Published:Updated:

நானே கேள்வி நானே பதில்..! - சில சபாஷ் நிகழ்வுகள் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

நான் கேள்விப்பட்டதில் ரசித்த, சிந்திக்க வைத்த சில நிகழ்வுகளை இங்கே பகிர்கிறேன்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

#சரியான தேர்வே சரியான தீர்வா?


வார இறுதி நாள்களான சனி, ஞாயிறுகளில் அமெரிக்காவின் மியாமி தீவுகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்; குப்பையும் சேர்ந்து. அங்குள்ள நிர்வாகம் எத்தனை அறிவுறுத்தியும் மக்கள் கேட்பதாக இல்லை. ஐஸ்க்ரீம் கப்புகளே அதிகம் தென்பட்டன. இதற்குத் தீர்வாக, சாப்பிடக்கூடிய கப்பாக ஏன் தயாரிக்கக் கூடாது என யோசனை செய்து 'Wafer Cups' பயன்பாட்டுக்கு வந்ததையடுத்து அது குப்பையில்லாத கடற்கரையானது.

Wafer Cups
Wafer Cups

#கண்ணியம் என்பது யாதெனில்..

இந்தியா பிரிந்தவுடன் முகமது அலி ஜின்னா, காயிதே மில்லத்துக்கு ஒரு கடிதம் எழுதினார். 'ஒருங்கிணைந்த இந்தியாவில் முஸ்லிம் லீக் கட்சியின் வரவு, செலவு பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான பங்குத் தொகை என்னிடம் உள்ளது. இதை என்னிடம் நீங்கள் பெற்றுச் செல்லலாம்' என எழுதினார்.

அதற்குப் பதில் எழுதிய மில்லத், 'தற்போது பிரிவினையில் நீங்கள் பாகிஸ்தானிலும் நான் இந்தியாவிலும் என இருக்கிறோம். ஒருவேளை நீங்கள் அளித்து நான் பெறுவதாய் இருந்தால் என் கை கீழேயும் தங்கள் கை மேலேயும் இருக்கும். இந்தியரான எங்களுக்குக் கொடுத்துதான் பழக்கம், வாங்கிப் பழக்கமல்ல. எனவே, அப்பணத்தை தாங்களே வைத்துக் கொள்ளுங்கள்' என்றாராம். அதுதான் கண்ணியமிகு காயிதே மில்லத்.

#ஒரு டைமிங் நகைச்சுவை


கலைஞரின் டைமிங் நகைச்சுவை.


மருத்துவர்: இந்த மருந்தைச் சாப்பிடுங்க... free motion போக...


கலைஞர்: இப்ப மட்டும் என்ன நான் கட்டணம் கொடுத்தா போறேன்..?!

அறிஞர் அண்ணா
அறிஞர் அண்ணா

#அடித்தள மக்களைப் பற்றி ஆட்சியாளர்கள் எண்ணுவதுண்டா?


அறிஞர் அண்ணா முதல்வராய் இருந்தபோது அவர் மேசையில் வைத்துக்கொண்டதாய் சொல்லப்படும் வாசகங்கள்...

Go to the people, Live with them, Learn from them, Love them, Start with what they know, Build on what they have.
- Lao Tzu

#ஒரு நிறுத்தற்குறி ஒருவனின் வாழ்வை மாற்றுமா?

வெ.இறையன்புவின் கட்டுரையில் படித்த செய்தி.

'கமா'னா சும்மா இல்ல(,).
ரஷ்யாவின் ஜார் மன்னர் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட குடிமகனுக்குத் தூக்குதண்டனை விதித்தார். அதில்
Pardon impossible, to be executed (மன்னிப்பு சாத்தியமே இல்லை; தூக்கில் போட வேண்டும்) என்று எழுதுவதற்கு பதில், அவசரத்தில்
Pardon, impossible to be executed (மன்னித்துவிடுங்கள், தூக்கில் போடுவது சாத்தியமே இல்லை) என கமா குறியை மாற்றிப்போட்டுவிட்டார். ஜெயில் அதிகாரியும் விடுதலை செய்துவிட்டார். ஒரு கமாவால் ஒருவன் உயிர் பிழைத்தான்.

வெ.இறையன்பு
வெ.இறையன்பு
Rajasekaran.K

#சர்வாதிகாரத்தைச் சுட்டிக்காட்ட இயலுமா?

ஓஷோவின் நகைச்சுவை கதை ஒன்று.

ஒரு சர்வாதிகாரி தனது படத்தை தபால் தலையாக அச்சடித்தார். ஆனால், சரியாக விற்பனை ஆகவில்லை. ஏன் என அதிகாரியை விசாரித்தார்.

அவர், "தபால்தலையை கவர்களில் நன்றாக ஒட்டுவதில்லை'' என்றார்.

''ஏன் அப்படி?'' என்றார்.

"பசையில் தவறில்லை. மக்கள் தவறான பக்கத்தில் எச்சில் துப்புகிறார்கள்'' என்றாராம்.

#கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் அவசியமா?


சுவாமி விவேகானந்தரிடம் ஒருவர்,

‘’பக்தி மனதில் இருந்தால் போதும், எதற்குக் கோயில்?’’ எனக் கேட்டார்.

உடனே விவேகானந்தர், ''தண்ணீர் கொடுங்கள்'' என்றார். அவரும் சொம்பில் கொடுத்தார்.

``தண்ணீர்தானே வேண்டும்... எதற்கு சொம்பு? பக்தி என்பது தண்ணீர். ஆலயம் என்பது சொம்பு’’ என்றாராம் விவேகானந்தர்.

விவேகானந்தர்
விவேகானந்தர்

#போட்டி நடுவர்கள் குறித்து

ஆங்கில எழுத்தாளர் ரைட் சில போட்டி நடுவர்கள் குறித்துச் சொன்னது...

''போட்டி நடுவர்கள் எப்போதும் சராசரிகள். இவர்களின் முதல் வேலை, சிறப்பானதை களைந்து எறிந்துவிட்டு, சராசரியை பொறுக்கி எடுப்பது. எந்தப் போட்டியின் விளைவும், சராசரிகள் சராசரிகளுக்காக சராசரிகளைத் தேர்ந்தெடுப்பதுதான்!''

#பேச்சாளர் கவனத்தில் கொள்ள வேண்டியது

'விசாரணை' பட விழாவில் எஸ்.ராமகிருஷ்ணன் சொன்ன, நாடக ஆசிரியர் பாரத இந்துவின் கதை.

"கொத்தனார் ஒருவர் சுவர் கட்டிக்கொண்டு இருக்கிறார். அந்த வழியே சென்ற பெண்ணின் அழகில் மயங்கி கட்டடத்தைக் கோணலாய் கட்டியதால் கீழே விழுந்து ஒருவருக்குக் காயம் ஏற்பட்டதால் நீதி விசாரணை நடக்கிறது. 'உன் கவனக்குறைவால் நடந்ததால் நீதான் பொறுப்பு' என்றார் மன்னர். 'ஐயா, கவனக்குறைவுக்கு நான் காரணமல்ல, அந்தப் பெண்மணிதான்' என்றார் கொத்தனார். அப்பெண்மணியிடம் விசாரித்தபோது, 'தவறு என்னுடையதல்ல, மந்திரி அலுவல் விஷயமாக அழைத்தார். ஆகவே, தவற்றுக்கு மந்திரிதான் பொறுப்பு' என்றார். மந்திரியின் பதிலில் திருப்தியுறாத அரசன், அவரை தூக்கில் போடுவதாக முடிவு செய்தான்.

Representational Image
Representational Image
Pixabay

மக்கள் முன் மந்திரியை தூக்கிலிட வரும்போது ஒரு பிரச்னை. தூக்குக் கயிற்றைவிட மந்திரியின் முகம் பெரிதாய் இருக்கிறது. தூக்குக் கயிற்றை மாற்றலாமா எனக் கேட்டபோது, அது வழக்கமில்லை என அரசன் மறுத்துவிடுகிறான். இதற்குத் தீர்வாக, இந்தச் சுருக்குக் கயிறு யாருக்குப் பொருந்துகிறதோ அவரை தூக்கிலிடுவோம் என முடிவு செய்யப்படுகிறது.

ஒரு தவறும் செய்யாத, மெல்லிய கழுத்துடைய ஒருவன் இருந்தான். அவன் எவ்வளவோ மறுத்தும், ``இந்தக் கயிற்றுக்கு ஏற்ற சின்னக் கழுத்து உனக்குத்தான் உள்ளது" எனக் கூறி அவனை தூக்கிலிட்டனர். ஒருவனை தண்டிக்க விரும்பினால் அனைவருக்கும் எளிதில் ஒரு காரணம் கிடைத்துவிடுகிறது’’ என முடியும்.

இக்கதை, `விசாரணை' படத்துக்குப் பொருத்தமான பேச்சு. ஒரு பேச்சாளன் பொருத்தமாகப் பேச வேண்டும் என்பதற்கு இது சிறந்த உதாரணம்.

- மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு