா ரொம்ப... நல்லவருன்னு (வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்) சொன்னாப்பா..." என்று கூறியபடியே ஓடிவந்து என்னை கட்டிக்கொண்டாள்.

இது எப்படி. இடையில் என்ன நடந்தது?

அன்று வெளியே கிளம்பிப்போய், மகளிடம் இருந்த அதே போன்றொரு புதிய அட்டை ஒன்றை வாங்கி வந்து, "நாளைக்கு போய் இதை உன் ஃபிரண்டுக்கிட்ட கொடு... திருப்பிக்கொடுக்க வந்தா இது உனக்குத்தானு சொல்லிடு" என்று சொல்லிவிட்டேன். இப்படியும் ஒரு வழி உள்ளதுதானே? இனியும் சண்முகப்பிரியா இது போல் மற்றவர்களிடம் நடப்பது தடுக்கப்படலாம். மேலும், நான் ஆசிரியரிடம் சென்று இதுகுறித்து கம்ப்ளையின்ட் செய்திருந்தால் எக்ஸாம் சமயத்தில் இரண்டு பிள்ளைகளுக்குமே தேவையில்லாத பிரச்னை ஏற்பட்டிருக்கும். அந்தச் சிறுமி எதற்காக அப்படி நடந்துகொண்டால் என்பது நமக்குத் தெரியாது. எங்கள் மகள் செயலுக்காக நாங்கள் செய்த இச்செயல் அச்சிறுமியின் மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். மாத்தி யோசிக்கலாமே!

- அ.வேளாங்கண்ணி, சோளிங்கர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு